2 இராஜாக்கள் 4:38-44

2 இராஜாக்கள் 4:38-44 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

எலிசா கில்காலுக்குத் திரும்பிப்போனான், அப்போது அந்நாட்டில் பஞ்சம் ஏற்பட்டிருந்தது. ஒரு நாள் இறைவாக்கினர் கூட்டம் வந்து அவனுடன் பேசிக்கொண்டிருக்கும்போது, அவன் தன் வேலையாளைப் பார்த்து, “அந்தப் பெரிய பானையை அடுப்பில் வைத்து இந்த மனிதருக்குக் கொஞ்சம் கூழ் காய்ச்சு” என்றான். அவர்களில் ஒருவன் வயல்வெளிக்கு மூலிகைச் செடிகளைப் பறிப்பதற்காக போகையில், ஒரு காட்டுக் கொம்மட்டிக் கொடியைக் கண்டான். அதன் காய்களைப் பிடுங்கி தன் மடியை நிரப்பினான். அவன் திரும்பிவந்தபோது, அவை என்ன காய்கள் என்று ஒருவரும் அறியாதிருந்தும் அவைகளை வெட்டி கூழிருந்த பானைக்குள் போட்டான். அதன்பின் அவர்கள் கூழ் குடிப்பதற்காக எல்லோருக்கும் அதை ஊற்றிக் கொடுத்தார்கள். அவர்கள் அதைக் குடிக்கத் தொடங்கியவுடனேயே, “இறைவனுடைய மனுஷனே! பானைக்குள் சாவு இருக்கிறது” என்று பலமாகக் கத்தினார்கள். அதை அவர்களால் குடிக்க முடியவில்லை. அப்பொழுது எலிசா அவர்களிடம், “சிறிது மாவைக் கொண்டுவாருங்கள்” என்றான். அதை அவன் அந்தப் பானைக்குள் போட்டு, “இப்பொழுது இதை இந்த மனிதருக்குப் பரிமாறுங்கள், அவர்கள் குடிக்கட்டும்” என்றான். அதன்பின் எந்த விதமான தீங்கும் பானைக்குள் இருக்கவில்லை. ஒரு மனிதன் பாகால் சாலீஷாவிலிருந்த இறைவனுடைய மனிதனுக்கு தன் விளைச்சலின் முதற்பலனிலிருந்து தயாரிக்கப்பட்ட இருபது வாற்கோதுமை அப்பங்களையும், கொஞ்சம் புதிய தானியக் கதிர்களையும் சாக்குப்பையில் கொண்டுவந்தான். அப்பொழுது எலிசா, “இதை இந்த மக்களுக்குச் சாப்பிடக் கொடு” என்றான். அப்பொழுது அவனுடைய வேலையாள், “இதை நான் எப்படி நூறு பேருக்குப் பங்கிடுவேன்” என்று கேட்டான். ஆனால் எலிசா அதற்கு, “அதை இந்த மக்களுக்குச் சாப்பிடும்படி கொடு. ஏனென்றால் யெகோவா சொல்வது இதுவே: ‘அவர்கள் சாப்பிட்டு கொஞ்சம் மீதமும் இருக்கும்’ என்கிறார்” என்றான். அப்படியே அவன் அதை அவர்களுக்குப் பரிமாறினான். யெகோவாவின் வார்த்தையின்படியே அவர்கள் சாப்பிட்டு சில மீதியாயும் விடப்பட்டிருந்தன.

2 இராஜாக்கள் 4:38-44 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

எலிசா கில்காலுக்குத் திரும்பி வந்தான். தேசத்திலே பஞ்சம் உண்டானது; தீர்க்கதரிசிகளின் கூட்டத்தார், அவனுக்கு முன்பாக உட்கார்ந்திருந்தார்கள்; அவன் தன் வேலைக்காரனை நோக்கி: நீ பெரிய பானையை அடுப்பிலே வைத்துத் தீர்க்கதரிசிகளின் கூட்டத்தாருக்குக் கூழ் காய்ச்சு என்றான். ஒருவன் கீரைகளைப் பறிக்க வெளியிலேபோய், ஒரு கொம்மட்டிக் கொடியைக் கண்டு, அதின் காய்களை மடிநிறைய அறுத்துவந்து, அவைகளை அரிந்து கூழ்ப்பானையிலே போட்டான்; அது இன்னதென்று அவர்களுக்குத் தெரியாமலிருந்தது. சாப்பிட அதைக் கூட்டத்தாருக்குக் கொடுத்தார்கள்; அவர்கள் அந்தக் கூழை எடுத்துச் சாப்பிடுகிறபோது, அதைச் சாப்பிடமுடியாமல்: தேவனுடைய மனிதனே, பானையில் விஷம் இருக்கிறது என்று சத்தமிட்டார்கள். அப்பொழுது அவன், மாவைக் கொண்டுவரச்சொல்லி, அதைப் பானையிலே போட்டு, கூட்டத்தார் சாப்பிடும்படி அவர்களுக்கு கொடு என்றான்; அப்புறம் பானையிலே விஷம் இல்லாமல்போனது. பின்பு பாகால் சலீஷாவிலிருந்து ஒரு மனிதன் தேவனுடைய மனிதனுக்கு முதற்பலனான வாற்கோதுமையின் இருபது அப்பங்களையும் கதிர்த்தட்டுகளையும் கொண்டுவந்தான்; அப்பொழுது அவன்: கூட்டத்தாருக்குச் சாப்பிடக்கொடு என்றான். அதற்கு அவனுடைய வேலைக்காரன்: இதை நான் நூறுபேருக்கு முன் வைப்பது எப்படி என்றான். அதற்கு அவன்: அதைக் கூட்டத்தாருக்குச் சாப்பிடக்கொடு; சாப்பிட்டப் பிறகு இன்னும் மீதியுண்டாயிருக்கும் என்று யெகோவா சொல்லுகிறார் என்றான். அப்பொழுது அவர்களுக்கு முன்பாக அதை வைத்தான்; யெகோவாவுடைய வார்த்தையின்படியே அவர்கள் சாப்பிட்டதுமல்லாமல் மீதியும் இருந்தது.

2 இராஜாக்கள் 4:38-44 பரிசுத்த பைபிள் (TAERV)

எலிசா மீண்டும் கில்காலுக்கு வந்தான். அப்போது அந்நாட்டில் பஞ்சமாய் இருந்தது. தீர்க்கதரிசிகள் கூட்டமாக எலிசாவின் முன்னர் கூடினார்கள். எலிசா தனது வேலைக்காரனிடம், “பெரிய பாத்திரத்தை நெருப்பில் வை. இவர்களுக்கு கூழ் தயார் செய்” என்றான். மூலிகைத் தழைகளைச் சேகரிக்கும் பொருட்டு ஒருவன் வயல்வெளிக்குச் சென்றான். அங்கே விஷ திராட்சைக் கொடிகளைக் கண்டான். அக்கொடியில் இருந்து முதிர்ந்த பழங்களைச் சேகரித்துத் தன் மேலாடையின் பையில் நிரப்பிக்கொண்டான். திரும்பிவந்து, பானையில் வைத்து மூடினான். ஆனால் அங்கிருந்த தீர்க்கதரிசிகளுக்கு இவ்விஷயம் பற்றி எதுவும் தெரியாது. பிறகு அதை குடிக்க ஊற்றினார்கள். அவர்கள் குடிக்கப்போகும்போது, “தேவ மனிதனே! இந்தப் பாத்திரத்தில் விஷம் இருக்கிறது” என்று சத்தமிட்டனர். அதனால் அவர்கள் அதனைக் குடிக்க முடியவில்லை. ஆனால் எலிசாவோ, “சிறிது மாவு கொடுங்கள்” என்று கேட்க அவர்கள் கொடுத்தார்கள். அதனை அந்தப் பாத்திரத்தில் அவன் போட்டு, “இப்போது ஜனங்களுக்குச் கூழை ஊற்றுங்கள். அவர்கள் அதை குடிக்கலாம்” என்றான். பிறகு அந்தக் கூழில் எந்த குறையும் இல்லை! பாகால்சலீஷாவிலிருந்து ஒருவன் வந்தான். அவன் எலிசாவிற்கு முதல் அறுவடையின் வாற் கோதுமையின் 20 அப்பங்களையும் புதிய கதிர்களையும் தனது கோணிப்பையில் தேவமனிதனுக்கு (எலிசா) கொண்டுவந்தான். எலிசாவோ, “அவற்றை ஜனங்களுக்குக் கொடு. அவர்கள் உண்ணட்டும்” என்றான். அதற்கு எலிசாவின் வேலைக்காரன், “என்ன? இங்கே 100 பேர்கள் இருக்கிறார்கள். இந்த உணவை எல்லோருக்கும் எப்படி பகிர்ந்தளிக்க முடியும்” என்றான். ஆனால் எலிசாவோ, “இந்த உணவை ஜனங்களுக்குக் கொடு. கர்த்தர், ‘அவர்கள் உண்டபிறகும் உணவு மீதியாகும்’ என்று கூறியிருக்கிறார்” என்றான். பிறகு எலிசாவின் வேலைக்காரன் உணவை ஜனங்களுக்குக் கொடுத்தான். அத்தீர்க்கதரிசிகள் அவற்றை நன்கு உண்டனர். மேலும் உணவு மீதியானது! இவ்வாறு கர்த்தர் சொன்னபடியே நிறைவேறியது.

2 இராஜாக்கள் 4:38-44 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

எலிசா கில்காலுக்குத் திரும்பிப்போய் இருக்கையில், தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று; தீர்க்கதரிசிகளின் புத்திரர், அவனுக்கு முன்பாக உட்கார்ந்திருந்தார்கள்; அவன் தன் வேலைக்காரனை நோக்கி: நீ பெரிய பானையை அடுப்பிலே வைத்துத் தீர்க்கதரிசிகளின் புத்திரருக்குக் கூழ்காய்ச்சு என்றான். ஒருவன் கீரைகளைப் பறிக்க வெளியிலேபோய், ஒரு பேய்க்கொம்மட்டிக் கொடியைக் கண்டு, அதன் காய்களை மடிநிறைய அறுத்துவந்து, அவைகளை அரிந்து கூழ்ப்பானையிலே போட்டான்; அது இன்னதென்று அவர்களுக்குத் தெரியாதிருந்தது. சாப்பிட அதை ஜனங்களுக்கு வார்த்தார்கள்; அவர்கள் அந்தக் கூழில் எடுத்துச் சாப்பிடுகிறபோது, அதைச் சாப்பிடக்கூடாமல்: தேவனுடைய மனுஷனே, பானையில் சாவு இருக்கிறது என்று சத்தமிட்டார்கள். அப்பொழுது அவன், மாவைக் கொண்டுவரச்சொல்லி, அதைப் பானையிலே போட்டு, ஜனங்கள் சாப்பிடும்படி அவர்களுக்கு வார் என்றான்; அப்புறம் பானையிலே தோஷம் இல்லாமற்போயிற்று. பின்பு பாகால் சலீஷாவிலிருந்து ஒரு மனுஷன் தேவனுடைய மனுஷனுக்கு முதற்பலனான வாற்கோதுமையின் இருபது அப்பங்களையும் தாள் கதிர்களையும் கொண்டுவந்தான்; அப்பொழுது அவன்: ஜனங்களுக்குச் சாப்பிடக்கொடு என்றான். அதற்கு அவனுடைய பணிவிடைக்காரன்: இதை நான் நூறுபேருக்கு முன் வைப்பது எப்படி என்றான். அதற்கு அவன்: அதை ஜனங்களுக்குச் சாப்பிடக்கொடு; சாப்பிட்ட பிற்பாடு இன்னும் மீதியுண்டாயிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். அப்பொழுது அவர்களுக்கு முன்பாக அதை வைத்தான்; கர்த்தருடைய வார்த்தையின்படியே அவர்கள் சாப்பிட்டதுமன்றி மீதியும் இருந்தது.