2 இராஜாக்கள் 18:4-7
2 இராஜாக்கள் 18:4-7 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
வழிபாட்டு மேடைகளை அகற்றி, புனித தூண்களை நொறுக்கி, அசேரா விக்கிரக தூண்களை வீழ்த்தினான். அத்துடன் மோசே செய்த வெண்கலப் பாம்பைத் துண்டுதுண்டாக உடைத்தான். அன்றுவரை இஸ்ரயேலர்கள் அதற்குத் தூபங்காட்டி வந்தனர். அது நெகுஸ்தான் என்று அழைக்கப்பட்டது. எசேக்கியா இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவை மிகவும் உறுதியாக நம்பியிருந்தான். யூதா அரசர்களில் அவனைப்போல் ஒருவரும் அவனுக்கு முன்போ, பின்போ இருந்ததில்லை. அவன் யெகோவாவை உறுதியாகப் பிடித்தவனாக அவரைப் பின்பற்றுவதைவிட்டு ஒருபோதும் விலகியதில்லை. மோசேக்கு யெகோவா கொடுத்த கட்டளைகளைக் கைக்கொண்டு நடந்தான். யெகோவா அவனோடுகூட இருந்தார். அவன் எதைச் செய்தாலும் அவனுக்கு வெற்றியாகவே இருந்தது. அவன் அசீரியா அரசனுக்கு எதிராகக் கலகம்பண்ணி, அவனுக்குப் பணிசெய்ய மறுத்தான்.
2 இராஜாக்கள் 18:4-7 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அவன் மேடைகளை அகற்றி, சிலைகளைத் தகர்த்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி, மோசே உண்டாக்கியிருந்த வெண்கலச் சர்ப்பத்தை உடைத்துப்போட்டான்; அந்நாட்கள்வரை இஸ்ரவேல் மக்கள் அதற்குத் தூபம் காட்டிவந்தார்கள்; அதற்கு நிகுஸ்தான் என்று பெயரிட்டான். அவன் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவின்மேல் வைத்த நம்பிக்கையிலே, அவனுக்குப் பின்னும் அவனுக்கு முன்னும் இருந்த யூதாவின் ராஜாக்களிலெல்லாம் அவனைப்போல் ஒருவனும் இருந்ததில்லை. அவன் யெகோவாவைவிட்டுப் பின்வாங்காமல் அவரைச் சார்ந்திருந்து, யெகோவா மோசேக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு நடந்தான். ஆகையால் யெகோவா அவனோடிருந்தார்; அவன் போகிற இடமெங்கும் அவனுக்கு அனுகூலமானது; அவன் அசீரியா ராஜாவிற்குக் கட்டுப்படாமல், அவனுடைய அதிகாரத்தைத் தள்ளிவிட்டான்.
2 இராஜாக்கள் 18:4-7 பரிசுத்த பைபிள் (TAERV)
எசேக்கியா மேடைகளை பொய்த் தெய்வங்களின் ஆலயத்தை அழித்தான். அவர்களின் ஞாபகக் கற்களையும்கூட உடைத்தான். அசெரியாவின் உருவத் தூண்களை வெட்டிப்போட்டான். மோசே செய்த வெண்கல பாம்பை உடைத்துப் போட்டான். இஸ்ரவேல் ஜனங்கள் அதற்கு நறுமணப் பொருட்களை எரித்தனர். இவ்வெண்கலப் பாம்பானது “நிகுஸ்தான்” என்று அழைக்கப்பட்டது. ஏனெனில் அன்றுவரை இஸ்ரவேலர்கள் இந்த வெண்கலப் பாம்பை தொழுதுவந்தனர். அவன் இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்தான். யூதாவின் ராஜாக்கள் அனைவரிலும் எசேக்கியாவைப் போன்று அவனுக்கு முன்னும் அவனுக்குப் பின்னும் ஆட்கள் இல்லை. எசேக்கியா கர்த்தருக்கு மிகவும் நம்பிக்கை உள்ளவனாக இருந்தான். இவன் கர்த்தரைப் பின்பற்றுவதை விடவில்லை. மோசேக்குக் கர்த்தர் கொடுத்த கட்டளைகளுக்கும் அவன் கீழ்ப்படிந்து வந்தான். கர்த்தரும் எசேக்கியாவோடு இருந்தார். எசேக்கியா தான் செய்கிற அனைத்திலும் வெற்றிகரமாக இருந்தான். எசேக்கியா அசீரியாவின் ஆட்சித் தலையை விட்டு பிரிந்து, அசீரியாவின் ராஜாவுக்கு சேவை செய்வதை நிறுத்திவிட்டான்.
2 இராஜாக்கள் 18:4-7 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அவன் மேடைகளை அகற்றி, சிலைகளைத் தகர்த்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி, மோசே பண்ணியிருந்த வெண்கலச் சர்ப்பத்தை உடைத்துப்போட்டான்; அந்நாட்கள்மட்டும் இஸ்ரவேல் புத்திரர் அதற்குத் தூபங்காட்டி வந்தார்கள்; அதற்கு நிகுஸ்தான் என்று பேரிட்டான். அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் மேல் வைத்த நம்பிக்கையிலே, அவனுக்குப் பின்னும் அவனுக்கு முன்னும் இருந்த யூதாவின் ராஜாக்களிலெல்லாம் அவனைப்போல் ஒருவனும் இருந்ததில்லை. அவன் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் அவரைச் சார்ந்திருந்து, கர்த்தர் மோசேக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு நடந்தான். ஆகையால் கர்த்தர் அவனோடிருந்தார்; அவன் போகிற இடம் எங்கும் அவனுக்கு அனுகூலமாயிற்று; அவன் அசீரியா ராஜாவைச் சேவிக்காமல், அவன் அதிகாரத்தைத் தள்ளிவிட்டான்.