31
சபை கூடார கைவினைஞர்கள்
1பின்னும் கர்த்தர் மோசேயிடம் சொன்னதாவது: 2“இதோ, நான் யூதா கோத்திரத்தைச் சேர்ந்த ஊர் என்பவனுடைய பேரனும் ஊரியின் மகனுமான பெசலெயேலைப் தெரிவுசெய்திருக்கின்றேன். 3நான் அவனை இறைவனுடைய ஆவியானவரால் நிரப்பி, ஞானத்தையும், புரிந்துகொள்ளுதலையும், அறிவுக்கூர்மையையும் கொடுத்து, 4கலையாற்றலுடன் தங்கத்திலும், வெள்ளியிலும், வெண்கலத்திலும் வேலை செய்வதற்கும், 5இரத்தினக் கற்களை வெட்டிப் பதிப்பதற்கும், மரத்தைச் செதுக்கி வேலை செய்வதற்கும், எல்லாவித கைவினையுள்ள வேலைகளையும் செய்வதற்கான திறமைகளைக் கொடுத்திருக்கிறேன். 6மேலும் தாண் கோத்திரத்து அகிசாமாக்கின் மகன் அகோலியாபை அவனுக்கு உதவியாக நியமித்திருக்கிறேன்.
“அத்துடன் நான் உனக்குக் கட்டளையிட்டிருக்கும் யாவற்றையும் செய்யும்படி எல்லாக் கைவினைஞர்களுக்கும் வேண்டிய திறமையையும் அவர்களுக்குக் கொடுத்திருக்கிறேன்.
7“அவையாவன: இறைபிரசன்னக் கூடாரம், சாட்சிப் பெட்டி,
அதன் மேலுள்ள கிருபாசனம்,
இறைபிரசன்னக் கூடாரத்தின் அனைத்து தளபாடங்கள்,
8மேசை, அதன் பொருட்கள்,
சுத்த தங்க குத்துவிளக்கு,
அதன் அனைத்து உபகரணங்கள், தூபபீடம்,
9தகனபலிபீடம், அதன் எல்லாப் பாத்திரங்கள்,
தொட்டி, அதன் கால்கள்,
10அத்துடன் மதகுருவான ஆரோனும் அவன் மகன்மாரும்,
குருத்துவ ஊழியத்துக்காக உபயோகிக்கும்
பரிசுத்த ஆடைகளான நெய்யப்பட்ட ஆடைகள்,
11அபிஷேக எண்ணெய், பரிசுத்த இடத்துக்குத் தேவையான நறுமணத்தூள் ஆகியன.
“நான் உனக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் அவற்றைச் செய்யவேண்டும்” என்றார்.
சபத் ஓய்வுநாள்
12அதன் பின்னர் கர்த்தர் மோசேயிடம், 13“நீ இஸ்ரயேலரிடம் சொல்ல வேண்டியது இதுவே: நீங்கள் என் சபத் ஓய்வுநாளைக் கைக்கொள்ள வேண்டும். உங்களைப் பரிசுத்தப்படுத்துகின்ற கர்த்தர் நானே என்பதை நீங்கள் தலைமுறை தோறும் அறியும்படி, இது உங்களுக்கும் எனக்கும் இடையில் ஒரு அடையாளமாய் இருக்கும்.
14“இந்த சபத் ஓய்வுநாள், உங்களுக்குப் பரிசுத்த நாளாகையால் அதைக் கைக்கொள்ளுங்கள். அதைத் தூய்மைக்கேடாக்கும் எவனும் கொல்லப்பட வேண்டும். அந்தநாளில் வேலை செய்யும் எவனும் தன் மக்களிலிருந்து அகற்றப்பட வேண்டும். 15வாரத்தில் ஆறு நாட்கள் வேலை செய்யவேண்டும். ஆனால் ஏழாம் நாளோ, கர்த்தருக்கு பரிசுத்த சபத் ஓய்வுநாள். இந்த சபத் ஓய்வுநாளில் எந்த வேலையையாவது செய்கின்ற எவனும் கொல்லப்பட வேண்டும். 16இஸ்ரயேலர் தலைமுறை தோறும், சபத் ஓய்வுநாளை கைக்கொண்டு நிரந்தர உடன்படிக்கையாக அதைக் கொண்டாட வேண்டும். 17அது என்றென்றும் எனக்கும், இஸ்ரயேலருக்கும் இடையில் ஒரு அடையாளமாய் இருக்கும். ஏனெனில், கர்த்தர் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்து, ஏழாம் நாளில் வேலை செய்யாமல் ஓய்ந்திருந்தார்.”
18இவ்வாறு சீனாய் மலையில் கர்த்தர் மோசேயோடு பேசி முடித்த பின்பு, இறைவனின் விரலால் எழுதப்பட்ட கற்பலகைகளாலான இரண்டு சாட்சிப் பலகைகளை அவரிடம் கொடுத்தார்.