2 கொரிந்தியர் 2:1-13
2 கொரிந்தியர் 2:1-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஆகவே, நான் உங்களுக்கு வேதனையை உண்டாக்கும் இன்னுமொரு சந்திப்பை ஏற்படுத்தாமலிருக்க என் மனதில் தீர்மானித்தேன். நான் உங்களைத் துக்கப்படுத்தினால் என்னை மகிழ்விப்பவர்கள் யார்? என்னை துக்கப்படுத்தியது நீங்கள்தானே. இதனாலேயே, நான் இவ்வாறு உங்களுக்குக் கடிதம் எழுதினேன். நான் உங்களிடம் வரும்போது, என்னை மகிழ்விக்க வேண்டியவர்களால் நான் துக்கமடைய விரும்பவில்லை. நீங்கள் எல்லோரும் என் சந்தோஷத்தில் பங்கு கொள்வீர்கள் என்று, நான் உங்கள் எல்லோரையும் குறித்து மனவுறுதியுள்ளவனாய் இருந்தேன். நான் மிகுந்த துன்பத்தோடும், உள்ளத்தின் வேதனையோடும், அதிக கண்ணீரோடும் உங்களுக்கு அந்தக் கடிதத்தை எழுதினேன். ஆனால், உங்களைத் துக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல, நான் உங்கள்மேல் வைத்திருக்கும் அன்பின் ஆழத்தை நீங்கள் அறிந்துகொள்ளும்படியாகவே நான் அப்படி எழுதினேன். யாராகிலும் ஒருவன் துக்கம் உண்டாக்கி இருந்தால், அவன் என்னை மட்டுமல்ல, ஓரளவுக்கு உங்களெல்லோரையுமே துக்கப்படுத்தியிருக்கிறான். இதை நான் பெரிதுபடுத்த விரும்பவில்லை. அப்படிப்பட்டவன் உங்கள் அநேகரால் தண்டனை பெற்றிருக்கிறான். அது போதுமானது. ஆதலால், நீங்கள் இப்பொழுது அவனை மன்னித்து ஆறுதல்படுத்தவேண்டும். இல்லையெனில், அவன் அதிகமான துக்கத்தில் மூழ்கிவிடுவான். ஆனபடியால் நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன், மீண்டும் நீங்கள் அவனுக்கு உங்கள் அன்பை உறுதிப்படுத்துங்கள். நீங்கள் எல்லாவற்றிலும் கீழ்ப்படிகிறீர்களா என்று உங்களைச் சோதித்துப் பார்ப்பதற்காகவே இப்படி எழுதினேன். நீங்கள் யாரையாவது மன்னித்தால், நானும் அவனை மன்னிக்கிறேன். நான் மன்னிக்கவேண்டியது ஏதேனும் இருந்தால், அதை நான் உங்கள் நிமித்தம் கிறிஸ்துவினுடைய சமுகத்தில் மன்னித்திருக்கிறேன். சாத்தான் நம்மைத் தனது தந்திரத்தால் வஞ்சிக்காதபடி அவ்வாறு செய்தேன். ஏனெனில், சாத்தானின் வஞ்சகதிட்டங்களை நாம் அறியாதவர்கள் அல்ல. நான் கிறிஸ்துவின் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காகத் துரோவா பட்டணத்துக்குப் போனபோது, கர்த்தர் எனக்கு ஒரு கதவு திறந்ததைக் கண்டேன். ஆனாலும், அங்கே என் சகோதரன் தீத்துவைக் காணாதபடியால், என் உள்ளத்தில் சமாதானம் இல்லாதிருந்தது. ஆதலால், நான் அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, மக்கெதோனியாவுக்குப் புறப்பட்டுப்போனேன்.
2 கொரிந்தியர் 2:1-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
நான் மீண்டும் துக்கத்தோடு உங்களிடம் வரக்கூடாது என்று எனக்குள்ளே தீர்மானம்பண்ணிக்கொண்டேன். நான் உங்களைத் துக்கப்படுத்தினால், என்னாலே துக்கமடைந்தவனைத்தவிர, வேறு யார் என்னைச் சந்தோஷப்படுத்துவான்? என்னுடைய சந்தோஷம் உங்களெல்லோருக்கும் சந்தோஷமாக இருக்கும் என்று, நான் உங்களெல்லோரையும்பற்றி நம்பிக்கை உள்ளவனாக இருந்து, நான் வரும்போது, என்னைச் சந்தோஷப்படுத்தவேண்டியவர்களால் நான் துக்கமடையாமல் இருப்பதற்காக, அதை உங்களுக்கு எழுதினேன். அன்றியும், நீங்கள் துக்கப்படுவதற்காக எழுதாமல், உங்கள்மேல் நான் வைத்த அன்பின் அளவை நீங்கள் தெரிந்துகொள்வதற்காகவே, அதிக வியாகுலமும் மனவருத்தமும் அடைந்தவனாக அதிகக் கண்ணீரோடு உங்களுக்கு எழுதினேன். துக்கம் உண்டாக்கினவன் எனக்கு மாத்திரமல்ல, ஏறக்குறைய உங்களெல்லோருக்கும் துக்கம் உண்டாக்கினான்; நான் உங்கள் எல்லோர்மேலும் அதிக சுமையைச் சுமத்தாமல் இருப்பதற்காக இதைச் சொல்லுகிறேன். அப்படிப்பட்டவனுக்கு அநேகரால் உண்டான இந்தத் தண்டனையே போதும். எனவே அவன் அதிக துக்கத்தில் மூழ்கிப்போகாமல் இருக்க, நீங்கள் அவனுக்கு மன்னித்து ஆறுதல் செய்யவேண்டும். அப்படியே, உங்களுடைய அன்பை அவனுக்குக் காண்பிக்கவேண்டும் என்று உங்களை வேண்டிக்கொள்கிறேன். நீங்கள் எல்லாவற்றிலும் கீழ்ப்படிந்திருக்கிறீர்களோ என்று உங்களைச் சோதித்துப் பார்ப்பதற்காக இப்படி எழுதினேன். யாரை நீங்கள் மன்னிக்கிறீர்களோ, அவனை நானும் மன்னிக்கிறேன்; மேலும் எதை நான் மன்னித்திருக்கிறேனோ, அதை உங்களுக்காக கிறிஸ்துவினுடைய சந்நிதானத்திலே மன்னித்திருக்கிறேன். சாத்தானாலே நாம் மோசமடையாமல் இருக்க அப்படிச் செய்தேன்; அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் இல்லை. மேலும் நான் கிறிஸ்துவின் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காக துரோவா பட்டணத்திற்கு வந்தபோது, கர்த்தராலே எனக்குக் கதவு திறக்கப்பட்டிருக்கும்போது, நான் என் சகோதரனாகிய தீத்துவைப் பார்க்காததினாலே, என் மனதில் சமாதானம் இல்லாமல் இருந்தது. எனவே நான் அவர்களைவிட்டு, மக்கெதோனியா நாட்டிற்குப் புறப்பட்டுப்போனேன்.
2 கொரிந்தியர் 2:1-13 பரிசுத்த பைபிள் (TAERV)
எனது அடுத்த சந்திப்பு உங்களைத் துயரப்படுத்தக் கூடாது என்று முடிவு செய்துவிட்டேன். நான் உங்களைத் துயரப்படுத்தினால், பின்னர் யார் என்னை மகிழ்ச்சிப்படுத்துவர்? நான் துயரப்படுத்திய நீங்கள்தானே என்னை மகிழ்ச்சிப்படுத்த முடியும்? இந்தக் காரணத்துக்காகத்தான் உங்களுக்குக் கடிதம் எழுதினேன். அதனால் உங்களை சந்திக்கும்போது, என்னை மகிழ்ச்சிப்படுத்தப்போகும் உங்களைத் துயரப்படுத்தமாட்டேன். எனது மகிழ்ச்சியை நீங்கள் அனைவரும் பகிர்ந்துகொள்வீர்கள் என்று உறுதியாக எண்ணுகிறேன். நான் இதற்கு முன்பு உங்களுக்கு எழுதும்போது மனதில் தொல்லைகளையும், துயரங்களையும் கொண்டிருந்தேன். நான் என் கண்ணீராலேயே எழுதினேன். உங்களைத் துயரப்படுத்த வேண்டுமென்று அதை எழுதவில்லை. உங்கள் மீதுள்ள என் அளவற்ற அன்பை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமென அவ்வாறு எழுதினேன். உங்கள் கூட்டத்திலுள்ள ஒருவனே துயரத்துக்குக் காரணமாக இருந்தான். எனக்கு மட்டுமல்ல, உங்கள் அனைவரின் துயரத்துக்கும் அவனே காரணமாக இருந்தான். அதாவது, ஏதாவது ஒரு வழியில் (நான் மிகைப்படுத்த விரும்பவில்லை) எல்லாருக்கும் துயரமுண்டாக அவன் காரணமாக இருந்தான். உங்களில் பலர் அவனுக்குத் தந்த தண்டனையே போதுமானது. ஆனால் இப்பொழுது அவனை மன்னித்து ஆதரவு அளிக்க வேண்டும். அது அவனை அதிக துயரத்தில் ஆழ்ந்து போகாதபடி காக்கும். நீங்கள் அவனை நேசிக்கிறீர்கள் என்பதை அவனுக்குக் காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதனால்தான் நான் உங்களுக்கு எழுதினேன். நீங்கள் எல்லாவற்றிலும் பணிவுடன் இருக்கிறீர்களா என்று சோதித்து அறியவே எழுதினேன். நீங்கள் யாரையாவது மன்னித்தால் அவர்களை நானும் மன்னித்துவிடுகிறேன். நான் மன்னிப்பவை அனைத்தும் (மன்னிக்கப்பட ஏதேனும் இருக்கும் பட்சத்தில்) உங்கள் பொருட்டே ஆகும். கிறிஸ்து எங்களோடு இருக்கிறார். சாத்தான் என்னிடமிருந்த எதையும் வெல்ல முடியாதவகையில் இதைச் செய்தேன். சாத்தானின் சதிதிட்டங்களையும் நாம் நன்றாக அறிவோம். கிறிஸ்துவின் நற்செய்தியைப் பரப்புவதற்காக நான் துரோவாவிற்குப் போனேன். கர்த்தர் அங்கு எனக்கு நல்ல வாய்ப்பினைத் தந்தார். அங்கே எனது சகோதரன் தீத்துவைப் பார்க்காததால் நான் அமைதியற்று இருந்தேன். எனவே நான் அங்குள்ளவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு மக்கதோனியாவிற்குப் போனேன்.
2 கொரிந்தியர் 2:1-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
நான் துக்கத்துடனே உங்களிடத்தில் மறுபடியும் வராதபடிக்கு எனக்குள்ளே தீர்மானித்துக்கொண்டேன். நான் உங்களைத் துக்கப்படுத்தினால், என்னாலே துக்கமடைந்தவனேயல்லாமல், எவன் என்னைச் சந்தோஷப்படுத்துவான்? என்னுடைய சந்தோஷம் உங்களெல்லாருக்கும் சந்தோஷமாயிருக்குமென்று, நான் உங்களெல்லாரையும்பற்றி நம்பிக்கையுள்ளவனாயிருந்து, நான் வரும்போது, என்னைச் சந்தோஷப்படுத்தவேண்டியவர்களால் நான் துக்கமடையாதபடிக்கு, அதை உங்களுக்கு எழுதினேன். அன்றியும், நீங்கள் துக்கப்படும்படிக்கு எழுதாமல், உங்கள்மேல் நான் வைத்த அன்பின் மிகுதியை நீங்கள் அறியும்படிக்கே, மிகுந்த வியாகுலமும் மன இடுக்கமும் அடைந்தவனாய் அதிகக் கண்ணீரோடே உங்களுக்கு எழுதினேன். துக்கமுண்டாக்கினவன் எனக்குமாத்திரமல்ல, ஒருவாறு உங்களெல்லாருக்கும் துக்கமுண்டாக்கினான்; நான் உங்கள் எல்லார்மேலும் அதிக பாரஞ்சுமத்தாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன். அப்படிப்பட்டவனுக்கு அநேகரால் உண்டான இந்தத் தண்டனையே போதும். ஆதலால் அவன் அதிக துக்கத்தில் அமிழ்ந்துபோகாதபடிக்கு, நீங்கள் அவனுக்கு மன்னித்து ஆறுதல் செய்யவேண்டும். அந்தப்படி, உங்கள் அன்பை அவனுக்குக் காண்பிக்கும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன். நீங்கள் எல்லாவற்றிலேயும் கீழ்ப்படிந்திருக்கிறீர்களோ என்று உங்களைச் சோதித்தறியும்படி இப்படி எழுதினேன். எவனுக்கு நீங்கள் மன்னிக்கிறீர்களோ, அவனுக்கு நானும் மன்னிக்கிறேன்; மேலும் எதை நான் மன்னித்திருக்கிறேனோ, அதை உங்கள்நிமித்தம் கிறிஸ்துவினுடைய சந்நிதானத்திலே மன்னித்திருக்கிறேன். சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு அப்படிச் செய்தேன்; அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே. மேலும் நான் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி துரோவாபட்டணத்தில் வந்தபோது, கர்த்தராலே எனக்குக் கதவு திறக்கப்பட்டிருக்கையில், நான் என் சகோதரனாகிய தீத்துவைக் காணாததினாலே, என் ஆவிக்கு அமைதலில்லாதிருந்தது. ஆதலால் நான் அவர்களிடத்தில் அனுப்புவித்துக்கொண்டு, மக்கெதோனியா நாட்டுக்குப் புறப்பட்டுப்போனேன்.