1 கொரிந்தியர் 15:12-26

1 கொரிந்தியர் 15:12-26 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஆனால், கிறிஸ்து இறந்தோரிலிருந்து உயிருடன் எழுப்பப்பட்டார் என்று பிரசங்கிக்கப்பட்டிருக்க, இறந்தோர் உயிர்த்தெழுவதில்லை என்று உங்களில் சிலர் எப்படிச் சொல்லலாம்? இறந்தோர் உயிர்த்தெழுவதில்லை என்றால், கிறிஸ்துவும் உயிருடன் எழுப்பப்படவில்லையே. கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால், நாங்கள் பிரசங்கம் செய்வதும் வீண். உங்கள் விசுவாசமும் வீணானதே. அதுவுமல்லாமல், இறந்தவர்கள் உயிருடன் எழுப்பப்படவில்லை என்பது உண்மையானால், இறைவன் கிறிஸ்துவையும் உயிருடன் எழுப்பவில்லை என்றே அர்த்தமாகிறது. எனவே, இறைவன் கிறிஸ்துவை உயிருடன் எழுப்பினார் என்று நாங்கள் சாட்சி கூறியிருக்கிறபடியால், நாங்கள் இறைவனைப்பற்றி பொய்ச்சாட்சி சொல்கிறவர்களாய் காணப்படுவோமே. ஏனெனில், இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுகிறது இல்லையென்றால், கிறிஸ்துவும் உயிருடன் எழுப்பப்படவில்லை. கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால், உங்களுடைய விசுவாசமும் பயனற்றது; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களிலேயே இருக்கிறீர்கள். அப்படியானால், கிறிஸ்துவில் மரண நித்திரையானவர்களுங்கூட அழிந்துபோனார்கள். இவ்வுலக வாழ்வுக்காக மாத்திரமே நாம் கிறிஸ்துவில் நம்பிக்கைகொண்டவர்களாய் இருந்தால், எல்லா மனிதருக்குள்ளும் நாமே மிகவும் பரிதாபத்திற்குள்ளானவர்கள் ஆவோம். ஆனால் உண்மையிலேயே கிறிஸ்து மரணத்திலிருந்து உயிருடன் எழுப்பப்பட்டிருக்கிறார். மரண நித்திரை அடைந்தவர்களில், அவரே முதற்கனி ஆவார். ஏனெனில் ஒரு மனிதனின் வழியாக மரணம் வந்தது போலவே, ஒரு மனிதனின் வழியாக இறந்தவர்களின் உயிர்த்தெழுதலும் வருகிறது. ஆதாமுக்குள் எல்லோரும் இறந்து போகிறதுபோல, கிறிஸ்துவில் எல்லோரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். ஆனால் ஒவ்வொருவரும் தங்களுக்குரிய ஒழுங்கு வரிசையின்படியே உயிருடன் எழுப்பப்படுவார்கள்: கிறிஸ்துவே முதற்கனி; அதற்குப் பின்பு அவர் மீண்டும் வரும்போது, அவருக்குரியவர்கள் உயிருடன் எழுப்பப்படுவார்கள். அப்பொழுது முடிவுவரும். கிறிஸ்து எல்லா ஆட்சிகளையும், அதிகாரங்களையும், வல்லமைகளையும் அழித்துவிட்டு, பிதாவாகிய இறைவனிடம் அரசை ஒப்படைப்பார். எனவே, எல்லாப் பகைவர்களையும் இறைவன் கிறிஸ்துவினுடைய கால்களின்கீழ் போடும் வரைக்கும், கிறிஸ்துவே ஆளுகை செய்யவேண்டும். அழிக்கப்பட வேண்டிய கடைசிப் பகைவன், மரணமே.

1 கொரிந்தியர் 15:12-26 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தாரென்று பிரசங்கிக்கப்பட்டிருக்க, மரித்தோரின் உயிர்த்தெழுதல் இல்லையென்று உங்களில் சிலர் எப்படிச் சொல்லலாம்? மரித்தோரின் உயிர்த்தெழுதல் இல்லாவிட்டால், கிறிஸ்துவும் உயிரோடு எழுந்திருக்கவில்லையே. கிறிஸ்து உயிரோடு எழுந்திருக்கவில்லையென்றால், எங்களுடைய பிரசங்கமும் வீண், உங்களுடைய விசுவாசமும் வீண். மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், தேவன் எழுப்பாத கிறிஸ்துவை அவர் எழுப்பினார் என்று நாங்கள் தேவனைக்குறித்துச் சாட்சி சொன்னதினாலே, தேவனுக்காகப் பொய்ச்சாட்சி சொல்லுகிறவர்களாகவும் காணப்படுவோமே. மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், கிறிஸ்துவும் உயிரோடு எழுந்திருக்கவில்லை. கிறிஸ்து உயிரோடு எழுந்திராவிட்டால், உங்களுடைய விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்களுடைய பாவங்களில் இருப்பீர்கள். கிறிஸ்துவிற்குள் மரணமடைந்தவர்களும் அழிந்து போயிருப்பார்களே. இவ்வுலக வாழ்விற்காகமட்டும் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தால், எல்லா மனிதர்களையும்விட மிகவும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாக இருப்போம். கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்து, மரணமடைந்தவர்களில் முதற்பலனானார். மனிதனால் மரணம் உண்டானபடியால், மனிதனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டானது. ஆதாமுக்குள் எல்லோரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவிற்குள் எல்லோரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். அவனவன் தன்தன் ஒழுங்கின்படியே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வரும்போது அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள். அதன்பின்பு முடிவு உண்டாகும்; அப்பொழுது அவர் எல்லாத் துரைத்தனத்தையும் எல்லா அதிகாரத்தையும் வல்லமையையும் அழித்து, தேவனும் பிதாவுமாக இருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார். எல்லா விரோதிகளையும் தமது காலுக்குக் கீழாக்கிப்போடும்வரைக்கும், அவர் ஆளுகைசெய்யவேண்டும். அழிக்கப்படும் கடைசி விரோதி மரணம்.

1 கொரிந்தியர் 15:12-26 பரிசுத்த பைபிள் (TAERV)

கிறிஸ்து மரணத்தில் இருந்து எழுப்பப்பட்டார் என்று போதிக்கிறோம். மக்கள் மரணத்திலிருந்து எழுப்பப்பட முடியாது என்று உங்களில் சிலர் கூறுவதேன்? மக்கள் மரணத்திலிருந்து எழுப்பப்படமாட்டார்கள் என்றால் கிறிஸ்துவும் ஒருபோதும் மரணத்திலிருந்து எழுப்பப்படவில்லை எனலாம். மரணத்திலிருந்து ஒருபோதும் கிறிஸ்து எழுப்பப்பட்டிருக்கவில்லை எனில், பிறகு எங்கள் போதனை எந்தத் தகுதியுமற்றது. மேலும் உங்கள் விசுவாசம் தகுதியற்றதாகிறது. நாம் தேவனைப் பற்றி பொய்யுரைக்கும் களங்கம் உடையவர்கள் ஆவோம். ஏனென்றால் தேவன் கிறிஸ்துவை மரணத்தில் இருந்து எழுப்பினாரென்று நாம் தேவனைக் குறித்துப் போதித்துள்ளோம். மக்கள் மரணத்திலிருந்து எழுப்பப்படுவதில்லை என்றால் கிறிஸ்துவும் தேவனால் மரணத்திலிருந்து எழுப்பப்படவில்லை எனலாம். இறந்தோர் எழுப்பப்படாவிட்டால் கிறிஸ்துவும் கூட எழுப்பப்பட்டிருக்கவில்லை எனலாம். கிறிஸ்து எழுப்பப்படவில்லை என்றால் உங்கள் விசுவாசம் வீணானது. இன்னும் நீங்கள் அனைவரும் பாவிகளாக இருக்கிறீர்கள். ஏற்கெனவே இறந்துபோன கிறிஸ்துவின் மக்களும் அழிந்துபோயிருப்பார்கள். இவ்வாழ்க்கைக்காக மட்டுமே கிறிஸ்துவில் நம்பிக்கை வைத்திருப்போமானால் வேறெவரைக் காட்டிலும் நாமே அதிக பரிதாபத்துக்குரியவர்களாகக் காணப்படுவோம். ஏற்கெனவே மரணமடைந்த விசுவாசிகளில் முதல்வராய் கிறிஸ்து உண்மையாகவே மரணத்திலிருந்து எழுப்பப்பட்டார். ஒரு மனிதனின் (ஆதாமின்) செய்கையினால் மனிதர்களுக்கு மரணம் நேர்கிறது. மரணத்தில் இருந்து எழும்புதலும் ஒரு மனிதனால் (கிறிஸ்துவால்) நேர்கிறது. ஆதாமில் நாம் எல்லாரும் இறக்கிறோம். அதைப்போன்று கிறிஸ்துவில் நாம் அனைவரும் மீண்டும் வாழ அனுமதிக்கப்படுகிறோம். ஆனால் தகுந்த வரிசைப்படியே ஒவ்வொரு மனிதனும் எழுப்பப்படுவான். கிறிஸ்து முதலில் எழுப்பப்பட்டார். கிறிஸ்து மீண்டும் வரும்போது கிறிஸ்துவின் மக்கள் உயிரோடு எழுப்பப்படுவார்கள். அப்போது முடிவு வரும். எல்லா ஆட்சியாளர்களையும், அதிகாரிகளையும், சக்திகளையும் கிறிஸ்து அழிப்பார். பிதாவாகிய தேவனிடம் கிறிஸ்து இராஜ்யத்தை ஒப்படைப்பார். கிறிஸ்துவின் அதிகாரத்துக்குள் எல்லா பகைவர்களும் வரும்வரைக்கும் கிறிஸ்து ஆளவேண்டும். கடைசியில் அழிக்கப்படும் சத்துரு மரணம் ஆகும்.

1 கொரிந்தியர் 15:12-26 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்தாரென்று பிரசங்கிக்கப்பட்டிருக்க, மரித்தோரின் உயிர்த்தெழுதலில்லையென்று உங்களில் சிலர் எப்படிச் சொல்லலாம்? மரித்தோரின் உயிர்த்தெழுதலில்லாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லையே. கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா. மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், தேவன் எழுப்பாத கிறிஸ்துவை அவர் எழுப்பினாரென்று நாங்கள் தேவனைக்குறித்துச் சாட்சிசொன்னதினாலே, தேவனுக்காகப் பொய்ச்சாட்சி சொல்லுகிறவர்களாகவும் காணப்படுவோமே. மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லை. கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள். கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்தவர்களும் கெட்டிருப்பார்களே. இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம். கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார். மனுஷனால் மரணம் உண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று. ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள். அதன்பின்பு முடிவு உண்டாகும்; அப்பொழுது அவர் சகல துரைத்தனத்தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து, தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார். எல்லாச் சத்துருக்களையும் தமது பாதத்திற்குக் கீழாக்கிப்போடும்வரைக்கும், அவர் ஆளுகை செய்யவேண்டியது. பரிகரிக்கப்படுங்கடைசிச் சத்துரு மரணம்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்