2 சாமுவேல் 13:1-39
2 சாமுவேல் 13:1-39 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
சிறிதுகாலம் சென்றபின் தாவீதின் மகன் அம்னோன், தாமார் மீது காதல் கொண்டான். இந்த அழகான தாமார் தாவீதின் இன்னொரு மகனான அப்சலோமின் சகோதரி. அம்னோன் தன்னுடைய சகோதரி தாமாரின் நிமித்தம் நோயுற்றான். ஏனெனில் அவன் சகோதரி தாமார் கன்னிகையாக இருந்தபடியால், அவளை அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அம்னோனுக்குத் தாவீதின் சகோதரன் சிமெயாவின் மகன் யோனதாப் நண்பனாயிருந்தான்; யோனதாப் மிகவும் தந்திரமுள்ளவன். யோனதாப் அம்னோனிடம், “அரசனின் மகனான நீ நாளுக்குநாள் மெலிந்துபோவதேன்? எனக்கு சொல்லமாட்டாயா?” என்றான். அதற்கு அம்னோன் அவனிடம், “என் சகோதரன் அப்சலோமின் சகோதரி தாமாரின்மேல் நான் ஆசை வைத்திருக்கிறேன்” என்றான். அப்பொழுது யோனதாப் அவனிடம், “நீ படுக்கைக்குப்போய் நோயாளியைப்போல பாசாங்கு செய்” என்றான். “உன் தகப்பன் உன்னைப் பார்க்க வரும்போது அவரிடம், ‘என் சகோதரி தாமார் வந்து, நான் சாப்பிட ஏதாவது கொடுக்கவேண்டும் என நான் விரும்புகிறேன். நான் அவளைப் பார்த்துக்கொண்டிருந்து அவள் கையால் சாப்பிடும்படிக்கு, எனக்கு முன்பாக அவள் உணவை தயாரிக்கட்டும்’ என்று சொல்” என்றான். அவன் சொன்னபடியே அம்னோன் படுத்துக்கொண்டு நோயாளியைப்போல பாசாங்கு செய்தான். அரசன் அவனைப் பார்க்க வந்தபோது அம்னோன் அரசனிடம், “என் சகோதரி தாமாரின் கையினால் நான் சாப்பிடும்படி அவள் வந்து என் கண்களுக்கு முன்பாக விசேஷமான உணவை செய்யவேண்டும்” என்று கேட்டான். தாவீது அரண்மனையிலிருந்த தாமாரிடம், “உன்னுடைய சகோதரன் அம்னோனின் வீட்டிற்குப்போய் அவனுக்கு உணவு தயாரித்துக் கொடு” என்று சொல்லி அனுப்பினான். தாமார் தன் சகோதரன் அம்னோனின் வீட்டுக்குப்போனபோது அவன் படுத்திருந்தான்; அவள் மாவை எடுத்துப் பிசைந்து அவன் கண்முன்னே அப்பங்களைச் சுட்டாள். பின்பு அப்பங்களை எடுத்து அவனுக்குப் பரிமாறினாள், அவனோ சாப்பிட மறுத்தான். அம்னோன், “எல்லோரையும் வெளியே அனுப்புங்கள்” என்றான். எனவே எல்லோரும் வெளியே போனார்கள். அதன்பின் அம்னோன் தாமாரிடம், “நான் உன் கையால் சாப்பிடும்படி உணவை என் படுக்கையறைக்குக் கொண்டுவா” என்றான். அவ்வாறே தாமார் தான் தயாரித்த அப்பங்களை எடுத்துக்கொண்டு தன் சகோதரன் அம்னோனிடம் அவனுடைய படுக்கையறைக்குப் போனாள். அவள் அவற்றை அவன் சாப்பிடும்படி அவனிடம் கொண்டுபோனபோது, அவன் அவள் கையைப் பிடித்து, “சகோதரியே, என்னுடன் படுக்கைக்கு வா” என்றான். அதற்கு தாமார், “வேண்டாம் என் சகோதரனே, என்னைப் பலவந்தப்படுத்தாதே. இஸ்ரயேலில் இப்படியான ஒரு செயல் நடைபெறக் கூடாது. இப்படிப்பட்ட கொடிய செயலை செய்யாதே. அப்படிச் செய்தால் என் நிலை என்ன? எங்கு போய் இந்த அவமானத்தை நீக்குவேன்? உன் நிலை என்னவாகும்? நீ இஸ்ரயேலிலுள்ள கொடிய மூடர்களில் ஒருவனைப்போலாவாயே; தயவுசெய்து நீ அரசரிடம் பேசு, உனக்கு என்னைத் திருமணம் செய்துகொடுக்க அவர் தடைசெய்யமாட்டார்” என்றாள். அவனோ அவள் சொன்னதைக் கேட்கவில்லை. அம்னோன் தாமாரைவிட பலசாலி என்பதால் அவளைப் பலவந்தமாய் பிடித்து கற்பழித்தான். அதன்பின் அம்னோன் அவள்மேல் கடுமையான வெறுப்புகொண்டான். அவளை அவன் நேசித்த அளவைவிட, அதிகமாய் அவளை வெறுத்தான். எனவே அம்னோன், “எழும்பு, இங்கிருந்து வெளியே போய்விடு” என்று அவளிடம் கண்டிப்பாய் சொன்னான். அதற்கு அவள், “வேண்டாம்; இப்பொழுது நீ எனக்கு செய்த அநியாயத்தைப் பார்க்கிலும், என்னை வெளியே துரத்திவிடுவது பெரிய அநியாயமாய் இருக்கும்” என்றாள். ஆனாலும் அவள் சொன்னதை அவன் கேட்க மறுத்தான். அவன் தன் தனிப்பட்ட பணியாளனை அழைத்து அவனிடம், “இந்தப் பெண்ணை இங்கிருந்து வெளியே துரத்தி கதவைப் பூட்டு” என்று கட்டளையிட்டான். எனவே அவனுடைய பணியாள் அவளை வெளியேதள்ளிக் கதவைப் பூட்டினான். அப்பொழுது அரச குடும்பத்து கன்னிப்பெண்கள் அணியும் மிக அலங்காரமான அங்கியை தாமார் அணிந்திருந்தாள். தாமார் தன் தலைமேல் சாம்பலைப்போட்டு தான் அணிந்திருந்த அலங்கரிக்கப்பட்ட மேலங்கியைக் கிழித்து, தன் கைகளைத் தலையின்மேல் வைத்து சத்தமிட்டு அழுதுகொண்டே போனாள். இதைக் கேள்விப்பட்ட அவள் சகோதரன் அப்சலோம் அவளிடம் வந்து, “உன் சகோதரன் அம்னோன் உன்னுடன் உறவு கொண்டானா? ஆனாலும் என் சகோதரியே, இப்பொழுது அமைதியாயிரு. எப்படியாயினும் அவன் உன் சகோதரன் அல்லவா? அதைக்குறித்து மனம் வருந்தாதே” என்றான். தாமார் துயருற்றவளாய் தன் சகோதரன் அப்சலோம் வீட்டில் தங்கினாள். தாவீது அரசன் இவற்றையெல்லாம் கேள்விப்பட்டபோது, கடுங்கோபமடைந்தான். அப்சலோம் நன்மையாகவோ, தீமையாகவோ அம்னோனுடன் ஒரு வார்த்தையும் பேசவில்லை. ஆனால் தன் சகோதரி தாமாரை அம்னோன் அவமானப்படுத்தியபடியால் அப்சலோம் அவனை வெறுத்தான். இரண்டு வருடங்களுக்குப் பின்பு எப்பிராயீமின் எல்லைக்கு அருகே உள்ள பாகால் காசோரிலே அப்சலோமின் ஆடுகளின் மயிர் கத்தரிப்பவர்கள் இருந்தார்கள். அங்கே அரசனுடைய எல்லா மகன்களையும் வரும்படி அப்சலோம் அழைத்திருந்தான். அப்சலோம் அரசனிடம் சென்று, “உம்முடைய அடியான் ஆடுகளுக்கு மயிர் கத்தரிப்பவர்களை வேலைக்கு அழைத்திருக்கிறேன். அரசரும் அவர் அதிகாரிகளும் அவ்விடத்திற்கு என்னிடம் வரும்படி தயவாய் அழைக்கிறேன்” என்றான். அதற்கு அரசன், “வேண்டாம் என் மகனே; நாங்கள் எல்லோரும் வரக்கூடாது. நாங்கள் உனக்குப் பாரமாக மட்டுமே இருப்போம்” என்றான். அப்சலோம் எவ்வளவு வற்புறுத்தியும் அரசன் போக மறுத்துவிட்டான். ஆனாலும் அவனை ஆசீர்வதித்தான். அப்பொழுது அப்சலோம் அரசனிடம், “அப்படி நீங்கள் வரமுடியாவிட்டால் என் சகோதரன் அம்னோனையாவது எங்களோடு வருவதற்கு உத்தரவு கொடுங்கள்” என்றான். அதற்கு அரசன், “அவன் உன்னுடன் ஏன் வரவேண்டும்” எனக் கேட்டான். ஆனாலும் அப்சலோம் அரசனை வற்புறுத்தினபடியால் அரசன் அம்னோனையும், மற்ற மகன்களையும் அவனோடு அனுப்பினான். அப்பொழுது அப்சலோம் தன் மனிதரிடம், “கேளுங்கள். அம்னோன் திராட்சைமது குடித்து மகிழ்ந்திருக்கும் வேளையில் நான் உங்களிடம் அம்னோனை வெட்டி வீழ்த்துங்கள் என்று சொல்வேன். அப்பொழுது நீங்கள் பயப்படாமல் அவனைக் கொல்லவேண்டும். உங்களுக்கு உத்தரவிடுவது நான் அல்லவா? பலமும் தைரியமுமுள்ளவர்களாய் இருங்கள்” என்று கட்டளையிட்டான். அப்சலோம் கட்டளையிட்டபடியே அவனுடைய மனிதர் அம்னோனுக்குச் செய்தார்கள். இதைக் கண்ட அரசனின் மகன்கள் அவரவர் கோவேறு கழுதைகளில் ஏறி தப்பிப் போனார்கள். அவர்கள் வழியில் போகும்பொழுதே தாவீதிற்கு, “அப்சலோம், அரசனின் மகன்கள் எல்லோரையும் கொன்றுவிட்டான். அவர்களில் ஒருவனாவது தப்பவில்லை” என்று செய்தி கிடைத்தது. அப்பொழுது அரசன் எழுந்து தன் உடையைக் கிழித்துக்கொண்டு தரையில் விழுந்து கிடந்தான். அவனுடைய பணியாட்கள் எல்லோரும் தங்கள் உடைகளைக் கிழித்துக்கொண்டு அவன் பக்கத்தில் நின்றார்கள். ஆனாலும் தாவீதின் சகோதரன் சிமெயாவின் மகன் யோனதாப் வந்து, “அரசனின் மகன்கள் எல்லோரும் இறந்துவிட்டார்களென என் ஆண்டவன் எண்ணவேண்டாம். அம்னோன் மட்டுமே செத்துப் போனான். அப்சலோமின் சகோதரி தாமாரை அவன் கற்பழித்த நாள் முதல் இதுவே அவனுடைய வெளிப்படையான எண்ணமுமாய் இருந்தது. எனவே என் ஆண்டவனாகிய அரசனே! உமது மகன்கள் அனைவரும் இறந்துவிட்டார்கள் என்ற செய்திக்காக நீர் கவலைப்பட வேண்டாம். அம்னோன் மட்டுமே இறந்தான்” என்றான். இதற்கிடையில் அப்சலோமோ தப்பி ஓடிவிட்டான். அப்பொழுது காவற்காரன், மேலே இருந்து பார்த்தபோது, பல மனிதர் அவனுக்கு மேற்குப் பக்கமாக உள்ள பாதையில் மலை ஓரமாக இறங்கி வருவதைக் கண்டான்; உடனே அந்த காவற்காரன் அரசனிடம் சென்று, “பக்கத்தில் மலை ஓரமாக பல மனிதர்கள் வருவதைக் காண்கிறேன்” என்றான். அப்பொழுது யோனதாப் அரசனிடம், “உமது மகன்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். உமது அடியான் சொன்னபடியே நடந்திருக்கிறது” என்றான். அவ்வாறு அவன் சொல்லி முடித்தபோது அரசனுடைய மகன்கள் உரத்த சத்தமாய் அழுதுகொண்டு உள்ளே வந்தார்கள். அரசனும் அவன் பணியாட்கள் அனைவரும் மனங்கசந்து அழுதார்கள். அப்சலோமோ கேசூரின் அரசனான அம்மியூதின் மகன் தல்மாயிடம் தப்பி ஓடிப்போனான். ஆனால் தாவீது அரசனோ தன் மகனுக்காக நாள்தோறும் துக்கங்கொண்டாடினான். அப்சலோம் கேசூருக்குத் தப்பி ஓடிப்போனபின், அங்கே மூன்று வருடங்கள் தங்கியிருந்தான். அரசன் தாவீதுக்கு அம்னோனின் மரணத்தால் ஏற்பட்ட துக்கம் ஆறினபின் அப்சலோமிடம் போகவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.
2 சாமுவேல் 13:1-39 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இதற்குப்பின்பு தாவீதின் மகனான அப்சலோமிற்குத் தாமார் என்னும் பெயருள்ள அழகான ஒரு சகோதரி இருந்தாள்; அவள்மேல் தாவீதின் மகன் அம்னோன் ஆசை வைத்தான். தன்னுடைய சகோதரியான தாமாருக்காக கவலையோடு இருந்து வியாதிப்பட்டான்; அவள் கன்னிப்பெண்ணாக இருந்தாள்; அவளுக்குத் தீங்குசெய்ய, அம்னோனுக்கு வருத்தமாக இருந்தது. அம்னோனுக்குத் தாவீதினுடைய சகோதரன் சிமியாவின் மகனான யோனதாப் என்னும் பெயருள்ள ஒரு நண்பன் இருந்தான்; அந்த யோனதாப் மகா தந்திரமுள்ளவன். அவன் இவனைப் பார்த்து: ராஜாவின் மகனான நீ, நாளுக்குநாள் எதனால் இப்படி மெலிந்துபோகிறாய், எனக்குச் சொல்லமாட்டாயா என்றான். அதற்கு அம்னோன்: என்னுடைய சகோதரன் அப்சலோமின் சகோதரியான தாமாரின்மேல் நான் ஆசை வைத்திருக்கிறேன் என்றான். அப்பொழுது யோனதாப் அவனைப் பார்த்து: நீ வியாதியுள்ளனைப்போல உன்னுடைய படுக்கையின்மேல் படுத்துக்கொள்; உன்னைப் பார்ப்பதற்கு உன்னுடைய தகப்பனார் வரும்போது, நீ என்னுடைய சகோதரியான தாமார் வந்து, எனக்கு உணவு கொடுத்து, அவள் கையினாலே சாப்பிடும்படி நான் பார்க்க, என்னுடைய கண்களுக்கு முன்பாக சமைக்கும்படி தயவுசெய்து அவளை அனுப்பும் என்று சொல் என்றான். அப்படியே அம்னோன் வியாதியுள்ளவன்போல் படுத்துக்கொண்டு, ராஜா தன்னைப் பார்க்கவந்தபோது, ராஜாவை நோக்கி: என்னுடைய சகோதரியான தாமார் வந்து நான் அவளுடைய கையினாலே சாப்பிடும்படி, என்னுடைய கண்களுக்கு முன்பாக இரண்டு நல்ல பணியாரங்களைச் செய்யும்படி அனுமதி கொடுக்கவேண்டும் என்றான். அப்பொழுது தாவீது; தாமாரின் வீட்டுக்கு ஆள் அனுப்பி, தாமாரிடம் நீ உன்னுடைய சகோதரனான அம்னோன் வீட்டுக்குப் போய், அவனுக்கு சமையல் செய்துகொடு என்று சொல்லச்சொன்னான். தாமார் தன்னுடைய சகோதரனான அம்னோன் படுத்துக்கொண்டிருக்கிற வீட்டுக்குப்போய், மாவெடுத்துப் பிசைந்து, அவனுடைய கண்களுக்கு முன்பாகத் தட்டி, பணியாரங்களைச் சுட்டு, பாத்திரத்தை எடுத்து, அவனுக்கு முன்பாக அவைகளை வைத்தாள்; ஆனாலும் அவன் சாப்பிடமாட்டேன் என்றான்; பின்பு அம்னோன்: எல்லோரும் என்னைவிட்டு வெளியே போகட்டும் என்றான்; எல்லோரும் அவனைவிட்டு வெளியே போனார்கள். அப்பொழுது அம்னோன் தாமாரைப் பார்த்து: நான் உன்னுடைய கையினாலே சாப்பிடும்படி, அந்தப் பலகாரத்தை என்னுடைய அறைக்கு கொண்டுவா என்றான்; அப்படியே தாமார் தான் செய்த பணியாரங்களை வீட்டின் அறையில் இருக்கிற தன்னுடைய சகோதரனான அம்னோனிடத்தில் கொண்டுபோனாள். அவன் சாப்பிடும்படி அவள் அவைகளைக் அருகில் கொண்டுவரும்போது, அவன் அவளைப் பிடித்து, அவளைப் பார்த்து: என் சகோதரியே, நீ வந்து என்னோடு உறவுகொள் என்றான். அதற்கு அவள்: வேண்டாம், என்னுடைய சகோதரனே, என்னை அவமானப்படுத்தாதே, இஸ்ரவேலிலே இப்படிச் செய்யக்கூடாது; இப்படிப்பட்ட மதிகேடான காரியத்தைச் செய்யவேண்டாம். நான் இந்த வெட்கத்தோடு எங்கே போவேன்? நீயும் இஸ்ரவேலிலே மதிகெட்டவர்களில் ஒருவனைப்போல ஆவாய்; இப்போதும் நீ ராஜாவுடன் பேசு, அவர் என்னை உனக்குத் தராமல் மறுக்கமாட்டார் என்றாள். அவன் அவளுடைய சொல்லைக் கேட்கமாட்டேன் என்று அவளைப் பலவந்தமாகப் பிடித்து, அவளோடு உறவுகொண்டான். அதன்பின்பு அம்னோன் அவளை மிகவும் வெறுத்தான்; அவன் அவளை விரும்பின விருப்பத்தைவிட, அவளை வெறுத்த வெறுப்பு அதிகமாக இருந்தது. ஆகையால்: நீ எழுந்து போய்விடு என்று அம்னோன் அவளோடு சொன்னான். அப்பொழுது அவள்: நீ எனக்கு முந்தி செய்த அநியாயத்தைவிட, இப்பொழுது என்னைத் துரத்திவிடுகிற இந்த அநியாயம் கொடுமையாக இருக்கிறது என்றாள்; ஆனாலும் அவன் அவளுடைய சொல்லைக் கேட்க மனமில்லாமல், தன்னிடத்தில் வேலைசெய்கிற தன்னுடைய வேலைக்காரனைக் கூப்பிட்டு: நீ இவளை என்னைவிட்டு வெளியேத் தள்ளி, கதவைப் பூட்டு என்றான். அப்படியே அவனிடம் வேலைசெய்கிறவன் அவளை வெளியேத் தள்ளி, கதவைப் பூட்டினான்; அவள் பலவர்ணமான ஆடையை அணிந்துகொண்டிருந்தாள்; ராஜாவின் மகள்களான கன்னிகைகள் இதைப்போல சால்வைகளை அணிந்துகொள்வார்கள். அப்பொழுது தாமார்: தன்னுடைய தலையின்மேல் சாம்பலை வாரிப் போட்டுக்கொண்டு, தான் அணிந்திருந்த பலவர்ணமான ஆடையைக்கிழித்து, தன்னுடைய கையைத் தன்னுடைய தலையின்மேல் வைத்து, சத்தமிட்டு அழுதுகொண்டுபோனாள். அப்பொழுது அவள் சகோதரனான அப்சலோம் அவளைப் பார்த்து: உன்னுடைய சகோதரனான அம்னோன் உன்னோடிருந்தானோ? இப்போதும் என்னுடைய சகோதரியே, நீ மவுனமாக இரு; அவன் உன்னுடைய சகோதரன்; இந்தச் சம்பவத்தை உன்னுடைய மனதிலே வைக்காதே என்றான்; அப்படியே தாமார் தன்னுடைய சகோதரனான அப்சலோமின் வீட்டில் தனியாக மனவேதனைப்பட்டுக்கொண்டிருந்தாள். தாவீது ராஜா இந்தச் செய்திகளையெல்லாம் கேள்விப்பட்டபோது, கடுங்கோபம் கொண்டான். அப்சலோம் அம்னோனோடு நன்மையோ தீமையோ பேசவில்லை; தன்னுடைய சகோதரியான தாமாரை அம்னோன் கற்பழித்ததினால் அப்சலோம் அவனைப் பகைத்தான். இரண்டு வருடங்கள் சென்றபின்பு, அப்சலோம் எப்பிராயீமுக்குச் சமீபமான பாலாத்சோரிலே ஆட்களை வைத்து, ஆடுகளை மயிர் கத்தரிக்கிற வேலையில் இருந்தான்; அங்கே ராஜாவின் மகன்கள் எல்லோரையும் விருந்திற்கு அழைத்தான். அப்சலோம் ராஜாவிடம் போய், ஆட்களை வைத்து ஆடுகளை மயிர் கத்தரிக்கிறேன்; ராஜாவும் அவருடைய வேலைக்காரர்களும் உமது அடியானோடு வரும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். ராஜா அப்சலோமைப் பார்த்து: அப்படி வேண்டாம், என்னுடைய மகனே; நாங்கள் எல்லோரும் வந்தால் உனக்கு அதிக செலவு உண்டாகும் என்றான்; அவனை வருந்திக்கேட்டாலும், அவன் போக மனமில்லாமல், அவனை ஆசீர்வதித்தான். அப்பொழுது அப்சலோம்: நீர் வராமல் இருந்தால், என்னுடைய சகோதரனான அம்னோனாவது எங்களோடு வரும்படி அவனுக்கு அனுமதி தாரும் என்றான். அதற்கு ராஜா: அவன் உன்னோடு வரவேண்டியது என்ன என்றான். அப்சலோம் பின்பும் அவனை வருந்திக் கேட்டுக்கொண்டபடியால், அவன் அம்னோனையும், ராஜாவின் மகன்கள் அனைவரையும் அவனோடு போகவிட்டான். அப்சலோம் தன்னுடைய வேலைக்காரர்களை நோக்கி: அம்னோன் திராட்சைரசம் குடித்து சந்தோஷமாக இருக்கும் நேரத்தை நன்றாக எதிர்பார்த்திருங்கள்; அப்பொழுது நான்: அம்னோனை அடியுங்கள் என்று சொல்லுவேன்; உடனே நீங்கள் பயப்படாமல் அவனைக் கொன்றுபோடுங்கள்; நான் அல்லவோ அதை உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்; திடன்கொண்டு தைரியமாக இருங்கள் என்று சொல்லியிருந்தான். அப்சலோம் கட்டளையிட்டபடியே அப்சலோமின் வேலைக்காரர்கள் அம்னோனுக்குச் செய்தார்கள்; அப்பொழுது ராஜாவின் மகன்கள் எல்லோரும் எழுந்து, அவரவர்கள் தங்களுடைய கோவேறு கழுதையின்மேல் ஏறி ஓடிப்போனார்கள். அவர்கள் வழியில் இருக்கும்போதே, அப்சலோம் ராஜாவின் மகன்கள் எல்லோரையும் அடித்துக் கொன்றுபோட்டான், அவர்களில் ஒருவரும் மீதியாக இருக்கவிடவில்லை என்று, தாவீதுக்குச் செய்தி வந்தது. அப்பொழுது ராஜா எழுந்து, தன்னுடைய ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, தரையிலே விழுந்து கிடந்தான்; அவனுடைய ஊழியக்காரர்கள் எல்லோரும் தங்களுடைய ஆடைகளைக் கிழித்துக்கொண்டு நின்றார்கள். அப்பொழுது தாவீதின் சகோதரனான சிமியாவின் மகன் யோனதாப் வந்து: ராஜாவின் மகன்களான வாலிபர்களையெல்லாம் கொன்று போட்டார்கள் என்று என்னுடைய ஆண்டவன் நினைக்கவேண்டாம்; அம்னோன் மட்டும் இறந்துபோனான்; அவன் தன்னுடைய சகோதரியான தாமாரைக் கற்பழித்த நாள்முதற்கொண்டு, அது அப்சலோமின் மனதில் இருந்தது. இப்போதும் ராஜாவின் மகன்கள் எல்லோரும் இறந்தார்கள் என்கிற பேச்சை ராஜாவான என்னுடைய ஆண்டவன் தம்முடைய மனதிலே வைக்கவேண்டாம்; அம்னோன் ஒருவனே இறந்தான் என்றான்; அப்சலோம் ஓடிப்போனான். இரவுக்காவலன் தன்னுடைய கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, இதோ, அநேக மக்கள் தனக்குப் பின்னாலே மலை ஓரமாக வருகிறதைக் கண்டான். அப்பொழுது யோனதாப் ராஜாவைப் பார்த்து: இதோ, ராஜாவின் மகன்கள் வருகிறார்கள்; உமது அடியேன் சொன்னபடியே ஆயிற்று என்றான். அவன் பேசி முடிந்தபோது, ராஜாவின் மகன்கள் வந்து, சத்தமிட்டு அழுதார்கள்; ராஜாவும் அவனுடைய எல்லா வேலைக்காரர்களும் மிகவும் புலம்பி அழுதார்கள். அப்சலோமோ அம்மீயூதின் மகனான தல்மாய் என்னும் கெசூரின் ராஜாவினிடமாக ஓடிப்போனான். தாவீது தினந்தோறும் தன்னுடைய மகனுக்காக துக்கப்பட்டுக்கொண்டிருந்தான். அப்சலோம் கெசூருக்கு ஓடிப்போய், அங்கே மூன்று வருடங்கள் இருந்தான். தாவீது ராஜா அம்னோன் இறந்தபடியால், அவனுக்காகத் துக்கித்து ஆறுதல் அடைந்தபோது அப்சலோமைப் பின்தொடரும் எண்ணத்தை விட்டுவிட்டான்.
2 சாமுவேல் 13:1-39 பரிசுத்த பைபிள் (TAERV)
தாவீதுக்கு அப்சலோம் என்னும் பெயருள்ள குமாரன் இருந்தான். அப்சலோமின் சகோதரியின் பெயர் தாமார் ஆகும். தாமார் மிகுந்த அழகுடையவள். தாவீதின் மற்றொரு குமாரனாகிய அம்னோன் தாமாரை விரும்பினான். தாமார் ஒரு கன்னிகை. அவளுக்கு எந்தத் தீமையையும் விளைவிக்க அம்னோன் நினைக்கவில்லை. எனினும் அவன் அவளை அதிகமாக நேசித்தான். நோயுறுமளவிற்கு அம்னோன் அவள் நினைவானான். சிமியாவின் குமாரனாகிய யோனதாப் அம்னோனின் நெருங்கிய நண்பன். (சிமியா தாவீதின் சகோதரன்) யோனதாப் மிகவும் புத்திசாலி. யோனதாப் அம்னோனை நோக்கி, “நாளுக்கு நாள் நீ மெலிந்துக்கொண்டே வருகிறாய். நீ ராஜாவின் குமாரன்! உனக்கு உண்பதற்கு ஏராளமான பொருட்கள் இருந்தும், நீ ஏன் எடை குறைந்து காணப்படுகிறாய்? சொல்!” என்றான். அம்னோன் யோனதாபை நோக்கி, “நான் தாமாரை மிகவும் விரும்புகிறேன். அவள் எனது ஒன்று-விட்ட-சகோதரன் அப்சலோமின் சகோதரி” என்றான். யோனதாப் அம்னோனை நோக்கி, “படுக்கைக்குப் போ. நோயுற்றவன் போல் நடி. உன் தந்தை உன்னைக் காணவருவார். அவரிடம், ‘எனது சகோதரியாகிய தாமார் வந்து எனக்கு உணவு தரட்டும். அவள் என் முன்னே உணவு சமைக்கட்டும். அப்போது அதை நான் பார்த்து அவள் கையால் புசிப்பேன்’ என்று சொல்” என்றான். அவ்வாறே அம்னோன் படுக்கையில் படுத்து நோயுற்றவன்போல் நடித்தான். தாவீது ராஜா அம்னோனைப் பார்க்க வந்தான். அம்னோன் தாவீது ராஜாவிடம், “தயவு செய்து எனது சகோதரி தாமாரை உள்ளே வரச்செல்லுங்கள். அவள் என் முன்னே எனக்காக இரண்டு அப்பங்கள் சுட்டுதரட்டும். அப்போது அவள் கையால் ஊட்ட அவற்றை புசிப்பேன்” என்றான். தாவீது தாமாரின் வீட்டிற்கு ஆட்களை அனுப்பினான். செய்தி சொல்ல வந்த ஆட்கள் தாமாரிடம், “உனது சகோதரன் அம்னோன் வீட்டிற்குச் சென்று அவனுக்காக கொஞ்சம் உணவைத் தயாரித்துக் கொடு” என்றார்கள். எனவே தாமார் தன் சகோதரனாகிய அம்னோனின் வீட்டிற்குச் சென்றாள். அம்னோன் படுக்கையில் இருந்தான். தாமார் மாவை எடுத்து தன் கைகளால் பிசைந்து, அப்பங்களைச் சுட்டாள். அம்னோன் எதிரிலேயே இதனைச் செய்தாள். சமையல் பாத்திரத்திலிருந்து அவற்றை எடுத்து, அம்னோன் உண்பதற்காகப் பரிமாறினாள். ஆனால் அம்னோன் சாப்பிட மறுத்தான். அம்னோன் தன் வேலையாட்களை நோக்கி, “இங்கிருந்து போங்கள், என்னைத் தனிமையில் இருக்கவிடுங்கள்!” என்றான். எனவே எல்லா வேலையாட்களும் அறையை விட்டு வெளியே சென்றனர். அப்போது அம்னோன் தாமாரிடம், “உணவைப் படுக்கையறைக்குள் கொண்டு வந்து உனது கைகளால் எனக்கு உணவூட்டு” என்றான். எனவே தாமார் தான் தயாரித்த அப்பங்களை எடுத்துக்கொண்டு தன் சகோதரனின் படுக்கையறைக்குள் சென்றாள். அவள் அம்னோனுக்கு அவ்வுணவைக் கொடுக்க ஆரம்பித்தாள். ஆனால் அவனோ அவளை கையைப் பிடித்திழுத்து அவளிடம், “சகோதரியே, நீ என்னோடு சேர்ந்து படுத்துக்கொள்” என்றான். தாமார் அம்னோனிடம், “சகோதரனே, வேண்டாம்! அவ்வாறு செய்ய என்னை வற்புறுத்தாதே! அவமானமான இக்காரியத்தைச் செய்யாதே! இஸ்ரவேலில் இந்த கொடிய காரியம் நடக்கக்கூடாது! நான் எனக்கு நேரும் அவமானத்திலிருந்து ஒருபோதும் மீளமுடியாது. நீ ஒரு பயங்கர குற்றவாளி என்று ஜனங்கள் கவனிப்பார்கள். தயவுசெய்து, ராஜாவோடு பேசு. என்னை நீ மணம் செய்துக்கொள்ள அவர் அனுமதியளிப்பார்” என்றாள். ஆனால் அம்னோன், தாமார் சொன்னதைக் கேட்க மறுத்தான். அவன் தாமாரைக் காட்டிலும் பலசாலி. அம்னோன் தாமாரை பாலின உறவுகொள்ளும்படி கட்டாயப்படுத்தி அவளை பலவந்தமாய் கற்பழித்தான். பின்பு அம்னோன் தாமாரை வெறுக்க ஆரம்பித்தான். அவளை முன்பு விரும்பினதற்கு அதிகமாக அவளை வெறுக்க ஆரம்பித்தான். அம்னோன் தாமாரை நோக்கி, “எழுந்து இங்கிருந்து போ!” என்றான். தாமார் அம்னோனிடம், “இப்படி என்னை அனுப்பிவிடாதே. முன்பு நிகழ்ந்ததைக் காட்டிலும் அது தீமையானதாக இருக்கும்” என்றாள். ஆனால் அம்னோன், தாமார் சொல்வதைக் கேட்க மறுத்தான். அம்னோன் தன் வேலையாளை அழைத்து, “இப்பெண்ணை இந்த அறைக்கு வெளியே கொண்டு செல்லுங்கள். பின்பு அவளுக்குப் பிறகு கதவை தாழ்ப்பாளிடுங்கள்” என்றான். அவ்வாறே அம்னோனின் வேலைக்காரன் தாமாரை அறைக்கு வெளியே நடத்தி, கதவைத் தாழிட்டான். தாமார் பலநிறங்களுள்ள ஒரு நீண்ட அங்கி அணிந்திருந்தாள். ராஜாவின் கன்னிப் பெண்கள் (குமாரத்திகள்) இத்தகைய நீண்ட பலவர்ண அங்கி அணிவது வழக்கமாக இருந்தது. தாமார் பலவர்ண அங்கியைக் கிழித்துக்கொண்டு, தலையின் மேல் சாம்பலை வாரிப்போட்டுக்கொண்டாள். பின் அவள் தனது கையைத் தலையில் வைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள். அப்போது தாமாரின் சகோதரன் அப்சலோம் அவளை நோக்கி, “நீ உனது சகோதரன் அம்னோனிடம் சென்றாயா? அவன் உன்னைத் துன்புறுத்தினானா? அமைதியாக இரு, அம்னோன் உனது சகோதரன். நாங்கள் இது குறித்து கவனித்துக்கொள்வோம். அதிகமாக உன் மனதை வருத்தாதே” என்றான். தாமார் எதுவும் சொல்லவில்லை. அவள் அமைதியாக அப்சலோமின் வீட்டில் தங்கும்படி சென்றாள். தாவீது ராஜா இச்செய்தியைக் கேள்விப்பட்டான். அவன் மிகவும் கோபப்பட்டான். அப்சலோம் அம்னோனை வெறுத்தான். அப்சலோம் அம்னோனிடம் நல்லதோ கெட்டதோ ஒரு வார்த்தையும் பேசவில்லை, தன் சகோதரியாகிய தாமாரைக் கற்பழித்ததால், அப்சலோம் அம்னோனை வெறுத்தான். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அப்சலோமின் ஆடுகளிலிருந்து உரோமத்தைக் கத்தரிக்க பாகால்சோரிலிருந்து சிலரை வரவழைத்தான். அதைப் பார்ப்பதற்கென்று ராஜாவின் எல்லாப் பிள்ளைகளையும் அப்சலோம் அழைத்தான். அப்சலோம் ராஜாவிடம் போய், “எனது ஆடுகளின் மயிரைக் கத்தரிக்க சிலர் வந்துள்ளனர். உங்கள் வேலையாட்களோடும் வந்து அதைப் பாருங்கள்” என்றான். தாவீது ராஜா அப்சலோமிடம், “இல்லை மகனே, நாங்கள் எல்லோரும் வரமாட்டோம். உனக்கு அதிகம் தொல்லையாக இருக்கும்” என்றான். தாவீதை வரும்படி அப்சலோம் மிகவும் கெஞ்சிக் கேட்டுக்கொண்டான். ஆனால் தாவீது வரவில்லை, ஆனாலும் தன் ஆசிகளை அவனுக்கு வழங்கினான். அப்சலோம், “நீங்கள் வர விரும்பாவிட்டால் எனது சகோதரன் அம்னோனை என்னோடு அனுப்புங்கள்” என்றான். தாவீது ராஜா அப்சலோமிடம், “அவன் ஏன் உன்னோடு வரவேண்டும்?” என்று கேட்டான். அப்சலோம் தாவீதை கெஞ்சி, கெஞ்சிக் கேட்டுக்கொண்டே இருந்தான். எனவே இறுதியாக, அம்னோனும், ராஜாவின் மற்ற குமாரர்களும் அப்சலோமோடு சென்றனர். பின்பு, அப்சலோம் தன் வேலையாட்களுக்கு இவ்வாறு கட்டளையிட்டான். “அம்னோனை கவனித்துக்கொண்டிருங்கள். அவன் குடிக்க ஆரம்பித்து திராட்சைரசப் போதையில் ஆழ்ந்திருக்கும்போது, நான் உங்களுக்குக் கட்டளையிடுவேன். நீங்கள் அம்னோனைத் தாக்கி அவனைக் கொல்லுங்கள். தண்டனை நேரும் என்று அஞ்சாதீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் எனது கட்டளைக்குப் பணிகிறீர்கள். இப்போது, துணிவும் வீரமும் உடையவர்களாய் இருங்கள்” என்றான். ஆகையால் அப்சலோமின் இளம் வீரர்கள் அவன் கூறியபடியே செய்தார்கள். அவர்கள் அம்னோனைக் கொன்றார்கள். ஆனால் தாவீதின் பிற குமாரர்கள் தப்பிப் பிழைத்தார்கள். ஒவ்வொரு குமாரனும் தன் கோவேறு கழுதையின் மேலேறித் தப்பிச் சென்றான். ராஜாவின் குமாரர்கள் தங்கள் நகரத்தை நோக்கி பயணம் செய்துக்கொண்டிருந்தனர். ஆனால் நிகழ்ந்தவற்றைப் பற்றிய செய்தியை தாவீது ராஜா முந்திக் கேள்விப்பட்டான். ஆனால் அவனறிந்தச் செய்தி, “ராஜாவின் எல்லா குமாரர்களையும் அப்சலோம் கொன்றுவிட்டான். ஒருவன் கூட உயிரோடு விடப்படவில்லை” என்பதாகும். தாவீது ராஜா தனது ஆடைகளைக் கிழித்துக்கொண்டு தரையில் கிடந்தான். அவனருகே நின்றுக்கொண்டிருந்த அதிகாரிகளும் தங்கள் ஆடைகளைக் கிழித்துக்கொண்டனர். ஆனால் தாவீதின் சகோதரனும், சிமியாவின் மகனுமாகிய யோனதாப், “ராஜாவின் எல்லா குமாரர்களும் கொல்லப்பட்டார்கள் என்று நினைக்கவேண்டாம்! அம்னோன் மட்டுமே மரித்தான். அப்சலோமின் சகோதரியாகிய தாமாரை அம்னோன் கற்பழித்ததிலிருந்து அப்சலோம் இதற்காகத் திட்டமிட்டுக் கொண்டிருந்தான். எனது ஆண்டவனாகிய ராஜாவே, உங்கள் எல்லா குமாரர்களும் மரித்துவிட்டனர் என்று நினைக்கவேண்டாம். அம்னோன் மட்டுமே மரித்தான்” என்றான். அப்சலோம் ஓடிப்போய்விட்டான். நகரகோட்டைச் சுவரின் மீது ஒரு காவலாள் நின்றுக்கொண்டிருந்தான். மலை மேட்டிலிருந்து பலர் வந்துக்கொண்டிருப்பதை அவன் கவனித்தான். எனவே யோனதாப் தாவீது ராஜாவை நோக்கி, “பாருங்கள், நான் சொன்னது சரியே! ராஜாவின் குமாரர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்” என்றான். யோனதாப் அவ்வாறு கூறி முடித்ததும், ராஜாவின் குமாரர்கள் வந்து சேந்தனர். அவர்கள் சத்தமாக அழுதுக்கொண்டிருந்தனர். தாவீதும் அவனது அதிகாரிகளும் அழ ஆரம்பித்தனர். அவர்கள் மிகவும் புலம்பி அழுதனர். தாவீது தனது மகனுக்காக (அம்னோனுக்காக) தினசரி அழுதான். அப்சலோம் அம்மியூதின் குமாரனாகிய தல்மாய் என்னும் கேசூரின் ராஜாவிடம் ஓடிப் போனான். அப்சலோம் கேசூருக்கு ஓடிப்போன பிறகு, அங்கு மூன்று ஆண்டுகள் தங்கியிருந்தான். தாவீது ராஜா அம்னோனின் மரணத்திற்குப் பின், ஆறுதல் பெற்றான். ஆனால் அப்சலோமின் பிரிவு அவனை மிகவும் வாட்டியது.
2 சாமுவேல் 13:1-39 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இதற்குப்பின்பு தாவீதின் குமாரனாகிய அப்சலோமுக்குத் தாமார் என்னும் பேருள்ள சவுந்தரியமுள்ள ஒரு சகோதரி இருந்தாள்; அவள் மேல் தாவீதின் குமாரன் அம்னோன் மோகங்கொண்டான். தன் சகோதரியாகிய தாமாரினிமித்தம் ஏக்கங்கொண்டு வியாதிப்பட்டான்; அவள் கன்னியாஸ்திரீயாயிருந்தாள்; அவளுக்குப் பொல்லாப்புச் செய்ய, அம்னோனுக்கு வருத்தமாய்க் கண்டது. அம்னோனுக்குத் தாவீதுடைய தமையன் சிமியாவின் குமாரனாகிய யோனதாப் என்னும் பேருள்ள ஒரு சிநேகிதன் இருந்தான்; அந்த யோனதாப் மகா தந்திரவாதி. அவன் இவனைப் பார்த்து: ராஜகுமாரனாகிய நீ, நாளுக்குநாள் எதினாலே இப்படி மெலிந்துபோகிறாய், எனக்குச் சொல்லமாட்டாயா என்றான். அதற்கு அம்னோன்: என் சகோதரன் அப்சலோமின் சகோதரியாகிய தாமாரின்மேல் நான் ஆசை வைத்திருக்கிறேன் என்றான். அப்பொழுது யோனதாப் அவனைப் பார்த்து: நீ வியாதிக்காரனைப்போல உன் படுக்கையின்மேல் படுத்துக்கொள்; உன்னைப் பார்க்கிறதற்கு உன் தகப்பனார் வரும்போது, நீ, என் சகோதரியாகிய தாமார் வந்து, எனக்குப் போஜனம்கொடுத்து, அவள் கையினாலே சாப்பிடும்படிக்கு நான் பார்க்க, என் கண்களுக்கு முன்பாக சமைக்கும்படி தயவுசெய்யவேண்டும் என்று சொல் என்றான். அப்படியே அம்னோன் வியாதிக்காரன்போல் படுத்துக்கொண்டு, ராஜா தன்னைப் பார்க்கவந்தபோது, ராஜாவை நோக்கி: என் சகோதரியாகிய தாமார் வந்து நான் அவள் கையினாலே சாப்பிடும்படிக்கு, என் கண்களுக்கு முன்பாக இரண்டு நல்ல பணியாரங்களைப் பண்ணும்படி உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான். அப்பொழுது தாவீது: வீட்டுக்குத் தாமாரிடத்தில் ஆள் அனுப்பி, நீ உன் சகோதரனாகிய அம்னோன் வீட்டுக்குப் போய், அவனுக்கு சமையல் பண்ணிக்கொடு என்று சொல்லச்சொன்னான். தாமார் தன் சகோதரனாகிய அம்னோன் படுத்துக்கொண்டிருக்கிற வீட்டுக்குப்போய், மாவெடுத்துப் பிசைந்து, அவன் கண்களுக்கு முன்பாகத் தட்டி, பணியாரங்களைச் சுட்டு, சட்டியை எடுத்து, அவனுக்கு முன்பாக அவைகளை வைத்தாள்; ஆனாலும் அவன் சாப்பிடமாட்டேன் என்றான்; பின்பு அம்னோன்: எல்லாரும் என்னைவிட்டு வெளியே போகட்டும் என்றான்; எல்லாரும் அவனை விட்டு வெளியே போனார்கள். அப்பொழுது அம்னோன் தாமாரைப் பார்த்து: நான் உன் கையினாலே சாப்பிடும்படிக்கு, அந்தப் பலகாரத்தை அறை வீட்டிலே கொண்டுவா என்றான்; அப்படியே தாமார் தான் செய்த பணியாரங்களை அறை வீட்டில் இருக்கிற தன் சகோதரனாகிய அம்னோனிடத்தில் கொண்டுபோனாள். அவன் சாப்பிடும்படிக்கு அவள் அவைகளைக் கிட்ட கொண்டுவருகையில், அவன் அவளைப் பிடித்து, அவளைப் பார்த்து: என் சகோதரியே, நீ வந்து என்னோடே சயனி என்றான். அதற்கு அவள்: வேண்டாம், என் சகோதரனே, என்னை அவமானப்படுத்தாதே, இஸ்ரவேலிலே இப்படிச் செய்யத்தகாது; இப்படிப்பட்ட மதிகேடான காரியத்தைச் செய்யவேண்டாம். நான் என் வெட்கத்தோடே எங்கே போவேன்? நீயும் இஸ்ரவேலிலே மதிகெட்டவர்களில் ஒருவனைப்போல ஆவாய்; இப்போதும் நீ ராஜாவோடே பேசு, அவர் என்னை உனக்குத் தராமல் மறுக்க மாட்டார் என்றாள். அவன் அவள் சொல்லைக் கேட்கமாட்டேன் என்று அவளைப் பலவந்தமாய்ப் பிடித்து, அவளோடே சயனித்து, அவளைக் கற்பழித்தான். பிற்பாடு அம்னோன் அவளை மிகவும் வெறுத்தான்; அவன் அவளை விரும்பின விருப்பத்தைப் பார்க்கிலும், அவளை வெறுத்த வெறுப்பு அதிகமாயிருந்தது. ஆகையால்: நீ எழுந்து போய்விடு என்று அம்னோன் அவளோடே சொன்னான். அப்பொழுது அவள்: நீ எனக்கு முந்தி செய்த அநியாயத்தைப் பார்க்கிலும், இப்பொழுது என்னைத் துரத்திவிடுகிற அந்த அநியாயம் கொடுமையாயிருக்கிறது என்றாள்; ஆனாலும் அவன் அவள் சொல்லைக் கேட்க மனதில்லாமல், தன்னிடத்தில் சேவிக்கிற தன் வேலைக்காரனைக் கூப்பிட்டு: நீ இவளை என்னை விட்டு வெளியே தள்ளி, கதவைப் பூட்டு என்றான். அப்படியே அவனிடத்தில் சேவிக்கிறவன் அவளை வெளியே தள்ளி, கதவைப் பூட்டினான்; அவள் பலவர்ணமான வஸ்திரத்தை உடுத்திக்கொண்டிருந்தாள்; ராஜகுமாரத்திகளாகிய கன்னிகைகள் இப்படிக்கொத்த சால்வைகளைத் தரித்துக்கொள்வார்கள். அப்பொழுது தாமார்: தன் தலையின்மேல் சாம்பலை வாரிப் போட்டுக்கொண்டு, தான் தரித்திருந்த பலவர்ணமான வஸ்திரத்தைக் கிழித்து, தன் கையைத் தன் தலையின்மேல் வைத்து, சத்தமிட்டு அழுதுகொண்டு போனாள். அப்பொழுது அவள் சகோதரனாகிய அப்சலோம் அவளைப் பார்த்து: உன் சகோதரனாகிய அம்னோன் உன்னோடிருந்தானோ? இப்போதும் என் சகோதரியே, நீ மவுனமாயிரு; அவன் உன்னுடைய சகோதரன்; இந்தக் காரியத்தை உன் மனதிலே வைக்காதே என்றான்; அப்படியே தாமார் தன் சகோதரனாகிய அப்சலோமின் வீட்டில் தனித்துக் கிலேசப்பட்டுக்கொண்டிருந்தாள். தாவீது ராஜா இந்தச் செய்திகளையெல்லாம் கேள்விப்பட்டபோது, வெகு கோபமாயிருந்தான். அப்சலோம் அம்னோனோடே நன்மையாகிலும் தீமையாகிலும் பேசவில்லை; தன் சகோதரியாகிய தாமாரை அம்னோன் கற்பழித்த காரியத்தினிமித்தம் அப்சலோம் அவனைப் பகைத்தான். இரண்டு வருஷம் சென்றபின்பு, அப்சலோம் எப்பிராயீமுக்குச் சமீபமான பாலாத்சோரிலே ஆட்களை வைத்து, ஆடுகளை மயிர்க்கத்தரிக்கிற வேலையில் இருந்தான்; அங்கே ராஜகுமாரர் எல்லாரையும் விருந்துக்கு அழைத்தான். அவன் ராஜாவினிடத்தில் போய், ஆட்களை வைத்து ஆடுகளை மயிர்கத்தரிக்கிறேன்; ராஜாவும் அவருடைய ஊழியக்காரரும் உமது அடியானோடே வரும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். ராஜா அப்சலோமைப் பார்த்து: அப்படி வேண்டாம், என் மகனே; நாங்கள் எல்லாரும் வருவோமாகில் உனக்கு வெகு செலவுண்டாகும் என்றான்; அவனை வருந்திக்கேட்டாலும், அவன் போக மனதில்லாமல், அவனை ஆசீர்வதித்தான். அப்பொழுது அப்சலோம்: அது கூடாதிருந்தால், என் சகோதரனாகிய அம்னோனாவது எங்களோடே வரும்படி அவனுக்கு உத்தரவு செய்யும் என்றான். அதற்கு ராஜா: அவன் உன்னோடே வரவேண்டியது என்ன என்றான். அப்சலோம் பின்னையும் அவனை வருந்திக் கேட்டுக்கொண்டபடியினால், அவன் அம்னோனையும், ராஜாவின் குமாரர் அனைவரையும் அவனோடே போகவிட்டான். அப்சலோம் தன் வேலைக்காரரை நோக்கி: அம்னோன் திராட்சரசம் குடித்துக் களித்திருக்கும் சமயத்தை நன்றாய்ப் பார்த்திருங்கள்; அப்பொழுது நான்: அம்னோனை அடியுங்கள் என்று சொல்லுவேன்; உடனே நீங்கள் பயப்படாமல் அவனைக் கொன்றுபோடுங்கள்; நான் அல்லவோ அதை உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்; திடன்கொண்டு தைரியமாயிருங்கள் என்று சொல்லியிருந்தான். அப்சலோம் கற்பித்தபடியே அப்சலோமின் வேலைக்காரர் அம்னோனுக்குச் செய்தார்கள்; அப்பொழுது ராஜகுமாரர் எல்லாரும் எழுந்திருந்து, அவரவர் தம் தம் கோவேறு கழுதையின்மேல் ஏறி ஓடிப்போனார்கள். அவர்கள் வழியில் இருக்கிறபோதே, அப்சலோம் ராஜகுமாரரையெல்லாம் அடித்துக் கொன்றுபோட்டான், அவர்களில் ஒருவரும் மீந்திருக்க விடவில்லை என்கிறதாய், தாவீதுக்குச் செய்தி வந்தது. அப்பொழுது ராஜா எழுந்திருந்து, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, தரையிலே விழுந்து கிடந்தான்; அவன் ஊழியக்காரர் எல்லாரும் தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு நின்றார்கள். அப்பொழுது தாவீதின் தமையனாகிய சிமியாவின் குமாரன் யோனதாப் வந்து: ராஜகுமாரரான வாலிபரையெல்லாம் கொன்று போட்டார்கள் என்று என் ஆண்டவன் நினைக்கவேண்டாம்; அம்னோன் மாத்திரம் செத்துப்போனான்; அவன் தன் சகோதரியாகிய தாமாரைக் கற்பழித்த நாள்முதற்கொண்டு, அது அப்சலோமின் நெஞ்சில் இருந்தது. இப்போதும் ராஜகுமாரர்கள் எல்லாரும் செத்தார்கள் என்கிற பேச்சை ராஜாவாகிய என் ஆண்டவன் தம்முடைய மனதிலே வைக்கவேண்டாம்; அம்னோன் ஒருவனே செத்தான் என்றான்; அப்சலோம் ஓடிப்போனான். ஜாமக்காரச் சேவகன் தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, இதோ, அநேகம் ஜனங்கள் தனக்குப் பின்னாலே மலை ஓரமாய் வருகிறதைக் கண்டான். அப்பொழுது யோனதாப் ராஜாவைப் பார்த்து: இதோ, ராஜகுமாரர் வருகிறார்கள்; உமது அடியேன் சொன்னபடியே ஆயிற்று என்றான். அவன் பேசி முடிந்தபோது, ராஜகுமாரர் வந்து, சத்தமிட்டு அழுதார்கள்; ராஜாவும் அவனுடைய எல்லா ஊழியக்காரரும் மிகவும் புலம்பி அழுதார்கள். அப்சலோமோ அம்மீயூதின் குமாரனாகிய தல்மாய் என்னும் கேசூரின் ராஜாவினிடத்திற்கு ஓடிப்போனான். தாவீது தினந்தோறும் தன் குமாரனுக்காகத் துக்கித்துக்கொண்டிருந்தான். அப்சலோம் கேசூருக்கு ஓடிப்போய், அங்கே மூன்று வருஷம் இருந்தான். தாவீது ராஜா அம்னோன் செத்தபடியினால், அவனுக்காகத் துக்கித்து ஆறுதல் அடைந்தபோது அப்சலோமைப் பின்தொடரும் நினைவை விட்டுவிட்டான்.