2 இராஜாக்கள் 20:1-7

2 இராஜாக்கள் 20:1-7 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு சாகும் தருவாயில் இருந்தான். ஆமோஸின் மகனான இறைவாக்கினன் ஏசாயா அவனிடம் போய், “யெகோவா கூறுவது இதுவே: நீர் சாகப்போகிறீர்; பிழைக்கமாட்டீர். ஆகையால் உன் வீட்டுக் காரியங்களை ஒழுங்குபடுத்தும் என்கிறார்” என்றான். எசேக்கியா தன் முகத்தை சுவரின் பக்கமாகத் திருப்பி யெகோவாவிடம் மன்றாடினான். அவன், “யெகோவாவே, நான் உமக்குமுன் உண்மையுள்ளவனாய் நடந்து, பயபக்தியாய் முழுமனதுடன் உமது பார்வையில் நலமானதையே செய்தேன் என்பதை நினைவுகூரும்” என்று எசேக்கியா மனங்கசந்து அழுதான். ஏசாயா அரண்மனை முற்றத்தின் நடுப்பகுதியைக் கடந்துசெல்ல முன்பே யெகோவாவின் வார்த்தை அவனுக்கு வந்தது. அவர் அவனிடம், “நீ திரும்பிப்போய் என் மக்களின் தலைவனாகிய எசேக்கியாவிடம், ‘உன் தகப்பனாகிய தாவீதின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: நான் உனது வேண்டுதலைக் கேட்டேன், உன் கண்ணீரையும் கண்டேன்; நான் உன்னைச் சுகப்படுத்துவேன். இன்றிலிருந்து மூன்றாம் நாள் நீ யெகோவாவின் ஆலயத்துக்குப் போவாய். உன் வாழ்நாட்களோடு இன்னும் பதினைந்து வருடங்களைக் கூட்டுவேன். அசீரிய அரசனின் கையிலிருந்து உன்னையும், இந்தப் பட்டணத்தையும் விடுவிப்பேன். எனக்காகவும், என் தாசனாகிய தாவீதுக்காகவும் இந்தப் பட்டணத்துக்கு ஆதரவாக இருப்பேன்’ என்று கூறுகிறார் என்று சொல்” என்றார். அப்பொழுது ஏசாயா, “அத்திப்பழ அடையொன்றைத் தயாரித்துப் பற்றுப்போடுங்கள்” என்றான். அவர்கள் அவ்வாறே செய்து அவனுடைய கட்டியின்மீது பற்றுப்போட்டார்கள். அப்பொழுது அவன் சுகமடைந்தான்.

2 இராஜாக்கள் 20:1-7 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்தருவாயில் இருந்தான்; அப்பொழுது ஆமோத்சின் மகனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குப்படுத்தும்; நீர் பிழைக்கமாட்டீர், இறந்துபோவீர் என்று யெகோவ சொல்லுகிறார் என்றான். அப்பொழுது எசேக்கியா தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு, யெகோவவை நோக்கி: ஆ யெகோவவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மனஉத்தமமுமாக நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்செய்தான். எசேக்கியா மிகவும் அழுதான். ஏசாயா பாதி முற்றத்தைவிட்டு அப்புறம் போகிறதற்குமுன்னே, யெகோவவுடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி, அவர் சொன்னது: நீ திரும்பிப்போய், என் மக்களின் அதிபதியாகிய எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற யெகோவ சொல்லுகிறது என்னவென்றால்: உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்; மூன்றாம் நாளிலே நீ யெகோவவுடைய ஆலயத்திற்குப் போவாய். உன் நாட்களோடே பதினைந்து வருடங்களைக் கூட்டுவேன்; உன்னையும் இந்த நகரத்தையும் அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்து, என்னிமித்தமும் என் தாசனாகிய தாவீதின்நிமித்தமும் இந்த நகரத்திற்கு ஆதரவாக இருப்பேன் என்று சொல் என்றார். பின்பு ஏசாயா: அத்திப்பழ அடையைக் கொண்டுவாருங்கள் என்றான்; அதை அவர்கள் கொண்டுவந்து, புண்ணின்மேல் பற்றுப்போட்டபோது அவன் பிழைத்தான்.

2 இராஜாக்கள் 20:1-7 பரிசுத்த பைபிள் (TAERV)

அப்போது, எசேக்கியா நோயுற்று மரண நிலையை நெருங்கினான். ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி எசேக்கியாவிடம் சென்று, “நீ உனது வீட்டை ஒழுங்குப்படுத்திவிடு. ஏனெனில், நீ மரிக்கப்போகிறாய். நீ வாழப் போவதில்லை! என்று கர்த்தர் கூறுகிறார்” என்றான். எசேக்கியா தனது முகத்தைச் சுவரின் பக்கம் திருப்பிக்கொண்டான். அவன் கர்த்தரிடம் ஜெபம் செய்து, “கர்த்தாவே! நான் உண்மையாக என் முழு மனதோடு உமக்கு சேவை செய்திருக்கிறேன் என்பதை நினைத்துப்பாரும். நீர் நல்லதென்று சொன்ன செயல்களை மட்டுமே நான் செய்திருக்கிறேன்” என்றான். பிறகு ஏசேக்கியா மிகப்பலமாக அழுதான். ஏசாயா பாதி முற்றத்தை விட்டு விலகு முன், கர்த்தருடைய செய்தி அவனுக்கு வந்தது. கர்த்தர் அவனிடம், “திரும்பிப் போய் எசேக்கியாவிடம் பேசு. எனது ஜனங்களின் தலைவனான அவனிடம், ‘கர்த்தரும் உனது முற்பிதாவான தாவீதின் தேவனும் சொல்லுவதாவது: நான் உனது ஜெபத்தைக் கேட்டேன். உனது கண்ணீரைப் பார்த்தேன். எனவே நான் உன்னைக் குணப்படுத்துவேன். மூன்றாவது நாள் நீ கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவாய். நான் உனது வாழ்நாளில் 15 ஆண்டுகளை அதிகரித்திருக்கிறேன். நான் உன்னையும் இந்த நகரத்தையும் அசீரிய ராஜாவின் வல்லமையிலிருந்து காப்பாற்றியிருக்கிறேன். நான் இந்த நகரத்தைப் பாதுகாப்பேன். நான் இவற்றை எனக்காகவே செய்வேன். ஏனென்றால் எனது தொண்டன் தாவீதுக்கு வாக்குறுதியளித்திருக்கிறேன்.’ என்று சொல்” என்று கூறினார். பிறகு ஏசாயா ராஜாவிடம், “அத்திப் பழத்தின் அடையைப் பிசைந்து புண்களின் மேல் பற்று போடுங்கள்” என்றான். அவ்விதமாகவே அத்திப்பழத்தின் அடையைப் பிசைந்து எசேக்கியாவின் புண்ணின் மேல் பூசினார்கள். பிறகு எசேக்கியா குணமானான்.

2 இராஜாக்கள் 20:1-7 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான்; அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குப்படுத்தும்; நீர் பிழைக்கமாட்டீர், மரித்துப்போவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். அப்பொழுது எசேக்கியா தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு, கர்த்தரை நோக்கி: ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மனஉத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணினான். எசேக்கியா மிகவும் அழுதான். ஏசாயா பாதி முற்றத்தைவிட்டு அப்புறம் போகிறதற்குமுன்னே, கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி, அவர் சொன்னது: நீ திரும்பிப்போய், என் ஜனத்தின் அதிபதியாகிய எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்; மூன்றாம் நாளிலே நீ கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவாய். உன் நாட்களோடே பதினைந்து வருஷங்களைக் கூட்டுவேன்; உன்னையும் இந்த நகரத்தையும் அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்து, என்நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின்நிமித்தமும் இந்த நகரத்துக்கு ஆதரவாய் இருப்பேன் என்று சொல் என்றார். பின்பு ஏசாயா: அத்திப்பழத்து அடையைக் கொண்டுவாருங்கள் என்றான்; அதை அவர்கள் கொண்டுவந்து, பிளவையின்மேல் பற்றுப்போட்டபோது அவன் பிழைத்தான்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்