1 இராஜாக்கள் 19:19-21

1 இராஜாக்கள் 19:19-21 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்படியே எலியா அங்கிருந்துபோய் சாப்பாத்தின் மகன் எலிசாவைக் கண்டான். அவன் பன்னிரண்டு ஜோடி எருதுகளைப் பூட்டிய கலப்பையினால் உழுது கொண்டிருந்தான். பன்னிரண்டாவது ஜோடியை அவன் தானே ஓட்டிக்கொண்டிருந்தான். எலியா அவனுக்குக் கிட்டப்போய் தன் மேலுடையை அவன்மேல் எறிந்தான். அப்பொழுது எலிசா எருதுகளை விட்டுவிட்டு எலியாவின் பின்னாலே ஓடிப்போய், “என் தகப்பனிடமும் தாயிடமும் விடைபெற்று வர அனுமதிக்கவேண்டும். அதன்பின் உம்முடன் வருகிறேன்” என்றான். அதற்கு எலியா, “நீ திரும்பிப்போ. நான் உனக்கு என்ன செய்தேன் என்பதைக் கவனத்தில்கொள்” என்றான். எனவே எலிசா அவனைவிட்டுத் திரும்பிப்போனான். அவன் தனது ஏர் மாடுகளைப் பிடித்து, அவைகளைக் கொன்று, கலப்பையை எரித்து அந்த இறைச்சியைச் சமைத்து அதை மற்றவர்களுக்குக் கொடுத்தான். அவர்கள் சாப்பிட்டார்கள். அதன்பின் எலியாவைப் பின்தொடர்ந்து போய் அவனுக்கு உதவிகளைச் செய்தான்.

1 இராஜாக்கள் 19:19-21 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்படியே அவன் அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய், பன்னிரண்டு ஏர்களைப்பூட்டி உழுத சாப்பாத்தின் மகனாகிய எலிசாவைக் கண்டான்; அவன் 12 ஆம் ஏரை ஓட்டிக்கொண்டிருந்தான்; எலியா அவன் இருக்கும் இடம்வரை போய், அவன்மேல் தன்னுடைய சால்வையைப் போட்டான். அப்பொழுது அவன் மாடுகளைவிட்டு, எலியாவின் பின்னே ஓடி: நான் என்னுடைய தகப்பனையும் என்னுடைய தாயையும் முத்தம்செய்ய உத்திரவு கொடும், அதற்குப்பின்பு உம்மைப் பின்தொடர்வேன் என்றான். அதற்கு அவன்: போய்த் திரும்பிவா; நான் உனக்குச் செய்ததை நினைத்துக்கொள் என்றான். அப்பொழுது அவன் இவனை விட்டுப் போய், ஒரு ஏர் மாடுகளைப் பிடித்து அடித்து, ஏரின் மரங்களால் அவைகளின் இறைச்சியைச் சமைத்து மக்களுக்குக் கொடுத்தான்; அவர்கள் சாப்பிட்டபிறகு, அவன் எழுந்து, எலியாவுக்குப் பின்னேசென்று அவனுக்கு பணிவிடைசெய்தான்.

1 இராஜாக்கள் 19:19-21 பரிசுத்த பைபிள் (TAERV)

எலியா அந்த இடத்தை விட்டுப்போய் சாப்பாத்தின் குமாரனான எலிசாவைக் கண்டு பிடித்தான். எலிசா 12 ஏக்கர் நிலத்தை உழுதுக்கொண்டிருந்தான். எலியா போகும்போது அவன் உழவை முடிக்கிற நிலையில் இருந்தான். பிறகு எலியா அவனிடம் சென்று, அவன் மீது தன் போர்வையை எறிந்தான். உடனே அவன் தன் மாடுகளை விட்டு, விட்டு எலியாவின் பின்னால் போனான். எலிசா, “நான் என் தந்தையிடமும் தாயிடமும் முத்தமிட்டு விடைபெற்று வரட்டுமா?” எனக் கேட்டான். எலியாவோ, “நல்லது போ, என்னால் அதைத் தடுக்க முடியாது” என்றான். எலிசா தன் குடும்பத்துடன் சிறப்பான உணவை உண்டான். எலிசா தன் பசுக்களைக் கொன்றான். நுகத்தடியை ஒடித்து விறகாக்கினான். பிறகு இறைச்சியை சமைத்து அனைவருக்கும் உண்ண உணவளித்தான். பின்னர் அவன் எலியாவிற்குப் பின்னால் போய் அவனுக்கு சேவைசெய்தான்.

1 இராஜாக்கள் 19:19-21 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்படியே அவன் அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போய், பன்னிரண்டு ஏர்பூட்டி உழுத சாப்பாத்தின் குமாரனாகிய எலிசாவைக் கண்டான்; அவன் பன்னிரண்டாம் ஏரை ஓட்டிக்கொண்டிருந்தான்; எலியா அவன் இருக்கும் இடமட்டும் போய், அவன்மேல் தன் சால்வையைப் போட்டான். அப்பொழுது அவன் மாடுகளைவிட்டு, எலியாவின் பிறகே ஓடி: நான் என் தகப்பனையும் என் தாயையும் முத்தஞ்செய்ய உத்தரவு கொடும், அதற்குப்பின் உம்மைப் பின்தொடர்வேன் என்றான். அதற்கு அவன்: போய்த் திரும்பிவா; நான் உனக்குச் செய்ததை நினைத்துக்கொள் என்றான். அப்பொழுது அவன் இவனை விட்டுப் போய், ஒரு ஏர் மாடுகளைப் பிடித்து அடித்து, ஏரின் மரமுட்டுகளால் அவைகளின் இறைச்சியைச் சமைத்து ஜனங்களுக்குக் கொடுத்தான்; அவர்கள் சாப்பிட்டபிற்பாடு, அவன் எழுந்து, எலியாவுக்குப் பின்சென்று அவனுக்கு ஊழியஞ்செய்தான்.