2 சாமுவேல் 11:12-15

2 சாமுவேல் 11:12-15 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அதற்குத் தாவீது அவனிடம், “இன்னும் ஒரு நாள் இங்கே தங்கியிரு; நாளைக்கு நான் உன்னை திருப்பி அனுப்புவேன்” என்றான். எனவே உரியா அன்றும், மறுநாளும் எருசலேமில் தங்கியிருந்தான். தாவீதின் அழைப்பிற்கிணங்கி உரியா அவனுடன் சாப்பிட்டு, குடித்தான். தாவீது அவனை வெறியடையச் செய்தான். ஆனாலும் அன்று மாலையும் அவன் தன் வீட்டிற்குப் போகாமல் தன் தலைவனுடைய பணியாட்களுடனே தனது படுக்கையில் படுத்துக்கொண்டான். அதிகாலையில் தாவீது ஒரு கடிதத்தை யோவாபுக்கு எழுதி உரியாவிடம் கொடுத்து அனுப்பினான். அக்கடிதத்தில், “போர் கடுமையாக நடக்கும்போது முன்னணியில் உரியாவை நிறுத்து; அவன் வெட்டுண்டு சாகும்படி அங்கே அவனைவிட்டு நீங்கள் பின்வாங்குங்கள்” என்று எழுதினான்.

2 சாமுவேல் 11:12-15 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது தாவீது உரியாவை நோக்கி: இன்றைக்கும் நீ இங்கேயே இரு; நாளைக்கு உன்னை அனுப்பிவிடுவேன் என்றான்; அப்படியே உரியா அன்றும் மறுநாளும் எருசலேமில் இருந்தான். தாவீது அவனைத் தனக்கு முன்பாக சாப்பிட்டுக் குடிக்கிறதற்கு அழைத்து, அவனுக்கு போதை உண்டாக்கினான்; ஆனாலும் அவன் தன்னுடைய வீட்டிற்குப் போகாமல், மாலையில் தன்னுடைய ஆண்டவனின் வீரர்களோடு தன்னுடைய படுக்கையிலே படுத்துக்கொண்டான். காலையில் தாவீது யோவாபுக்கு ஒரு கடிதத்தை எழுதி, உரியாவின் கையில் கொடுத்து அனுப்பினான். அந்தக் கடிதத்திலே கடுமையாக யுத்தம் நடக்கிற இடத்திலே நீங்கள் உரியாவை நிறுத்தி, அவன் வெட்டப்பட்டு சாகும்படி, அவனைவிட்டுப் பின்வாங்குங்கள் என்று எழுதியிருந்தான்.

2 சாமுவேல் 11:12-15 பரிசுத்த பைபிள் (TAERV)

தாவீது உரியாவிடம், “நீ இன்று இங்கே தங்கியிரு. நாளை உன்னைப் போருக்கு அனுப்புகிறேன்” என்றான். உரியா மறுநாள் காலைவரை எருசலேமில் தங்கியிருந்தான். அப்போது தாவீது தன்னை வந்து பார்க்கும்படி உரியாவுக்குச் சொல்லியனுப்பினான். உரியா தாவீதுடன் உண்டு குடித்தான். தாவீது உரியாவைக் குடிபோதையில் மூழ்கும்படிச் செய்தான். அப்போதும் உரியா வீட்டிற்குப் போகவில்லை. பதிலாக ராஜாவின் பணியாட்களோடு வீட்டிற்கு வெளியே உரியா தூங்கச் சென்றான். மறுநாள், காலையில் தாவீது யோவாபுக்கு ஒரு கடிதம் எழுதினான். அதை உரியாவிடம் கொடுத்து அனுப்பினான். கடிதத்தில் தாவீது, “உரியாவைக் கடும் போர் நடக்கும் யுத்தமுனையில் தனித்து நிறுத்து. போரில் அவன் கொல்லப்படட்டும்” என்றான்.

2 சாமுவேல் 11:12-15 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது தாவீது உரியாவை நோக்கி: இன்றைக்கும் நீ இங்கேயிரு; நாளைக்கு உன்னை அனுப்பிவிடுவேன் என்றான்; அப்படியே உரியா அன்றும் மறுநாளும் எருசலேமில் இருந்தான். தாவீது அவனைத் தனக்கு முன்பாகப் புசித்துக் குடிக்கிறதற்கு அழைத்து, அவனை வெறிக்கப்பண்ணினான்; ஆனாலும் அவன் தன் வீட்டுக்குப் போகாமல், சாயங்காலத்திலே தன் ஆண்டவனின் சேவகரோடே தன் படுக்கையிலே படுத்துக்கொண்டான். காலமே தாவீது யோவாபுக்கு ஒரு நிருபத்தை எழுதி, உரியாவின் கையில் கொடுத்து அனுப்பினான். அந்த நிருபத்திலே மும்முரமாய் நடக்கிற போர்முகத்திலே நீங்கள் உரியாவை நிறுத்தி, அவன் வெட்டுண்டு சாகும்படிக்கு, அவனை விட்டுப் பின்வாங்குங்கள் என்று எழுதியிருந்தான்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்