2 நாளாகமம் 24:1-27
2 நாளாகமம் 24:1-27 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யோவாஸ் அரசனானபோது அவன் ஏழு வயதுடையவனாயிருந்தான், அவன் எருசலேமில் நாற்பதுவருடம் ஆட்சிசெய்தான். அவன் தாயின் பெயர் சிபியாள். அவள் பெயெர்செபாவைச் சேர்ந்தவள். ஆசாரியன் யோய்தாவின் நாளெல்லாம் யோவாஸ் யெகோவாவின் பார்வையில் சரியானதையே செய்து வந்தான். யோய்தா அவனுக்கு இரண்டு மனைவிகளைத் தெரிந்தெடுத்துக் கொடுத்தான். அவனுக்கு மகன்களும் மகள்களும் இருந்தார்கள். சிறிது காலத்தின்பின் யோவாஸ் யெகோவாவின் ஆலயத்தைப் புதுப்பிக்கத் தீர்மானித்தான். அவன் ஆசாரியர்களையும் லேவியர்களையும் ஒன்றாக அழைத்து அவர்களிடம், “யூதாவின் பட்டணங்களுக்குப் போய் உங்கள் இறைவனின் ஆலயத்தைத் திருத்துவதற்கு இஸ்ரயேலரிடமிருந்து வருடாவருடம் கொடுக்கப்படவேண்டிய பணத்தைச் சேகரியுங்கள். அதை இப்பொழுதே செய்யுங்கள்” என்றான். ஆனால் லேவியர்களோ உடனே செயல்படவில்லை. ஆகவே அரசன் பிரதான ஆசாரியன் யோய்தாவை அழைப்பித்து அவனிடம், “யெகோவாவின் அடியவன் மோசேயினாலும், இஸ்ரயேல் சபையாலும் சாட்சிக் கூடாரத்திற்கென நியமிக்கப்பட்ட வரியை யூதாவிடத்திலும் எருசலேமிடத்திலும் இருந்து வாங்கிவரும்படி, நீர் ஏன் லேவியர்களை விசாரிக்கவில்லை?” என்று கேட்டான். அந்த கொடியவளான அத்தாலியாளின் மகன்கள் இறைவனின் ஆலயத்தை உடைத்து, யெகோவாவினுடைய ஆலயத்திற்குள் இருந்த பரிசுத்த பொருட்களைக்கூட பாகாலுக்குப் கொடுத்திருந்தார்கள். எனவே அரசனின் கட்டளைப்படி பெரிய பெட்டியொன்றைச் செய்து யெகோவாவின் ஆலய வாசலில் வெளியே வைத்தார்கள். பாலைவனத்தில் இறைவனின் அடியவனாகிய மோசே இஸ்ரயேலரிடம் கேட்டுக்கொண்டபடி யெகோவாவுக்கென வரி கொண்டுவரப்பட வேண்டுமென்ற ஒரு அறிவித்தல் யூதாவிலும், எருசலேமிலும் பிரசித்தப்படுத்தப்பட்டது. எல்லா அதிகாரிகளும், எல்லா மக்களும் தங்கள் கொடைகளை மகிழ்ச்சியுடன் கொண்டுவந்து அந்தப் பெட்டி நிரம்பும்வரை அதற்குள் போட்டார்கள். அந்தப் பெட்டி லேவியர்களால் அரசனின் அதிகாரிகளிடம் உள்ளே கொண்டுவரப்படும் போதெல்லாம், அதிலே அதிக அளவான பணம் இருப்பதை அவர்கள் கண்டார்கள். அரச செயலாளரும் பிரதான ஆசாரியனின் அதிகாரியும் வந்து பெட்டியிலுள்ளவற்றை எடுத்துவிட்டு, அதைத் திரும்பவும் அதற்குரிய இடத்தில் கொண்டுபோய் வைப்பார்கள். இவ்வாறு அவர்கள் தொடர்ந்து செய்து பெருந்தொகைப் பணத்தைச் சேகரித்தார்கள். அரசனும், யோய்தாவும் அப்பணத்தை யெகோவாவின் ஆலயத்திற்கு வேண்டிய வேலைசெய்யும் மனிதர்களிடம் கொடுத்தார்கள். அவர்கள் யெகோவாவின் ஆலயத்தை புதுப்பித்துக் கட்டுவதற்கென சிற்பிகளையும், தச்சர்களையும் கூலிக்கு அமர்த்தினார்கள். அத்துடன் ஆலயத்தைத் திருத்துவதற்கான இரும்பு வேலை, வெண்கல வேலை பார்ப்போரையும்கூட கூலிக்கு அமர்த்தினார்கள். வேலைக்குப் பொறுப்பாய் இருந்த மனிதர் கடும் உழைப்பாளிகளாய் இருந்தார்கள். அவர்களின் மேற்பார்வையில் திருத்த வேலைகள் தொடர்ந்து நடைபெற்றன. அவர்கள் இறைவனின் ஆலயத்தை அதன் முந்திய வரைபடத்தின்படி திரும்பவும் கட்டி வலுவுள்ளதாய் அமைத்தார்கள். ஆலய வேலைகளை முடித்தபோது, உடனே அவர்கள் மிகுதியாயிருந்த பணத்தை அரசனிடமும் யோய்தாவிடமும் கொண்டுவந்தார்கள். அதைக்கொண்டு யெகோவாவின் ஆலயத்திற்கென பொருட்கள் செய்யப்பட்டன. யெகோவாவினுடைய ஆராதனைக்கும், தகன காணிக்கைக்கும் உரிய பொருட்களும், அத்துடன் கிண்ணங்களும், மற்றும், தங்கம், வெள்ளி ஆகியவற்றாலான பொருட்களும் செய்யப்பட்டன. யோய்தா வாழ்ந்த நாட்களெல்லாம் யெகோவாவினுடைய ஆலயத்தில் தொடர்ச்சியாக தகன காணிக்கைகள் செலுத்தப்பட்டன. இப்பொழுது யோய்தா வயதுசென்று முதியவனாகி, நூற்று முப்பதாவது வயதில் இறந்தான். அவன் தாவீதின் நகரத்தில் அரசர்களுடன் அடக்கம் செய்யப்பட்டான். ஏனெனில் அவன் இஸ்ரயேலில் இறைவனுக்கும் அவரது ஆலயத்திற்கும் நன்மையானதைச் செய்திருந்தான். யோய்தா இறந்தபின் யூதாவின் அதிகாரிகள் வந்து அரசனுக்கு மரியாதை செலுத்தினர். அரசன் அவர்களுக்குச் செவிகொடுத்தான். அவர்கள் தங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவின் ஆலயத்தைக் கைவிட்டு, அசேரா விக்கிரக தூண்களையும், விக்கிரகங்களையும் வணங்கினார்கள். அவர்கள் செய்த குற்றத்தினால் இறைவனின் கோபம் யூதாவின்மேலும், எருசலேமின்மேலும் வந்தது. யெகோவா மக்களைத் திரும்பவும் தன் பக்கம் கொண்டுவருவதற்கு இறைவாக்கினரை அவர்களிடம் அனுப்பினார். அவர்களும் மக்களுக்கு எதிராக எச்சரித்துக் கூறியும், மக்கள் அதைக் கேட்கவில்லை. அப்பொழுது ஆசாரியனான யோய்தாவின் மகன் சகரியாவின்மேல் இறைவனின் ஆவியானவர் வந்தார். அவன் மக்களுக்கு முன்பாக நின்று, “இறைவன் சொல்வது இதுவே: யெகோவாவின் கட்டளைகளுக்கு நீங்கள் ஏன் கீழ்ப்படியாமலிருக்கிறீர்கள்? நீங்கள் செழிப்படையமாட்டீர்கள். நீங்கள் யெகோவாவைக் கைவிட்டீர்கள். அதனால் அவரும் உங்களைக் கைவிட்டுவிட்டார்” என்று சொன்னான். ஆனால் அவர்கள் அவனுக்கெதிராக சதிசெய்து அரசனின் கட்டளைப்படி யெகோவாவின் ஆலய முற்றத்தில் அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள். அரசன் யோவாஸ் சகரியாவின் தகப்பன் யோய்தா தன்னில் காட்டிய தயவை நினைவில்கொள்ளாமல் அவனுடைய மகனைக் கொன்றான். சகரியா விழுந்து சாகும்போது, “யெகோவா இதைப் பார்த்து, உன்னிடத்தில் கணக்குக் கேட்பாராக” என்றான். மறுவருடத்தில் ஆராமின் இராணுவம் யோவாஸை எதிர்த்து அணிவகுத்து வந்தது. அவர்கள் யூதாவின்மேலும், எருசலேமின்மேலும் படையெடுத்து, மக்களின் தலைவர்கள் எல்லோரையும் கொன்றுபோட்டார்கள். அவர்கள் கொள்ளைப்பொருட்கள் எல்லாவற்றையும் தமஸ்குவில் இருந்த தங்கள் அரசனுக்கு அனுப்பினார்கள். சீரியாவின் இராணுவமோ ஒருசில மனிதருடனேயே வந்திருந்தது. ஆயினும் யெகோவா யூதாவின் பெரிய இராணுவப் படையை சீரியரின் கையில் கொடுத்தார். யூதா தங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவைக் கைவிட்டிருந்ததால் யோவாஸிற்கு நியாயத்தீர்ப்பு வந்தது. சீரியர் திரும்பிப் போகும்போது யோவாஸை கடுமையாகக் காயப்பட்டவனாய் விட்டுவிட்டுப் போனார்கள். யோவாஸ் ஆசாரியனான யோய்தாவின் மகனைக் கொலைசெய்தபடியால், யோவாஸின் அதிகாரிகள் அவனுக்கெதிராக சூழ்ச்சிசெய்து, அவனை அவனுடைய படுக்கையிலேயே கொன்றுபோட்டார்கள். எனவே அவன் இறந்து தாவீதின் பட்டணத்தில் அடக்கம் செய்யப்பட்டான். ஆனாலும், அரசர்களுடன் அரசர்களின் கல்லறையில் அடக்கம் செய்யப்படவில்லை. யோவாஸுக்கு எதிராக சதி செய்தவர்கள் யாரெனில், அம்மோனிய பெண்ணான சிமியாத்தின் மகன் சாபாத், மோவாபிய பெண்ணான சிம்ரீத்தின் மகன் யோசபாத் என்பவர்களே. யோவாஸின் மகன்களின் விபரமும், அவனைப் பற்றிய பல இறைவாக்குகளும், இறைவனின் ஆலயம் புதுப்பிக்கப்பட்ட குறிப்புகளுமான எல்லா நிகழ்வுகளும் அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. அவன் மகன் அமத்சியா அவனுடைய இடத்தில் அரசனானான்.
2 நாளாகமம் 24:1-27 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யோவாஸ் ராஜாவாகிறபோது ஏழு வயதாயிருந்து, நாற்பது வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்; பெயெர்செபா பட்டணத்தாளான அவன் தாயின் பெயர் சிபியாள். ஆசாரியனாகிய யோய்தாவின் நாட்களெல்லாம் யோவாஸ் யெகோவாவின் பார்வைக்கு செம்மையானதைச் செய்தான். அவனுக்கு யோய்தா இரண்டு பெண்களைத் திருமணம் செய்துகொடுத்தான்; அவர்களால் மகன்களையும் மகள்களையும் பெற்றான். அதற்குப்பின்பு யெகோவாவுடைய ஆலயத்தைப் புதுப்பிக்க யோவாஸ் விருப்பம்கொண்டான். அவன் ஆசாரியர்களையும் லேவியர்களையும் கூடிவரச்செய்து, அவர்களை நோக்கி: நீங்கள் யூதா பட்டணங்களுக்குப் புறப்பட்டுப்போய், உங்கள் தேவனுடைய ஆலயத்தை வருடந்தோரும் பழுதுபார்க்கிறதற்கு, இஸ்ரவேலெங்கும் பணம் சேகரியுங்கள்; இந்தக் காரியத்தைத் தாமதமில்லாமல் செய்யுங்கள் என்றான்; ஆனாலும் லேவியர்கள் தாமதம்செய்தார்கள். அப்பொழுது ராஜா, யோய்தா என்னும் தலைவனை வரவழைத்து: சாட்சியின் கூடாரத்திற்குக் கொடுக்க, யெகோவாவின் தாசனாகிய மோசே கட்டளையிட்ட வரியை யூதாவினிடத்திலும், எருசலேமியரிடத்திலும், இஸ்ரவேல் சபையாரிடத்திலும் வாங்கி வருகிறதற்கு, லேவியர்களை நீர் விசாரிக்காமல் போனதென்ன? அந்தப் பொல்லாத பெண்ணாகிய அத்தாலியாளுடைய மக்கள், தேவனுடைய ஆலயத்தை வலுக்கட்டாயமாகத் திறந்து, யெகோவாவுடைய ஆலயத்திலுள்ள பிரதிஷ்டை செய்யப்பட்டவைகளையெல்லாம் பாகால்களுக்காக செலவு செய்துவிட்டார்களே என்றான். அப்பொழுது ராஜாவின் சொற்படி ஒரு பெட்டியை உண்டாக்கி, அதைக் யெகோவாவுடைய ஆலய வாசலுக்கு வெளியே வைத்து, யெகோவாவின் தாசனாகிய மோசே வனாந்திரத்தில் இஸ்ரவேலுக்குக் கட்டளையிட்ட வரியைக் யெகோவாவுக்குக் கொண்டுவாருங்கள் என்று யூதாவிலும் எருசலேமிலும் அறிவிப்புக் கொடுத்தார்கள். அப்பொழுது எல்லாப் பிரபுக்களும் எல்லா மக்களும் சந்தோஷமாகக் கொண்டுவந்து பெட்டி நிறைய அதிலே போட்டார்கள். அதிக பணம் உண்டென்று கண்டு, லேவியர்கள் கையால் அந்தப் பெட்டி ராஜாவின் விசாரிப்புக்காரர்கள் அருகில் கொண்டுவரப்படும்போது, ராஜாவின் அதிகாரியும் பிரதான ஆசாரியனுடைய உதவியாளனும் வந்து, பெட்டியிலிருக்கிறதைக் கொட்டியெடுத்து, அதைத் திரும்ப அதின் இடத்திலே வைப்பார்கள்; இப்படி ஒவ்வொரு நாளும் செய்து மிகுந்த பணத்தைச் சேர்த்தார்கள். அதை ராஜாவும் யோய்தாவும் யெகோவாவுடைய ஆலயத்தின் வேலையைச் செய்யும் ஊழியக்காரர்கள் கையிலே கொடுத்தார்கள்; அதனால் அவர்கள் யெகோவாவுடைய ஆலயத்தைப் புதுப்பிக்கும்படி சிற்பிகளையும், தச்சரையும், யெகோவாவுடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கும்படி கொல்லர்களையும் கம்மாளர்களையும் கூலிக்கு அமர்த்திக்கொண்டார்கள். அப்படி வேலையை செய்கிறவர்கள் தங்கள் கைகளினாலே வேலையைச் செய்து, தேவனுடைய ஆலயத்தை அதின் முந்தின நிலைமைக்குக் கொண்டுவந்து அதைப் பலப்படுத்தினார்கள். அதை முடித்தபின்பு, மீதமிருந்த பணத்தை ராஜாவுக்கும் யோய்தாவுக்கும் முன்பாகக் கொண்டுவந்தார்கள்; அந்தப் பணத்தைக் கொண்டு யெகோவாவுடைய ஆலயத்தில் செய்யப்படும் பணிமுட்டுகளையும், ஆராதனை பலி முதலியவைகளுக்கு வேண்டிய பணிமுட்டுகளையும், கலசங்களையும், பொற்பாத்திரங்களையும், வெள்ளிப்பாத்திரங்களையும் செய்தான்; யோய்தாவின் நாட்களெல்லாம் அனுதினமும் யெகோவாவுடைய ஆலயத்திலே சர்வாங்க தகனபலிகளைச் செலுத்திவந்தார்கள். யோய்தா நீண்டஆயுள் உள்ளவனாக முதிர்வயதில் இறந்தான்; அவன் இறக்கும்போது நூற்றுமுப்பது வயதாயிருந்தான். அவன் தேவனுக்காகவும் அவருடைய ஆலயத்திற்காகவும் இஸ்ரவேலுக்கு நன்மை செய்ததால், அவனை தாவீதின் நகரத்தில் ராஜாக்களுக்கு அருகில் அடக்கம்செய்தார்கள். யோய்தா இறந்தபின்பு யூதாவின் பிரபுக்கள் வந்து, ராஜாவைப் பணிந்துகொண்டார்கள்; அப்பொழுது ராஜா அவர்கள் சொல்வதைக் கவனித்தான் அப்படியே அவர்கள் தங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவாவின் ஆலயத்தை விட்டுவிட்டு, தோப்பு விக்கிரகங்களையும் சிலைகளையும் வணங்கினார்கள்; அப்பொழுது அவர்கள் செய்த இந்தக் குற்றத்தினால் யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் கடுங்கோபம் மூண்டது. அவர்களைத் தம்மிடத்திற்குத் திரும்பச்செய்ய யெகோவா அவர்களிடத்திலே தீர்க்கதரிசிகளை அனுப்பினார்; அவர்கள் மக்களைக் கடுமையாகக் கடிந்து கொண்டார்கள்; ஆனாலும் மக்கள் அவர்களை அசட்டைசெய்தார்கள். அப்பொழுது தேவனுடைய ஆவி ஆசாரியனாகிய யோய்தாவின் மகனான சகரியாவின்மேல் இறங்கினதால், அவன் மக்களுக்கு எதிரே நின்று: நீங்கள் யெகோவாவுடைய கற்பனைகளை மீறுகிறது என்ன? இதனால் நீங்கள் செழிப்படையமாட்டீர்கள் என்று தேவன் சொல்லுகிறார்; நீங்கள் யெகோவாவை விட்டுவிட்டதால் அவர் உங்களைக் கைவிடுவார் என்றான். அதனால் அவர்கள் அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடுசெய்து, யெகோவாவுடைய ஆலயப்பிராகாரத்தில் ராஜாவினுடைய கட்டளையின்படி அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள். அப்படியே அவனுடைய தகப்பனாகிய யோய்தா, தனக்கு செய்த தயவை ராஜாவாகிய யோவாஸ் நினைக்காமல் அவனுடைய மகனைக் கொன்றுபோட்டான்; இவன் சாகும்போது: யெகோவா அதைப் பார்ப்பார், அதைக் கேட்பார் என்றான். அடுத்த வருடத்திலே சீரியாவின் படைகள் அவனுக்கு விரோதமாக யூதாவிலும் எருசலேமிலும் வந்து, மக்களின் பிரபுக்களையெல்லாம் அழித்து, கொள்ளையிட்ட அவர்கள் உடைமைகளையெல்லாம் தமஸ்குவின் ராஜாவுக்கு அனுப்பினார்கள். சீரியாவின் படை சிறுகூட்டமாக வந்திருந்தாலும், அவர்கள் தங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவாவை விட்டுவிட்டதால், யெகோவா மகா பெரிய படையை அவர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்கள் யோவாசுக்கு தண்டனை செய்தார்கள். அவர்கள் அவனை மகா வேதனைக்குள்ளானவனாக விட்டுப்போனார்கள்; அவர்கள் புறப்பட்டுப்போனபின்பு, அவனுடைய ஊழியக்காரர்கள் ஆசாரியனாகிய யோய்தாவுடைய மகன்களின் இரத்தப்பழியினிமித்தம், அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடுசெய்து, அவன் படுக்கையிலே அவனைக் கொன்றுபோட்டார்கள்; செத்துப்போன அவனை தாவீதின் நகரத்தில் அடக்கம்செய்தார்கள்; ஆனாலும் ராஜாக்களின் கல்லறைகளில் அவனை வைக்கவில்லை. அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடு செய்தவர்கள், அம்மோனிய பெண்ணான சிமியாத்தின் மகனாகிய சாபாத்தும், மோவாபியப் பெண்ணான சிமிரீத்தின் மகனாகிய யோசபாத்துமே. அவன் மகன்களைக்குறித்தும், அவன்மேல் சுமந்த பெரிய பாரத்தைக்குறித்தும், தேவனுடைய ஆலயத்தை அவன் பலப்படுத்தினதைக்குறித்தும், ராஜாக்களின் புத்தகமான சரித்திரத்தில் எழுதப்பட்டிருக்கிறது; அவன் மகனாகிய அமத்சியா அவனுடைய இடத்திலே ராஜாவானான்.
2 நாளாகமம் 24:1-27 பரிசுத்த பைபிள் (TAERV)
யோவாஸ் ராஜாவாகியபோது அவனுக்கு 7 வயது. அவன் எருசலேமில் 40 ஆண்டுகள் ஆண்டான். அவனது தாயின் பெயர் சிபியாள். அவள் பெயர்செபா நகரத்தவள். யோய்தா ஆசாரியன் உயிரோடிருந்தவரை, யோவாஸ் கர்த்தருடைய முன்னிலையில் சரியானதைச் செய்துவந்தான். யோய்தா, யோவாசுக்கு இரண்டு மனைவியரைத் தேர்ந்தெடுத்தான். அவனுக்கு குமாரர்களும் குமாரத்திகளும் இருந்தனர். பின்னர், யோவாஸ் கர்த்தருடைய ஆலயத்தை மீண்டும் கட்ட முடிவுசெய்தான். யோவாஸ் ஆசாரியர்களையும், லேவியர்களையும் ஒன்றாகத் திரட்டினான். அவன் அவர்களிடம், “யூதாவின் நகரங்களுக்குச் சென்று அனைத்து இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்தும் பணத்தைச் சேகரியுங்கள். ஆண்டுதோறும் தேவனுடைய ஆலயத்தைப் பழுது பார்த்து மேலும் கட்ட வேண்டும். வேகமாகப் போய் இதனைச் செய்யுங்கள்” என்றான். ஆனால் லேவியர்கள் அவசரப்படவில்லை. எனவே, ராஜா தலைமைஆசாரியனான யோய்தாவை அழைத்தான். அவனிடம் ராஜா, “யோய்தா, யூதாவிலும் எருசலேமிலும் வரியை வசூலிக்க நீங்கள் ஏன் லேவியர்களை அனுப்பவில்லை? கர்த்தருடைய ஊழியக்காரனான மோசேயும் இஸ்ரவேல் ஜனங்களும் அந்த வரிப்பணத்தை பரிசுத்தக் கூடாரத்திற்குப் பயன்படுத்தினார்களே” என்றான். முற்காலத்தில் அத்தாலியாளின் குமாரர்கள் கர்த்தருடைய ஆலயத்திற்குள் உடைத்துக் கொண்டுசென்றார்கள். அவர்கள் இங்குள்ள பரிசுத்தமானப் பொருட்களை எல்லாம் கொண்டுபோய் பாகால் ஆலயத்தில் பயன்படுத்தினார்கள். அத்தாலியாள் மிகவும் தீயப் பெண். ஒரு பெட்டியைச் செய்து வாசலுக்கு வெளியில் கர்த்தருடைய ஆலயத்தில் வைக்குமாறு யோவாஸ் ராஜா கட்டளையிட்டான். பிறகு யூதாவிலும், எருசலேமிலும் லேவியர்கள் ஒரு அறிவிப்பு செய்தனர். கர்த்தருக்கு வரிப்பணத்தைக் கொண்டுவரும்படி அவர்கள் ஜனங்களை வேண்டிக் கேட்டுக்கொண்டனர். இஸ்ரவேலர்கள் பாலைவனத்தில் இருந்தபோது, தேவனின் ஊழியனான மோசே எங்களிடம் கொடுக்கும்படி கேட்டுக்கொண்ட பணத்தின் அளவு தான் இவ்வரிப் பணம் ஆகும். அனைத்து தலைவர்களும் ஜனங்களும் மகிழ்ந்தனர். அவர்கள் தம் பணத்தைக் கொண்டுவந்து பெட்டியில் போட்டனர். பெட்டி நிரம்பும்வரை அவர்கள் போட்டுக்கொண்டிருந்தனர். பின்னர் லேவியர்கள் அந்தப் பெட்டியை ராஜாவின் அதிகாரிகளிடம் எடுத்துச் சென்றார்கள். அப்பெட்டி முழுவதும் பணம் இருப்பதை அவர்கள் கண்டனர். ராஜாவின் செயலாளரும் தலைமை ஆசாரியனின் அதிகாரிகளும் வந்து பணத்தைப் பெட்டிக்குள்ளிருந்து வெளியே எடுத்தனர். பிறகு அவர்கள் அந்தப் பெட்டியை அதன் இடத்தில் வைத்தனர். இதை அடிக்கடி அவர்கள் செய்து நிறையப் பணம் சேர்த்தார்கள். பிறகு யோவாஸ் ராஜாவும், யோய்தா ஆசாரியனும் அப்பணத்தைக் கர்த்தருடைய ஆலயத்தில் வேலைச் செய்பவர்களுக்குக் கொடுத்தனர். கர்த்தருடைய ஆலயத்தைத் திரும்பக் கட்டுவதற்காக மரம் குடைவதில் திறமை பெற்றவர்களையும், தச்சர்களையும் வேலைக்கு அமர்த்தினார்கள். மேலும் அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தைத் திரும்பக் கட்டுவதற்காக இரும்பிலும் வெண்கலத்திலும் வேலைச் செய்வதில் திறமைமிக்கவர்களையும் வேலைக்கு அமர்த்தினார்கள். வேலையை மேற்பார்வை செய்பவர்கள் உண்மையானவர்கள். கர்த்தருடைய ஆலயத்தைப் புதுப்பிக்கும் வேலை வெற்றியடைந்தது. அவர்கள் தேவனுடைய ஆலயத்தை முன்பு இருந்தது போலவே அழகாகவும், பலமாகவும் கட்டினார்கள். எல்லா வேலைகளும் முடிந்த பிறகு மீதியான பணத்தை ராஜாவிடமும், யோய்தா ஆசாரியனிடமும் கொண்டு வந்தனர். கர்த்தருடைய ஆலயத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக அவர்கள் அப்பணத்தைச் செலவுசெய்தனர். அப்பொருட்கள் ஆலயத்தில் சேவைச்செய்யவும் சர்வாங்கத் தகனபலிகள் போன்றவற்றை செய்யவும் பயன்பட்டன. அவர்கள் கலசங்களையும், வேறு பொருட்களையும் பொன்னாலும், வெள்ளியாலும் செய்தனர். யோய்தா உயிரோடு இருக்கும்வரை ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்தில் தினந்தோறும் தகனபலிகளைக் கொடுத்துவந்தனர். யோய்தா முதியவனானான். நீண்ட வாழ்க்கை வாழ்ந்து பின் மரித்துப்போனான். அவன் மரிக்கும்போது அவனுக்கு 130 வயது. யோய்தாவை தாவீதின் நகரத்திலே ராஜாக்களை அடக்கம் செய்யக் கூடிய இடத்தில் ஜனங்கள் அடக்கம் செய்தனர். இஸ்ரவேலில் தேவனுக்கும் தேலாயத்திற்கும் ஏராளமான அளவில் நற்சேவை செய்திருக்கிறான் என்பதாலேயே ஜனங்கள் அந்த இடத்தில் அவனை அடக்கம் செய்தனர். யோய்தா மரித்தப் பிறகு, யூதாவின் தலைவர்கள் ராஜா யோவாசிடம் வந்து பணிந்து வணங்கினார்கள். அவர்கள் கூறுவதை ராஜா கவனித்தான். ராஜாவும் அந்த தலைவர்களும் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தை விட்டு விலகினார்கள். இவர்களது முற்பிதாக்கள் தேவனாகிய கர்த்தரை பின்பற்றி வந்தனர். இவர்களோ விக்கிரகங்களையும், சிலைகளையும் வழிபட்டனர். ராஜாவும் தலைவர்களும் தவறு செய்ததால் தேவன் யூதா மற்றும் எருசலேம் ஜனங்கள் மீதுக் கோபங்கொண்டார். தேவன் தீர்க்கதரிசிகளை அனுப்பி ஜனங்களைத் தன்னிடம் திரும்ப அழைக்க முயன்றார். தீர்க்கதரிசிகள் ஜனங்களை எச்சரித்தனர். ஜனங்கள் கேட்க மறுத்து விட்டனர். தேவனுடைய ஆவி சகரியா மீது வந்தது. சகரியாவின் தந்தை ஆசாரியனாகிய யோய்தா ஆவான். சகரியா ஜனங்களின் முன்பு நின்று, “தேவன் சொல்வது இதுதான்: ‘நீங்கள் ஏன் கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுக்கின்றீர்கள்? நீங்கள் வெற்றியடையமாட்டீர்கள். நீங்கள் கர்த்தரைவிட்டு விலகிவிட்டீர்கள். எனவே கர்த்தரும் உங்களை விட்டு விலகிவிட்டார்!’” என்றான். ஆனால் ஜனங்கள் சகரியாவிற்கு எதிராகத் திட்டமிட்டனர். சகரியாவைக் கொல்லும்படி ராஜா கட்டளையிட்டான். எனவே அவன் மரிக்கும்வரை ஜனங்கள் அவன் மீது கற்களை எறிந்தார்கள். ஜனங்கள் இதனை ஆலய பிரகாரத்திலேயே செய்தனர். யோய்தா தன் மீது காட்டிய கருணையை யோவாஸ் ராஜா நினைவுக்கூரவில்லை. யோய்தா சகரியாவின் தந்தை. எனினும் யோவாஸ், யோய்தாவின் குமாரனாகிய சகரியவைக் கொன்றான். மரிப்பதற்கு முன்பு சகரியா, “நீ செய்வதை கர்த்தர் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் உன்னைத் தண்டிப்பார்!” என்றான். ஆண்டு முடிவில், யோவாசுக்கு எதிராக ஆராமியப்படை வந்தது. அவர்கள் யூதாவையும் எருசலேமையும் தாக்கினார்கள். மேலும் அவர்கள் அந்த ஜனங்களின் தலைவர்கள் அனைவரையும் கொன்றார்கள். தமஸ்கு ராஜாவுக்கு விலையுயர்ந்தப் பொருட்கள் அனைத்தையும் அனுப்பிவைத்தனர். மிகவும் குறைந்த எண்ணிகையுள்ள வீரர்களுடைய குழுவுடனேயே ஆராமியப்படை வந்தது. ஆயினும் அது பெரும் அளவுடைய யூதாவின் படையை வெல்லுமாறு கர்த்தர் அருளினார். யூதாவின் ஜனங்கள் தம் முற்பிதாக்கள் வழிபட்ட தேவனாகிய கர்த்தரை விட்டு விலகியதால், கர்த்தர் இவ்வாறு செய்தார். எனவே யோவாஸ் தண்டிக்கப்பட்டான். ஆராமியர்கள் யோவாசைவிட்டுப் போகும்போது அவன் பெருத்த காயம் அடைந்திருந்தான். யோவாசின் சொந்த வேலைக்காரர்களும் அவனுக்கெதிராகத் திட்டமிட்டனர். அவன் யோய்தா ஆசாரியனின் குமாரனான சகரியாவைக் கொன்றான் என்பதனால் அவர்கள் இதைச் செய்தார்கள். வேலைக்காரர்கள் யோவாசை அவனுடைய படுக்கையிலேயே கொன்று போட்டனர். யோவாஸ் மரித்ததும், அவனை தாவீதின் நகரத்திலேயே அடக்கம் செய்தனர். ஆனால் ராஜாக்களை அடக்கம் செய்யும் இடத்தில் அவனை அடக்கம் செய்யவில்லை. யோவாசுக்கு எதிராகத் திட்டமிட்ட வேலைக்காரர்கள் சாபாத்தும், யோசபாத்தும் ஆவார்கள். சாபாத்தின் தாயின் பெயர் சீமாத் ஆகும். இவள் அம்மோனியப் பெண் ஆவாள். யோசபாத்தின் தாயின் பெயர் சிம்ரீத் ஆகும். இவள் மோவாபிய பெண் ஆவாள். யோவாசின் குமாரர்களைப்பற்றியும், அவனுக்கு எதிரான தீர்க்கதரிசனங்களைப் பற்றியும், தேவனுடைய ஆலயத்தை அவன் புதுப்பித்ததைப்பற்றியும் ராஜாக்களின் சரித்திரம் என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. யோவாசுக்குப் பிறகு அமத்சியா புதிய ராஜாவானான். அமத்சியா யோவாசின் குமாரன்.
2 நாளாகமம் 24:1-27 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
யோவாஸ் ராஜாவாகிறபோது ஏழு வயதாயிருந்து, நாற்பது வருஷம் எருசலேமில் அரசாண்டான்; பெயெர்செபா பட்டணத்தாளான அவன் தாயின் பேர் சிபியாள். ஆசாரியனாகிய யோய்தாவின் நாளெல்லாம் யோவாஸ் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான். அவனுக்கு யோய்தா இரண்டு ஸ்திரீகளை விவாகஞ்செய்து கொடுத்தான்; அவர்களால் குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். அதற்குப்பின்பு கர்த்தருடைய ஆலயத்தைப் புதுப்பிக்க யோவாஸ் விருப்பங்கொண்டான். அவன் ஆசாரியரையும் லேவியரையும் கூடிவரச்செய்து, அவர்களை நோக்கி: நீங்கள் யூதா பட்டணங்களுக்குப் புறப்பட்டுப்போய், உங்கள் தேவனுடைய ஆலயத்தை வருஷாவருஷம் பழுதுபார்க்கிறதற்கு, இஸ்ரவேலெங்கும் பணம் சேகரியுங்கள்; இந்தக் காரியத்தைத் தாமதமில்லாமல் செய்யுங்கள் என்றான்; ஆனாலும் லேவியர் தாமதம்பண்ணினார்கள். அப்பொழுது ராஜா யோய்தா என்னும் தலைவனை அழைப்பித்து: சாட்சியின் வாசஸ்தலத்துக்குக் கொடுக்க, கர்த்தரின் தாசனாகிய மோசே கட்டளையிட்ட வரியை யூதாவினிடத்திலும், எருசலேமியரிடத்திலும், இஸ்ரவேல் சபையாரிடத்திலும் வாங்கி வருகிறதற்கு, லேவியரை நீர் விசாரியாமற்போனதென்ன? அந்தப் பொல்லாத ஸ்திரீயாகிய அத்தாலியாளுடைய மக்கள் தேவனுடைய ஆலயத்தைப் பலவந்தமாய்த் திறந்து, கர்த்தருடைய ஆலயத்திலுள்ள பிரதிஷ்டை பண்ணப்பட்டவைகளையெல்லாம் பாகால்களுக்காகச் செலவு பண்ணிப்போட்டார்களே என்றான். அப்பொழுது ராஜாவின் சொற்படி ஒரு பெட்டியை உண்டாக்கி, அதைக் கர்த்தருடைய ஆலயத்து வாசலுக்குப் புறம்பே வைத்து, கர்த்தரின் தாசனாகிய மோசே வனாந்தரத்தில் இஸ்ரவேலுக்குக் கட்டளையிட்ட வரியைக் கர்த்தருக்குக் கொண்டுவாருங்கள் என்று யூதாவிலும் எருசலேமிலும் பறைசாற்றுவித்தார்கள். அப்பொழுது எல்லாப் பிரபுக்களும் எல்லா ஜனங்களும் சந்தோஷமாய்க் கொண்டு வந்து பெட்டி நிறைய அதிலே போட்டார்கள். வெகுபணம் உண்டென்று கண்டு, லேவியர் கையால் அந்தப் பெட்டி ராஜாவின் விசாரிப்புக்காரர் அண்டையிலே கொண்டுவரப்படும்போது, ராஜாவின் சம்பிரதியும் பிரதான ஆசாரியனுடைய விசாரிப்புக்காரனும் வந்து, பெட்டியிலிருக்கிறதைக் கொட்டியெடுத்து, அதைத் திரும்ப அதின் ஸ்தானத்திலே வைப்பார்கள்; இப்படி நாளுக்கு நாள் செய்து மிகுந்த பணத்தைச் சேர்த்தார்கள். அதை ராஜாவும் யோய்தாவும் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கும் ஊழியக்காரர் கையிலே கொடுத்தார்கள்; அதினால் அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தைப் புதுப்பிக்கும்படி கல்தச்சரையும், தச்சரையும், கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கும்படி கொற்றரையும் கன்னாரையும் கூலிக்கு அமர்த்திக்கொண்டார்கள். அப்படி வேலையை விசாரிக்கிறவர்கள் தங்கள் கையினாலே வேலையை நடந்தேறப்பண்ணி, தேவனுடைய ஆலயத்தை அதின் முந்தின சீருக்குக் கொண்டுவந்து அதைப் பலப்படுத்தினார்கள். அதை முடித்துத் தீர்ந்தபின்பு, மீந்த பணத்தை ராஜாவுக்கும் யோய்தாவுக்கும் முன்பாகக் கொண்டுவந்தார்கள்; அதினாலே கர்த்தருடைய ஆலயத்தில் செய்யப்படும் பணிமுட்டுகளையும், ஆராதனை பலி முதலியவைகளுக்கு வேண்டிய பணிமுட்டுகளையும், கலசங்களையும், பொற்பாத்திரங்களையும், வெள்ளிப்பாத்திரங்களையும் பண்ணுவித்தான்; யோய்தாவின் நாளெல்லாம் நித்தம் கர்த்தருடைய ஆலயத்திலே சர்வாங்க தகனபலிகளைச் செலுத்திவந்தார்கள். யோய்தா தீர்க்காயுசுள்ளவனாய் முதிர்வயதில் மரித்தான்; அவன் மரணமடைகிறபோது நூற்றுமுப்பது வயதாயிருந்தான். அவன் தேவனுக்காகவும் அவருடைய ஆலயத்திற்காகவும் இஸ்ரவேலுக்கு நன்மை செய்தபடியினால், அவனைத் தாவீதின் நகரத்தில் ராஜாக்களண்டையிலே அடக்கம்பண்ணினார்கள். யோய்தா மரணமடைந்தபின்பு யூதாவின் பிரபுக்கள் வந்து, ராஜாவைப் பணிந்துகொண்டார்கள்; அப்பொழுது ராஜா அவர்களுக்குச் செவிகொடுத்தான். அப்படியே அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தை விட்டுவிட்டு, தோப்பு விக்கிரகங்களையும் சிலைகளையும் சேவித்தார்கள்; அப்பொழுது அவர்கள் செய்த இந்தக் குற்றத்தினிமித்தம் யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் கடுங்கோபம் மூண்டது. அவர்களைத் தம்மிடத்திற்குத் திரும்பப்பண்ணக் கர்த்தர் அவர்களிடத்திலே தீர்க்கதரிசிகளை அனுப்பினார்; அவர்கள் ஜனங்களைத் திடச்சாட்சியாகக் கடிந்து கொண்டார்கள்; ஆனாலும் அவர்கள் செவிகொடுக்கவில்லை. அப்பொழுது தேவனுடைய ஆவி ஆசாரியனாகிய யோய்தாவின் குமாரனான சகரியாவின்மேல் இறங்கினதினால், அவன் ஜனத்திற்கு எதிரே நின்று: நீங்கள் கர்த்தருடைய கற்பனைகளை மீறுகிறது என்ன? இதினால் நீங்கள் சித்திபெறமாட்டீர்கள் என்று தேவன் சொல்லுகிறார்; நீங்கள் கர்த்தரை விட்டுவிட்டதினால் அவர் உங்களைக் கைவிடுவார் என்றான். அதினால் அவர்கள் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, கர்த்தருடைய ஆலயப்பிராகாரத்தில் ராஜாவினுடைய கற்பனையின்படி அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள். அப்படியே அவனுடைய தகப்பனாகிய யோய்தா தனக்குச் செய்த தயையை ராஜாவாகிய யோவாஸ் நினையாமல் அவனுடைய குமாரனைக் கொன்று போட்டான்; இவன் சாகும்போது: கர்த்தர் அதைப் பார்ப்பார், அதைக் கேட்பார் என்றான். மறுவருஷத்திலே சீரியாவின் சேனைகள் அவனுக்கு விரோதமாக யூதாவிலும் எருசலேமிலும் வந்து, ஜனத்திலிருக்கிற பிரபுக்களையெல்லாம் அழித்து, கொள்ளையிட்ட அவர்கள் உடைமைகளையெல்லாம் தமஸ்குவின் ராஜாவுக்கு அனுப்பினார்கள். சீரியாவின் சேனை சிறுகூட்டமாய் வந்திருந்தாலும், அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டுவிட்டபடியினால், கர்த்தர் மகா பெரிய சேனையை அவர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்கள் யோவாசுக்கு தண்டனை செய்தார்கள். அவர்கள் அவனை மகா வேதனைக்குள்ளானவனாக விட்டுப்போனார்கள்; அவர்கள் புறப்பட்டுப்போனபின்பு, அவனுடைய ஊழியக்காரர் ஆசாரியனாகிய யோய்தாவுடைய குமாரரின் இரத்தப்பழியினிமித்தம், அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, அவன் படுக்கையிலே அவனைக் கொன்றுபோட்டார்கள்; செத்துப்போன அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; ஆனாலும் ராஜாக்களின் கல்லறைகளில் அவனை வைக்கவில்லை. அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடுபண்ணினவர்கள், அம்மோனிய ஸ்திரீயான சீமாத்தின் குமாரனாகிய சாபாத்தும், மோவாப் ஸ்திரீயான சிம்ரீத்தின் குமாரனாகிய யோசபாத்துமே. அவன் குமாரரைப்பற்றியும், அவன்மேல் சுமந்த பெரிய பாரத்தைப்பற்றியும், தேவனுடைய ஆலயத்தை அவன் பலப்படுத்தினதைப்பற்றியும் ராஜாக்களின் புஸ்தகமான சரித்திரத்தில் எழுதியிருக்கிறது; அவன் குமாரனாகிய அமத்சியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.