2 நாளாகமம் 21:16-20

2 நாளாகமம் 21:16-20 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்படியே கர்த்தர் பெலிஸ்தரின் ஆவியையும், எத்தியோப்பியாவுக்கடுத்த தேசத்தாரான அரபியரின் ஆவியையும் யோராமுக்கு விரோதமாக எழுப்பினார். அவர்கள் யூதாவில் வந்து, பலாத்காரமாய்ப் புகுந்து, ராஜாவின் அரமனையில் அகப்பட்ட எல்லாப் பொருள்களையும், அவன் பிள்ளைகளையும், அவன் மனைவிகளையும் பிடித்துக்கொண்டுபோனார்கள்; யோவாகாஸ் என்னும் அவன் குமாரரில் இளையவனை அல்லாமல் ஒரு குமாரனும் அவனுக்கு மீதியாக வைக்கப்படவில்லை. இவைகள் எல்லாவற்றிற்கும் பிற்பாடு கர்த்தர் அவன் குடல்களில் உண்டான தீராத நோயினால் அவனை வாதித்தார். அப்படி நாளுக்குநாள் இருந்து, இரண்டு வருஷம் முடிகிற காலத்தில் அவனுக்கு உண்டான நோயினால் அவன் குடல்கள் சரிந்து கொடிய வியாதியினால் செத்துப்போனான்; அவனுடைய பிதாக்களுக்காகக் கந்தவர்க்கங்களைக் கொளுத்தினதுபோல், அவனுடைய ஜனங்கள் அவனுக்காகக் கொளுத்தவில்லை. அவன் ராஜாவாகிறபோது முப்பத்திரண்டு வயதாயிருந்து, எட்டு வருஷம் எருசலேமில் அரசாண்டு, விரும்புவாரில்லாமல் இறந்துபோனான்; அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; ஆனாலும் ராஜாக்களின் கல்லறைகளில் அவனை வைக்கவில்லை.

2 நாளாகமம் 21:16-20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவா யெகோராமுக்கு எதிராக பெலிஸ்தியரின் பகைமையையும், கூஷியரின் அருகில் வாழ்ந்த அரபியரின் பகைமையையும் தூண்டிவிட்டார். அவர்கள் யூதாவைத் தாக்கி அதன்மேல் படையெடுத்து, அரசனின் அரண்மனையில் காணப்பட்ட எல்லாப் பொருட்களையும் கொண்டுபோனார்கள். அவற்றுடன் அவனுடைய மகன்களையும், மனைவியையும் பிடித்துக்கொண்டு போனார்கள். இளையமகன் அகசியாவைத்தவிர வேறு ஒரு மகனும் அவனுக்குத் தப்பவில்லை. இவையெல்லாவற்றிற்கும் பின்பு யெகோவா யெகோராமை தீராத குடல் வியாதியினால் துன்புறுத்தினார். இந்நிகழ்ச்சியின் காலத்தில் இரண்டாம் வருடக் கடைசியில் நோயினால் அவனுடைய குடல்கள் வெளியே வந்தன, அவன் கொடிய வேதனையில் இறந்துபோனான். அவனுடைய மக்கள் அவனுடைய முற்பிதாக்களுக்குச் செய்ததுபோல அவனுக்கு மரியாதை செலுத்துவதற்காக நெருப்பு வளர்க்கவில்லை. யெகோராம் அரசனாகும்போது முப்பத்திரண்டு வயதாயிருந்தான். அவன் எருசலேமில் எட்டு வருடங்கள் அரசாண்டான். அவன் இறந்து தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான். ஆயினும் அரசர்களின் கல்லறைகளில் அவனை வைக்கவில்லை. ஒருவனும் அவனுக்காகத் துக்கங்கொண்டாடவும் இல்லை.

2 நாளாகமம் 21:16-20 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்படியே யெகோவா பெலிஸ்தரின் ஆவியையும், எத்தியோப்பியாவுக்கடுத்த தேசத்தாரான அரபியரின் ஆவியையும் யோராமுக்கு விரோதமாக எழுப்பினார். அவர்கள் யூதாவில் வந்து, வலுக்கட்டாயமாகப் புகுந்து, ராஜாவின் அரண்மனையில் கிடைத்த அனைத்துப் பொருட்களையும், அவனுடைய பிள்ளைகளையும், மனைவிகளையும் பிடித்துக்கொண்டுபோனார்கள்; யோவாகாஸ் என்னும் அவனுடைய இளைய மகனைத் தவிர வேறொரு மகனையும் அவனுக்கு மீதியாக விடவில்லை. இவைகள் எல்லாவற்றிற்கும் பிறகு யெகோவா அவன் குடல்களில் உண்டான தீராத நோயினால் அவனை வாதித்தார். அப்படி நாளுக்குநாள் இருந்து, இரண்டு வருடங்கள் முடிகிற காலத்தில் அவனுக்கு இருந்த கொடிய நோயினால் அவன் குடல்கள் சரிந்து இறந்துபோனான்; அவனுடைய முற்பிதாக்களுக்காகக் கந்தவர்க்கங்களைக் கொளுத்தினதுபோல், அவனுடைய மக்கள் அவனுக்காகக் கொளுத்தவில்லை. அவன் ராஜாவாகிறபோது முப்பத்திரண்டு வயதாயிருந்து, எட்டு வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்து, ஒருவராலும் விரும்பப்படாமல் இறந்துபோனான்; அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்செய்தார்கள்; ஆனாலும் ராஜாக்களின் கல்லறைகளில் அவனை வைக்கவில்லை.

2 நாளாகமம் 21:16-20 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தர் பெலிஸ்திய ஜனங்களையும், எத்தியோப்பியர்களுக்கு அருகில் வசித்த ஆராப் ஜனங்களையும் யோராமின் மீது கோபங்கொள்ளுமாறு விளைவித்தார். அவர்கள் யூதா நாட்டைத் தாக்கினார்கள். ராஜாவின் வீட்டிற்குச் சொந்தமான அனைத்துச் செல்வங்களையும் அவர்கள் எடுத்துச் சென்றார்கள். யோராமின் மனைவிகளையும் பிள்ளைகளையும் கைப்பற்றினர். யோராமின் இளைய குமாரன் மட்டும் விடப்பட்டான். அவனது பெயர் யோவாகாஸ். இவையனைத்தும் நிகழ்ந்த பிறகு கர்த்தர் யோராமிற்குக் குடல்நோய் வரும்படி செய்தார். அது குணப்படுத்த முடியாத அளவிற்கு இருந்தது. பிறகு இரண்டாண்டுகள் கழிந்து அவனது நோயின் காரணமாக குடல் வெளியில் வந்தது. அவன் மிகுந்த வலியால் மரித்துப்போனான். இவனது தந்தைக்கு வாசனை பொருட்களை எரித்ததுபோல் இவனுக்கு ஜனங்கள் எரிக்கவில்லை. யோராம் ராஜாவாகியபோது 32 வயதுள்ளவனாயிருந்து 8 வருஷம் எருசலேமில் அரசாண்டு மரித்துப் போனான். அவன் மரித்ததும் அவனுக்காக எவரும் துக்கப்படவில்லை. ஜனங்கள் யோராமை தாவீதின் நகரத்திலே அடக்கம் செய்தனர். ஆனால் ராஜாக்களுக்குரிய கல்லறையில் அடக்கம் செய்யவில்லை.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்