1 தெசலோனிக்கேயர் 5:12-28

1 தெசலோனிக்கேயர் 5:12-28 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பிரியமானவர்களே, இப்பொழுதும் நாங்கள் உங்களைக் கேட்டுக்கொள்கிறதாவது, உங்களிடையே கஷ்டப்பட்டு வேலை செய்கிறவர்களாக, கர்த்தரில் உங்கள் மேற்பார்வையாளராய் இருந்து, உங்களுக்குப் புத்திமதி சொல்கிறவர்களை மதித்து நடவுங்கள். அவர்களுடைய வேலையின் நிமித்தம் அவர்களில் அன்பு செலுத்தி, அவர்களுக்கு மிக உயர்ந்த மதிப்பைக் கொடுங்கள். ஒருவரோடொருவர் சமாதானமாய் வாழுங்கள். பிரியமானவர்களே, நாங்கள் உங்களிடம் வேண்டிக்கொள்கிறதாவது, சோம்பலாய் இருக்கிறவர்களை எச்சரியுங்கள். பயந்த சுபாவமுடையவர்களை உற்சாகப்படுத்துங்கள். பலவீனமானவர்களுக்கு உதவிசெய்யுங்கள். எல்லோருடனும் பொறுமையோடு நடந்துகொள்ளுங்கள். ஒருவரும் தீமையான செயலுக்குப் பதிலாக இன்னொரு தீமையான செயலை செய்யாதபடி கவனமாயிருங்கள். ஆனால் எப்பொழுதும் ஒவ்வொருவருக்கும் மற்ற எல்லோருக்கும் நன்மை செய்யவே முயற்சி செய்யுங்கள். எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருங்கள். இடைவிடாது மன்றாடுங்கள். எல்லாவித சூழ்நிலையிலும் நன்றி செலுத்துங்கள்; இதுவே கிறிஸ்து இயேசுவில் உங்களுக்கான இறைவனின் சித்தம். ஆவியானவரின் அனலை அணைத்துப் போடாதிருங்கள். சொல்லப்படுகின்ற இறைவாக்கை அலட்சியம் செய்யவேண்டாம். எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நல்லதைப் பற்றிக்கொள்ளுங்கள். எல்லா விதமான தீயசெயல்களையும் விட்டு விலகியிருங்கள். சமாதானத்தின் இறைவன் தாமே முற்றிலுமாய் உங்களைப் பரிசுத்தப்படுத்துவாராக. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது, உங்களுடைய ஆவி, ஆத்துமா, உடல் முழுவதும் குற்றமற்றதாய் காக்கப்படுவதாக. உங்களை அழைத்த இறைவன் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார். பிரியமானவர்களே, எங்களுக்காக மன்றாடுங்கள். எல்லா சகோதரரையும் பரிசுத்த முத்தம் கொடுத்து வாழ்த்துங்கள். இந்தக் கடிதத்தை எல்லா சகோதரருக்கும் வாசித்துக் காண்பிக்கும்படி, கர்த்தருக்கு முன்பாக உங்களுக்குக் கட்டளையிடுகிறேன். நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.

1 தெசலோனிக்கேயர் 5:12-28 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அன்றியும், சகோதரர்களே, உங்களுக்குள்ளே கடுமையாக உழைத்து, கர்த்தருக்குள் உங்களை விசாரணை செய்கிறவர்களாக இருந்து, உங்களுக்குப் புத்திசொல்லுகிறவர்களை நீங்கள் மதித்து, அவர்களுடைய செயல்களின் அடிப்படையில் அவர்களை மிகவும் அன்பாக நினைத்துக்கொள்ளும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம். உங்களுக்குள்ளே சமாதானமாக இருங்கள். மேலும், சகோதரர்களே, நாங்கள் உங்களுக்குப் போதிக்கிறதென்னவென்றால், ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள், திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லோரிடத்திலும் நீடியசாந்தமாக இருங்கள். ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமைசெய்யாதபடி பாருங்கள்; உங்களுக்குள்ளும் மற்ற அனைவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்ய விரும்புங்கள். எப்பொழுதும் சந்தோஷமாக இருங்கள். இடைவிடாமல் ஜெபம்செய்யுங்கள். எல்லாவற்றிலேயும் நன்றி சொல்லுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவிற்குள் உங்களைக்குறித்து தேவனுடைய விருப்பமாக இருக்கிறது. ஆவியை அவித்துப்போடாமலிருங்கள். தீர்க்கதரிசனங்களை சாதாரணமாக எண்ணாதிருங்கள். எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள். தீமையாகத் தோன்றுகிற எல்லாவற்றையும்விட்டு விலகுங்கள். சமாதானத்தின் தேவன்தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்களுடைய ஆவி, ஆத்துமா, சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக. உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார். சகோதரர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள். சகோதரர்கள் எல்லோரையும் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள். இந்தக் கடிதம் பரிசுத்தமான சகோதரர்கள் எல்லோருக்கும் வாசிக்கப்படவேண்டுமென்று கர்த்தரின்பேரில் ஆணையிட்டு உங்களுக்குச் சொல்லுகிறேன். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

1 தெசலோனிக்கேயர் 5:12-28 பரிசுத்த பைபிள் (TAERV)

சகோதர சகோதரிகளே! உங்களோடு கடுமையாய் உழைப்பவர்களுக்கு மதிப்பளியுங்கள். கர்த்தருக்குள் அவர்களே உங்கள் தலைவர்கள். ஆத்தும அளவில் அவர்களே உங்களுக்கு வழிகாட்டுகிறார்கள். அவர்கள் செய்துகொண்டிருக்கிற செயலுக்காக அவர்களை அன்போடு மதியுங்கள். ஒருவருக்கொருவர் சமாதானமாய் வாழுங்கள். சகோதர சகோதரிகளே! உழைக்காத மக்களை எச்சரிக்கை செய்யுங்கள் என்று கேட்டுக்கொள்கிறோம். அஞ்சுகிறவர்களை உற்சாகப்படுத்துங்கள். பலவீனமானவர்களுக்கு உதவுங்கள். எல்லாரிடமும் பொறுமையாய் இருங்கள். ஒருவரும் தீமைக்குத் தீமை செய்யாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். ஒருவருக்கொருவர் எப்பொழுதும் நன்மை செய்துகொள்ளவும் எல்லாருக்கும் நன்மை செய்யவும் முயலுங்கள். எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருங்கள். பிரார்த்தனை செய்வதை நிறுத்தாதீர்கள். தேவனுக்கு எப்பொழுதும் நன்றி செலுத்துங்கள். இயேசு கிறிஸ்துவில் இதையே உங்களிடம் தேவன் விரும்புகிறார். பரிசுத்தாவியானவருக்கான வேலையை நிறுத்தாதீர்கள். தீர்க்கதரிசனங்களை முக்கியமற்ற ஒன்றாக எண்ணாதீர்கள். ஆனால் எல்லாவற்றையும் சோதித்து அறியுங்கள். நல்லவற்றை வைத்துக்கொள்ளுங்கள். எல்லா வகையான தீமைகளில் இருந்தும் விலகி இருங்கள். சமாதானத்தின் தேவன்தாமே உங்களை முழுமையாகப் பரிசுத்தமாக்கும் பொருட்டு தேவனிடம் பிரார்த்தனை செய்கிறோம். நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வரும்போது உங்கள் ஆவி, ஆன்மா, சரீரம் முழுவதும் குற்றமில்லாததாய் இருக்கும்படி காக்கப்படுவதாக. உங்களை அழைக்கிற தேவன் இவற்றை உங்களுக்குச் செய்வார். அவரை நம்புங்கள். சகோதர சகோதரிகளே! எங்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். நீங்கள் சந்திக்கும்போது ஒருவரையொருவர் பரிசுத்தமாக முத்தமிட்டுக்கொள்ளுங்கள் அனைத்து சகோதர சகோதரிகளிடமும் இந்த நிருபம் வாசிக்கப்பட வேண்டும் என்று உங்களுக்கு கர்த்தரின் அதிகாரத்தால் ஆணையிட்டுக் கூறுகிறேன். நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களுடன் இருப்பதாக!

1 தெசலோனிக்கேயர் 5:12-28 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அன்றியும், சகோதரரே, உங்களுக்குள்ளே பிரயாசப்பட்டு, கர்த்தருக்குள் உங்களை விசாரணைசெய்கிறவர்களாயிருந்து, உங்களுக்குப் புத்திசொல்லுகிறவர்களை நீங்கள் மதித்து, அவர்களுடைய கிரியையினிமித்தம் அவர்களை மிகவும் அன்பாய் எண்ணிக்கொள்ளும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம். உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள். மேலும், சகோதரரே, நாங்கள் உங்களுக்குப் போதிக்கிறதென்னவென்றால், ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள், திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள். ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமைசெய்யாதபடி பாருங்கள்; உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்யநாடுங்கள். எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது. ஆவியை அவித்துப்போடாதிருங்கள். தீர்க்கதரிசனங்களை அற்பமாயெண்ணாதிருங்கள். எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள். பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டுவிலகுங்கள். சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக. உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார். சகோதரரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள். சகோதரரெல்லாரையும் பரிசுத்த முத்தத்தோடே வாழ்த்துங்கள். இந்த நிருபம் பரிசுத்தமான சகோதரர் யாவருக்கும் வாசிக்கப்படும்படி செய்யவேண்டுமென்று கர்த்தர் பேரில் ஆணையிட்டு உங்களுக்குச் சொல்லுகிறேன். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்

1 தெசலோனிக்கேயர் 5:12-28

1 தெசலோனிக்கேயர் 5:12-28 TAOVBSI

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்