யாத்திராகமம் 21

21
1“நீ அவர்களுக்கு முன்பாக வைக்கவேண்டிய நீதிச்சட்டங்கள் இவையே:
எபிரேய அடிமைகள்
2“ஒரு எபிரேய அடிமையை நீங்கள் விலைக்கு வாங்கினால், அவன் ஆறு வருடங்கள் மட்டுமே உங்களுக்கு வேலை செய்யவேண்டும். ஆனால் ஏழாம் வருடத்தில், தனது எஜமானுக்கு எதையும் செலுத்தாமல் அவன் விடுதலையாகிப் போக வேண்டும். 3அவன் தனியாக வந்திருந்தால், தனியாக விடுதலையாகிப் போக வேண்டும். அவன் மனைவியோடு வந்திருந்தால், அவள் அவனோடுகூடப் போக வேண்டும். 4ஒரு எஜமான் தனது அடிமைக்கு ஒரு பெண்ணை மனைவியாகக் கொடுத்து, அவள் அவனுக்கு மகன்மாரையும் மகள்மாரையும் பெற்றிருந்தால், அந்தப் பெண்ணும் அவள் பிள்ளைகளும் எஜமானுக்கே சொந்தம். அந்த மனிதன் மட்டுமே விடுதலையாகிப் போக வேண்டும்.
5“ஆனால் அந்த அடிமையோ, ‘நான் என் எஜமானையும் என் மனைவியையும் என் பிள்ளைகளையும் நேசிக்கிறேன். அதனால் விடுதலையாகிப் போக நான் விரும்பவில்லை’ என்று அறிவித்தால், 6அவனது எஜமான் அவனை நீதிபதிகளின் முன்#21:6 நீதிபதிகளின் முன் அல்லது கர்த்தரின் முன் கொண்டுபோக வேண்டும். அவன் இவனை கதவின் அருகேயோ, அல்லது கதவு நிலையின் அருகேயோ கொண்டுபோய் ஒரு குத்தூசியினால் அவன் காதைத் துளைக்க வேண்டும். அதன் பின்னர் அவன் வாழ்நாள் முழுவதும் அவனுக்கு அடிமையாக இருப்பான்.
7“ஒருவன் தன் மகளை அடிமையாக விற்றால், ஆண் அடிமைகள் போவது போல் அவள் போகக் கூடாது. 8எஜமான் அவளை தனக்கென தெரிந்தெடுத்திருந்து, அவனுக்கு அவள்மீது பிரியம் ஏற்படாமல் போனால், அவள் மீட்கப்பட அவன் அனுமதிக்க வேண்டும். அவளை அந்நியனுக்கு விற்பதற்கு அவனுக்கு உரிமையில்லை. ஏனெனில் அவன் அவளுக்கு நம்பிக்கைத் துரோகம் இழைத்தான். 9அவன் அவளைத் தன் மகனுக்குத் தெரிந்தெடுத்திருந்தால், அவளுக்கு ஒரு மகளுக்குரிய உரிமைகளைக் கொடுக்க வேண்டும். 10எஜமான் இன்னுமொரு பெண்ணைத் திருமணம் செய்தால், முதலாமவளுக்கு உடை, உணவு, திருமண உரிமைகள் ஆகியவற்றைக் கொடுக்காமல்விடக் கூடாது. 11அம்மூன்றையும் எஜமான் அவளுக்குக் கொடுக்காமல் விட்டால், அவள் அவனுக்குப் பணம் ஒன்றும் கொடுக்காமலே விடுதலையாகிப் போகலாம்.
காயங்களுக்கான விதிமுறைகள்
12“ஒரு மனிதனை அடித்துக் கொல்கின்றவன் நிச்சயமாக கொலைசெய்யப்பட வேண்டும். 13ஆயினும், அவன் அதைத் திட்டமிட்டுச் செய்யாமல், அவ்வாறு நடக்க இறைவன் அனுமதித்திருந்தால், நான் நியமிக்கும் ஒரு இடத்துக்கு அவன் ஓடித் தப்பித்துக்கொள்ள வேண்டும். 14ஆனால், ஒருவன் சதிசெய்து இன்னொருவனைக் கொலை செய்தால், அந்த மனிதன் என் பலிபீடத்திலிருந்தாலும்#21:14 அந்த மனிதன் என் பலிபீடத்திலிருந்தாலும் – தன்னை பாதுகாத்துக்கொள்ள பலிபீடத்துக்கு ஓடியிருந்தாலும் அவனைக் கொண்டுபோய் கொலைசெய்ய வேண்டும்.
15“தன் தந்தையையோ தாயையோ தாக்குகின்ற எவனும் கொலைசெய்யப்பட வேண்டும்.
16“ஒருவன் இன்னொருவனைக் கடத்திச் சென்று அவனை விற்றாலோ, அல்லது அவனைத் தன்னுடன் வைத்திருந்தாலோ அவன்#21:16 அவன் கடத்திச் சென்றவன் பிடிக்கப்படும்போது கொலைசெய்யப்பட வேண்டும்.
17“தன் தந்தையையோ, தன் தாயையோ சபிப்பவன் எவனும் கொலைசெய்யப்பட வேண்டும்.
18“மனிதர் வாக்குவாதப்பட்டு, ஒருவன் மற்றையவனைக் கல்லாலோ அல்லது தன் கைமுஷ்டியாலோ அடித்ததனால், அவன் மரணம் அடையாமல் படுக்கையாகவே இருந்து, 19பின்னர் எழுந்திருந்து ஒரு கோலை ஊன்றியேனும் வெளியே நடமாட முடியுமாயிருந்தால், அவனை அடித்தவன் அக்குற்றத்துக்குப் பொறுப்பாளியல்ல. ஆயினும் அடிபட்டவனுக்கு வேலை செய்ய முடியாத காலத்துக்கான இழப்பீட்டைச் செலுத்தி, அவன் முழுமையாகக் குணமாகும்வரை அவனைப் பராமரிக்க வேண்டும்.
20“ஒரு மனிதன் தன் ஆண் அடிமையை அல்லது பெண் அடிமையை பொல்லினால் அடித்து, அதனால் அந்த அடிமை இறந்தால், அடித்தவன் தண்டிக்கப்பட வேண்டும். 21ஆனால் அடிபட்ட அடிமை ஓரிரு நாட்களில் எழுந்திருந்தால், எஜமான் தண்டிக்கப்பட வேண்டியதில்லை. ஏனெனில் அடிமை எஜமானின் உடைமை.
22“மனிதர் சண்டையிடுகின்றபோது கர்ப்பவதியான ஒரு பெண்ணை அடித்ததனால், அவளுக்குப் பெரிய காயமேதும் ஏற்படாமல் குறைப் பிரசவம் ஏற்பட்டால், அடித்தவன் அபராதம் செலுத்த வேண்டும். அவளுடைய கணவன் கேட்கும் பணத்தைக் கருத்திற்கொண்டு, நீதிமன்றம் அனுமதிப்பதை அபராதமாய்ச் செலுத்த வேண்டும். 23ஆனால் அவளுக்குக் கடுமையான காயம் ஏற்பட்டு உயிர் இழந்தால், உயிருக்கு உயிர், 24கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால், 25சூட்டுக்கு சூடு, காயத்துக்கு காயம், தழும்புக்கு தழும்புமாக தண்டிக்கப்பட வேண்டும்.
26“ஒரு மனிதன் தன் ஆண் அடிமையினதோ, பெண் அடிமையினதோ கண்ணில் அடித்து, அவர்கள் கண்ணை இழந்தால், அந்த கண்ணின் இழப்பீடாக அவன் அவர்களை விடுதலை செய்யவேண்டும். 27ஆண் அடிமையின் பல்லையோ, அல்லது பெண் அடிமையின் பல்லையோ அவன் அடித்து உடைத்தால், பல்லுக்கு இழப்பீடாக அவர்களை விடுதலை செய்யவேண்டும்.
28“ஒரு மனிதனையோ அல்லது ஒரு பெண்ணையோ, ஒரு எருது தனது கொம்பினால் முட்டிக் கொன்றால், அந்த எருது கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும். அதன் இறைச்சியைச் சாப்பிடக் கூடாது. எருதின் உரிமையாளன் அக்குற்றத்துக்குப் பொறுப்பாளியல்ல.#21:28 இறந்த மிருகம் அதன் உரிமையாளனுக்கு சொந்தமாகும் 29ஆயினும் அந்த எருது வழக்கமாக முட்டுகின்றதாய் இருந்து, அதன் உரிமையாளனுக்கு அதையிட்டு எச்சரித்திருந்தும், அவன் அதைக் கட்டி வைக்காததனால் அது ஒரு மனிதனையோ, பெண்ணையோ முட்டிக் கொன்றால், எருது கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும். எருதின் உரிமையாளனும் கொல்லப்பட வேண்டும். 30ஆயினும் அபராதம் செலுத்தும்படி அவன் கேட்கப்பட்டால், கேட்கப்பட்ட அபராதத்தைச் செலுத்தித் தன் உயிரை மீட்டுக்கொள்ளலாம். 31ஒருவனுடைய மகனையோ, மகளையோ எருது முட்டிக் கொன்றால் அதற்குரிய நீதிச்சட்டமும் இதுவே. 32அந்த எருது ஒரு ஆண் அடிமையையோ, பெண் அடிமையையோ முட்டினால், எருதின் சொந்தக்காரன் அடிமையின் எஜமானுக்கு முப்பது சேக்கல்#21:32 முப்பது சேக்கல் சுமார் 345 கிராம் வெள்ளி கொடுக்க வேண்டும். எருதும் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும்.
33“ஒரு மனிதன் ஒரு குழியைத் திறந்து வைத்ததாலோ, அல்லது ஒரு குழியை வெட்டி அதை மூடத் தவறியதாலோ ஒரு எருது அல்லது கழுதை அதற்குள் விழுந்தால், 34அக்குழிக்கு உரிமையாளன் இறந்த மிருகத்துக்கான இழப்பீட்டை அம்மிருகத்தின் உரிமையாளனுக்கு கொடுக்க வேண்டும். இறந்த மிருகமோ குழி உரிமையாளனுடையதாகும்.
35“ஒரு மனிதனுடைய எருது, இன்னொருவனுடைய எருதைக் காயப்படுத்தி அது இறந்துபோனால், உயிரோடிருக்கின்ற எருதை விற்று, பணத்தை இருவரும் பங்கிட வேண்டும். இறந்த எருதையும் சமமாகப் பங்கிட வேண்டும். 36ஆயினும் அந்த எருது முட்டுகின்றதாயிருந்து, அதை அதன் உரிமையாளன் அறிந்திருந்தும் எருதைக் கட்டி வைக்காதிருந்தால், அவன் இறந்த எருதுக்காக உயிரோடுள்ள எருதைக் கொடுக்க வேண்டும். இறந்த எருது அவனுக்குரியதாகும்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

யாத்திராகமம் 21: TRV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்