2 நாளாகமம் 18:1-34
2 நாளாகமம் 18:1-34 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யோசபாத் பெரும் செல்வமும் கனமும் உள்ளவனாய் இருந்தான். அவன் ஆகாபுடன் திருமணத்தின்மூலம் உறவுமுறை கொண்டிருந்தான். சில வருடங்களுக்குப் பின்பு யோசபாத் சமாரியாவுக்கு ஆகாபினிடத்திற்கு போனான்; ஆகாப் அவனுக்கும் அவனுடன் வந்த மக்களுக்குமாக ஆடுமாடுகளை வெட்டினான். ஆகாப் ராமோத் கீலேயாத்தைத் தாக்குவதற்கு யோசபாத்தைத் தூண்டினான். இஸ்ரயேலின் அரசன் ஆகாப், யூதாவின் அரசன் யோசபாத்திடம், “நீ கீலேயாத்திலுள்ள ராமோத்துக்கு எதிராகப் போக என்னுடன் வருவாயா?” எனக் கேட்டான். அதற்கு யோசபாத், “உம்மைப் போலவே நானும் ஆயத்தமாயிருக்கிறேன். என்னுடைய மக்கள் உம்முடைய மக்களைப் போலவும் இருக்கிறோம். நாங்கள் உன்னுடன் யுத்தத்தில் இணைவோம்” என்றான். மேலும் யோசபாத் இஸ்ரயேல் அரசனிடம், “முதலில் யெகோவாவின் ஆலோசனையைத் தேடுங்கள்” என்று சொன்னான். எனவே இஸ்ரயேலின் அரசன் இறைவாக்கினர்களான நானூறு மனிதரை ஒன்றுதிரட்டி அவர்களிடம், “நாம் கீலேயாத்திலுள்ள ராமோத்திற்கு எதிராக யுத்தத்திற்குப் போகலாமா? அல்லது போகக்கூடாதா?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “நீர் போகலாம், இறைவன் அதை அரசனாகிய உமது கையில் கொடுப்பார்” என பதிலளித்தார்கள். ஆனால் யோசபாத், “நாம் விசாரிப்பதற்கு யெகோவாவின் இறைவாக்கினன் யாராவது இங்கே இல்லையா?” என்று கேட்டான். அதற்கு இஸ்ரயேலின் அரசன் ஆகாப் யோசபாத்திடம், “யெகோவாவிடம் விசாரிக்கும்படி இன்னும் ஒருவன் இருக்கிறான். ஆனால் நான் அவனை வெறுக்கிறேன். ஏனெனில் அவன் எப்போதும் என்னைப்பற்றி நன்மையாக அல்ல தீமையாகவே இறைவாக்கு சொல்லுவான். இம்லாவின் மகன் மிகாயாவே அவன்” என்றான். அப்பொழுது யோசபாத், “அரசனாகிய நீர் அவ்விதமாகக் கூறக்கூடாது” என்றான். எனவே இஸ்ரயேலின் அரசன் ஆகாப் தனது அதிகாரிகளில் ஒருவனை அழைத்து, “இம்லாவின் மகன் மிகாயாவை உடனடியாகக் கூட்டிக்கொண்டு வாருங்கள்” என்றான். இஸ்ரயேலின் அரசன் ஆகாபும், யூதாவின் அரசன் யோசபாத்தும் அரச உடைகளை அணிந்தவர்களாய் சமாரியாவின் வாசலில், சூடடிக்கும் களத்திலிருந்த அரியணையில் இருந்தார்கள். அப்பொழுது அவர்கள்முன் எல்லா இறைவாக்கினரும் இறைவாக்கு உரைத்துக்கொண்டிருந்தனர். அப்பொழுது கெனானாவின் மகன் சிதேக்கியா இரும்பினால் கொம்புகளைச் செய்து அவர்களைப் பார்த்து, “யெகோவா சொல்வது இதுவே: இந்த இரும்புக் கொம்புகளால் சீரியர் முழுவதுமாக அழியும்வரைக்கும் அவர்களைக் குத்திக் கொல்வீர்கள்” என்றான். மற்ற எல்லா இறைவாக்கினர்களும் அதையே வாக்காக உரைத்து, “கீலேயாத்திலுள்ள ராமோத்தை தாக்கி வெற்றிகொள்ளுங்கள். ஏனெனில் யெகோவா அதை அரசராகிய உமது கையில் தருவார்” என்றார்கள். மிகாயாவை அழைத்துவரப்போன தூதுவன் அவனிடம், “எல்லா இறைவாக்கினர்களும் ஒரேவிதமாகவே வாக்கு உரைத்து அரசனுக்கு வெற்றியையே அறிவிக்கிறார்கள். நீயும் அப்படியே பேசி அரசனுக்குச் சாதகமானதையே சொல்” என்றான். ஆனால் மிகாயா அவனிடம், “யெகோவா இருப்பது நிச்சயமெனில் எனது இறைவன் சொல்வதை மட்டுமே நான் சொல்வேன் என்பதும் நிச்சயம்” என்றான். அவன் வந்து சேர்ந்தபோது ஆகாப் அரசன் அவனிடம், “மிகாயாவே, நாங்கள் கீலேயாத்திலுள்ள ராமோத்திற்கு எதிராக யுத்தத்திற்கு போகலாமா அல்லது போகக்கூடாதா?” என்று கேட்டான். மிகாயா அதற்குப் பதிலாக, “போய்த் தாக்கி வெற்றிபெறுங்கள்; அவர்கள் உங்கள் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்” என்று சொன்னான். அரசன் அவனிடம், “யெகோவாவின் பெயரில் உண்மையைத் தவிர வேறொன்றும் சொல்ல வேண்டாமென எத்தனை தடவை உன்னை நான் ஆணையிட வைக்கவேண்டும்?” எனக் கேட்டான். அப்பொழுது மிகாயா, “இஸ்ரயேலர் எல்லோரும் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல் மலைகளில் சிதறடிக்கப்பட்டிருப்பதை நான் கண்டேன். ‘இவர்களுக்குத் தலைவன் இல்லை. ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளுக்கு சமாதானத்துடன் போகட்டும்’ என்று யெகோவா சொன்னார்” என்றான். அப்பொழுது இஸ்ரயேலின் அரசன் ஆகாப், யோசபாத் அரசனிடம், “அவன் எப்போதும் எனக்கு நன்மையானதையல்ல தீமையானதையே இறைவாக்காகச் சொல்வான் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா?” என்றான். தொடர்ந்து மிகாயா, “ஆகவே, யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள். யெகோவா தமது அரியணையில் அமர்ந்திருப்பதையும், அவரது வலதுபக்கத்திலும், இடது பக்கத்திலும் வானத்தின் எல்லா சேனைகளும் நிற்பதையும் நான் கண்டேன். அப்பொழுது யெகோவா அந்த சேனையிடம், ‘இஸ்ரயேலின் அரசன் ஆகாபை, கீலேயாத்திலுள்ள ராமோத்தைத் தாக்குவதற்கும், அங்கே அவன் சாகும்படி போவதற்கும் அவனைத் தூண்டிவிடுகிறவன் யார்?’ எனக் கேட்டார். “அதற்கு ஒரு ஆவி ஒருவிதமாகவும், இன்னொரு ஆவி இன்னொரு விதமாகவும் வித்தியாசமான யோசனை கூறின. கடைசியாக ஒரு ஆவி முன்னேவந்து யெகோவாவுக்கு முன்பாக நின்று, ‘நான் அவனைத் தூண்டுவேன்’ என்றது. “ ‘எவ்விதமாக?’ என்று யெகோவா கேட்டார். “ ‘நான் போய் அவனுடைய எல்லா இறைவாக்கினர்களின் வாயிலும் பொய்யின் ஆவியாய் இருப்பேன்’ என்றது. “ ‘போய் அவ்வாறே செய், நீ அவனைத் தூண்டி வெற்றிபெறுவாய்’ என யெகோவா கூறினார். “அவ்வாறே இப்பொழுதும் யெகோவா உனது இறைவாக்கினர்களின் வாய்களில் பொய்யின் ஆவியை வைத்திருக்கிறார். யெகோவா உனக்குப் பேரழிவையே நியமித்திருக்கிறார்” என்றான். அப்பொழுது கெனானாவின் மகன் சிதேக்கியா முன்பாகப் போய் மிகாயாவின் முகத்தில் அறைந்தான். பின் அவனிடம், “யெகோவாவின் ஆவியானவர் என்னைவிட்டு உன்னுடன் பேச வரும்போது, எந்த வழியாக வந்தார்” என்றும் மிகாயாவைக் கேட்டான். அதற்கு மிகாயா, “நீ ஒளிப்பதற்கு ஒரு உள் அறையினுள் போகும்நாளில் இந்தக் கேள்விக்கு விடை கிடைக்கும்” என்றான். அப்பொழுது இஸ்ரயேலின் அரசனான ஆகாப், “மிகாயாவைப் பிடித்து நகர ஆளுநனான ஆமோனிடமும், அரசனின் மகனான யோவாஸினிடமும் கொண்டுபோய், அவர்களிடம், ‘அரசன் கூறுவது இதுவே: நான் பாதுகாப்பாக திரும்பி வரும்வரையும் இவனைச் சிறையில் போடுங்கள். அப்பத்தையும், தண்ணீரையும் தவிர வேறொன்றையும் கொடுக்கக்கூடாது’ ” என்று கூறினான். அதற்கு மிகாயா, “நீ பாதுகாப்பாகத் திரும்பி வந்தால், யெகோவா என்னைக்கொண்டு பேசவில்லை” என்று சொல்லி, “மக்களே, நீங்கள் எல்லோரும் எனது வார்த்தைகளைக் குறித்துக்கொள்ளுங்கள்!” என்றும் சொன்னான். எனவே இஸ்ரயேலின் அரசன் ஆகாபும், யூதாவின் அரசன் யோசபாத்தும் கீலேயாத்திலுள்ள ராமோத்திற்கு போனார்கள். இஸ்ரயேலின் அரசன் யோசபாத்திடம், “நான் மாறுவேடம் போட்டு யுத்தத்திற்கு வருகிறேன். நீர் உமது அரச உடைகளை உடுத்திக்கொள்ளும்” என்றான். அப்படியே இஸ்ரயேலின் அரசன் ஆகாப் மாறுவேடம் போட்டு யுத்தத்திற்குப் போனான். இப்பொழுது சீரிய அரசனோ தனது தேர்ப்படைத் தளபதிகளிடம், “நீங்கள் இஸ்ரயேலின் அரசனைத் தவிர சிறியவனோ, பெரியவனோ வேறு யாருடனும் சண்டையிட வேண்டாம்” எனக் கட்டளையிட்டிருந்தான். தேர்ப்படை தளபதிகள் யோசபாத்தைக் கண்டபோது, “நிச்சயமாக இவன்தான் இஸ்ரயேலின் அரசன்” என்று நினைத்து அவனைத் தாக்குவதற்குத் திரும்பினார்கள். ஆனால் யோசபாத் கதறினான். யெகோவா அவனுக்கு உதவி செய்தார். இறைவன் அவர்களை அவனிடமிருந்து விலகிப்போகச் செய்தார். தேர்ப்படைத் தளபதிகள் அவன் இஸ்ரயேலின் அரசன் ஆகாப் அல்ல என்பதைக் கண்டபோது, அவனைப் பின்தொடர்வதை அவர்கள் நிறுத்திவிட்டார்கள். ஆனால் ஒருவன் தனது வில்லை உருவி குறிபார்க்காமல் எய்தபோது, இஸ்ரயேலின் அரசன் ஆகாபின் ஆயுதக் கவசங்களின் இடைவெளி வழியாக அது அவனைத் தாக்கியது. அரசன் ஆகாப் தேரோட்டியிடம், “தேரைத் திருப்பிக்கொண்டு என்னைப் போர்க்களத்துக்கு வெளியே கொண்டுபோ. நான் காயப்பட்டு விட்டேன்” என்றான். அந்த நாள்முழுவதும் கடும் போர் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. அப்பொழுது இஸ்ரயேலின் அரசன் ஆகாப் சாயங்காலம்வரை சீரியரின் பக்கம் பார்த்தபடி, தேரில் சாய்ந்துகொண்டு நின்றான். பின் சூரியன் மறையும் வேளையில் அவன் இறந்தான்.
2 நாளாகமம் 18:1-34 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யோசபாத்திற்கு மிகுந்த ஐசுவரியமும் கனமும் இருந்தது; அவன் ஆகாபோடு சம்பந்தம் கலந்து, சில வருடங்கள் சென்றபின்பு, சமாரியாவிலிருக்கிற ஆகாபிடம் போனான்; அப்பொழுது ஆகாப் அவனுக்கும் அவனோடிருக்கிற மக்களுக்கும் அநேகம் ஆடுமாடுகளை அடிப்பித்து, கீலேயாத்திலுள்ள ராமோத்திற்கு வரும்படி அவனை இணங்கச் செய்தான். எப்படியெனில், இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தை நோக்கி: கீலேயாத்திலுள்ள ராமோத்திற்கு என்னோடு வருகிறீரா என்று கேட்டதற்கு அவன்: நான் தான் நீர், என்னுடைய மக்கள் உம்முடைய மக்கள், உம்மோடுகூட போருக்கு வருகிறேன் என்றான். மேலும் யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: யெகோவாவுடைய வார்த்தையை இன்றைக்கு விசாரித்துத் தெரிந்துகொள்ளும் என்றான். அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா நானூறு தீர்க்கதரிசிகளைக் கூடிவரச்செய்து: நாங்கள் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் போர்செய்யப் போகலாமா, போகக்கூடாதா என்று அவர்களைக் கேட்டான். அதற்கு அவர்கள்: போங்கள், தேவன் ராஜாவின் கையில் அதை ஒப்புக்கொடுப்பார் என்றார்கள். பின்பு யோசபாத்: நாம் விசாரித்துத் தெரிந்துகொள்வதற்கு இவர்களைத்தவிர யெகோவாவுடைய தீர்க்கதரிசி வேறே யாராகிலும் இங்கே இல்லையா என்று கேட்டான். அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி: யெகோவாவிடத்தில் விசாரித்துத் தெரிந்துகொள்வதற்கு இம்லாவின் மகனாகிய மிகாயா என்னும் மற்றொருவன் இருக்கிறான்; ஆனாலும் நான் அவனைப் பகைக்கிறேன்; அவன் என்னைக்குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே எப்பொழுதும் தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் என்றான். அதற்கு யோசபாத்: ராஜாவே, அப்படிச் சொல்லவேண்டாம் என்றான். அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா, மந்திரிகளில் ஒருவனைக் கூப்பிட்டு: இம்லாவின் மகனாகிய மிகாயாவைச் சீக்கிரமாக அழைத்துவா என்றான். இஸ்ரவேலின் ராஜாவும் யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும், சமாரியாவின் நுழைவாயிலுக்கு முன்னிருக்கும் விசாலமான இடத்திலே ராஜஉடை அணிந்துகொண்டவர்களாக, அவரவர் தம்தம் சிங்காசனத்திலே உட்கார்ந்திருந்தார்கள்; அனைத்து தீர்க்கதரிசிகளும் அவர்களுக்கு முன்பாகத் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். கேனானாவின் மகனாகிய சிதேக்கியா தனக்கு இரும்புக்கொம்புகளை உண்டாக்கி, இவைகளால் நீர் சீரியர்களை முட்டி அழித்துப்போடுவீர் என்று யெகோவா சொல்லுகிறார் என்றான். அனைத்து தீர்க்கதரிசிகளும் அதற்கு ஏற்றவாறு தீர்க்கதரிசனம் சொல்லி, கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குப் போங்கள், உங்களுக்கு வாய்க்கும், யெகோவா அதை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள். மிகாயாவை அழைக்கப்போன ஆள் அவனுடனே பேசி: இதோ, தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் ஒன்றுபோலவே ராஜாவுக்கு நன்மையாயிருக்கிறது; உம்முடைய வார்த்தையும் அவர்களில் ஒருவருடைய வார்த்தையைப்போல இருக்கும்படி நன்மையாகச் சொல்லும் என்றான். அதற்கு மிகாயா: என் தேவன் சொல்வதையே சொல்வேன் என்று யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான். அவன் ராஜாவினிடத்தில் வந்தபோது, ராஜா அவனைப் பார்த்து: மிகாயாவே, நாங்கள் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் போர்செய்யப் போகலாமா, போகக்கூடாதா என்று கேட்டான். அதற்கு அவன்: போங்கள்; உங்களுக்கு வாய்க்கும்; அவர்கள் உங்கள் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள் என்றான். ராஜா அவனைப் பார்த்து: நீ யெகோவாவுடைய நாமத்திலே உண்மையைத் தவிர வேறொன்றையும் என்னிடத்தில் சொல்லாதபடி, நான் எத்தனைமுறை உனக்கு ஆணையிடவேண்டும் என்று சொன்னான். அப்பொழுது அவன்: இஸ்ரவேலர் எல்லோரும் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போல மலைகளில் சிதறப்பட்டதைக் கண்டேன்; அப்பொழுது யெகோவா: இவர்களுக்கு எஜமான் இல்லை; அவரவர் தம்தம் வீட்டிற்கு சமாதானத்தோடு திரும்பிப் போகட்டும் என்றார் என்று சொன்னான். அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா, யோசபாத்தை நோக்கி: இவன் என்னைக்குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் என்று நான் உம்மோடு சொல்லவில்லையா என்றான். அப்பொழுது மிகாயா சொன்னது: யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்; யெகோவா தம்முடைய சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறதையும், பரமசேனையெல்லாம் அவருடைய வலதுபக்கத்திலும் இடதுபக்கத்திலும் நிற்கிறதையும் கண்டேன். அப்பொழுது யெகோவா: இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் கீலேயாத்திலுள்ள ராமோத்தில் போய் விழும்படிக்கு, அவனுக்கு போதனைசெய்கிறவன் யார் என்று கேட்டதற்கு, ஒருவன் இப்படியும் ஒருவன் அப்படியும் சொன்னார்கள். அப்பொழுது ஒரு ஆவி புறப்பட்டு வந்து, யெகோவாவுக்கு முன்பாக நின்று: நான் அவனுக்கு போதனைசெய்வேன் என்றது; எதனால் என்று யெகோவா அதைக் கேட்டார். அப்பொழுது அது: நான் போய், அவனுடைய தீர்க்கதரிசிகள் எல்லோரின் வாயிலும் பொய்யின் ஆவியாக இருப்பேன் என்றது. அதற்கு அவர்: நீ அவனுக்குப் போதனைசெய்து அப்படி நடக்கச் செய்வாய்; போய் அப்படியே செய் என்றார். ஆகவே யெகோவா பொய்யின் ஆவியை இந்த உம்முடைய தீர்க்கதரிசிகளின் வாயிலே கட்டளையிட்டார்; யெகோவா உம்மைக்குறித்துத் தீமையாகச் சொன்னார் என்றான். அப்பொழுது கேனானாவின் மகனாகிய சிதேக்கியா அருகில் வந்து: மிகாயாவைக் கன்னத்தில் அடித்து, யெகோவாவுடைய ஆவி எந்த வழியாக என்னைவிட்டு உன்னோடு பேசும்படி வந்தது என்றான். அதற்கு மிகாயா: நீ ஒளித்துக்கொள்ள உள்ளறையிலே பதுங்கும் அந்நாளிலே அதைக் காண்பாய் என்றான். அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா: நீங்கள் மிகாயாவைப் பிடித்து, அவனைப் பட்டணத்துத் தலைவனாகிய ஆமோனிடமும், இளவரசனாகிய யோவாசிடமும் திரும்பக் கொண்டுபோய், அவனைச் சிறைச்சாலையிலே வைத்து, நான் சமாதானத்தோடு திரும்பிவரும்வரை, அவனுக்குக் குறைந்த அளவு அப்பத்தையும், தண்ணீரையும் சாப்பிடக் கொடுங்கள் என்று ராஜா சொன்னார் என்று சொல்லுங்கள் என்றான். அப்பொழுது மிகாயா: நீர் சமாதானத்தோடு திரும்பிவந்தால், யெகோவா என்னைக்கொண்டு பேசவில்லை என்று சொல்லி; மக்களே, நீங்கள் எல்லோரும் கேளுங்கள் என்றான். பின்பு இஸ்ரவேலின் ராஜாவும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும் கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குப் போனார்கள். இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தைப் பார்த்து: நான் மாறுவேடத்தில் போருக்குப் போவேன்; நீரோ ராஜஉடை அணிந்திரும் என்று சொல்லி, இஸ்ரவேலின் ராஜா மாறுவேடத்தில் போருக்குப் போனான். சீரியாவின் ராஜா தனக்கு இருக்கிற இரதங்களின் தலைவரை நோக்கி: நீங்கள் சிறியவரோடும் பெரியவரோடும் போர்செய்யாமல், இஸ்ரவேலின் ராஜா ஒருவனோடுமாத்திரம் போர்செய்யுங்கள் என்று கட்டளையிட்டிருந்தான். ஆதலால் இரதங்களின் தலைவர் யோசபாத்தைக் கண்டபோது, இவன் தான் இஸ்ரவேலின் ராஜா என்று நினைத்துப் போர்செய்ய அவனை சூழ்ந்துகொண்டார்கள்; அப்பொழுது யோசபாத் கூக்குரலிட்டான்; யெகோவா அவனுக்கு உதவி செய்தார்; அவர்கள் அவனைவிட்டு விலகும்படி தேவன் செய்தார். இவன் இஸ்ரவேலின் ராஜா அல்ல என்று இரதங்களின் தலைவர்கள் கண்டபோது அவனைவிட்டுத் திரும்பினார்கள். ஒருவன் தற்செயலாக வில்லை நாணேற்றி எய்தான், அது இஸ்ரவேலின் ராஜாவினுடைய கவசத்தின் சந்துக்கிடையிலேபட்டது; அப்பொழுது அவன் தன் இரத ஓட்டியைப் பார்த்து: நீ திருப்பி என்னை இராணுவத்திற்கு வெளியே கொண்டுபோ, எனக்குக் காயம்பட்டது என்றான். அன்றையதினம் போர் அதிகரித்தது; இஸ்ரவேலின் ராஜா சீரியர்களுக்கு எதிராக இரதத்தில் மாலைவரை இருந்து, சூரியன் மறையும்போது இறந்துபோனான்.
2 நாளாகமம் 18:1-34 பரிசுத்த பைபிள் (TAERV)
யோசபாத்துக்கு மிகுந்த செல்வமும், சிறப்பும் இருந்தது. இவன் ஆகாப் ராஜாவோடு ஒரு திருமண ஒப்பந்தம் செய்துகொண்டான். சில ஆண்டுகளுக்குப் பிறகு யோசபாத் ஆகாபைப் பார்க்க சமாரியா நகரத்திற்குச் சென்றான். ஆகாப் பல ஆடுகளையும் பசுக்களையும் பலி கொடுத்தான். யோசபாத்துக்கும் அவனோடு உள்ள ஜனங்களுக்கும் அவற்றைக் கொடுத்தான். ஆகாப் யோசபாத்திடம் ராமோத் கிலியாத்தைத் தாக்கும்படி உற்சாகப்படுத்தினான். ஆகாப் யோசபாத்திடம், “கிலேயாத்திலுள்ள ராமோத்துக்கு என்னோடு வருகின்றீரா?” என்று கேட்டான். ஆகாப் இஸ்ரவேலின் ராஜா. யோசபாத் யூதாவின் ராஜா. யோசபாத் ஆகாபிடம், “நான் உன்னைப் போன்றவன். என் ஜனங்களும் உன் ஜனங்களைப் போன்றவர்களே. நாங்கள் உங்களோடு போரிலே சேர்ந்துக்கொள்வோம்” என்றான். யோசபாத் மேலும் ஆகாபிடம், “ஆனால் முதலில், நாம் நமது கர்த்தரிடமிருந்து செய்தியை எதிர்ப்பார்ப்போம்” என்றான். எனவே ராஜா ஆகாப் 400 தீர்க்கதரிசிகளை அணிதிரட்டினான். ஆகாப் அவர்களிடம், “நம்மால் ராமோத் கீலேயாத்துக்கு எதிராகப் போக முடியுமா அல்லது முடியாதா?” என்று கேட்டான். தீர்க்கதரிசிகளோ, “போக முடியும், ராமோத் கீலேயாத்தைத் தோற்கடிக்க தேவன் உதவுவார்” என்றனர். ஆனால் யோசபாத், “கர்த்தருடைய தீர்க்கதரிசி யாராவது இங்கே இருக்கிறார்களா? கர்த்தருடைய விருப்பத்தை அவர்கள் மூலம் கேட்க விரும்புகிறேன்” என்றான். பிறகு ராஜா ஆகாப், யோசபாத்திடம், “இன்னும் ஒருவன் இங்கே இருக்கிறான். அவன் மூலமாக நாம் கர்த்தரிடம் கேட்கலாம். ஆனால் நான் அந்த மனிதனை வெறுக்கிறேன். ஏனென்றால் அவன் எனக்காக கர்த்தரிடமிருந்து எந்த நல்லச் செய்தியையும் சொல்லமாட்டான். எப்பொழுதும் அவன் எனக்காகக் கெட்ட செய்திகளையே வைத்திருப்பான். அவனது பெயர் மிகாயா, அவன் இம்லாவின் குமாரன்” என்றான். ஆனால் யோசபாத்தோ, “ஆகாப், நீ அப்படிச் சொல்லக்கூடாது!” என்றான். பிறகு ராஜா ஆகாப் தனது ஒரு அதிகாரியை அழைத்து, “வேகமாகப் போய், இம்லாவின் குமாரனான மிகாயாவை அழைத்து வா” என்றான். இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும் அரச உடை அணிந்து கொண்டனர். அவர்கள் தம் சிங்காசனங்களில் சமாரியாவின் ஒலிமுக வாசலுக்கு அருகே உள்ள களத்தில் அமர்ந்திருந்தனர். அந்த 400 தீர்க்கதரிசிகளும் இரு ராஜாக்களின் முன் தங்கள் செய்தியைச் சொன்னார்கள். கெனானாவின் குமாரனான சிதேக்கியா தனக்கு இரும்பு கொம்புகளைச் செய்தான். அவன், “இதுதான் கர்த்தர் சொன்னது: நீ இந்த இரும்பு கொம்புகளை அணிந்துக் கொண்டு அராமியரை அழிந்துபோகும்வரை தாக்குவாய்” என்றான். அனைத்து தீர்க்கதரிசிகளும் இதனையே சொன்னார்கள். அவர்கள், “ராமோத் கீலேயாத் நகரத்திற்கு செல். நீ வெற்றி பெறுவாய். அராமிய ஜனங்களை வெல்லும்படி கர்த்தர் உதவுவார்” என்றனர். மிகாயாவை அழைத்துவரப்போன தூதுவன் அவனிடம் போய், “மிகாயா! கவனி. அனைத்து தீர்க்கதரிசிகளும் ஒரே மாதிரி கூறுகின்றனர். ராஜா வெற்றிபெற முடியும் என அவர்கள் கூறுகின்றனர். எனவே அவர்கள் சொல்வதையே நீயும் கூறு. நீயும் நல்ல செய்தியைக் கூறவேண்டும்” என்றான். ஆனால் மிகாயா, “கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்கிறேன். எனது தேவன் சொல்வதையே நான் சொல்ல முடியும்” என்று பதிலளித்தான். பிறகு மிகாயா ஆகாப் ராஜாவிடம் வந்தான். ராஜா அவனிடம், “மிகாயா நாங்கள் ராமோத் கீலேயாத் நகரத்திற்குப் போரிடப் போகலாமா வேண்டாமா?” என்று கேட்டான். அதற்கு மிகாயா, “போ அவர்களோடு போர் செய். அந்த ஜனங்களை வெல்ல கர்த்தர் துணைசெய்வார்” என்றான். ராஜா ஆகாப் மிகாயாவிடம், “கர்த்தருடைய நாமத்தால் என்னிடம் உண்மையை மட்டுமே கூற வேண்டுமென்று பலமுறை உன்னை நான் சத்தியம் செய்ய வைத்தேன்” என்றான். பிறகு மிகாயா, “இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் மலைப்பகுதியில் சிதறி ஓடுவதை நான் பார்த்தேன். அவர்கள் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல் உள்ளனர். கர்த்தர், ‘அவர்களுக்குத் தலைவன் இல்லை. ஒவ்வொருவரும் பத்திரமாக வீட்டிற்குப் போகட்டும்’ என்று கூறினார்” என்றான். இஸ்ரவேல் ராஜாவாகிய ஆகாப் யோசபாத்திடம், “கர்த்தரிடமிருந்து எனக்கு மிகாயா நல்ல செய்தியைச் சொல்லமாட்டான் என்று ஏற்கெனவே கூறியிருக்கிறேன். அவன் எனக்கு கெட்டச் செய்திகளை மட்டுமே கூறுவான்” என்றான். அதற்கு மிகாயா, “கர்த்தரிடமிருந்து வந்த செய்தியைக் கேள்: கர்த்தர் தன் சிங்காசனத்தில் அமர்ந்திருப்பதை நான் பார்த்தேன். பரலோகத்தின் படை அவரது வலதுபுறமும் இடதுபுறமும் உள்ளன. அனைத்து படைகளும் அவரைச் சுற்றிலும் நின்றுக்கொண்டிருக்கிறது. கர்த்தர், ‘ராமோத் கீலேயாத் நகரின் மேல் படையெடுக்குமாறு செய்து அப்போரில் ஆகாப் மரிக்குமாறு செய்ய, யாரால் தந்திரமாய்ச் செயல்பட முடியும்?’ என்று கேட்டார். அதற்கு ஒவ்வொருவரும் வெவ்வேறானதைக் கூறினார்கள். பிறகு ஒரு ஆவி வந்து கர்த்தருக்கு முன்பாக நின்றது. அந்த ஆவி ‘நான் ஆகாபிடம் தந்திரமாய்ச் செயல்படுகிறேன்’ என்று கூறியது. அதனிடம், ‘எப்படி?’ என்று கர்த்தர் கேட்டார். அதற்கு அது, ‘நான் போய் ஆகாபின் தீர்க்கதரிசிகளின் வாயில் பொய் சொல்லும் ஆவியாக இருப்பேன்’ என்றது. அதற்குக் கர்த்தர், ‘நீ ஆகாபை ஏமாற்றுவதில் வெற்றி பெறுவாய். எனவே போய் அவ்வாறே செய்’ என்றார். “இப்போது ஆகாப் கவனி. பொய் சொல்லும் ஆவியை உன் தீர்க்கதரிசிகளின் வாயில் கர்த்தர் இருக்கச் செய்துள்ளார். எனவே கர்த்தர் சொன்னபடி உனக்கு தீமையே ஏற்படும்” என்றான். பிறகு சிதேக்கியா மிகாயாவின் அருகில் சென்று அவனது முகத்திலே அறைந்தான். சிதேக்கியாவின் தந்தை கெனானா. சிதேக்கியா, “மிகாயா, கர்த்தருடைய ஆவி எந்த வழியாய் என்னைவிட்டு உன்னிடம் வந்து இவ்வாறு பேச வைத்தது?” என்று கேட்டான். அதற்கு மிகாயா, “சிதேக்கியா! நீ உள்ளறைக்குள்ளே ஓடி பதுங்கும் நாளிலே அதனைக் காண்பாய்” என்றான். பிறகு ஆகாப் ராஜா, “மிகாயாவை அழைத்துக் கொண்டு நகர ஆளுநராகிய ஆமோனிடத்திலும் அரச குமாரனாகிய யோவாசிடத்திலும் செல்லுங்கள். அவர்களிடம், இதுதான் ராஜா சொன்னது: ‘மிகாயாவைச் சிறையிலே அடையுங்கள். நான் போரிலிருந்து திரும்பி வரும்வரை சிறிது அப்பத்தையும், தண்ணீரையும் தவிர வேறு எதையும் தராதீர்கள்’ எனக் கூறுங்கள்” என்றான். அதற்கு மிகாயா, “ஆகாப்! நீ போர்களத்திலிருந்து பத்திரமாகத் திரும்பி வந்தால், பிறகு கர்த்தர் என் மூலமாகப் பேசவில்லை. ஜனங்களே! நான் சொல்வதைக் கேட்டு நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்!” என்றான். இஸ்ரவேல் ராஜாவாகிய ஆகாபும் யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும் ராமோத் கீலேயாத்தைத் தாக்கினார்கள். ஆகாப் ராஜா யோசபாத்திடம், “நான் போர்க்களத்திற்குள் நுழையுமுன் என் தோற்றத்தை மாற்றிக்கொள்வேன். ஆனால் நீ உனது உடையையே அணிந்துகொள்” என்றான். எனவே இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் தன் ஆடையை மாற்றிக்கொண்டான். இருவரும் போர்க்களத்துக்குச் சென்றார்கள். ஆராம் ராஜா தனது இரதப்படைத் தளபதியிடம் ஒரு கட்டளையிட்டான். அவன் அவர்களிடம், “எவரோடும் சண்டையிடவேண்டாம். அவன் பெரியவனாயினும் சரி, சிறியவனாயினும் சரியே. ஆனால் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபிடம் மட்டும் சண்டையிடுங்கள்” என்றான். இரதப்படைத் தளபதிகள் யோசபாத்தைக் கண்டதும் “இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் அங்கே இருக்கிறான்!” என்று எண்ணினார்கள். எனவே யோசபாத்தைத் தாக்க அவர்கள் திரும்பினார்கள். ஆனால் யோசபாத் சத்தமிட்டு வேண்டினபடியால் கர்த்தர் அவனுக்கு உதவினார். தேவன் இரதப்படைத் தளபதிகளை யோசபாத்தை விட்டு விலகும்படி செய்தார். அவர்களுக்கு இவன் இஸ்ரவேல் ராஜாவாகிய ஆகாப் இல்லை என்று தெரிந்ததும் துரத்துவதை விட்டுவிட்டனர். ஆனால் ஒரு வீரன் எந்தவித குறியும் இல்லாமல் ஒரு அம்பை விட்டான், அது இஸ்ரவேல் ராஜாவாகிய ஆகாபின் மீது பாய்ந்தது. அது ஆகாபின் உடலில் கவசம் இல்லாத பகுதியின் மேல் பாய்ந்தது. ஆகாப் தன் இரதவோட்டியிடம், “இரதத்தைத் திருப்பிக் கொள். நான் காயப்பட்டிருக்கிறேன். என்னை போர்களத்துக்கு வெளியே கொண்டு செல்!” என்றான். அன்று போர் மிகவும் மோசமாக நடை பெற்றது. அன்று மாலைவரை ஆகாப் ஆராமியருக்கு எதிராக இரதத்தில் நின்றுக்கொண்டிருந்தான். சூரியன் மறைந்ததும் அவன் மரித்தான்.
2 நாளாகமம் 18:1-34 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
யோசபாத்துக்கு மிகுந்த ஐசுவரியமும் கனமும் உண்டாயிருந்தது; அவன் ஆகாபோடே சம்பந்தங்கலந்து, சில வருஷங்கள் சென்றபின்பு, சமாரியாவிலிருக்கிற ஆகாபிடத்துக்குப் போனான்; அப்பொழுது ஆகாப் அவனுக்கும் அவனோடிருக்கிற ஜனத்திற்கும் அநேகம் ஆடுமாடுகளை அடிப்பித்து, கீலேயாத்திலுள்ள ராமோத்திற்கு வரும்படி அவனை ஏவினான். எப்படியெனில், இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தை நோக்கி: கீலேயாத்திலுள்ள ராமோத்துக்கு என்னோடே வருகிறீரா என்று கேட்டதற்கு அவன்: நான் தான் நீர், என்னுடைய ஜனங்கள் உம்முடைய ஜனங்கள், உம்மோடேகூட யுத்தத்திற்கு வருகிறேன் என்றான். பின்னும் யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: கர்த்தருடைய வார்த்தையை இன்றைக்கு விசாரித்து அறியும் என்றான். அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா நானூறு தீர்க்கதரிசிகளைக் கூடிவரச்செய்து: நாங்கள் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ணப் போகலாமா, போகலாகாதா என்று அவர்களைக் கேட்டான். அதற்கு அவர்கள்: போம், தேவன் ராஜாவின் கையில் அதை ஒப்புக்கொடுப்பார் என்றார்கள். பின்பு யோசபாத்: நாம் விசாரித்து அறிகிறதற்கு இவர்களையல்லாமல் கர்த்தருடைய தீர்க்கதரிசி வேறே யாராகிலும் இங்கே இல்லையா என்று கேட்டான். அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி: கர்த்தரிடத்தில் விசாரித்து அறிகிறதற்கு இம்லாவின் குமாரனாகிய மிகாயா என்னும் மற்றொருவன் இருக்கிறான்; ஆனாலும் நான் அவனைப் பகைக்கிறேன்; அவன் என்னைக்குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே எப்பொழுதும் தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் என்றான். அதற்கு யோசபாத்: ராஜாவே, அப்படிச் சொல்லவேண்டாம் என்றான். அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா பிரதானிகளில் ஒருவனைக் கூப்பிட்டு: இம்லாவின் குமாரனாகிய மிகாயாவைச் சீக்கிரமாய் அழைத்துவா என்றான். இஸ்ரவேலின் ராஜாவும் யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும், சமாரியாவின் ஒலிமுகவாசலுக்கு முன்னிருக்கும் விசாலமான இடத்திலே ராஜவஸ்திரம் தரித்துக்கொண்டவர்களாய், அவரவர் தம்தம் சிங்காசனத்திலே உட்கார்ந்திருந்தார்கள்; சகல தீர்க்கதரிசிகளும் அவர்களுக்கு முன்பாகத் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள். கெனானாவின் குமாரனாகிய சிதேக்கியா தனக்கு இரும்புக்கொம்புகளை உண்டாக்கி, இவைகளால் நீர் சீரியரை முட்டி நிர்மூலமாக்கிப்போடுவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். சகல தீர்க்கதரிசிகளும் அதற்கு இசைவாகத் தீர்க்கதரிசனஞ்சொல்லி, கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குப் போம், உமக்கு வாய்க்கும், கர்த்தர் அதை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள். மிகாயாவை அழைக்கப்போன ஆள் அவனுடனே பேசி: இதோ, தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் ஏகவாக்காய் ராஜாவுக்கு நன்மையாயிருக்கிறது; உம்முடைய வார்த்தையும் அவர்களில் ஒருவர் வார்த்தையைப்போல இருக்கும்படிக்கு நன்மையாகச் சொல்லும் என்றான். அதற்கு மிகாயா: என் தேவன் சொல்வதையே சொல்வேன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான். அவன் ராஜாவினிடத்தில் வந்தபோது, ராஜா அவனைப் பார்த்து: மிகாயாவே, நாங்கள் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ணப்போகலாமா, போகலாகாதா என்று கேட்டான். அதற்கு அவன்: போங்கள்; உங்களுக்கு வாய்க்கும்; உங்கள் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள் என்றான். ராஜா அவனைப் பார்த்து: நீ கர்த்தருடைய நாமத்திலே உண்மையை அல்லாமல் வெறொன்றையும் என்னிடத்தில் சொல்லாதபடிக்கு, நான் எத்தனைதரம் உன்னை ஆணையிடுவிக்கவேண்டும் என்று சொன்னான். அப்பொழுது அவன்: இஸ்ரவேலர் எல்லாரும் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போல மலைகளில் சிதறப்பட்டதைக் கண்டேன்; அப்பொழுது கர்த்தர்: இவர்களுக்கு எஜமான் இல்லை; அவரவர் தம்தம் வீட்டிற்குச் சமாதானத்தோடே திரும்பக்கடவர்கள் என்றார் என்று சொன்னான். அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி: இவன் என்னைக் குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவன் என்று நான் உம்மோடே சொல்லவில்லையா என்றான். அப்பொழுது அவன் சொன்னது: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; கர்த்தர் தம்முடைய சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறதையும், பரம சேனையெல்லாம் அவர் வலது பக்கத்திலும் அவர் இடது பக்கத்திலும் நிற்கிறதையும் கண்டேன். அப்பொழுது கர்த்தர்: இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் கீலேயாத்திலுள்ள ராமோத்தில் போய் விழும்படிக்கு, அவனுக்குப் போதனைசெய்கிறவன் யார் என்று கேட்டதற்கு, ஒருவன் இப்படியும் ஒருவன் அப்படியும் சொன்னார்கள். அப்பொழுது ஒரு ஆவி புறப்பட்டு வந்து, கர்த்தருக்கு முன்பாக நின்று: நான் அவனுக்குப் போதனைசெய்வேன் என்றது; எதினால் என்று கர்த்தர் அதைக் கேட்டார். அப்பொழுது அது: நான் போய், அவனுடைய தீர்க்கதரிசிகள் எல்லாரின் வாயிலும் பொய்யின் ஆவியாய் இருப்பேன் என்றது. அதற்கு அவர்: நீ அவனுக்குப் போதனைசெய்து அப்படி நடக்கப் பண்ணுவாய்; போய் அப்படியே செய் என்றார். ஆனதினால் கர்த்தர் பொய்யின் ஆவியை இந்த உம்முடைய தீர்க்கதரிசிகளின் வாயிலே கட்டளையிட்டார்; கர்த்தர் உம்மைக்குறித்துத் தீமையாகச் சொன்னார் என்றான். அப்பொழுது கெனானாவின் குமாரனாகிய சிதேக்கியா கிட்டே வந்து: மிகாயாவைக் கன்னத்தில் அடித்து, கர்த்தருடைய ஆவி எந்த வழியாய் என்னைவிட்டு உன்னோடே பேசும்படி வந்தது என்றான். அதற்கு மிகாயா: நீ ஒளித்துக்கொள்ள உள்ளறையிலே பதுங்கும் அந்நாளிலே அதைக் காண்பாய் என்றான். அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா: நீங்கள் மிகாயாவைப் பிடித்து, அவனைப் பட்டணத்துத் தலைவனாகிய ஆமோனிடத்துக்கும், ராஜகுமாரனாகிய யோவாசிடத்துக்கும் திரும்பக் கொண்டுபோய், அவனைச் சிறைச்சாலையிலே வைத்து, நான் சமாதானத்தோடே திரும்பிவருமளவும், அவனுக்கு இடுக்கத்தின் அப்பத்தையும் இடுக்கத்தின் தண்ணீரையும் சாப்பிடக் கொடுங்கள் என்று ராஜா சொன்னார் என்று சொல்லுங்கள் என்றான். அப்பொழுது மிகாயா: நீர் சமாதானத்தோடே திரும்பிவந்தால், கர்த்தர் என்னைக்கொண்டு பேசினதில்லை என்று சொல்லி; ஜனங்களே, நீங்கள் எல்லாரும் கேளுங்கள் என்றான். பின்பு இஸ்ரவேலின் ராஜாவும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும் கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப் போனார்கள். இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தைப் பார்த்து: நான் வேஷம்மாறி யுத்தத்தில் பிரவேசிப்பேன்; நீரோ ராஜவஸ்திரம் தரித்திரும் என்று சொல்லி, இஸ்ரவேலின் ராஜா வேஷம்மாறி யுத்தத்திலே பிரவேசித்தான். சீரியாவின் ராஜா தனக்கு இருக்கிற இரதங்களின் தலைவரை நோக்கி: நீங்கள் சிறியவரோடும் பெரியவரோடும் யுத்தம்பண்ணாமல், இஸ்ரவேலின் ராஜா ஒருவனோடேமாத்திரம் யுத்தம்பண்ணுங்கள் என்று கட்டளையிட்டிருந்தான். ஆதலால் இரதங்களின் தலைவர் யோசபாத்தைக் காண்கையில், இவன் தான் இஸ்ரவேலின் ராஜா என்று சொல்லி யுத்தம்பண்ண அவனைச் சூழ்ந்து கொண்டார்கள்; அப்பொழுது யோசபாத் கூக்குரல் இட்டான்; கர்த்தர் அவனுக்கு அநுசாரியாயிருந்தார்; அவர்கள் அவனை விட்டு விலகும்படி தேவன் செய்தார். இவன் இஸ்ரவேலின் ராஜா அல்ல என்று இரதங்களின் தலைவர் கண்டபோது அவனைவிட்டுத் திரும்பினார்கள். ஒருவன் நினையாமல் வில்லை நாணேற்றி எய்தான், அது இஸ்ரவேலின் ராஜாவினுடைய கவசத்தின் சந்துக்கிடையிலேபட்டது; அப்பொழுது அவன் தன் சாரதியைப் பார்த்து: நீ திருப்பி என்னை இராணுவத்துக்கப்பால் கொண்டுபோ, எனக்குக் காயம்பட்டது என்றான். அன்றையதினம் யுத்தம் அதிகரித்தது; இஸ்ரவேலின் ராஜா சீரியருக்கு எதிராக இரதத்தில் சாயங்காலமட்டும் நின்றிருந்து, சூரியன் அஸ்தமிக்கும்போது இறந்துபோனான்.