1 தீமோத்தேயு 4:1-5
1 தீமோத்தேயு 4:1-5 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பரிசுத்த ஆவியானவர் தெளிவாகச் சொல்வது இதுவே: கடைசிக் காலங்களில் சிலர் விசுவாசத்தைக் கைவிட்டு, வஞ்சிக்கும் ஆவிகளையும், பிசாசுகளின் போதனைகளையும் பின்பற்றுவார்கள். இப்படியான போதனைகள், வேஷதாரிகளான பொய்யர்களின் வழியாகவே வருகின்றன. அவர்களுடைய மனசாட்சிகளோ சூடுபட்டும், சுரணையற்றுப் போவார்கள். அவர்களோ திருமணம் செய்யவேண்டாம் எனவும், குறிப்பிட்ட சில உணவு வகைகளைச் சாப்பிடவேண்டாம் எனவும் கட்டளையிடுகிறார்கள்; ஆனால் விசுவாசிக்கிறவர்களும், சத்தியத்தை அறிந்திருக்கிறவர்களும் நன்றி செலுத்துதலோடு அனுபவிக்கும்படியே, இறைவன் அவற்றை உண்டாக்கியிருக்கிறார். ஏனெனில் இறைவன் படைத்ததெல்லாம் நல்லதே, அவற்றை நன்றி செலுத்துதலோடு நாம் ஏற்றுக்கொண்டால், ஒன்றும் புறக்கணிக்கப்பட வேண்டியவையல்ல. ஏனெனில், இவை இறைவனுடைய வார்த்தையினாலும், நமது மன்றாட்டினாலும் பரிசுத்தமாக்கப்படுகின்றன.
1 தீமோத்தேயு 4:1-5 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
ஆனாலும், ஆவியானவர் வெளிப்படையாக சொல்லுகிறபடி, கடைசிகாலத்தில் மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் ஏமாற்றுகிற ஆவிகளுக்கும், பிசாசுகளின் உபதேசங்களுக்கும் கீழ்ப்படிந்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள். திருமணம் செய்யக்கூடாது என்றும், விசுவாசிகளும், சத்தியத்தை அறிந்தவர்களும் நன்றி செலுத்தி அனுபவிக்கும்படி தேவன் படைத்த உணவுகளைச் சாப்பிடக்கூடாது என்றும் அந்தப் பொய்யர்கள் கட்டளையிடுவார்கள். தேவன் படைத்தவைகள் அனைத்தும் நல்லதாக இருக்கிறது; நன்றியோடு ஏற்றுக்கொள்ளப்படுமானால் ஒன்றும் தள்ளப்படவேண்டியது இல்லை. அது தேவவசனத்தினாலும் ஜெபத்தினாலும் பரிசுத்தமாக்கப்படும்.
1 தீமோத்தேயு 4:1-5 பரிசுத்த பைபிள் (TAERV)
வருங்காலத்தில் சிலர் உண்மையான போதனையை நம்புவதை நிறுத்திவிடுவார்கள் என்று தூய ஆவியானவர் கூறி இருக்கிறார். அவர்கள் பொய் சொல்லும் ஆவிகளுக்குத் தலைவணங்குவார்கள். அவர்கள் பிசாசுகளின் போதனைகளைப் பின்பற்றுவார்கள். பொய்யும், தந்திரமும் உடையவர்கள் மூலம் அத்தீய போதனைகள் வருகிறது. அந்த மக்கள் சரி எது, தவறு எது என்று பார்க்கமாட்டார்கள். அவர்களுடைய புரிந்துகொள்ளும் தன்மை, சூடு போடப்பட்டு, அழிக்கப்பட்டதைப் போன்றது. அவர்கள் திருமணம் செய்யக்கூடாது என்கின்றனர். சில உணவு வகைகளை உண்ணக் கூடாது என்று கூறுகின்றனர். ஆனால் அந்த உணவுகளை தேவனே படைத்திருக்கிறார். நம்புகிறவர்களும், உண்மையை அறிந்தவர்களும் அவற்றை நன்றியோடு உண்ணலாம். தேவனால் படைக்கப்பட்ட அனைத்துமே நல்லதுதான். நன்றிக் கடனாகப் பெறுகிறவரையில் தேவனால் உருவாக்கப்பட்ட எதையும் மறுக்கக்கூடாது. தேவனால் படைக்கப்பட்டவை எல்லாம் தேவனுடைய வார்த்தையாலும் பிரார்த்தனைகளாலும் தூய்மையாக்கப்படும்.
1 தீமோத்தேயு 4:1-5 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டு விலகிப்போவார்கள். விவாகம்பண்ணாதிருக்கவும், விசுவாசிகளும் சத்தியத்தை அறிந்தவர்களும் ஸ்தோத்திரத்தோடே அநுபவிக்கும்படி தேவன் படைத்த போஜனபதார்த்தங்களை விலக்கவும் வேண்டுமென்று அந்தப் பொய்யர் கட்டளையிடுவார்கள். தேவன் படைத்ததெல்லாம் நல்லதாயிருக்கிறது; ஸ்தோத்திரத்தோடே ஏற்றுக்கொள்ளப்படுமாகில் ஒன்றும் தள்ளப்படத்தக்கதல்ல. அது தேவவசனத்தினாலும் ஜெபத்தினாலும் பரிசுத்தமாக்கப்படும்.