1 இராஜாக்கள் 16:1-34
1 இராஜாக்கள் 16:1-34 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அப்பொழுது பாஷாவுக்கு எதிராக அனானியின் மகன் யெகூவுக்கு யெகோவாவின் வார்த்தை வந்தது. “என் மக்களாகிய இஸ்ரயேலருக்கு உன்னைத் தலைவனாக்கும்படி நான் உன்னைப் புழுதியிலிருந்து உயர்த்தினேன். ஆனால் நீயோ யெரொபெயாமின் வழிகளில் நடந்து என் மக்களான இஸ்ரயேலரையும் பாவம் செய்யப்பண்ணி, அவர்களுடைய பாவங்களின் மூலம் எனக்குக் கோபமூட்டினாய். எனவே நான் பாஷாவையும், அவன் குடும்பத்தையும் அழித்தொழிக்கப் போகிறேன். நேபாத்தின் மகன் யெரொபெயாமின் குடும்பத்தைப்போல் உன் குடும்பத்தையும் ஆக்குவேன். பாஷாவுக்கு சொந்தமானவர்களில், பட்டணத்தில் சாகிறவர்களை நாய்கள் தின்னும்; நாட்டிலே சாகிறவர்களை ஆகாயத்துப் பறவைகள் தின்னும்.” பாஷாவின் அரசாட்சியில் நடந்த மற்றச் சம்பவங்களும், அவனுடைய செயல்களும், சாதனைகளும் இஸ்ரயேலின் அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. பாஷா தன் முற்பிதாக்களைப்போல இறந்து திர்சாவில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப் பிறகு அவனுடைய மகன் ஏலா அவனுடைய இடத்தில் அரசனானான். மேலும் அனானியின் மகனான யெகூ என்ற இறைவாக்கினனுக்கு, பாஷாவுக்கும் அவன் சந்ததிக்கும் எதிராக யெகோவாவின் வார்த்தை வந்தது. ஏனெனில் யெகோவாவின் பார்வையில் அவன் செய்த தீமையினாலும், அவனுடைய செயல்களினால் யெகோவாவைக் கோபமூட்டியபடியினாலும், யெரொபெயாமின் வீட்டைப் போலானபடியினாலும், அவன் யெரொபெயாமின் வீட்டை அழித்தபடியினாலுமே யெகோவாவின் வார்த்தை இப்படி வந்தது. யூதாவின் அரசன் ஆசாவின் இருபத்தி ஆறாவது வருடத்தில் பாஷாவின் மகன் ஏலா இஸ்ரயேலின் அரசனாக வந்தான். இவன் திர்சாவில் இரண்டு வருடங்கள் அரசாண்டான். அப்போது அவனுடைய தேர்களின் அரைப்பகுதிக்குத் தளபதியும், அதிகாரிகளில் ஒருவனுமான சிம்ரி என்பவன் அவனுக்கு எதிராகச் சதி செய்தான். ஒரு நாள் திர்சாவில் அரண்மனைப் பொறுப்பதிகாரியான அர்சாவின் வீட்டில் ஏலா குடிபோதையில் இருந்தான். சிம்ரி உள்ளே போய் அவனைத் தாக்கிக் கொலைசெய்தான். யூதாவின் அரசனாக ஆசா ஆட்சி செய்த இருபத்தேழாம் வருடத்தில் இது நடந்தது. அதன்பின் சிம்ரி தானே அவனுடைய இடத்தில் அரசனானான். அவன் அரசாளத் தொடங்கி அரியணையில் அமர்ந்தவுடன் பாஷாவின் முழு குடும்பத்தையும் கொன்றொழித்தான். அவனுடைய உறவினரிலோ, சிநேகிதரிலோ ஒரு ஆணையும் மீதியாய் விடவில்லை. யெகூ என்ற இறைவாக்கினன் மூலம் பாஷாவுக்கு எதிராக யெகோவா கூறிய வார்த்தை நிறைவேற்றும்படியாக சிம்ரி பாஷாவின் முழுக் குடும்பத்தையும் அழித்தான். பாஷாவும் அவனுடைய மகன் ஏலாவும் செய்த எல்லாப் பாவங்களாலும், அவர்கள் இஸ்ரயேலைப் பாவம் செய்யப்பண்ணியபடியாலும், அவர்களுடைய பயனற்ற விக்கிரகங்களால் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்கு அவர்கள் கோபமூட்டியபடியாலும் அவர்களுக்கு இப்படி நடந்தது. ஏலாவின் ஆட்சியின் மற்ற சம்பவங்களும் அவன் செய்தவைகளும் இஸ்ரயேல் அரசர்களின் வம்ச வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. யூதாவின் அரசன் ஆசாவின் இருபத்தேழாம் வருடத்தில் திர்சாவில் சிம்ரி அரசன் ஏழு நாட்கள் அரசாண்டான். இஸ்ரயேல் படைகள் ஒரு பெலிஸ்திய பட்டணமான கிபெத்தோனுக்கு அருகே முகாமிட்டிருந்தனர். முகாமிலிருந்த இஸ்ரயேலர் சிம்ரி தங்கள் அரசனுக்கு எதிராகச் சதிசெய்தது மட்டுமல்ல, அவனைக் கொலைசெய்தான் என்று கேள்விப்பட்டார்கள். உடனே அவர்கள் தங்கள் படைத்தளபதியான உம்ரியை அதேநாளிலே, முகாமிலிருக்கும்போதே இஸ்ரயேலின்மேல் அரசனாக்கினார்கள். அப்பொழுது உம்ரியும் அவனுடன் இருந்த எல்லா இஸ்ரயேலரும் கிபெத்தோனைவிட்டு பின்வாங்கி, திர்சாவை முற்றுகையிட்டனர். பட்டணம் பிடிக்கப்பட்டதை சிம்ரி கண்டவுடன் அவன் அரச அரண்மனைக் கோட்டைக்குள் போய் அதற்கு நெருப்பு வைத்து, தானும் அதிலே இறந்தான். சிம்ரி தான் செய்த பாவங்களினாலும், அவன் யெரொபெயாமின் பாவங்களைத் தானும் செய்து, இஸ்ரயேல் மக்களையும் அவனுடைய பாவத்தில் வழிநடத்தியபடியாலும், யெகோவாவினுடைய பார்வையில் தீமை செய்தபடியினாலுமே இது நடந்தது. சிம்ரியின் ஆட்சிக் காலத்தின் மிகுதி நிகழ்வுகளும், அவனுடைய கலகமும் இஸ்ரயேல் அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. அதன்பின் இஸ்ரயேலர் இரண்டு பிரிவினராகப் பிரிந்தனர். ஒரு பிரிவினர் கீனாத்தின் மகன் திப்னியையும், மற்றப் பிரிவினர் உம்ரியையும் அரசனாக்குவதற்கு ஆதரவளித்தனர். கீனாத்தின் மகன் திப்னிக்குச் சார்பானவர்களைவிட உம்ரிக்குச் சார்பானவர்கள் பலம் மிக்கவர்களாக இருந்தார்கள். ஆகவே திப்னி இறந்தான், அதன்பின் உம்ரி அரசனானான். யூதாவில் ஆசா அரசாண்ட முப்பத்தோராம் வருடத்தில் உம்ரி இஸ்ரயேலின் அரசனாக வந்து, பன்னிரண்டு வருடங்கள் ஆட்சிசெய்தான். இதில் ஆறு வருடங்கள் திர்சாவில் இருந்து அரசாண்டான். இதன்பின் சேமேர் என்பவனிடமிருந்து சமாரிய மலையை இரண்டு தாலந்து வெள்ளிக்கு வாங்கினான். அந்த மலையில் ஒரு பட்டணத்தைக் கட்டி, முந்தைய சொந்தக்காரனான சேமேரின் பெயரின்படி அதை சமாரியா என அழைத்தான். ஆனால் உம்ரியோ தன் முன்னோரைவிட அதிக பாவம் செய்து யெகோவாவின் பார்வையில் தீமையைச் செய்தான். அவன் நேபாத்தின் மகன் யெரொபெயாமின் வழிகளில் நடந்து இஸ்ரயேலைப் பாவம் செய்யப்பண்ணிய பாவத்தையும் செய்தான். இதனாலேயே பயனற்ற விக்கிரகங்களினால் இஸ்ரயேலர் தங்கள் இறைவனாகிய யெகோவாவைக் கோபமூட்டினார்கள். உம்ரியின் ஆட்சியின் மிகுதி நிகழ்வுகளும், அவன் செய்தவைகளும் இஸ்ரயேல் அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. இதன்பின் உம்ரி தன் முற்பிதாக்களைப்போல இறந்து, சமாரியாவில் அடக்கம் செய்யப்பட்டான். அவன் மகன் ஆகாப் அவனுக்குப்பின் அரசனானான். யூதாவின் அரசன் ஆசாவின் முப்பத்தி எட்டாம் வருடத்தில் உம்ரியின் மகன் ஆகாப் இஸ்ரயேலின் அரசனாக வந்தான். இவன் இருபத்திரண்டு வருடங்கள் சமாரியாவிலிருந்து இஸ்ரயேலை அரசாண்டான். உம்ரியின் மகன் ஆகாப் தனக்கு முன் அரசாண்ட எல்லோரைப் பார்க்கிலும், யெகோவாவின் பார்வையில் அதிக தீமையைச் செய்தான். நேபாத்தின் மகன் யெரொபெயாமின் பாவங்களைத் தான் செய்வது ஒரு அற்பமான செயல் எனக் கருதியது மட்டுமல்ல; சீதோனியரின் அரசன் ஏத்பாகாலின் மகள் யேசபேலையும் திருமணம் செய்து, பாகாலுக்கு சேவைசெய்து அதை வணங்கினான். சமாரியாவில் அவன் கட்டிய பாகாலின் கோவிலில் பாகாலுக்கென்று ஒரு பலி மேடையையும் அமைத்தான். அதோடுகூட ஆகாப், அசேரா விக்கிரக தூணையும் நிறுத்தி, தனக்கு முன் இருந்த எல்லா இஸ்ரயேல் அரசரைக் காட்டிலும், இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவைக் கோபமூட்டும்படி அதிகமானதைச் செய்தான். ஆகாபின் காலத்தில் பெத்தேலில் இருந்த ஈயேல் என்பவன் எரிகோவைத் திரும்பக் கட்டினான். நூனின் மகன் யோசுவா மூலம் கூறப்பட்ட யெகோவாவின் வார்த்தையின்படியே, ஈயேல் அஸ்திபாரங்களை போடும்போது தன் மூத்த மகன் அபிராமை சாகக்கொடுத்தான். வாசல்களை அமைக்கும்போது இளையமகன் செகூப்பையும் சாகக்கொடுத்தான்.
1 இராஜாக்கள் 16:1-34 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பாஷாவுக்கு எதிராகக் யெகோவாவுடைய வார்த்தை அனானியின் மகனாகிய யெகூவுக்கு உண்டானது, அவர்: நான் உன்னைத் குப்பையிலிருந்து உயர்த்தி, உன்னை என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலின்மேல் தலைவனாக வைத்திருக்கும்போது, நீ யெரொபெயாமின் வழியிலே நடந்து, என்னுடைய மக்களாகிய இஸ்ரவேல் தங்களுடைய பாவங்களால் எனக்குக் கோபமுண்டாக்கும்படி அவர்களைப் பாவம் செய்யச்செய்கிறபடியால், இதோ, நான் பாஷாவுக்கு பின்பு வருபவர்களையும் அவனுடைய வீட்டாருக்கு பின்பு வருபவர்களையும் அழித்துப்போட்டு, உன்னுடைய வீட்டை நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் வீட்டைப்போல ஆக்குவேன். பாஷாவின் சந்ததியிலே பட்டணத்திலே சாகிறவனை நாய்கள் சாப்பிடும்; வெளியிலே சாகிறவனை ஆகாயத்துப் பறவைகள் சாப்பிடும் என்றார். பாஷாவின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்ததும், அவனுடைய வல்லமையும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது. பாஷா இறந்து தன்னுடைய பிதாக்களோடு திர்சாவில் அடக்கம் செய்யப்பட்டான்; அவனுடைய மகனாகிய ஏலா அவனுடைய இடத்தில் ராஜாவானான். பாஷா தன்னுடைய கைகளின் செய்கையால் யெகோவாவுக்குக் கோபமுண்டாக்கி, அவருடைய பார்வைக்குச் செய்த எல்லாத் தீமையினால், அவன் யெரொபெயாமின் வீட்டாரை வெட்டிப்போட்டதால், இவர்களைப்போல் ஆவான் என்று அவனுக்கும், அவனுடைய வீட்டுக்கும் எதிராக அனானியின் மகனாகிய யெகூ என்னும் தீர்க்கதரிசியினால் யெகோவாவுடைய வார்த்தை பின்னும் உண்டாயிற்று. யூதாவின் ராஜாவான ஆசாவின் 26 ஆம் வருடத்திலே பாஷாவின் மகனாகிய ஏலா இஸ்ரவேலின்மேல் திர்சாவிலே ராஜாவாகி இரண்டு வருடங்கள் அரசாட்சி செய்தான். இரதங்களில் பாதிபங்குக்குத் தலைவனாகிய சிம்ரி என்னும் அவனுடைய வேலைக்காரன் அவனுக்கு விரோதமாக சதிசெய்து, அவன் திர்சாவிலே அந்த இடத்தின் அரண்மனைப் பொறுப்பாளன் அர்சாவின் வீட்டிலே குடிவெறியில் இருக்கும்போது, சிம்ரி உள்ளே புகுந்து, யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் 27 ஆம் வருடத்தில் அவனை வெட்டிக் கொன்றுபோட்டு, அவனுடைய இடத்தில் ராஜாவானான். அவன் ராஜாவாகி, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தபோது, அவன் பாஷாவின் வீட்டார்களையெல்லாம் வெட்டிப்போட்டான்; அவனுடைய உறவினர்களையோ, நண்பர்களையோ, சுவரில் நீர்விடும் ஒரு நாயையோ, அவன் உயிரோடு வைக்கவில்லை. அப்படியே பாஷாவும், அவனுடைய மகனாகிய ஏலாவும், தங்கள் வீணான விக்கிரகங்களினாலே இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்குக் கோபமுண்டாக்கிச் செய்ததும் இஸ்ரவேலைச் செய்யவைத்ததுமான அவர்களுடைய எல்லாப் பாவங்களினால், யெகோவா தீர்க்கதரிசியாகிய யெகூவினால் பாஷாவைக்குறித்துச் சொல்லியிருந்த அவருடைய வார்த்தையின்படியே, சிம்ரி பாஷாவின் வீட்டாரையெல்லாம் அழித்துப்போட்டான். ஏலாவின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்தவைகளும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது. யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் இருபத்தேழாம் வருடத்திலே சிம்ரி திர்சாவிலே ஏழுநாட்கள் ராஜாவாக இருந்தான்; மக்கள் அப்பொழுது பெலிஸ்தர்களுக்கு இருக்கிற கிபெத்தோனுக்கு எதிராக முகாமிட்டிருந்தார்கள். சிம்ரி சதிசெய்து, ராஜாவைக் கொன்றுபோட்டான் என்பதை அங்கே முகாமிட்டிருந்த மக்கள் கேட்டபோது, இஸ்ரவேலர்களெல்லாம் அந்த நாளிலே முகாமிலே படைத்தலைவனாகிய உம்ரியை இஸ்ரவேலுக்கு ராஜாவாக்கினார்கள். அப்பொழுது உம்ரியும் அவனோடு இஸ்ரவேல் அனைத்தும் கிபெத்தோனிலிருந்து வந்து, திர்சாவை முற்றுகை போட்டார்கள். பட்டணம் பிடிபட்டதை சிம்ரி கண்டபோது, அவன் ராஜாவின் வீடாகிய அரண்மனைக்குள் நுழைந்து, தான் இருக்கிற ராஜ அரண்மனையைத் தீயிட்டுகொளுத்தி, அதிலே செத்தான். அவன் யெகோவாவின் பார்வைக்குத் தீமையானதைச் செய்து, யெரொபெயாமின் வழியிலும் அவன் இஸ்ரவேலைப் பாவம்செய்யச்செய்த அவனுடைய பாவத்திலும் நடந்ததால், அப்படி நடந்தது. சிம்ரியின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த அவனுடைய சதியும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது. அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் இரண்டு வகுப்பாகப் பிரிந்து, பாதி மக்கள் கீனாத்தின் மகனாகிய திப்னியை ராஜாவாக்க, அவனைப் பின்பற்றினார்கள்; பாதி மக்கள் உம்ரியைப் பின்பற்றினார்கள். ஆனாலும் கீனாத்தின் மகனாகிய திப்னியைப் பின்பற்றின மக்களைவிட, உம்ரியைப் பின்பற்றின மக்கள் பலப்பட்டார்கள்; திப்னி இறந்துபோனான்; உம்ரி அரசாட்சி செய்தான். யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் முப்பத்தோராம் வருடத்தில், உம்ரி இஸ்ரவேல்மேல் ராஜாவாகி, பன்னிரண்டு வருடங்கள் அரசாட்சிசெய்தான்; அவன் திர்சாவிலே ஆறு வருடங்கள் அரசாட்சி செய்து, பின்பு சேமேரின் கையிலிருந்து சமாரியா மலையை இரண்டு தாலந்து வெள்ளிக்கு வாங்கி, அந்த மலையின்மேல் ஒரு பட்டணத்தைக் கட்டி, அதற்கு மலையினுடைய எஜமானாக இருந்த சேமேருடைய பெயரின்படியே சமாரியா என்னும் பெயரை வைத்தான். உம்ரி யெகோவாவின் பார்வைக்குத் தீங்கானதைச் செய்து, தனக்கு முன்னே இருந்த எல்லோரையும்விட கேடாக நடந்து, நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் எல்லா வழியிலும், இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்குத் தங்களுடைய வீணான விக்கிரகங்களாலே கோபம் ஏற்படுத்தும்படியாக இஸ்ரவேலைப் பாவம்செய்யச்செய்த அவனுடைய பாவங்களிலும் நடந்தான். உம்ரி செய்த அவனுடைய மற்ற செயல்பாடுகளும், அவன் காண்பித்த வல்லமையும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது. உம்ரி இறந்து தன்னுடைய முன்னோர்களோடு, சமாரியாவிலே அடக்கம் செய்யப்பட்டான்; அவனுடைய மகனாகிய ஆகாப் அவனுடைய இடத்தில் ராஜாவானான். யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் 38 ஆம் வருடத்தில் உம்ரியின் மகனாகிய ஆகாப் இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி, சமாரியாவில் இஸ்ரவேலின்மேல் 22 வருடங்கள் அரசாட்சி செய்தான். உம்ரியின் மகனாகிய ஆகாப், தனக்கு முன்னே இருந்த எல்லோரையும் விட யெகோவாவின் பார்வைக்குத் தீங்கானதைச் செய்தான். நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் பாவங்களில் நடப்பது அவனுக்குக் கொஞ்சக்காரியமென்று நினைத்ததைப்போல அவன் சீதோனியர்களின் ராஜாவாகிய ஏத்பாகாலின் மகள் யேசபேலை திருமணம் செய்ததுமல்லாமல், அவன் போய் பாகாலையும் தொழுது அதைப் பணிந்துகொண்டு, தான் சமாரியாவிலே கட்டின பாகாலின் கோவிலில் பாகாலுக்குப் பலிபீடத்தைக் கட்டினான். ஆகாப் ஒரு விக்கிரகத்தோப்பையும் வைத்து, இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்குக் கோபம் உண்டாக்கும்படி தனக்கு முன்னே இருந்த இஸ்ரவேலின் ராஜாக்களெல்லாம் செய்ததைவிட அதிகமாகச் செய்துவந்தான். அவனுடைய நாட்களிலே பெத்தேல் ஊரைச்சேர்ந்த ஈயேல் எரிகோவைக் கட்டினான்; யெகோவா நூனின் மகனாகிய யோசுவாவைக்கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே, அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது, அபிராம் என்னும் தன்னுடைய மூத்த மகனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது செகூப் என்னும் தன்னுடைய இளைய மகனையும் சாகக்கொடுத்தான்.
1 இராஜாக்கள் 16:1-34 பரிசுத்த பைபிள் (TAERV)
பிறகு கர்த்தர் ஆனானியின் குமாரனான யெகூவோடு பாஷாவிற்கு எதிராக கீழ்க்கண்டவாறு பேசினார்: “நான் உன்னை ஒரு முக்கியமான மனிதனாகச் செய்தேன். உன்னை இஸ்ரவேலின் ராஜாவாக்கினேன். ஆனால் நீ யெரொபெயாமின் வழியில் என் ஜனங்களை பாவத்துக்குள்ளாக்குகிறாய். இது எனக்குப் பெரும்கோபத்தை உண்டாக்கிற்று. எனவே நான் பாஷாவையும் அவனது குடும்பத்தையும் அழிப்பேன். நான் நாபாத்தின் குமாரனான யெரொபெயாமின் குடும்பத்திற்குச் செய்ததுபோலவே செய்வேன். இந்நகரத் தெருக்களில் நாய்கள் உண்ணும்படி உன் குடும்பத்தினர் சிலர் மரிப்பார்கள். இன்னும் சிலர் வயல்வெளிகளில் மரிப்பார்கள். அவர்கள் பிணங்களைப் பறவைகள் தின்னும்.” பாஷாவைப்பற்றிய அவன் செய்த பெருஞ் செயல்களைப்பற்றி இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. பாஷா மரித்ததும் திர்சா நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான். அவனது குமாரனான ஏலா அடுத்த ராஜாவானான். எனவே கர்த்தர், பாஷாவிற்கும் அவனது குடும்பத்திற்கும் எதிரான செய்திகளை ஆனானியின் குமாரனான யெகூ தீர்க்கதரிசி மூலம் சொன்னார். பாஷா கர்த்தருக்கு எதிராக மிகுந்தபாவம் செய்ததால் அவன் மீது கர்த்தருடைய கோபம் அதிகரித்தது. அவனுக்கு முன் யெரொபெயாம் குடும்பத்தினர் செய்தது போலவே பாஷா பாவங்களைச் செய்தான். பாஷா யெரொபெயாம் குடும்பத்தை அழித்ததாலும் கர்த்தருக்குக் கோபம் ஏற்பட்டது. யூதாவின் ராஜாவாகிய ஆசா 26ஆம் ஆண்டில் இருக்கும்போது ஏலா இஸ்ரவேலின் ராஜாவானான். பாஷாவின் குமாரனான இவன் திர்சாவில் 2 ஆண்டுகள் ஆண்டான். சிம்ரி ஏலாவின் அதிகாரிகளுள் ஒருவன். இரதப் படையின் பாதிக்குத் தளபதி. இவன் ஏலாவிற்கு எதிராகக் திட்டமிட்டான். ராஜா திர்சாவில் அர்சாவின் வீட்டில் குடித்தும் குடிக்க வைத்துக்கொண்டும் இருந்தான். அர்சா அரண்மனை பொறுப்பாளி. சிம்ரி அந்த வீட்டிற்குப்போய் ராஜாவைக் கொன்றுவிட்டான். இது யூதாவின் ராஜாவாக ஆசா 27ஆம் ஆண்டில் இருந்தபோது நடந்தது. பின்னர் சிம்ரி அடுத்து ராஜாவானான். சிம்ரி ராஜாவாகியதும், பாஷாவின் குடும்பத்திலுள்ள அனைவரையும் கொன்றான். எவரையும் உயிரோடு விடவில்லை. பாஷாவின் நண்பர்களையும் கொன்றான். இது பாஷாவிக்கு எதிராக யெகூ தீர்க்கதரிசியிடம் கர்த்தர் சொன்னதுபோலவே ஆயிற்று. இது, பாஷாவும் அவனது குமாரன் ஏலாவும் செய்த பாவத்தால் ஆயிற்று. அவர்கள் தாம் பாவம் செய்ததோடு இஸ்ரவேல் ஜனங்களும் பாவம் செய்ய காரணமானார்கள். அவர்கள் பல விக்கிரகங்களைச் செய்து தொழுதுகொண்டதால் கர்த்தரால் கோபம்கொள்ளக் காரணமானார்கள். ஏலா செய்த பிறசெயல்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. யூதாவின் ராஜாவாக ஆசா 27வது ஆண்டில் இருக்கும்போது சிம்ரி ராஜாவானான். அவன் திர்சாவிலிருந்து 7 நாட்கள்தான் ஆண்டான். இஸ்ரவேல் படைகள் பெலிஸ்தியரின் கிபெத்தோனுக்கு அருகில் முகாமிட்டுத் தங்கினார்கள். அவர்கள் போருக்குத் தயாராயிருந்தார்கள். சிம்ரி ராஜாவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாக படையிலிருந்தவர்கள் அறிந்தார்கள். அவன் ராஜாவைக் கொன்றதாகவும் கேள்விப்பட்டார்கள். எனவே எல்லா இஸ்ரவேலர்களும் அன்று முகாமில் உம்ரியை இஸ்ரவேல் முழுவதற்கும் ராஜாவாக்கினார்கள். உம்ரி படைத்தலைவனாக இருந்தான். ஆகவே உம்ரியும் இஸ்ரவேலர்கள் அனைவரும் கிபெத்தோனிலிருந்து சென்று திர்சாவைத் தாக்கினார்கள். சிம்ரி தன் நகரம் கைப்பற்றப்படுவதை அறிந்து அரண்மனைக்குப் போய் தனக்கும் அரண்மனைக்கும் தீவைத்து அதில் செத்தான். தனது பாவத்தால் சிம்ரி மரித்துப்போனான். இவன் கர்த்தருக்கு எதிராக பாவம் செய்தான். யெரொபெயாம் பாவம் செய்தது போலவே இவனும் பாவம் செய்து இஸ்ரவேல் ஜனங்கள் பாவம் செய்வதற்கும் காரணம் ஆனான். இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் சிம்ரி செய்தசதிகளும் பிறசெயல்களும் எழுதப்பட்டுள்ளன. அதில் அவன் ஏலாவிற்கு எதிராகக் கிளம்பியதும் சொல்லப்பட்டுள்ளது. இஸ்ரவேல் ஜனங்கள் இருபிரிவாகப் பிரிந்து ஒரு பகுதி கீனாத்தான் குமாரனான திப்னியையும், இன்னொரு பகுதி உம்ரியையும் ராஜாவாக்க விரும்பினார்கள். ஆனால் உம்ரியின் ஆட்கள் திப்னியின் ஆட்களைவிடப் பலமிக்கவர்கள். எனவே திப்னியைக் கொன்று உம்ரி ராஜாவானான். யூதாவின் ராஜாவாக ஆசா ஆட்சி புரிந்த 31வது ஆண்டில் இஸ்ரவேலின் ராஜாவாக உம்ரி ஆனான். உம்ரி 12 ஆண்டுகள் ஆண்டான். இதில் 6 ஆண்டு காலம் அவன் திர்சாவிலிருந்து ஆண்டான். உம்ரி சமாரியா மலையை சேமேரிடமிருந்து வாங்கினான். அதன் விலை 2 தாலந்து வெள்ளி. அதில் நகரத்தைக் கட்டி அதன் சொந்தக்காரனான சேமேரின் பெயரால் சமாரியா என்று பெயரிட்டான். உம்ரி கர்த்தருக்கு எதிராகப் பாவங்களைச் செய்தான். அவனுக்கு முன்னால் உள்ளவர்களை விட மோசமாக இருந்தான். நேபாத்தின் குமாரனான யெரொபெயாம் செய்த பாவங்களையெல்லாம் இவனும் செய்தான். யெரொபெயாம் தானும் பாவம் செய்து, ஜனங்களையும் பாவம்செய்யத் தூண்டி இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய கோபத்துக்கு ஆளானான். பயனற்ற விக்கிரகங்களையும் தொழுதுகொண்டான். இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் உம்ரி செய்த மற்ற செயல்களையும் அவர் செய்த அருஞ்செயல்களும் எழுதப்பட்டுள்ளன. உம்ரி மரித்து சமாரியா நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான். இவனது குமாரன் ஆகாப் புதிய ராஜாவானான். யூதாவின் ராஜாவாகிய ஆசா 38வது ஆண்டில் இருக்கும்போது ஆகாப் இஸ்ரவேலின் புதிய ராஜாவானான். இவன் சமாரியாவில் இருந்து 22 ஆண்டுகள் ஆண்டான். இவனும் கர்த்தருக்கு விரோதமாகப் பாவங்களைச் செய்தான். அவனுக்கு முன்னால் உள்ளவர்களைவிட மோசமாக இருந்தான். நேபாத்தின் குமாரனான யெரொபெயாம் செய்த அதே பாவங்களைச் செய்வது இவனுக்குப் போதுமானதாயிருக்கவில்லை. அவன் சீதோனியரின் ராஜாவாகிய ஏத்பாகாலின் குமாரத்தி யேசபேலை மணந்து பாகாலையும் தொழுதுகொண்டான். சமாரியாவில் பாகாலுக்கு ஆலயத்தைக் கட்டினான். ஆலயத்தில் பலிபீடமும் அமைத்தான். ஒரு சிறப்பான தூணையும் அஷெராவை தொழுதுகொள்ள உருவாக்கினான். அவனுக்கு முன்பு இஸ்ரவேலின் ராஜாவாக இருந்த மற்றவர்களைவிட இவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை அதிகமாகக் கோபப்படுத்தினான். இவனது காலத்தில், ஈயேல் எனும் பெத்தேல் ஊரான் எரிகோவைக்கட்டினான். அப்போது, அவனது மூத்தகுமாரனான அபிராம் மரித்தான். நகர வாயில்களை அமைக்கும் போது, இளைய குமாரன் செகூப் மரித்தான். நூனின் குமாரனான யோசுவாவின் மூலமாகப் பேசியபொழுது இது நடக்குமென்று கர்த்தர் சொன்னைதைப்போலவே இது நடந்தது.
1 இராஜாக்கள் 16:1-34 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பாஷாவுக்கு விரோதமாகக் கர்த்தருடைய வார்த்தை ஆனானியின் குமாரனாகிய யெகூவுக்கு உண்டாயிற்று, அவர்: நான் உன்னைத் தூளிலிருந்து உயர்த்தி, உன்னை என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் தலைவனாக வைத்திருக்கையில், நீ யெரொபெயாமின் வழியிலே நடந்து, என் ஜனமாகிய இஸ்ரவேல் தங்கள் பாவங்களால் எனக்குக் கோபமுண்டாக்கும்படி அவர்களைப் பாவஞ்செய்யப்பண்ணுகிறபடியினால், இதோ, நான் பாஷாவின் பின்னடியாரையும் அவன் வீட்டாரின் பின்னடியாரையும் அழித்துப்போட்டு, உன் வீட்டை நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் வீட்டைப்போல ஆக்குவேன். பாஷாவின் சந்ததியிலே பட்டணத்திலே சாகிறவனை நாய்கள் தின்னும்; வெளியிலே சாகிறவனை ஆகாயத்துப் பறவைகள் தின்னும் என்றார். பாஷாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்ததும், அவனுடைய வல்லமையும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. பாஷா தன் பிதாக்களோடே நித்திரையடைந்து திர்சாவில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய ஏலா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். பாஷா தன் கைகளின் செய்கையால் கர்த்தருக்குக் கோபமுண்டாக்கி, அவர் பார்வைக்குச் செய்த எல்லாப் பொல்லாப்பினிமித்தமும், அவன் யெரொபெயாமின் வீட்டாரை வெட்டிப்போட்டதினிமித்தமும், இவர்களைப்போல் ஆவான் என்று அவனுக்கும் அவன் வீட்டுக்கும் விரோதமாக ஆனானியின் குமாரனாகிய யெகூ என்னும் தீர்க்கதரிசியினால் கர்த்தருடைய வார்த்தை பின்னும் உண்டாயிற்று. யூதாவின் ராஜாவான ஆசாவின் இருபத்தாறாம் வருஷத்திலே பாஷாவின் குமாரனாகிய ஏலா இஸ்ரவேலின்மேல் திர்சாவிலே ராஜாவாகி இரண்டு வருஷம் அரசாண்டான். இரதங்களில் பாதிபங்குக்குத் தலைவனாகிய சிம்ரி என்னும் அவன் ஊழியக்காரன் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, அவன் திர்சாவிலே அவ்விடத்து அரமனை உக்கிராணக்காரனாகிய அர்சாவின் வீட்டிலே குடித்து வெறிகொண்டிருக்கையில், சிம்ரி உள்ளே புகுந்து, யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் இருபத்தேழாம் வருஷத்தில் அவனை வெட்டிக் கொன்றுபோட்டு, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். அவன் ராஜாவாகி, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தபோது, அவன் பாஷாவின் வீட்டாரையெல்லாம் வெட்டிப்போட்டான்; அவன் இனத்தாரையாகிலும், அவன் சிநேகிதரையாகிலும், சுவரில் நீர்விடும் ஒரு நாயையாகிலும், அவன் உயிரோடே வைக்கவில்லை. அப்படியே பாஷாவும், அவன் குமாரனாகிய ஏலாவும், தங்கள் வீணான விக்கிரகங்களினாலே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குக் கோபமுண்டாக்கிச் செய்ததும் இஸ்ரவேலைச் செய்யப்பண்ணினதுமான அவர்களுடைய எல்லாப் பாவங்களினிமித்தமும், கர்த்தர் தீர்க்கதரிசியாகிய யெகூவினால் பாஷாவைக்குறித்துச் சொல்லியிருந்த அவருடைய வார்த்தையின்படியே, சிம்ரி பாஷாவின் வீட்டாரையெல்லாம் அழித்துப்போட்டான். ஏலாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் இருபத்தேழாம் வருஷத்திலே சிம்ரி திர்சாவிலே ஏழுநாள் ராஜாவாயிருந்தான்; ஜனங்கள் அப்பொழுது பெலிஸ்தருக்கு இருக்கிற கிபெத்தோனுக்கு எதிராகப் பாளயமிறங்கியிருந்தார்கள். சிம்ரி கட்டுப்பாடுபண்ணி, ராஜாவைக் கொன்றுபோட்டான் என்பதை அங்கே பாளயமிறங்கின ஜனங்கள் கேட்டபோது, இஸ்ரவேலரெல்லாம் அந்நாளிலேதானே பாளயத்திலே படைத்தலைவனாகிய உம்ரியை இஸ்ரவேல்மேல் ராஜாவாக்கினார்கள். அப்பொழுது உம்ரியும் அவனோடேகூட இஸ்ரவேல் அனைத்தும் கிபெத்தோனிலிருந்து வந்து, திர்சாவை முற்றிக்கை போட்டார்கள். பட்டணம் பிடிபட்டதைச் சிம்ரி கண்டபோது, அவன் ராஜாவின் வீடாகிய அரமனைக்குள் பிரவேசித்து, தான் இருக்கிற ராஜ அரமனையைத் தீக்கொளுத்தி, அதிலே செத்தான். அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, யெரொபெயாமின் வழியிலும் அவன் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின அவன் பாவத்திலும் நடந்ததினால், கட்டிக்கொண்ட அவனுடைய பாவங்களினிமித்தம் அப்படி நடந்தது. சிம்ரியின் மற்ற வர்த்தமானங்களும், அவன் பண்ணின அவனுடைய கட்டுப்பாடும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. அப்பொழுது இஸ்ரவேல் ஜனங்கள் இரண்டு வகுப்பாய்ப் பிரிந்து, பாதி ஜனங்கள் கீனாத்தின் குமாரனாகிய திப்னியை ராஜாவாக்க, அவனைப் பின்பற்றினார்கள்; பாதி ஜனங்கள் உம்ரியைப் பின்பற்றினார்கள். ஆனாலும் கீனாத்தின் குமாரனாகிய திப்னியைப் பின்பற்றின ஜனங்களைப்பார்க்கிலும், உம்ரியைப் பின்பற்றின ஜனங்கள் பலத்துப்போனார்கள்; திப்னி செத்துப்போனான்; உம்ரி அரசாண்டான். யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் முப்பத்தோராம் வருஷத்தில், உம்ரி இஸ்ரவேல்மேல் ராஜாவாகி, பன்னிரண்டு வருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்; அவன் திர்சாவிலே ஆறு வருஷம் அரசாண்டு, பின்பு சேமேரின் கையிலிருந்து சமாரியா மலையை இரண்டு தாலந்து வெள்ளிக்கு வாங்கி, அந்த மலையின்மேல் ஒரு பட்டணத்தைக் கட்டி, அதற்கு மலையினுடைய எஜமானாயிருந்த சேமேருடைய பேரின்படியே சமாரியா என்னும் பேரைத் தரித்தான். உம்ரி கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, தனக்கு முன்னிருந்த எல்லாரைப்பார்க்கிலும் கேடாய் நடந்து, நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் சகல வழியிலும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குத் தங்கள் வீணான விக்கிரகங்களாலே கோபம் மூட்டும்படியாய் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின அவனுடைய பாவங்களிலும் நடந்தான். உம்ரி செய்த அவனுடைய மற்ற வர்த்தமானங்களும், அவன் காண்பித்த வல்லமையும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. உம்ரி தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, சமாரியாவிலே அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய ஆகாப் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் முப்பத்தெட்டாம் வருஷத்தில் உம்ரியின் குமாரனாகிய ஆகாப் இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி, சமாரியாவில் இஸ்ரவேலின்மேல் இருபத்திரண்டு வருஷம் ராஜ்யபாரம் பண்ணினான். உம்ரியின் குமாரனாகிய ஆகாப், தனக்கு முன்னிருந்த எல்லாரைப்பார்க்கிலும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான். நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களில் நடப்பது அவனுக்குக் கொஞ்சக்காரியமென்று நினைத்தாற்போல் அவன் சீதோனியரின் ராஜாவாகிய ஏத்பாகாலின் குமாரத்தி யேசபேலை விவாகம்பண்ணினதுமல்லாமல், அவன் போய் பாகாலையும் சேவித்து அதைப் பணிந்துகொண்டு, தான் சமாரியாவிலே கட்டின பாகாலின் கோவிலில் பாகாலுக்குப் பலிபீடத்தை எடுப்பித்தான். ஆகாப் ஒரு விக்கிரகத்தோப்பையும் வைத்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குக் கோபம் உண்டாக்கும்படிக்கு தனக்கு முன்னிருந்த இஸ்ரவேலின் ராஜாக்களெல்லாம் செய்ததைப்பார்க்கிலும் அதிகமாய்ச் செய்துவந்தான். அவன் நாட்களிலே பெத்தேல் ஊரானாகிய ஈயேல் எரிகோவைக் கட்டினான்; கர்த்தர் நூனின் குமாரனாகிய யோசுவாவைக்கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே, அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது, அபிராம் என்னும் தன் மூத்த குமாரனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது செகூப் என்னும் தன் இளையகுமாரனையும் சாகக்கொடுத்தான்.