8
இஸ்ரயேல் சுழல்காற்றை அறுவடை செய்தல்
1“எக்காளத்தை ஊதுங்கள்;
கர்த்தரின் ஆலயத்துக்கு மேலாக ஒரு எதிரி கழுகைப் போல் பறக்கிறான்.
ஏனெனில் அவர்கள் எனது உடன்படிக்கையை மீறி,
எனது சட்டத்துக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தார்கள்.
2‘எங்கள் இறைவனே, நாங்கள் உம்மை அறிந்திருக்கின்றோம்!’
என்று இஸ்ரயேலர் என்னை நோக்கி அழைக்கின்றார்கள்.
3ஆனால் இஸ்ரயேலர் நன்மையானதைப் புறக்கணித்து விட்டார்கள்;
அதனால் ஒரு பகைவன் அவர்களைப் பின்தொடர்வான்.
4என் மக்கள் எனது சம்மதமின்றி அரசர்களை ஏற்படுத்துகிறார்கள்;
எனது அங்கீகாரம் இல்லாமல், அவர்கள் தலைவர்களைத் தெரிவுசெய்கிறார்கள்.
அவர்கள் தங்கள் வெள்ளியினாலும் தங்கத்தினாலும்
தங்களுக்கென விக்கிரகங்களைச் செய்கின்றார்கள்;
இது அவர்களின் அழிவுக்கே ஏதுவாகும்.
5சமாரியாவே, உன் கன்று விக்கிரகத்தை வீசியெறிந்து விடு;
எனது கோபம் உனக்கெதிராக பற்றியெரிகிறது.
எவ்வளவு காலத்துக்கு நீ தூய்மையடையாது இருப்பாய்?
6அந்த விக்கிரகம் இஸ்ரயேலிலிருந்து வந்தது;
அது இறைவனல்ல,
அதை ஒரு கைவினைஞன் செய்தான்,
எனவே சமாரியாவின் கன்று#8:6 கன்று – சமாரியாவில் வழிபட்டுவந்த தங்கத்தால் செய்யப்பட்ட விக்கிரகம்
துண்டுகளாக உடைக்கப்படும்.
7“ஏனெனில் அவர்கள் காற்றை விதைத்து,
சுழல்காற்றை அறுவடை செய்கின்றார்கள்.
பயிரின் தண்டில் கதிர் இல்லை;
அதிலிருந்து மாவும் கிடைக்காது.
அப்படிக் கொடுக்குமானால்
அவற்றை அந்நியர்#8:7 அந்நியர் – பகைவர்கள் அபகரித்து விழுங்குவார்கள்.
8இஸ்ரயேல் விழுங்கப்பட்டது;
இப்போது அவர்கள் நாடுகளுக்குள்ளே
எவருக்கும் பயனற்ற ஒரு பாத்திரத்தைப் போன்று இருக்கின்றார்கள்.
9அவர்கள் தனிமையில் அலைந்து திரியும் காட்டுக் கழுதை போல்
அசீரியாவை நாடிப் போய்விட்டார்கள்.
எப்பிராயீம் தனது காதலர்களுக்கு தன்னை விற்றுவிட்டது.
10அவ்வாறு அவர்கள் தங்களைப் பிற இனத்தாருக்குள் விற்றிருந்தாலும்,
இப்போது நான் அவர்களை ஒன்றுகூட்டிச் சேர்ப்பேன்.
வலிமைமிக்க அரசனின் கையின் ஒடுக்குமுறையின் கீழ்,
அவர்கள் வலிமை குன்றத் தொடங்குவார்கள்.
11“எப்பிராயீம் பாவநிவாரணபலிகளுக்காகப் பலிபீடங்களைக் கட்டினாலும்,
அவை பாவம் செய்வதற்கான பலிபீடங்களாயின.
12நான் எனது சட்டத்தைப் பற்றிய
அநேக விடயங்களை அவர்களுக்கு எழுதிக் கொடுத்தேன்;
ஆனால் அவர்கள் அவற்றை ஒரு அந்நியமான காரியமாக மதித்தார்கள்.
13அவர்கள் எனக்குப் பலிகளைச் செலுத்தி,
அதன் இறைச்சியை அவர்கள் சாப்பிடுகிறார்கள்;
ஆனாலும் கர்த்தர் அவர்களின் செயல்களில் பிரியப்படவில்லை.
இப்போது கர்த்தர் அவர்களின் கொடுமையை நினைவில்கொண்டு,
அவர்களுடைய பாவத்துக்காக அவர்களைத் தண்டிப்பார்.
அவர்கள் எகிப்துக்கே திரும்பிப் போவார்கள்.
14ஏனெனில் இஸ்ரயேல் தன்னை படைத்தவரை மறந்து,
அரண்மனைகளைக் கட்டுகிறது;
யூதா அநேக பட்டணங்களைச் சுற்றி அரண்களைக் கட்டியிருக்கிறது.
ஆகவே நான் அவர்களுடைய பட்டணங்கள்மீது நெருப்பை அனுப்புவேன்;
அது அவர்களுடைய கோட்டைகளைச் சுட்டெரிக்கும்.”