2 கொரிந்தியர் 9:6-15

2 கொரிந்தியர் 9:6-15 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

கொஞ்சமாய் விதைக்கிறவன், கொஞ்சமாகவே அறுவடை செய்வான். தாராளமாய் விதைக்கிறவன், தாராளமாய் அறுவடை செய்வான். இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். எனவே ஒவ்வொருவனும், அவனவன் தன் இருதயத்தில் தீர்மானித்தபடியே கொடுக்கட்டும். கட்டாயத்தின் பேரிலோ, மனவருத்தத்துடனோ ஒருவரும் கொடுக்கக்கூடாது. ஏனெனில் மகிழ்ச்சியோடு கொடுக்கிறவனிலே, இறைவன் அன்பாயிருக்கிறார். எல்லா கிருபையையும் உங்களுக்கு முழுநிறைவாய்க் கொடுக்க, இறைவன் ஆற்றலுடையவராய் இருக்கிறார். இதனால் நீங்கள் எல்லாவற்றிலும், எப்பொழுதும், தேவைகளையெல்லாம் பெற்றுக்கொண்டவர்களாய், எல்லா நல்ல செயல்களிலும் பெருகுவீர்கள். இதைப்பற்றி வேதவசனத்தில், “இறைபக்தியுள்ளவன் ஏழைகளுக்குத் தனது அன்பளிப்புகளைத் தாராளமாய்க் கொடுத்தான்; அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்” என்று எழுதப்பட்டிருக்கிறதே. இறைவனே விதைக்கிறவனுக்கு விதையையும், சாப்பிடுவதற்கு உணவையும் கொடுக்கிறார். அவரே உங்களுக்குத் தேவையான விதைகளையெல்லாம் கொடுத்து, அதைப் பெருகவும் செய்வார். உங்கள் நீதியின் அறுவடையையும், அவரே பெருகச்செய்வார். நீங்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், தாராள மனதுடையவர்களாய் இருக்கும்படி, நீங்கள் எல்லா வழியிலும் செல்வந்தர்களாவீர்கள். இதனால் எங்கள் உள்ளத்தின் வழியாக, உங்கள் தாராள தன்மையின் பிரதிபலன் இறைவனுக்குச் செலுத்தும் நன்றியின் நிறைவாக அமையும். எனவே நீங்கள் மேற்கொண்டிருக்கின்ற இந்தப் பணி, இறைவனுடைய மக்களின் தேவைகளைச் சந்திக்கிறது மட்டுமல்ல, அநேகர் இறைவனுக்கு நன்றி செலுத்துவதினாலே, அது மிகுந்த பலனுள்ளதாயிருக்கிறது. உங்களுடைய இந்தப் பணியின் மூலமாக நீங்கள் உங்களை நிரூபித்திருக்கிறீர்கள். இதனால் அநேகர் கிறிஸ்து இயேசுவின் நற்செய்தியை நீங்கள் அறிக்கையிட்டதோடு, உங்கள் கீழ்ப்படிதலுக்காகவும், தங்களுடனும் மற்றெல்லாருக்கும் நீங்கள் தாராள மனதுடன் பகிர்ந்து கொண்டதற்காகவும், இறைவனுக்குத் துதி செலுத்துவார்கள். அத்துடன் இறைவன் உங்களுக்குக் கொடுத்த அளவுகடந்த கிருபையின் நிமித்தம் உங்களுக்காக மன்றாடி, உங்கள் மேலுள்ள அன்பைக் காட்டுவார்கள். விவரிக்க முடியாத இறைவனுடைய நன்கொடைக்காக, அவருக்கு நன்றி உரித்தாகட்டும்.

2 கொரிந்தியர் 9:6-15 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்னும் நான் சொல்லுகிறது என்னவென்றால், கொஞ்சம் விதைக்கிறவன் கொஞ்சம் அறுப்பான், அதிகமாக விதைக்கிறவன் அதிகமாக அறுப்பான். அவனவன் வருத்தத்தோடும் அல்ல, கட்டாயமாகவும் அல்ல, தன் மனதில் திட்டமிட்டபடியே கொடுக்கவேண்டும்; உற்சாகமாகக் கொடுக்கிறவனிடம் தேவன் பிரியமாக இருக்கிறார். மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாகவும், எல்லாவித நல்ல செயல்களிலும் பெருகுகிறவர்களாகவும் இருப்பதற்காக, தேவன் உங்களில் எல்லாவிதமான கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராக இருக்கிறார். வாரி இறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் என்று எழுதியிருக்கிறபடியே ஆகும். விதைக்கிறவனுக்கு விதையையும், சாப்பிடுகிறதற்கு ஆகாரத்தையும் கொடுக்கிறவர் உங்களுக்கு விதையைக் கொடுத்து, அதைப் பெருகப்பண்ணி, உங்களுடைய நீதியின் விளைச்சலைப் பெருகச்செய்வார். நீங்கள் எல்லா வகையிலும் செல்வந்தராகி தாராளகுணத்திலே சம்பூரணமுள்ளவர்களாவீர்கள். இதனால் தேவனுக்கு எங்கள் மூலமாக ஸ்தோத்திரமுண்டாகும். இந்த தர்ம உதவியாகிய பணிவிடை பரிசுத்தவான்களுடைய குறைவுகளை நீக்குகிறதுமட்டுமல்லாமல், அநேகர் தேவனை ஸ்தோத்திரிப்பதினாலே சம்பூரண பலன் உள்ளதாகவும் இருக்கும். அவர்கள் இந்த தர்ம உதவிகளாகிய நன்மையை அனுபவித்து, நீங்கள் கிறிஸ்துவின் நற்செய்தியைக் கீழ்ப்படிதலோடு அறிக்கையிட்டதினால், தங்களுக்கும் மற்ற அனைவருக்கும் நீங்கள் தாராளமாக தர்ம உதவிகள் செய்கிறதினாலும், அவர்கள் தேவனை மகிமைப்படுத்தி; உங்களுக்காக வேண்டுதல்செய்து, தேவன் உங்களுக்கு அளித்த மிகவும் விசேஷித்த கிருபையினால் உங்கள்மேல் வாஞ்சையாக இருக்கிறார்கள். தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம்.

2 கொரிந்தியர் 9:6-15 பரிசுத்த பைபிள் (TAERV)

“கொஞ்சமாக விதைக்கிறவன் கொஞ்சமாகவே அறுவடை செய்வான். மிகுதியாக விதைக்கிறவனோ மிகுதியாகவே அறுவடை செய்வான்” என்பதை நினைவில் இருத்திக்கொள்ளுங்கள். ஒவ்வொருவனும், தன் இதயத்தில் எதைக் கொடுக்க வேண்டுமென்று தீர்மானிக்கிறானோ அதைக் கொடுப்பானாக. கொடுப்பதுப்பற்றி எவருக்காவது வருத்தம் ஏற்படுமானால் அவன் கொடுக்காமலேயே இருக்கட்டும். கட்டாயத்தின் பேரில் எவரும் கொடுக்கவேண்டாம். மகிழ்ச்சியோடு கொடுப்பவனையே தேவன் அதிகமாக நேசிக்கிறார். அவர்களுக்குத் தேவைக்கு மிகுதியான ஆசீர்வாதத்தை தேவனால் கொடுக்க முடியும். பிறகு உங்களிடமும் ஏராளமான செல்வம் சேரும். ஒவ்வொரு நற்செயலுக்கும் கொடுக்கப் போதுமான செல்வம் உங்களிடம் இருக்கும். “அவன் தாராளமாக ஏழைகளுக்குக் கொடுக்கிறான். அவனுடைய கருணை என்றென்றும் தொடர்ந்து நிற்கும்.” என்று எழுதப்பட்டுள்ளது. தேவனே விதைக்கிறவனுக்கு விதையைக் கொடுக்கிறார். உண்பதற்கு அவரே அப்பத்தையும் கொடுக்கிறார். அவர் ஆன்மாவிற்குரிய விதையைக் கொடுப்பார். அதனை வளர்க்கவும் செய்வார். உங்களது நீதியினிமித்தம் சிறந்த அறுவடையையும் பெருகச் செய்வார். தாராளமாய்க் கொடுக்கும் அளவுக்கு எல்லா வகையிலும் தேவன் உங்களைச் செல்வந்தர் ஆக்குவார். நீங்கள் எங்கள் மூலமாகக் கொடுத்தால் மக்கள் தேவனுக்கு நன்றி சொல்வர். தேவைப்படும் தேவனுடைய மக்களுக்கு நீங்கள் உதவி செய்வது பெரும் சேவையாகும். இதற்கு இணையானது வேறில்லை. தேவனுக்கு அளவு கடந்த நன்றிகளை இது கொண்டு வரும். நீங்கள் செய்யும் இச்சேவையானது உங்கள் விசுவாசத்திற்கான நல்ல சாட்சியாகும். இதற்காக மக்கள் தேவனைப் பாராட்டுவர். நீங்கள் விசுவாசிப்பதாக ஒத்துக்கொள்ளும் கிறிஸ்துவின் நற்செய்தியை நீங்கள் பின்பற்றுவதால் மக்கள் அவருக்கு நன்றி சொல்வார்கள். ஏனெனில் அவர்களின் தேவைகளிலும் ஒவ்வொருவரின் தேவைகளிலும் நீங்கள் தாராளமாகப் பங்கு கொள்கிறீர்கள். அந்த மக்கள் தேவனிடம் ஜெபிக்கும்போது, அவர்கள் உங்களோடு இருக்கவே விரும்புவர். ஏனென்றால் தேவன் உங்களுக்கு மிகுதியாகக் கிருபை செய்திருக்கிறார். தேவன் அருள்செய்த விளக்க இயலாத வியக்கத்தக்க கிருபைக்காக நன்றி செலுத்துவோமாக.

2 கொரிந்தியர் 9:6-15 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான். அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார். மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார். வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் என்று எழுதியிருக்கிறபடியாகும். விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச்செய்வார். தேவனுக்கு எங்களால் ஸ்தோத்திரமுண்டாவதற்கு ஏதுவாயிருக்கும் மிகுந்த உதாரகுணத்திலே நீங்கள் எவ்விதத்திலும் சம்பூரணமுள்ளவர்களாவீர்கள். இந்தத் தர்மசகாயமாகிய பணிவிடை பரிசுத்தவான்களுடைய குறைவுகளை நீக்குகிறதுமல்லாமல், அநேகர் தேவனை ஸ்தோத்திரிப்பதினாலே சம்பூரணபலனுள்ளதாயும் இருக்கும். அவர்கள் இந்தத் தர்மசகாயத்தினாலாகிய நன்மையை அனுபவித்து, நீங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் கீழ்ப்படிதலோடே அறிக்கையிட்டிருக்கிறதினிமித்தமும், தங்களுக்கும் மற்ற அனைவருக்கும் நீங்கள் உதாரத்துவமாய்த் தர்மஞ்செய்கிறதினிமித்தமும், அவர்கள் தேவனை மகிமைப்படுத்தி; உங்களுக்காக வேண்டுதல்செய்து, தேவன் உங்களுக்கு அளித்த மிகவும் விசேஷித்த கிருபையினிமித்தம் உங்கள்மேல் வாஞ்சையாயிருக்கிறார்கள். தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம்.

2 கொரிந்தியர் 9:6-15

2 கொரிந்தியர் 9:6-15 TAOVBSI2 கொரிந்தியர் 9:6-15 TAOVBSI2 கொரிந்தியர் 9:6-15 TAOVBSI2 கொரிந்தியர் 9:6-15 TAOVBSI2 கொரிந்தியர் 9:6-15 TAOVBSI2 கொரிந்தியர் 9:6-15 TAOVBSI

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்