2 நாளாகமம் 34:8-33 - Compare All Versions
2 நாளாகமம் 34:8-33 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
அவன் தேசத்தையும் ஆலயத்தையும் சுத்திகரித்தபின்பு, அவன் தன் ராஜ்யபாரத்தின் பதினெட்டாம் வருஷத்திலே, அத்சலியாவின் குமாரனாகிய சாப்பானையும், நகரத்தலைவனாகிய மாசெயாவையும், யோவாகாசின் குமாரனாகிய யோவாக் என்னும் மந்திரியையும், தன் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தைப் பழுதுபார்க்கும்படிக்கு அனுப்பினான். அவர்கள் பிரதான ஆசாரியனாகிய இல்க்கியாவினிடத்தில் வந்து, வாசற்படியைக் காக்கிற லேவியர் மனாசேயிலும் எப்பிராயீமிலும் இஸ்ரவேலில் மீதியானவர்களெல்லாரின் கையிலும் யூதா பென்யமீன் எங்கும் சேர்த்து, எருசலேமுக்குத் திரும்பி தேவனுடைய ஆலயத்திற்குக் கொண்டுவந்த பணத்தை ஒப்புவித்து, வேலையைச் செய்விக்கும்படி, கர்த்தருடைய ஆலயத்தின் விசாரிப்புக்காரரானவர்களின் கையில் அதைக் கொடுத்தார்கள்; இவர்கள் அதைக் கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்த்துச் சீர்ப்படுத்துகிறதற்கு ஆலயத்தில் வேலை செய்கிறவர்கள் கையிலே கொடுத்தார்கள். அப்படியே யூதாவின் ராஜாக்கள் கெடுத்துப்போட்ட அறைகளைப் பழுதுபார்க்க வெட்டின கற்களையும், இணைப்புக்கு மரங்களையும், பாவுகிறதற்குப் பலகைகளையும் வாங்கத் தச்சருக்கும் சிற்பாசாரிகளுக்கும் அதைக் கொடுத்தார்கள். இந்த மனுஷர் வேலையை உண்மையாய்ச் செய்தார்கள்; வேலையை நடத்த மெராரியின் புத்திரரில் யாகாத் ஒபதியா என்னும் லேவியரும், கோகாதியரின் புத்திரரில் சகரியாவும், மெசுல்லாமும் அவர்கள்மேல் விசாரிப்புக்காரராயிருந்தார்கள்; இந்த லேவியர் எல்லாரும் கீதவாத்தியங்களை வாசிக்க அறிந்தவர்கள். அவர்கள் சுமைகாரரை விசாரிக்கிறவர்களாயும், பற்பல வேலைகளைச் செய்கிறவர்கள் எல்லாரையும் கண்காணிக்கிறவர்களாயும் இருந்தார்கள்; லேவியரில் இன்னும் சிலர் கணக்கரும் மணியக்காரரும் வாசற்காவலாளருமாயிருந்தார்கள். கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட்ட பணத்தை அவர்கள் எடுக்கிறபோது மோசேயைக்கொண்டு கட்டளையிடப்பட்ட கர்த்தருடைய நியாயப்பிரமாணப் புஸ்தகத்தை ஆசாரியனாகிய இல்க்கியா கண்டெடுத்தான். அப்பொழுது இல்க்கியா சம்பிரதியாகிய சாப்பானை நோக்கி: கர்த்தருடைய ஆலயத்திலே நியாயப்பிரமாணப்புஸ்தகத்தைக் கண்டெடுத்தேன் என்று சொல்லி, அந்தப் புஸ்தகத்தைச் சாப்பான் கையில் கொடுத்தான். சாப்பான் அந்தப் புஸ்தகத்தை ராஜாவினிடத்திற்குக் கொண்டுபோய், அவனை நோக்கி: உம்முடைய ஊழியக்காரருக்கு கட்டளையிடப்பட்டவைகளையெல்லாம் அவர்கள் செய்கிறார்கள். கர்த்தருடைய ஆலயத்திலே சேர்ந்த பணத்தை அவர்கள் கூட்டி, அதை விசாரிப்புக்காரர் கையிலும், வேலை செய்கிறவர்கள் கையிலும் கொடுத்தார்கள் என்று ராஜாவுக்கு மறுசெய்தி சொன்னதும் அல்லாமல், ஆசாரியனாகிய இல்க்கியா என் கையில் ஒரு புஸ்தகத்தைக் கொடுத்தான் என்பதைச் சம்பிரதியாகிய சாப்பான் ராஜாவுக்கு அறிவித்து, ராஜாவுக்கு முன்பாக அதை வாசித்தான். நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை ராஜா கேட்டபோது, அவன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, இல்க்கியாவுக்கும், சாப்பானின் குமாரனாகிய அகிக்காமுக்கும், மீகாவின் குமாரனாகிய அப்தோனுக்கும், சம்பிரதியாகிய சாப்பானுக்கும், ராஜாவின் ஊழியக்காரனாகிய அசாயாவுக்கும் கட்டளையிட்டுச் சொன்னது: கண்டெடுக்கப்பட்ட இந்தப் புஸ்தகத்தினுடைய வார்த்தைகளினிமித்தம் நீங்கள் போய், எனக்காகவும் இஸ்ரவேலிலும் யூதாவிலும் மீதியானவர்களுக்காகவும் கர்த்தரிடத்தில் விசாரியுங்கள்; இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற எல்லாவற்றின்படியேயும் செய்யும்படிக்கு கர்த்தருடைய வார்த்தையை நம்முடைய பிதாக்கள் கைக்கொள்ளாதேபோனபடியினால், நம்மேல் மூண்ட கர்த்தருடைய உக்கிரம் பெரியது என்றான். அப்பொழுது இல்க்கியாவும் ராஜா அனுப்பின மற்றவர்களும் அஸ்ராவின் குமாரனாகிய திக்வாதின் மகனான சல்லூம் என்னும் வஸ்திரசாலை விசாரிப்புக்காரன் மனைவியாகிய உல்தாள் என்னும் தீர்க்கதரிசியானவளிடத்திற்குப் போனார்கள்; அவள் எருசலேமில் இரண்டாம் வகுப்பிலே குடியிருந்தாள்; அவளோடே அதைப்பற்றிப் பேசினார்கள். அவள் இவர்களை நோக்கி: உங்களை என்னிடத்தில் அனுப்பினவருக்கு நீங்கள் சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறதாவது, இதோ, யூதாவின் ராஜாவுக்கு முன்பாக வாசிக்கப்பட்ட புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சகல சாபங்களுமாகிய பொல்லாப்பை நான் இந்த ஸ்தலத்தின்மேலும் இதின் குடிகளின்மேலும் வரப்பண்ணுவேன். அவர்கள் என்னைவிட்டு, தங்கள் கைகளின் கிரியைகள் எல்லாவற்றிலும் எனக்குக் கோபம் உண்டாக்க வேறே தேவர்களுக்குத் தூபங்காட்டினபடியினால், என் உக்கிரம் அவிந்துபோகாதபடி இந்த ஸ்தலத்தின்மேல் இறங்கும் என்று கர்த்தர் உரைக்கிறார். கர்த்தரிடத்தில் விசாரிக்கிறதற்கு உங்களை அனுப்பின யூதாவின் ராஜாவினிடத்தில் நீங்கள் போய்: நீ கேட்ட வார்த்தைகளைக்குறித்து இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இந்த ஸ்தலத்திற்கும் அதின் குடிகளுக்கும் விரோதமாக தேவன் சொன்ன அவருடைய வார்த்தைகளை நீ கேட்கையில், உன் இருதயம் இளகி, எனக்கு முன்பாக நீ உன்னைத் தாழ்த்தி, எனக்கு முன்பாகப் பணிந்து, உன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, எனக்கு முன்பாக அழுதபடியினால், நானும் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். இதோ, நான் இந்த ஸ்தலத்தின்மேலும் இதின் குடிகளின்மேலும் வரப்பண்ணும் எல்லாப் பொல்லாப்பையும் உன் கண்கள் காணாதபடிக்கு, நீ சமாதானத்தோடே உன் கல்லறையில் சேர்த்துக்கொள்ளபட. நான் உன்னை உன் பிதாக்களண்டையிலே சேரப்பண்ணுவேன் என்கிறார் என்று சொன்னாள்; அவர்கள் ராஜாவுக்கு மறுசெய்தி கொண்டுபோனார்கள். அப்பொழுது ராஜா யூதாவிலும் எருசலேமிலுமுள்ள மூப்பரையெல்லாம் அழைப்பித்துக் கூடிவரச்செய்து, ராஜாவும், சகல யூதா மனுஷரும், எருசலேமின் குடிகளும், ஆசாரியரும், லேவியரும், பெரியோர்முதல் சிறியோர் மட்டுமுள்ள சகலருமாய்க் கர்த்தருடைய ஆலயத்துக்குப் போனார்கள்; கர்த்தருடைய ஆலயத்திலே கண்டெடுக்கப்பட்ட உடன்படிக்கைப் புஸ்தகத்தின் வார்த்தைகளையெல்லாம் அவர்கள் காதுகள் கேட்க வாசித்தான். ராஜா தன் ஸ்தானத்திலே நின்று, அந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற உடன்படிக்கையின் வார்த்தைகளின்படியே தான் செய்வதினாலே, கர்த்தரைப் பின்பற்றி நடப்பேன் என்றும், தன் முழு இருதயத்தோடும் தன் முழு ஆத்துமாவோடும் அவருடைய கற்பனைகளையும் அவருடைய சாட்சிகளையும் அவருடைய கட்டளைகளையும் கைக்கொள்ளுவேன் என்றும் கர்த்தருடைய சந்நிதியில் உடன்படிக்கைபண்ணி, எருசலேமிலும் பென்யமீனிலும் காணப்பட்ட யாவரையும் அதற்கு உட்படப்பண்ணினான்; அப்படியே எருசலேமின் குடிகள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய அந்த தேவனுடைய உடன்படிக்கையின்படியே செய்தார்கள். யோசியா இஸ்ரவேல் புத்திரருடைய தேசங்கள் எங்கும் உண்டான அருவருப்புகளையெல்லாம் அகற்றி, இஸ்ரவேலிலே காணப்பட்டவர்களையெல்லாம் தங்கள் தேவனாகிய கர்த்தரைச் சேவிக்கும்படி செய்தான்; அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டுப் பின்வாங்கினதில்லை.
2 நாளாகமம் 34:8-33 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவன் தேசத்தையும் ஆலயத்தையும் தூய்மைப்படுத்தியபின்பு, அவன் தன் அரசாட்சியின் பதினெட்டாம் வருடத்திலே, அத்சலியாவின் மகனாகிய சாப்பானையும், நகரத்தலைவனாகிய மாசெயாவையும், யோவாகாசின் மகனாகிய யோவாக் என்னும் மந்திரியையும், தன் தேவனாகிய யெகோவாவின் ஆலயத்தைப் பழுதுபார்ப்பதற்கு அனுப்பினான். அவர்கள் பிரதான ஆசாரியனாகிய இல்க்கியாவினிடத்தில் வந்து, வாசற்படியைக் காக்கிற லேவியர்கள் மனாசேயிலும் எப்பிராயீமிலும் இஸ்ரவேலில் மீதியானவர்களெல்லாரின் கையிலும் யூதா பென்யமீன் எங்கும் சேர்த்து, எருசலேமுக்குத் திரும்பி தேவனுடைய ஆலயத்திற்குக் கொண்டுவந்த பணத்தை ஒப்புவித்து, வேலையைச் செய்யவைக்க, யெகோவாவுடைய ஆலயத்தின் விசாரிப்புக்காரரானவர்களின் கையில் அதைக் கொடுத்தார்கள்; இவர்கள் அதைக் யெகோவாவுடைய ஆலயத்தைப் பழுதுபார்த்து ஒழுங்குபடுத்துகிறதற்கு ஆலயத்தில் வேலை செய்கிறவர்கள் கையிலே கொடுத்தார்கள். அப்படியே யூதாவின் ராஜாக்கள் கெடுத்துப்போட்ட அறைகளைப் பழுதுபார்க்க, வெட்டின கற்களையும், இணைப்புக்கு மரங்களையும், பரப்புவதற்குப் பலகைகளையும் வாங்க தச்சர்களுக்கும் சிற்ப ஆசாரிகளுக்கும் அதைக் கொடுத்தார்கள். இந்த மனிதர்கள் வேலையை உண்மையாகச் செய்தார்கள்; வேலையை நடத்த மெராரியின் மக்களில் யாகாத், ஒபதியா என்னும் லேவியர்களும், கோகாத்தியரின் மக்களில் சகரியாவும், மெசுல்லாமும் அவர்கள்மேல் விசாரிப்புக்காரர்களாக இருந்தார்கள்; இந்த லேவியர்கள் எல்லோரும் கீதவாத்தியங்களை வாசிக்க அறிந்தவர்கள். அவர்கள் சுமைகாரர்களை விசாரிக்கிறவர்களாகவும், பற்பல வேலைகளைச் செய்கிறவர்கள் எல்லோரையும் கண்காணிக்கிறவர்களாகவும் இருந்தார்கள்; லேவியர்களில் இன்னும் சிலர் செயலாளர்களாகவும், நிர்வாகிகளாகவும், வாசற்காவலாளருமாக இருந்தார்கள். யெகோவாவுடைய ஆலயத்திற்குக் கொண்டுவரப்பட்ட பணத்தை அவர்கள் எடுக்கிறபோது மோசேயைக்கொண்டு கட்டளையிடப்பட்ட யெகோவாவுடைய நியாயப்பிரமாணப் புத்தகத்தை ஆசாரியனாகிய இல்க்கியா கண்டெடுத்தான். அப்பொழுது இல்க்கியா, பதிவாளனாகிய சாப்பானை நோக்கி: யெகோவாவுடைய ஆலயத்திலே நியாயப்பிரமாணப் புத்தகத்தைக் கண்டெடுத்தேன் என்று சொல்லி, அந்தப் புத்தகத்தை சாப்பானுடைய கையில் கொடுத்தான். சாப்பான் அந்த புத்தகத்தை ராஜாவினிடத்திற்குக் கொண்டுபோய், அவனை நோக்கி: உம்முடைய வேலைக்காரர்களுக்கு கட்டளையிடப்பட்டவைகளையெல்லாம் அவர்கள் செய்கிறார்கள். யெகோவாவுடைய ஆலயத்திலே சேர்ந்த பணத்தை அவர்கள் கூட்டி, அதை விசாரிப்புக்காரர்கள் கையிலும், வேலை செய்கிறவர்கள் கையிலும் கொடுத்தார்கள் என்று ராஜாவுக்கு மறுசெய்தி சொன்னதும் அல்லாமல், ஆசாரியனாகிய இல்க்கியா என் கையில் ஒரு புத்தகத்தைக் கொடுத்தான் என்பதைப் பதிவாளனாகிய சாப்பான் ராஜாவுக்கு அறிவித்து, ராஜாவுக்கு முன்பாக அதை வாசித்தான். நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை ராஜா கேட்டபோது, அவன் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, இல்க்கியாவுக்கும், சாப்பானின் மகனாகிய அகீக்காமுக்கும், மீகாவின் மகனாகிய அப்தோனுக்கும், பதிவாளனாகிய சாப்பானுக்கும், ராஜாவின் வேலைக்காரனாகிய அசாயாவுக்கும் கட்டளையிட்டுச் சொன்னது: கண்டெடுக்கப்பட்ட இந்தப் புத்தகத்தினுடைய வார்த்தைகளினிமித்தம் நீங்கள் போய், எனக்காகவும், இஸ்ரவேலிலும், யூதாவிலும் மீதியானவர்களுக்காகவும் கர்த்தரிடத்தில் விசாரியுங்கள்; இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிற எல்லாவற்றின்படியேயும் செய்யும்படிக்கு யெகோவாவுடைய வார்த்தையை நம்முடைய முன்னோர்கள் கைக்கொள்ளாமல் போனதால், நம்மேல் மூண்ட யெகோவாவுடைய கடுங்கோபம் பெரியது என்றான். அப்பொழுது இல்க்கியாவும் ராஜா அனுப்பின மற்றவர்களும் அஸ்ராவின் மகனாகிய திக்வாதின் மகனான சல்லூம் என்னும் ஆடைகள் வைக்கும் அறைகளின் கண்காணிப்பாளனின் மனைவியாகிய உல்தாள் என்னும் தீர்க்கதரிசியானவளிடம் போனார்கள்; அவள் எருசலேமில் இரண்டாம் பகுதியிலே குடியிருந்தாள்; அவளோடு அதைக்குறித்துப் பேசினார்கள். அவள் இவர்களை நோக்கி: உங்களை என்னிடம் அனுப்பினவருக்கு நீங்கள் சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா உரைக்கிறதாவது, இதோ, யூதாவின் ராஜாவுக்கு முன்பாக வாசிக்கப்பட்ட புத்தகத்தில் எழுதியிருக்கிற அனைத்து சாபங்களுமாகிய பொல்லாப்பை நான் இந்த இடத்தின்மேலும் இதன் மக்களின்மேலும் வரச்செய்வேன். அவர்கள் என்னைவிட்டு, தங்கள் கைகளின் செயல்கள் எல்லாவற்றிலும் எனக்குக் கோபம் உண்டாக்க வேறே தெய்வங்களுக்குத் தூபங்காட்டினதால், என் கடுங்கோபம் தணிந்து போகாமலிருக்க இந்த இடத்தின்மேல் இறங்கும் என்று யெகோவா உரைக்கிறார். கர்த்தரிடத்தில் விசாரிக்கிறதற்கு உங்களை அனுப்பின யூதாவின் ராஜாவினிடத்தில் நீங்கள் போய்: நீ கேட்ட வார்த்தைகளைக்குறித்து இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், இந்த இடத்திற்கும் அதன் மக்களுக்கும் விரோதமாக தேவன் சொன்ன அவருடைய வார்த்தைகளை நீ கேட்கும்போது, உன் இருதயம் இளகி, எனக்கு முன்பாக நீ உன்னைத் தாழ்த்தி, எனக்கு முன்பாகப் பணிந்து, உன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, எனக்கு முன்பாக அழுததால், நானும் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன் என்று யெகோவா சொல்லுகிறார். இதோ, நான் இந்த இடத்தின்மேலும் இதன் மக்களின்மேலும் வரச்செய்யும் எல்லாப் பொல்லாப்பையும் உன் கண்கள் காணாதபடிக்கு, நீ சமாதானத்தோடு உன் கல்லறையில் சேர்க்கப்பட நான் உன்னை உன் முன்னோர்களுக்கு அருகில் சேரச்செய்வேன் என்கிறார் என்று சொன்னாள்; அவர்கள் ராஜாவுக்கு மறுசெய்தி கொண்டுபோனார்கள். அப்பொழுது ராஜா யூதாவிலும் எருசலேமிலுமுள்ள மூப்பரையெல்லாம் வரவழைத்துக் கூடிவரச்செய்து, ராஜாவும், அனைத்து யூதா மனிதர்களும், எருசலேமின் மக்களும், ஆசாரியர்களும், லேவியர்களும், பெரியோர்முதல் சிறியோர் வரையுள்ள அனைவரும் யெகோவாவுடைய ஆலயத்திற்குப் போனார்கள்; யெகோவாவுடைய ஆலயத்திலே கண்டெடுக்கப்பட்ட உடன்படிக்கைப் புத்தகத்தின் வார்த்தைகளையெல்லாம் அவர்கள் காதுகள் கேட்க வாசித்தான். ராஜா தன் ஸ்தானத்திலே நின்று, அந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிற உடன்படிக்கையின் வார்த்தைகளின்படியே தன் செயல்கள் மூலமாகக் யெகோவாவைப் பின்பற்றி நடப்பேன் என்றும், தன் முழு இருதயத்தோடும், தன் முழு ஆத்துமாவோடும், அவருடைய கற்பனைகளையும், அவருடைய சாட்சிகளையும் அவருடைய கட்டளைகளையும் கைக்கொள்ளுவேன் என்றும் யெகோவாவுடைய சந்நிதியில் உடன்படிக்கைசெய்து, எருசலேமிலும் பென்யமீனிலும் காணப்பட்ட யாவரையும் அதற்கு இணங்கச்செய்தான்; அப்படியே எருசலேமின் மக்கள் தங்கள் முன்னோர்களின் தேவனாகிய அந்த தேவனுடைய உடன்படிக்கையின்படியே செய்தார்கள். யோசியா இஸ்ரவேல் மக்களுடைய தேசங்கள் எங்கும் உண்டான அருவருப்புகளையெல்லாம் அகற்றி. இஸ்ரவேலிலே காணப்பட்டவர்களையெல்லாம் தங்கள் தேவனாகிய யெகோவாவை ஆராதிக்கச் செய்தான்; அவன் உயிரோடிருந்த நாட்களெல்லாம் அவர்கள் தங்கள் முன்னோர்களின் தேவனாகிய யெகோவாவைவிட்டுப் பின்வாங்கினதில்லை.
2 நாளாகமம் 34:8-33 TAERV (பரிசுத்த பைபிள்)
யோசியா ஆட்சிப்பொறுப்பேற்ற 18வது ஆண்டில், சாப்பான், மாசெயா மற்றும் யோவா ஆகியோரை தனது தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தை மீண்டும் கட்டி அமைக்க அனுப்பினான். சாப்பானின் தந்தை பெயர் அத்சலியா. மாசெயா என்பவன் நகரத் தலைவன் ஆவான். யோவாவின் தந்தை பெயர் யோவாகாஸ் ஆகும். நடக்கும் நிகழ்ச்சிகளையெல்லாம் எழுதுபவன் யோவா ஆவான். (அவன் பதிவு செய்பவன்). எனவே யோசியா ஆலயம் பழுது பார்க்கப்படவேண்டும் என்று கட்டளையிட்டான். அதன் மூலம் யூதாவையும், ஆலயத்தையும் சுத்தப்படுத்தலாம் என்று நம்பினான். அவர்கள் தலைமை ஆசாரியனான இல்க்கியாவிடம் வந்தனர். தேவனுடைய ஆலயத்திற்காக ஜனங்கள் கொடுத்த பணத்தை அவர்கள் இலக்கியாவிடம் கொடுத்தனர். வாயிற்காவலர்களான லேவியர்கள் இப்பணத்தை மனாசே, எப்பிராயீம் மற்றும் வெளியேறிய இஸ்ரவேலர் அனைவரிடமிருந்தும் வசூலித்திருந்தனர். அவர்கள் யூதா, பென்யமீன் மற்றும் எருசலேமில் உள்ள அனைத்து ஜனங்களிடமிருந்தும் பணத்தை வசூலித்திருந்தனர். பிறகு லேவியர்கள் கர்த்தருடைய ஆலயத்தில் வேலையை மேற்பார்வை செய்பவர்களிடம் பணத்தைக் கொடுத்தனர். மேற்பார்வையாளர்களோ அப்பணத்தைக் கர்த்தருடைய ஆலயத்தில் வேலைச் செய்பவர்களுக்குக் கொடுத்தனர். அவர்கள் அப்பணத்தை மரத்தச்சர்களிடமும், கொத்தனார்களிடமும் கொடுத்தனர். சதுரக் கற்களும், மரப்பலகைகளும் வாங்குவதற்காக அப்பணத்தை அவர்களிடம் கொடுத்தனர். மீண்டும் கட்டிடங்களைக் கட்டவும் உத்திரங்களை அமைக்கவும் பயன்பட்டன. முற்காலத்தில் யூதாவின் ராஜாக்கள் எவரும் ஆலயக் கட்டிடத்தைப்பற்றி அக்கறை கொள்ளவில்லை. அக்கட்டிடங்கள் பழையதாகி அழிந்துக்கொண்டிருந்தன. எல்லா ஆட்களும் உண்மையாக உழைத்தார்கள். யாகாத்தும், ஒபதியாவும் அவர்களின் மேற்பார்வையாளர்கள். இவர்கள் லேவியர்கள். இவர்கள் மெராரியின் சந்ததியினர். சகரியாவும் மெசுல்லாமும் மேற்பார்வையாளர்கள்தான். இவர்கள் கோகாத்தின் சந்ததியினர். இசைக்கருவிகளை இயக்குவதில் திறமை பெற்ற லேவியர்கள் வேலைச்செய்பவர்களை மேற்பார்வை பார்ப்பதும் மற்ற வேலைகளைச் செய்வதுமாய் இருந்தனர். சில லேவியர்கள் செயலாளர்களாகவும், அதிகாரிகளாகவும் வாயிற் காவலர்களாகவும் இருந்தனர். கர்த்தருடைய ஆலயத்தில் இருக்கிற பணத்தை லேவியர்கள் வெளியே கொண்டு வந்தனர். அதே நேரத்தில் இல்க்கியா எனும் ஆசாரியன் கர்த்தருடைய சட்ட புத்தகத்தைக் கண்டுபிடித்தான். அது மோசேயால் கொடுக்கப்பட்டிருந்தது. இல்க்கியா காரியக்காரனான சாப்பானிடம், சட்டப் புத்தகத்தை கர்த்தருடைய ஆலயத்தில் கண்டு எடுத்திருக்கிறேன் என்றான். இல்க்கியா அந்தப் புத்தகத்தைச் சாப்பானிடம் கொடுத்தான். சாப்பான் அந்தப் புத்தகத்தை யோசியா ராஜாவிடம் எடுத்துவந்தான். அவன் ராஜாவிடம், “உங்கள் வேலைக்காரர்கள் நீங்கள் சொன்னது போலவே அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தில் இருந்த பணத்தை சேகரித்து அதனை மேற்பார்வையாளர்களுக்கும், வேலைக்காரர்களுக்கும் கொடுக்கின்றனர்” என்றான். மேலும் சாப்பான் ராஜாவிடம், “ஆசாரியனான இல்க்கியா ஒரு புத்தகத்தை என்னிடம் கொடுத்திருக்கிறான்” என்றான். பிறகு சாப்பான் அந்தப் புத்தகத்தை வாசித்துக் காட்டினான். அவன் வாசிக்கும்போது ராஜாவுக்கு முன்பு இருந்தான். யோசியா ராஜா சட்டத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது அவன் தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டான். பிறகு அவன் இல்க்கியாவுக்கும், சாப்பானின் குமாரனான அகிக்காமுக்கும், மீகாவின் குமாரனான அப்தோனுக்கும், சம்பிரதியாகிய சாப்பானுக்கும், ராஜாவின் ஊழியக்காரனாகிய அசாயாவுக்கும் கட்டளையிட்டான். ராஜா, “செல்லுங்கள் எனக்காக கர்த்தரிடம் கேளுங்கள். இஸ்ரவேலிலும், யூதாவிலும் மிச்சமுள்ள ஜனங்களுக்காகக் கேளுங்கள். கண்டுபிடிக்கப்பட்ட புத்தகத்தில் உள்ள சொற்களைப்பற்றி கேளுங்கள். நமது முற்பிதாக்கள் அவரது வார்த்தைகளுக்கு அடிபணியவில்லை என்பதால் கர்த்தர் நம் மீது கோபமாக இருக்கிறார். இந்தப் புத்தகம் செய்ய சொன்னவற்றையெல்லாம் அவர்கள் செய்யவில்லை!” என்றான். இல்க்கியாவும், ராஜாவின் வேலைக்காரர்களும் உல்தாள் எனும் தீர்க்கதரிசி பெண்ணிடம் சென்றனர். உல்தாள் சல்லூமின் மனைவி. சல்லூம் திக்வாதின் குமாரன். திக்வாத் அஸ்ராவின் குமாரன். அஸ்ரா ராஜாவின் ஆடைகளுக்குப் பொறுப்பாளன். உல்தாள் எருசலேமின் புதிய பகுதியில் வாழ்ந்து வருகிறாள். இல்க்கியாவும், ராஜாவின் வேலைக்காரர்களும் அவளிடம் நடந்ததை எல்லாம் சொன்னார்கள். உல்தாள் அவர்களிடம், “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கூறுவது இதுதான்: ராஜாவாகிய யோசியாவிடம் கூறுங்கள்: ‘நான் இந்த இடத்திற்கும், இங்கு வாழும் ஜனங்களுக்கும் தொந்தரவுகளைத் தருவேன். யூதா ராஜாவின் முன்னிலையில் வாசிக்கப்பட்ட புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள எல்லா கொடூரமானவற்றையும் கொண்டு வருவேன். ஜனங்கள் என்னைவிட்டு விலகி அந்நிய தெய்வங்களுக்கு நறுமணப் பொருட்களை எரிக்க போய்விட்ட காரணத்தால் நான் இவற்றைச் செய்வேன். தம்முடைய தீயச்செயல்களால் அவர்கள் எனக்கு மிகுதியான கோபத்தை மூட்டிவிட்டார்கள். எனவே நான் இந்த இடத்தில் எனது கோபத்தைக் கொட்டுவேன். நெருப்பைப்போன்று கோபம் அவியாது.’ “ஆனால் யூதாவின் ராஜாவாகிய யோசியாவிடம் கூறு. அவன் உங்களைக் கர்த்தரைக் கேட்குமாறு அனுப்பியிருக்கிறான். சற்று நேரத்திற்கு முன்னர் நீ கேட்டவற்றைப்பற்றி இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கூறுவது இதுதான்: ‘யோசியா நீ மனம் இளகி பணிந்துகொண்டாய், உனது ஆடைகளைக் கிழித்துக்கொண்டாய், எனக்கு முன்பு நீ அழுதாய். இவ்வாறு உன் மனம் இளகியதால், உன் முற்பிதாக்களுடன் இருப்பதற்கு நான் உன்னை அழைத்துச் செல்வேன். நீ உனது கல்லறைக்கு சமாதானத்தோடு போவாய். அதனால் நான் இந்த இடத்துக்கும், இங்குள்ள ஜனங்களுக்கும் கொடுக்கப்போகும் பயங்கரமான துன்பங்களை நீ காணமாட்டாய்’” என்றார். இல்க்கியாவும், ராஜாவின் வேலைக்காரர்களும் இந்த செய்தியை யோசியா ராஜாவிடம் கொண்டுவந்தனர். பிறகு யோசியா யூதா மற்றும் எருசலேமில் உள்ள மூப்பர்களை அழைத்து அவர்களைச் சந்தித்தான். ராஜா கர்த்தருடைய ஆலயத்திற்குள் சென்றான். யூதாவிலுள்ள ஜனங்களும், எருசலேமில் உள்ள ஜனங்களும் ஆசாரியர்களும், லேவியர்களும், முக்கியமானவர்களும் முக்கியமற்றவர்களும் ராஜாவோடு சென்றனர். உடன்படிக்கைப் புத்தகத்தில் உள்ள அனைத்தையும் ராஜா அவர்களுக்கு வாசித்துக் காட்டினான். அப்புத்தகம் கர்த்தருடைய ஆலயத்தில் கண்டெடுத்த புத்தகம் ஆகும். பிறகு ராஜா தனது இடத்தில் எழுந்து நின்றான். பிறகு அவன் கர்த்தரோடு ஒரு உடன்படிக்கைச் செய்தான். கர்த்தரைப் பின்பற்றுவதாகவும் அவரது கட்டளைகளுக்கும், சட்டங்களுக்கும் அடிபணிவதாகவும் சொன்னான். முழு இருதயத்தோடும் ஆத்துமாவோடும் அவன் கீழ்ப்படிவதற்கு ஒப்புக்கொண்டான். உடன்படிக்கைப் புத்தகத்தில் எழுதப்பட்ட அனைத்துக்கும் அடிபணிவதாக ஒப்புக்கொண்டான். பிறகு யோசியா எருசலேம் மற்றும் பென்யமீன் நாட்டிலுள்ள அனைத்து ஜனங்களையும் உடன்படிக்கையை ஒப்புக்கொள்கிற வகையில் வாக்குறுதி தரச் செய்தான். தமது முற்பிதாக்கள் கீழ்ப்படிந்த தேவனுடைய உடன்படிக்கையை எருசலேம் ஜனங்களும் கீழ்ப்படிந்தார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் பல் வேறு நாடுகளிலிருந்து விக்கிரகங்களைக் கொண்டு வந்து வைத்திருந்தனர். ஆனால் யோசியா அந்த கொடூரமான விக்கிரகங்களை எல்லாம் அழித்துவிட்டான். ராஜா இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரையும் தேவனாகிய கர்த்தருக்குச் சேவைசெய்யுமாறுச் செய்தான். யோசியா உயிரோடு இருந்தவரை ஜனங்கள் தமது முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்குச் சேவை செய்தனர்.
2 நாளாகமம் 34:8-33 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
யோசியாவின் ஆட்சியின் பதினெட்டாம் வருடத்தில், அவன் நாட்டையும் எருசலேமையும் தூய்மைப்படுத்துவதற்காக அத்சலியாவின் மகன் சாப்பான், பட்டணத்தின் ஆளுநனான மாசெயா, பதிவாளனான யோவகாஸின் மகன் யோவாக் ஆகியோரை அவனுடைய இறைவனாகிய யெகோவாவின் ஆலயத்தைத் திருத்துவதற்காக அனுப்பினான். அவர்கள் தலைமை ஆசாரியன் இல்க்கியாவிடம் போய், இறைவனுடைய ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட்ட பணத்தை அவனிடம் கொடுத்தார்கள். அப்பணம் வாசல் காவலாளர்களாயிருந்த லேவியர்களால் மனாசே, எப்பிராயீம் மக்களிடமிருந்தும், இஸ்ரயேலில் எஞ்சியிருந்த எல்லா மக்களிடமிருந்தும், யூதா, பென்யமீன் மக்களான எல்லோரிடமிருந்தும், எருசலேமின் குடிகளிடமிருந்தும் சேர்க்கப்பட்டதாகும். அவர்கள் யெகோவாவின் ஆலய வேலையை மேற்பார்வை செய்வதற்கென நியமிக்கப்பட்ட மனிதரிடம் அதைக் கொடுத்தார்கள். அவர்கள் அதிலிருந்து ஆலயத்தைப் பழுதுபார்த்து, திரும்பக்கட்டிய வேலையாட்களுக்குச் சம்பளம் கொடுத்தனர். அத்துடன் அவர்கள் தச்சர்களுக்கும், கட்டடங்களைக் கட்டுபவர்களுக்கும், பொழியப்பட்ட கற்களையும், வளை மரங்களையும், இணைப்பு மரங்களையும் செய்வதற்கான மரங்களை வாங்குவதற்குமென பணம் கொடுத்தார்கள். அந்தக் கட்டடங்கள் யூதாவின் அரசர்களால் பாழாகும்படி விடப்பட்டிருந்தனவாகும். மனிதர்கள் உண்மையுடன் வேலைசெய்தார்கள். அவர்களுக்குத் தலைமைதாங்கி, அவர்களை வழிநடத்துவதற்கு மெராரி வழிவந்த லேவியர்களான யாகாத்தும், ஒபதியாவும், கோகாத்தின் வழிவந்த சகரியா, மெசுல்லாவும் இருந்தனர். லேவியர்கள் எல்லோரும் இசைக்கருவிகளை வாசிப்பதில் திறமை வாய்ந்தவர்கள். இவர்கள் தொழிலாளர்களுக்குப் பொறுப்பாயிருந்து, ஒவ்வொரு வேலையிலும் ஈடுபட்டிருந்த வேலையாட்களை மேற்பார்வை செய்தார்கள். சில லேவியர்கள் செயலாளர்களாகவும், வேதப்பிரதியாளர்களாகவும், வாசல் காப்போர்களாகவும் இருந்தனர். யெகோவாவின் ஆலயத்திற்குள் இருந்த பணம் வெளியே எடுத்துக்கொண்டு வரப்பட்டது. அப்போது ஆசாரியன் இல்க்கியா மோசே மூலம் கொடுக்கப்பட்ட யெகோவாவின் சட்டப் புத்தகத்தைக் கண்டெடுத்தான். இல்க்கியா செயலாளராகிய சாப்பானிடம், “யெகோவாவின் ஆலயத்தில் நான் சட்டப் புத்தகத்தைக் கண்டெடுத்தேன்” என்று சொன்னான். அவன் அதைச் சாப்பானிடம் கொடுத்தான். அப்பொழுது சாப்பான் அந்தப் புத்தகத்தை அரசனிடம் கொண்டுபோய், அவனுக்கு விவரித்துச் சொன்னதாவது, “உமது அதிகாரிகள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட எல்லாவற்றையும் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் யெகோவாவின் ஆலயத்தில் இருந்த பணத்தை, மேற்பார்வையாளருக்கும், வேலையாட்களுக்கும் என கொடுத்துவிட்டார்கள்” என்றான். பின்பு செயலாளராகிய சாப்பான் அரசனிடம், “ஆசாரியன் இல்க்கியா என்னிடம் ஒரு புத்தகத்தைக் கொடுத்திருக்கிறான்” என்று சொல்லி அதை அரசன்முன் வாசித்தான். அரசன் சட்டத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது, தனது ஆடைகளைக் கிழித்தான். பின்பு அரசன் இல்க்கியாவுக்கும், சாப்பானின் மகன் அகீக்காமுக்கும், மீகாவின் மகன் அப்தோனுக்கும், செயலாளன் சாப்பானுக்கும், அரச ஏவலாளனான அசாயாவுக்கும் கட்டளையிட்டதாவது: “நீங்கள் போய் கண்டெடுக்கப்பட்ட இந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளவற்றைப் பற்றி, எனக்காகவும், இஸ்ரயேலிலும், யூதாவிலும் இருக்கிறவர்களுக்காகவும் யெகோவாவிடம் கேளுங்கள். நமது முற்பிதாக்கள் யெகோவாவின் வார்த்தையைக் கைக்கொள்ளாததினால் தானே நம்மேல் ஊற்றப்பட்ட யெகோவாவின் கோபம் பெரிதாயிருக்கிறது. அவர்கள் இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள எல்லாவற்றின்படியும் செயல்படவில்லையே” என்றான். இல்க்கியாவும், அரசன் அவனோடு அனுப்பியவர்களும் இறைவாக்கினள் உல்தாளிடம் பேசும்படி போனார்கள். இவள் ஆலய உடைகளைக் காவல் செய்பவனான சல்லூமின் மனைவி. சல்லூம் அஸ்ராவின் மகனான தோக்காத்தின் மகன். உல்தாள் எருசலேமில் இரண்டாம் வட்டாரத்தில் வாழ்ந்தாள். அவள் அவர்களிடம், “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: என்னிடம் உங்களை அனுப்பிய மனிதனிடம் சொல்லவேண்டியதாவது: ‘யெகோவா சொல்வது இதுவே, நான் இந்த இடத்தின்மேலும், இதன் மக்கள்மேலும் பேரழிவைக் கொண்டுவரப் போகிறேன். யூதாவின் அரசனுக்கு முன்னால் வாசிக்கப்பட்ட புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள எல்லா சாபங்களையும் கொண்டுவருவேன். ஏனெனில் அவர்கள் என்னைக் கைவிட்டு, மற்றத் தெய்வங்களுக்குத் தூபம் எரித்தார்கள். தங்கள் கரங்களினால் செய்த எல்லாவற்றினாலும் எனக்கு கோபமூட்டினார்கள். ஆதலால் எனது கோபம் இந்த இடத்தின்மேல் ஊற்றப்படும். அது தணியாது’ என்றாள். யெகோவாவிடம் விசாரிக்கும்படி உங்களை அனுப்பிய யூதாவின் அரசனிடம் நீங்கள் சொல்லவேண்டியதாவது: ‘நீர் கேட்ட வார்த்தைகளைப்பற்றி இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: இறைவன் இந்த இடத்திற்கும் அதன் மக்களுக்கும் எதிராகப் பேசியதை நீ கேட்டபோது, உன் இருதயம் அதைக் கருத்தில் கொண்டது. நீயும் இறைவனுக்கு முன்பாக உன்னைத் தாழ்த்தினாய். நீ எனக்கு முன்னால் உன்னைத் தாழ்த்தி, உன் மேலாடைகளைக் கிழித்து, எனக்குமுன் அழுதாய். அதனால் நான் உனக்குச் செவிகொடுத்தேன் என்று யெகோவா சொல்கிறார். இப்பொழுது நான் உன்னை உன் தந்தையருடன் சேர்த்துக்கொள்ளப் போகிறேன். நீ சமாதானத்துடன் அடக்கம் செய்யப்படுவாய். நான் இந்த இடத்தின்மேலும் இங்கு வாழ்வோர்மேலும் கொண்டுவரப்போகும் பேரழிவை உன் கண்கள் காணமாட்டாது’ என்று சொல்கிறார்” என்றாள். எனவே அவளது பதிலைக் கொண்டு அவர்கள் அரசனிடம் போனார்கள். அப்பொழுது அரசன், யூதாவின் முதியவர்களையும், எருசலேமின் முதியவர்களையும் ஒன்றாக கூடிவரச் செய்தான். அரசன் யூதாவின் மனிதர், எருசலேமின் மக்கள், ஆசாரியர்கள், லேவியர்கள் ஆகிய சிறியோர் பெரியோர் அனைவருடனும் யெகோவாவின் ஆலயத்திற்குப் போனான். அவன் யெகோவாவின் ஆலயத்தில் கண்டெடுக்கப்பட்ட உடன்படிக்கைப் புத்தகத்தில் இருந்த எல்லா வார்த்தைகளையும் அவர்கள் கேட்கும்படி வாசித்தான். அரசன் தனது தூணின் அருகே நின்று, யெகோவாவின் முன்னால் உடன்படிக்கையைப் புதுப்பித்தான். யெகோவாவைப் பின்பற்றுவதற்கும், அவரது கட்டளைகளையும், நியமங்களையும், விதிமுறைகளையும் தனது முழு இருதயத்துடனும், முழு ஆத்துமாவோடும் கைக்கொள்வதற்கும், இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள எல்லா உடன்படிக்கையின் வார்த்தைகளுக்கும் கீழ்ப்படிவதற்கும் உடன்பட்டான். அதன்பின் எருசலேமிலும், பென்யமீனிலுமுள்ள ஒவ்வொருவரையும் உடன்படும்படி தூண்டினான். எருசலேம் மக்கள் தங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய இறைவனின் உடன்படிக்கையின்படியே இதைச் செய்தார்கள். யோசியா இஸ்ரயேலின் ஆட்சிக்குட்பட்ட அதற்குச் சொந்தமான பகுதிகளிலிருந்த எல்லா அருவருக்கத்தக்க விக்கிரகங்களையும் அகற்றினான். இஸ்ரயேலில் உள்ள எல்லோரையும் இறைவனாகிய தங்கள் யெகோவாவுக்குப் பணிசெய்யும்படி செய்தான். அவன் வாழ்ந்த காலம் ழுழுவதும் அவர்கள் தங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவைப் பின்பற்றுவதில் தவறவேயில்லை.