1 கொரிந்தியர் 9:19-23

1 கொரிந்தியர் 9:19-23 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

நான் சுதந்திரமான மனிதன். எந்த ஒரு மனிதனுக்கும் என்மேல் உரிமையில்லாதிருந்தும், அநேகரை கிறிஸ்துவுக்குள்ளாக ஆதாயப்படுத்திக்கொள்ள, எல்லோருக்கும் என்னை அடிமையாக்கிக்கொள்கிறேன். யூதர்களை ஆதாயப்படுத்திக்கொள்ள, நான் யூதருக்கு யூதனைப் போலானேன். மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்பட்டவர்களுக்கு, நானும் மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்பட்டவனைப் போலானேன். அவ்வாறே, நான் மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்படாதவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ள, மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்படாதவனைப் போலானேன். மோசேயின் சட்டம் இல்லாதவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ள, நானும் மோசேயின் சட்டம் இல்லாதவன் போலானேன். ஆனால் நான் இறைவனுடைய சட்டத்திற்கு உட்படாதவனல்ல, நான் கிறிஸ்துவின் சட்டத்துக்குக் கீழ்ப்பட்டவன். பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ள, நான் பலவீனருக்கு பலவீனனானேன். எப்படியாவது சிலரையாவது இரட்சிப்புக்குள் வழிநடத்தும்படி, நான் எல்லோருக்கும் எல்லாமானேன். நற்செய்தியின் ஆசீர்வாதங்களில் நான் பங்கு பெறும்படியாகவே நற்செய்தியின் நிமித்தமே இவை எல்லாவற்றையும் நான் செய்கிறேன்.

1 கொரிந்தியர் 9:19-23 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நான் ஒருவருக்கும் அடிமைப்படாதவனாக இருந்தும், நான் அதிக மக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, என்னைத்தானே எல்லோருக்கும் அடிமையாக்கினேன். யூதர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, யூதர்களுக்கு யூதனைப்போலவும், நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவனைப்போலவும் ஆனேன். நியாயப்பிரமாணம் இல்லாதவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு அவர்களுக்கு நியாயப்பிரமாணம் இல்லாதவனைப்போலவும் ஆனேன். அப்படியிருந்தும், நான் தேவனுக்குமுன்பாக நியாயப்பிரமாணம் இல்லாதவனாக இல்லாமல், கிறிஸ்துவின் பிரமாணத்திற்கு உட்பட்டவனாக இருக்கிறேன். பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன்; எப்படியாவது சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லோருக்கும் எல்லாமானேன். நற்செய்தியின் ஆசீர்வாதங்களில் நான் உடன்பங்காளியாகும்படிக்கு, அதினிமித்தமே இப்படிச்செய்கிறேன்.

1 கொரிந்தியர் 9:19-23 பரிசுத்த பைபிள் (TAERV)

நான் சுதந்திரமானவன். யாருக்கும் உரியவன் அல்ல. ஆனால் எல்லா மனிதருக்கும் என்னை அடிமையாக்குகிறேன். என்னால் இயன்ற அளவுக்கு மக்களைக் காப்பதற்காக இதைச் செய்கிறேன். யூதர்களிடம் நான் யூதனைப் போலானேன். யூதர்களை காப்பதற்காக இதைச் செய்தேன். நான் சட்டத்தின் ஆளுகைக்குக் கட்டுப்படாதவன்தான். ஆனால் சட்டப்படி வாழும் மக்களின் முன்பு சட்டப்படி வாழும் மனிதனாகவே நான் ஆனேன். சட்டத்தால் ஆளப்படுகிற மக்களைக் காப்பாற்றவே நான் இதைச் செய்தேன். சட்டத்தின் கீழ் இல்லாத மக்களிடம் சட்டத்தைப் பின்பற்றாதவனாக நடந்துகொண்டேன். சட்டத்தின்படி நடவாத மக்களை காப்பதற்காக நான் இதைச் செய்தேன். (ஆனால் தேவனின் சட்டத்தை நான் மீறவில்லை. கிறிஸ்துவின் சட்டப்படியே நான் ஆளப்படுகிறேன்) பலவீனமான மனிதரை அவர்கள் கர்த்தருக்கென்று ஆதாயம் செய்யும்படி பலவீனமானவனைப்போல நடந்துகொண்டேன். எல்லா மனிதர்களுக்கும் நான் எல்லாரையும்போல நடந்துகொண்டேன். எந்த வகையிலாவது மனிதர்கள் இரட்சிக்கப்பட வேண்டுமென இவ்வாறு செய்தேன். நற்செய்தியின் பொருட்டு இவற்றையெல்லாம் செய்கிறேன். நற்செய்தியின் ஆசீர்வாதத்தில் பங்குபெற விரும்பி இவற்றைச் செய்கிறேன்.

1 கொரிந்தியர் 9:19-23 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நான் ஒருவருக்கும் அடிமைப்படாதவனாயிருந்தும், நான் அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, என்னைத்தானே எல்லாருக்கும் அடிமையாக்கினேன். யூதரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு யூதருக்கு யூதனைப்போலவும், நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவனைப் போலவுமானேன். நியாயப்பிரமாணமில்லாதவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு அவர்களுக்கு நியாயப்பிரமாணம் இல்லாதவனைப்போலவுமானேன். அப்படியிருந்தும், நான் தேவனுக்குமுன்பாக நியாயப்பிரமாணமில்லாதவனாயிராமல், கிறிஸ்துவின் பிரமாணத்துக்குள்ளானவனாயிருக்கிறேன். பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன்; எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன். சுவிசேஷத்தில் நான் உடன்பங்காளியாகும்படிக்கு, அதினிமித்தமே இப்படிச் செய்கிறேன்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்