2 இராஜாக்கள் 6:8-23
2 இராஜாக்கள் 6:8-23 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இந்த நாட்களில் சீரிய அரசன் இஸ்ரயேலுடன் யுத்தம் செய்தான். அவன் தன் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, “நான் இந்தந்த இடங்களில் எனது படை முகாம்களை அமைப்பேன்” என்று சொன்னான். ஆனால் இறைவனுடைய மனிதனாகிய எலிசாவோ இஸ்ரயேல் அரசனுக்குச் செய்தி அனுப்பி, “நீர் இந்த இடங்களைக் கடக்கும்போது கவனமாயிரும். ஏனென்றால் சீரியர் இவ்விடத்துக்கு வரப்போகிறார்கள்” என்றான். அதன்படி இஸ்ரயேல் அரசன் இறைவனின் மனிதன் குறிப்பிட்ட இடங்களுக்கு ஆட்களை அனுப்பி உளவு பார்த்தான். எலிசா பலமுறை அரசனை எச்சரித்துக்கொண்டே வந்தான். அரசனும் அந்தந்த இடங்களில் விழிப்பாக இருந்தான். இது சீரிய அரசனுக்குக் கோபமூட்டியது. அவன் தன் அதிகாரிகளை வரவழைத்து, “உங்களில் எவன் இஸ்ரயேல் அரசனுக்கு சார்பானவன் என்று எனக்குச் சொல்லமாட்டீர்களா?” என்று கேட்டான். அப்பொழுது அவனுடைய அதிகாரிகளில் ஒருவன், “அரசனாகிய என் தலைவனே, அப்படியாக எங்களில் ஒருவரும் இல்லை. இஸ்ரயேலில் உள்ள இறைவாக்கினன் எலிசா தான் நீர் உமது படுக்கையறையில் பேசும் வார்த்தைகளைக்கூட இஸ்ரயேலின் அரசனுக்கு வெளிப்படுத்துகிறான்” என்றான். அதற்கு அரசன், “நான் ஆட்களை அனுப்பி அவனைப் பிடிப்பதற்காக அவன் எங்கேயிருக்கிறான் என்று போய்ப் பாருங்கள்” என்று கட்டளையிட்டான். அப்பொழுது எலிசா தோத்தானில் இருப்பதாகச் செய்தி கொண்டுவரப்பட்டது. அரசன் அந்த இடத்துக்குக் குதிரைகளையும், தேர்களையும், ஒரு பலத்த இராணுவத்தையும் அனுப்பினான். இவர்கள் இரவில் வந்து பட்டணத்தைச் சூழ்ந்துகொண்டனர். அடுத்தநாள் இறைவனுடைய மனிதனின் வேலையாள், அதிகாலையில் எழும்பி வெளியே போனபோது, பட்டணம் குதிரைகளும் தேர்களும் கொண்ட இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டிருப்பதைக் கண்டான். உடனே அந்த வேலையாள், “ஆ, என் எஜமானே! நாங்கள் என்ன செய்வோம்?” என்றான். அதற்கு இறைவாக்கினன், “பயப்படாதே. அவர்களுடைய பக்கத்தில் இருப்பவர்களைக் காட்டிலும், நம்முடைய பக்கத்தில் இருப்பவர்கள் அநேகர்” என்றான். அத்துடன் எலிசா, “யெகோவாவே, இவன் பார்க்கத்தக்கதாக இவனுடைய கண்களைத் திறந்துவிடும்” என்று மன்றாடினான். அப்பொழுது யெகோவா அந்த வேலையாளின் கண்களைத் திறந்தார், அவன் பார்த்தான். மலைகளை மூடத்தக்கதான அநேக நெருப்புக் குதிரைகளும், தேர்களும் எலிசாவைச் சூழ்ந்திருப்பதை அவன் கண்டான். பகைவர் எலிசாவை நோக்கி வந்தபோது, எலிசா யெகோவாவை நோக்கி, “இந்தப் படையினரைக் குருடராக்கும்” என்று மன்றாடினான். எலிசா வேண்டிக்கொண்டபடியே யெகோவா அவர்களைக் குருடராக்கினார். எலிசா அவர்களை நோக்கி, “இது பாதையுமல்ல, நகரமுமல்ல; என்னைப் பின்பற்றி வாருங்கள். நீங்கள் தேடித்திரியும் மனிதனிடம் உங்களை வழிநடத்துவேன்” என்று கூறி அவர்களைச் சமாரியாவுக்கு வழிநடத்திக்கொண்டு போனான். அவர்கள் பட்டணத்துக்குள் போனதும் எலிசா, “யெகோவாவே இவர்கள் பார்க்கும்படி இவர்களுடைய கண்களைத் திறந்தருளும்” என்றான். யெகோவா அவர்களுடைய கண்களைத் திறந்தார். அப்பொழுது தாங்கள் சமாரியாவுக்குள் இருப்பதை அவர்கள் கண்டார்கள். இஸ்ரயேல் அரசன் அவர்களைக் கண்டபோது எலிசாவிடம், “என் தகப்பனே, நான் அவர்களைக் கொன்றுவிடட்டுமா?” என்று கேட்டான். அதற்கு எலிசா, “அவர்களைக் கொல்லாதே. உனது வாளாலும், வில்லாலும் சிறைப்பிடித்த கைதிகளைக் கொல்லலாமா? அவர்களுக்குச் சாப்பிட அப்பமும், குடிக்கத் தண்ணீரும் கொடுத்து அவர்களுடைய எஜமானிடம் திருப்பி அனுப்பிவிடு” என்றான். அப்படியே அரசனும் அவர்களுக்கு ஒரு பெரிய விருந்தை ஆயத்தப்படுத்தினான். அவர்கள் சாப்பிட்டு, குடித்து முடித்தவுடன் அவர்களை அனுப்பிவிட்டான். அவர்கள் தங்கள் எஜமானிடம் திரும்பிப் போனார்கள். அதன்பின் சீரியப் படைப் பிரிவுகள் இஸ்ரயேலை திடீர் தாக்குதல் செய்வதை நிறுத்திவிட்டார்கள்.
2 இராஜாக்கள் 6:8-23 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அக்காலத்தில் சீரியாவின் ராஜா இஸ்ரவேலுக்கு விரோதமாக போர்செய்து, இந்த இந்த இடத்திலே பாளயமிறங்குவேன் என்று தன் வேலைக்காரர்களோடு ஆலோசனைசெய்தான். ஆகிலும் தேவனுடைய மனிதன் இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் ஆள் அனுப்பி: இன்ன இடத்திற்குப் போகாதபடி எச்சரிக்கையாயிரும்; சீரியர்கள் அங்கே வருவார்கள் என்று சொல்லச்சொன்னான். அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா தேவனுடைய மனிதன் தன்னை எச்சரித்து, தனக்குக் குறித்துச்சொன்ன இடத்திற்கு மனிதர்களை அனுப்பிப்பார்த்து எச்சரிக்கையாயிருந்து, இப்படி அநேக முறை தன்னைக் காத்துக்கொண்டான். இந்தக் காரியத்தால் சீரிய ராஜாவின் இருதயம் குழம்பி, அவன் தன் இராணுவ அதிகாரிகளை அழைத்து: நம்முடையவர்களில் இஸ்ரவேலின் ராஜாவிற்கு உளவாளியாக இருக்கிறவன் யார் என்று நீங்கள் எனக்கு அறிவிக்கமாட்டீர்களா என்று கேட்டான். அப்பொழுது அவனுடைய அதிகாரிகளில் ஒருவன்: அப்படியில்லை; என் எஜமானாகிய ராஜாவே, நீர் உம்முடைய படுக்கையறையிலே பேசுகிற வார்த்தைகளையும் இஸ்ரவேலிலிருக்கிற தீர்க்கதரிசியாகிய எலிசா இஸ்ரவேலின் ராஜாவிற்கு அறிவிப்பான் என்றான். அப்பொழுது அவன்: நான் மனிதர்களை அனுப்பி அவனைப் பிடிக்கும்படி, நீங்கள் போய் அவன் எங்கே இருக்கிறான் என்று பாருங்கள் என்றான்; அவன் தோத்தானில் இருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது அவன் அங்கே குதிரைகளையும் இரதங்களையும் பலத்த இராணுவத்தையும் அனுப்பினான்; அவர்கள் இரவிலே வந்து பட்டணத்தை சூழ்ந்துகொண்டார்கள். தேவனுடைய மனிதனின் வேலைக்காரன் அதிகாலையில் எழுந்து வெளியே புறப்படும்போது, இதோ, இராணுவமும் குதிரைகளும் இரதங்களும் பட்டணத்தைச் சூழ்ந்துகொண்டிருக்கக் கண்டான்; அப்பொழுது வேலைக்காரன் அவனை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, என்னசெய்வோம் என்றான். அதற்கு அவன்: பயப்படாதே; அவர்களோடு இருக்கிறவர்களைவிட நம்மோடு இருக்கிறவர்கள் அதிகம் என்றான். அப்பொழுது எலிசா விண்ணப்பம்செய்து: யெகோவாவே, இவன் பார்க்கும்படி இவனுடைய கண்களைத் திறந்தருளும் என்றான்; உடனே யெகோவா அந்த வேலைக்காரனுடைய கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச்சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான். அவர்கள் அவனிடத்தில் வரும்போது, எலிசா யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்து: இந்த மக்களுக்குக் கண்மயக்கம் உண்டாகும்படிச் செய்யும் என்றான்; எலிசாவுடைய வார்த்தையின்படியே அவர்களுக்குக் கண்மயக்கம் உண்டாகச் செய்தார். அப்பொழுது எலிசா அவர்களை நோக்கி: இது வழி அல்ல; இது பட்டணமும் அல்ல; என் பின்னே வாருங்கள்; நீங்கள் தேடுகிற மனிதனிடத்திற்கு நான் உங்களை வழிநடத்துவேன் என்று சொல்லி, அவர்களைச் சமாரியாவுக்கு அழைத்துக் கொண்டுபோனான். அவர்கள் சமாரியாவிற்கு வந்தபோது, எலிசா: யெகோவாவே, இவர்கள் பார்க்கும்படி இவர்களுடைய கண்களைத் திறந்தருளும் என்றான்; பார்க்கும்படிக் யெகோவா அவர்களுடைய கண்களைத் திறக்கும்போது, இதோ, இவர்கள் சமாரியாவின் நடுவே இருந்தார்கள். இஸ்ரவேலின் ராஜா அவர்களைக் கண்டபோது, எலிசாவைப் பார்த்து: என் தகப்பனே, நான் அவர்களை வெட்டிப்போடலாமா என்று கேட்டான். அதற்கு அவன்: நீர் வெட்டவேண்டாம்; நீர் உம்முடைய பட்டயத்தாலும், உம்முடைய வில்லினாலும் சிறைபிடித்தவர்களை வெட்டுகிறீரோ? இவர்கள் சாப்பிட்டுக் குடித்து, தங்கள் எஜமானிடத்திற்குப் போகும்படி, அப்பமும் தண்ணீரும் அவர்களுக்கு முன்பாக வையும் என்றான். அப்பொழுது அவர்களுக்குப் பெரிய விருந்துசெய்து, அவர்கள் சாப்பிட்டுக் குடித்தபின்பு, அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் தங்களுடைய ஆண்டவனிடத்திற்குப் போய்விட்டார்கள்; சீரியர்களின் படைகள் இஸ்ரவேல் தேசத்திலே அதற்குப் பிறகு வரவில்லை.
2 இராஜாக்கள் 6:8-23 பரிசுத்த பைபிள் (TAERV)
ஆராமின் ராஜா இஸ்ரவேலுக்கு எதிராகப் போரை ஆரம்பித்தான். வேலைக்காரர்களோடும் படை அதிகாரிகளோடும் ஆலோசனை கூட்டம் நடத்தினான். ராஜா, “இந்த இடத்தில் ஒளிந்திருங்கள். இஸ்ரவேலின் படைகள் வரும்போது தாக்க வேண்டும்” என்றான். ஆனால் தேவமனிதனோ (எலிசாவோ) இஸ்ரவேல் ராஜாவுக்கு ஒரு தூதுவனை அனுப்பி, “எச்சரிக்கையாய் இரு! அந்த வழியாகப் போகாதே! ஆராமியப் படை வீரர்கள் ஒளிந்திருக்கிறார்கள்!” என்று சொல்லச் செய்தான். உடனே ராஜா எலிசாவின் எச்சரிக்கைச் செய்தியை தன் படைவீரர்களுக்கு அந்த இடத்திற்கு அனுப்பி பெரும் எண்ணிக்கையில் அவர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றினான். இதை அறிந்ததும் ஆராமின் ராஜா மிகவும் குலைந்து போனான். அவன் தன் அதிகாரிகளை அழைத்து, “நம் திட்டத்தை இஸ்ரவேல் ராஜாவுக்கு வெளிப்படுத்திய ஒற்றன் உங்களில் யார்?” என்று கேட்டான். ஒரு அதிகாரி, “எங்கள் ராஜாவும் ஆண்டவனுமானவரே! நம்மில் எவரும் ஒற்றராகவில்லை. நீங்கள் உங்களுடைய படுக்கையறையில் பேசுகின்ற பல இரகசியங்களையும் கூட, இஸ்ரவேலில் இருக்கிற தீர்க்கதரிசி எலிசாவால் இஸ்ரவேல் ராஜாவிடம் சொல்ல முடியும்!” என்றான். அதற்கு ராஜா, ஆட்களை அனுப்பி “போய் எலிசாவை கண்டுபிடியுங்கள். நான் அவனைப் பிடித்துக்கொண்டுவர ஆட்களை அனுப்புவேன்” என்றான். வேலைக்காரர்களோ, “எலிசா தோத்தானில் இருக்கிறார்” என்றனர். பிறகு ராஜா குதிரைகள், இரதங்கள், பெரும் படை ஆகியோரைத் தோத்தானுக்கு அனுப்பினான். அவர்கள் இரவில் அந்நகரை முற்றுகை இட்டனர். தேவ மனிதனின் (எலிசாவின்) வேலைக்காரன் காலையில் விரைவில் எழுந்து, வெளியே சென்றபோது படைவீரர்கள், குதிரைகள், மற்றும் இரதங்கள் ஆகியவற்றைக் கண்டான். எலிசாவின் வேலைக்காரன் (அவரிடம் ஓடி வந்து), “எஜமானரே! நாம் என்ன செய்யமுடியும்?” என்று கேட்டான். எலிசாவோ, “பயப்படவேண்டாம், ஆராம் ராஜாவுக்காகப் போரிடும் வீரர்களை விட நமக்காக போரிடும் வீரர்கள் அதிகம்” என்றான். பிறகு அவன் ஜெபம் செய்து “கர்த்தாவே! என் வேலைக்காரனின் கண்ணை திறந்துவிடும். அதனால் அவன் கண்டுகொள்வான்” என்று வேண்டிக்கொண்டான். அந்த வேலைக்காரனின் கண்களை கர்த்தர் திறந்தார். அவன் பார்த்தபோது, மலை முழுவதும் படை வீரர்களும் குதிரைகளும் இரதங்களும் நிற்பதைப் பார்த்தான் அவர்கள் எலிசாவை சுற்றியிருந்தனர்! பின் அவர்கள் (ஆராமியர்கள்) கீழே இறங்கி எலிசாவிடம் வந்து நின்றதும், அவன் கர்த்தரிடம், “இம்மனிதர்கள் குருடாகப் போகும்படி உம்மை வேண்டிக்கொள்கிறேன்” என்றான். பிறகு கர்த்தர் எலிசா வேண்டிக்கொண்டபடியே ஆராமியர்களை குருடாக்கினார். எலிசா அவர்களைப் பார்த்து, “இது சரியான வழியல்ல. இது சரியான நகரமும் அல்ல. என்னைப் பின்பற்றுங்கள். நான் உங்களை நீங்கள் தேடுகிறவரிடம் அழைத்துப் போவேன்” என்றான். பிறகு அவர்களை சமாரியாவிற்கு அழைத்துப்போனான். அவர்கள் சமாரியாவை அடைந்ததும் எலிசா “கர்த்தாவே, இப்போது இந்த மனிதர்களின் கண்களைத் திறக்கச்செய்யும். எனவே அவர்கள் பார்க்க முடியும்” என்றான். பிறகு கர்த்தர் அவர்களின் கண்களைத் திறந்தார். அவர்கள் சமாரியாவின் நடுவே இருப்பதை பார்த்தனர்! இஸ்ரவேலின் ராஜா ஆராமிய படைகளைக் கண்டதும் எலிசாவிடம் “என் தந்தையே, இவர்களைக் கொல்லட்டுமா? இவர்களைக் கொல்லட்டுமா?” என்று கேட்டான். அதற்கு எலிசா, “இவர்களைக் கொல்ல வேண்டாம். இவர்கள் உன் வாளாலும் வில்லாலும் போரில் கைப்பற்றிய வீரர்கள் அல்ல! இவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடு. அவர்களை உண்ணவும் குடிக்கவும்விடு. பின் எஜமானனிடம் செல்லவும் அனுமதிகொடு” என்றான். ஆராமியப் படைக்காக இஸ்ரவேல் ராஜா நிறைய உணவைத் தயாரித்தான். ஆராமியப்படை உண்டு குடித்தது. பிறகு, இஸ்ரவேல் ராஜா ஆராமியப்படையை ஆராமுக்கு அனுப்பினான். ஆராமியப் படையினர் தங்களது எஜமானனிடம் திரும்பச் சென்றார்கள். பறிமுதல் செய்வதற்காக இஸ்ரவேலுக்குள் ஆராமியர்கள் அதற்குமேல் படைகளை அனுப்பவில்லை.
2 இராஜாக்கள் 6:8-23 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அக்காலத்தில் சீரியாவின் ராஜா இஸ்ரவேலுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணி, இன்ன இன்ன ஸ்தலத்திலே பாளயமிறங்குவேன் என்று தன் ஊழியக்காரரோடே ஆலோசனைபண்ணினான். ஆகிலும் தேவனுடைய மனுஷன் இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் ஆள் அனுப்பி: இன்ன இடத்துக்குப் போகாதபடிக்கு எச்சரிக்கையாயிரும்; சீரியர் அங்கே இறங்குவார்கள் என்று சொல்லச்சொன்னான். அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா தேவனுடைய மனுஷன் தன்னை எச்சரித்து, தனக்குக் குறித்துச்சொன்ன ஸ்தலத்திற்கு மனுஷரை அனுப்பிப்பார்த்து எச்சரிக்கையாயிருந்து, இப்படி அநேகந்தரம் தன்னைக் காத்துக்கொண்டான். இந்தக் காரியத்தினிமித்தம் சீரிய ராஜாவின் இருதயம் குழம்பி, அவன் தன் ஊழியக்காரரை அழைத்து: நம்முடையவர்களில் இஸ்ரவேலின் ராஜாவுக்கு உளவாயிருக்கிறவன் யார் என்று நீங்கள் எனக்கு அறிவிக்கமாட்டீர்களா என்று கேட்டான். அப்பொழுது அவன் ஊழியக்காரரில் ஒருவன்: அப்படியில்லை; என் ஆண்டவனாகிய ராஜாவே, நீர் உம்முடைய பள்ளி அறையிலே பேசுகிற வார்த்தைகளையும் இஸ்ரவேலிலிருக்கிற தீர்க்கதரிசியாகிய எலிசா இஸ்ரவேலின் ராஜாவுக்கு அறிவிப்பான் என்றான். அப்பொழுது அவன்: நான் மனுஷரை அனுப்பி அவனைப் பிடிக்கும்படி, நீங்கள் போய் அவன் எங்கே இருக்கிறான் என்று பாருங்கள் என்றான்; அவன் தோத்தானில் இருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது அவன் அங்கே குதிரைகளையும் இரதங்களையும் பலத்த இராணுவத்தையும் அனுப்பினான்; அவர்கள் இராக்காலத்திலே வந்து பட்டணத்தை வளைந்துகொண்டார்கள். தேவனுடைய மனுஷனின் வேலைக்காரன் அதிகாலமே எழுந்து வெளியே புறப்படுகையில், இதோ, இராணுவமும் குதிரைகளும் இரதங்களும் பட்டணத்தைச் சுற்றிக்கொண்டிருக்கக் கண்டான்; அப்பொழுது வேலைக்காரன் அவனை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, என்னசெய்வோம் என்றான். அதற்கு அவன்: பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப்பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்றான். அப்பொழுது எலிசா விண்ணப்பம்பண்ணி: கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான்; உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச்சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான். அவர்கள் அவனிடத்தில் வருகையில், எலிசா கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: இந்த ஜனங்களுக்குக் கண்மயக்கம் உண்டாகும்படி செய்யும் என்றான்; எலிசாவுடைய வார்த்தையின்படியே அவர்களுக்குக் கண்மயக்கம் உண்டாகும்படி செய்தார். அப்பொழுது எலிசா அவர்களை நோக்கி: இது வழி அல்ல; இது பட்டணமும் அல்ல; என் பிறகே வாருங்கள்; நீங்கள் தேடுகிற மனுஷனிடத்தில் நான் உங்களை வழிநடத்துவேன் என்று சொல்லி, அவர்களைச் சமாரியாவுக்கு அழைத்துக் கொண்டுபோனான். அவர்கள் சமாரியாவில் வந்தபோது, எலிசா: கர்த்தாவே, இவர்கள் பார்க்கும்படிக்கு இவர்கள் கண்களைத் திறந்தருளும் என்றான்; பார்க்கும்படிக்குக் கர்த்தர் அவர்கள் கண்களைத் திறக்கும்போது, இதோ, இவர்கள் சமாரியாவின் நடுவே இருந்தார்கள். இஸ்ரவேலின் ராஜா அவர்களைக் கண்டபோது, எலிசாவைப் பார்த்து: என் தகப்பனே, நான் அவர்களை வெட்டிப்போடலாமா என்று கேட்டான். அதற்கு அவன்: நீர் வெட்டவேண்டாம்; நீர் உம்முடைய பட்டயத்தாலும், உம்முடைய வில்லினாலும் சிறையாக்கிக்கொண்டவர்களை வெட்டுகிறீரோ? இவர்கள் புசித்துக் குடித்து, தங்கள் ஆண்டவனிடத்துக்குப் போகும்படிக்கு, அப்பமும் தண்ணீரும் அவர்களுக்கெதிரில் வையும் என்றான். அப்பொழுது அவர்களுக்குப் பெரிய விருந்துபண்ணி, அவர்கள் புசித்துக்குடித்தபின்பு, அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் தங்கள் ஆண்டவனிடத்துக்குப் போய்விட்டார்கள்; சீரியரின் தண்டுகள் இஸ்ரவேல் தேசத்திலே அப்புறம் வரவில்லை.