Logo YouVersion
Ikona vyhledávání

ஆதியாகமம் 9

9
நோவாவுடனான இறைவனின் உடன்படிக்கை
1பின்பு இறைவன் நோவாவையும் அவரது மகன்மாரையும் ஆசீர்வதித்து சொன்னதாவது: “நீங்கள் இனவிருத்தி அடைந்து, எண்ணிக்கையில் பெருகி பூமியை நிரப்புங்கள். 2உங்களைப் பற்றிய பயமும் பீதியும் பூமியிலுள்ள அனைத்து விலங்குகளுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், தரையில் ஊரும் பிராணிகளுக்கும், கடல் வாழ் மீன்களுக்கும் இருக்கும்; அவை உங்கள் கைகளில் கொடுக்கப்பட்டிருக்கின்றன#9:2 கைகளில் கொடுக்கப்பட்டிருக்கின்றன அல்லது அதிகாரத்தில் உள்ளன. 3உயிருள்ளவையும், நடமாடுகின்றவையுமான யாவும் உங்களுக்கு உணவாக இருக்கும். முன்னர் தாவரங்களை உங்களுக்கு உணவாகக் கொடுத்தது போல், இப்போது இவை எல்லாவற்றையும் உங்களுக்குக் கொடுக்கின்றேன்.
4“ஆனாலும், இறைச்சியை அதன் உயிராகிய இரத்தம் அதில் இருக்கும்போது உண்ண வேண்டாம். 5உங்கள் இரத்தம்#9:5 இரத்தம் – எபிரேய மொழியில் உயிராகிய இரத்தம் என்றுள்ளது சிந்தப்பட்டு நீங்கள் உயிரிழக்கும்போது, நிச்சயமாக அதற்காகப் பழிவாங்கப்பட வேண்டும்; ஒவ்வொரு மிருகத்திடமும் ஒவ்வொரு மனிதனிடமும் அவ்வாறாகப் பழிவாங்குவேன். ஒரு மனிதனின் உயிருக்காக இன்னொரு மனிதனிடம் பழிவாங்கத் தேடுவேன்.
6“யாராவது மனிதனுடைய இரத்தத்தைச் சிந்தினால்,
அவனுடைய இரத்தமும் மனிதனால் சிந்தப்படும்;
ஏனெனில் மனிதன்,
இறைவனின் உருவமாகப் படைக்கப்பட்டிருக்கின்றான்.
7நீங்களோ, இனவிருத்தி அடைந்து எண்ணிக்கையில் பெருகி, பூமியில் திரளாகப் பரவி அதிகரியுங்கள்.”
8பின்பு இறைவன் நோவாவிடமும், அவருடனிருந்த அவருடைய மகன்மாரிடமும், 9“இதோ, நான் உங்களுடனும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியுடனும் என்னுடைய உடன்படிக்கையை ஏற்படுத்துகின்றேன். 10உங்களுடன் பேழையிலிருந்து வெளியேறிய உயிரினங்களான பறவைகள், வளர்ப்பு மிருகங்கள், பூமியின் அனைத்து காட்டுமிருகங்களுடனும், பூமியின் அனைத்து உயிரினங்களுடனும் என் உடன்படிக்கையை ஏற்படுத்துகின்றேன். 11‘இனி வெள்ளநீரினால் ஒருபோதும் அனைத்து உயிரினங்களும் அழிக்கப்படுவதில்லை; பூமியை அழிக்க இனி ஒருபோதும் வெள்ளப்பெருக்கு உண்டாகாது’ என்று உங்களோடு என் உடன்படிக்கையை நிலைநாட்டுகின்றேன்” என்றார்.
12மேலும் இறைவன், “நான் உங்களோடும், உங்களோடிருக்கும் அனைத்து உயிரினங்களோடும், வரப்போகும் அனைத்து சந்ததிகளோடும் ஏற்படுத்தும் உடன்படிக்கையின் அடையாளம் இதுவே: 13நான், என் வானவில்லை மேகத்தில் அமைத்திருக்கின்றேன்; பூமிக்கும் எனக்கும் இடையிலான உடன்படிக்கையின் அடையாளம் இதுவே. 14நான் பூமிக்கு மேலாக மேகங்களை வரச் செய்து, அம்மேகங்களில் வானவில் தோன்றும்போதெல்லாம், 15உங்களோடும் எல்லாவிதமான உயிரினங்களோடும் நான் செய்துகொண்ட என் உடன்படிக்கையை நினைவுகூருவேன். இனி உயிரினங்கள் எல்லாவற்றையும் அழிக்கும்படி, தண்ணீர் ஒருபோதும் வெள்ளமாய் பெருக்கெடுக்காது. 16மேகங்களில் வானவில் தோன்றும்போதெல்லாம் நான் அதைப் பார்த்து, இறைவனாகிய எனக்கும் பூமியிலுள்ள எல்லாவிதமான உயிரினங்களுக்கும் இடையே உள்ள நித்திய உடன்படிக்கையை நினைவுகூருவேன்” என்றார்.
17இப்படியாக இறைவன் நோவாவிடம், “எனக்கும் பூமியிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் இடையே நான் ஏற்படுத்திய உடன்படிக்கையின் அடையாளம் இதுவே” என்று சொன்னார்.
நோவாவின் சந்ததியினர்
18பேழையிலிருந்து வெளியேறிய நோவாவின் மகன்மார் சேம், காம், யாப்பேத் என்பவர்களாவர். இவர்களில் காம் என்பவன் கானானின் தந்தை. 19நோவாவின் மூன்று மகன்மார் இவர்களே; இவர்களிலிருந்தே பூமியெங்கும் மக்கள் இனம் பெருகியது.
20நோவா நிலத்தைப் பயிரிடுகின்றவராகி, திராட்சைத் தோட்டமொன்றை உருவாக்கத் தொடங்கினார்.#9:20 முதலாவதாக திராட்சைத் தோட்டமொன்றை உருவாக்கியவர். 21ஒருநாள், அவர் திராட்சைரசம் குடித்து போதைகொண்டபோது, அவர் தனது கூடாரத்தின் உள்ளே உடை விலகிக் கிடந்தார். 22அப்போது கானானின் தந்தையான காம், தன் தந்தையின் நிர்வாணத்தைக் கண்டு, வெளியே இருந்த தன் சகோதரர் இருவருக்கும் அதைத் தெரியப்படுத்தினான். 23ஆனால் சேமும் யாப்பேத்தும் ஓர் உடையை எடுத்து அதை அவர்கள் இருவரும் தங்கள் தோள்களில் போட்டவாறு, பின்னோக்கி நடந்து சென்று தங்கள் தந்தையின் நிர்வாணத்தை மூடினார்கள். அவர்களது முகங்கள் மறுபக்கம் திரும்பியிருந்தபடியால், தங்கள் தந்தையின் நிர்வாணத்தை அவர்கள் காணவில்லை.
24நோவா மதுபோதை தெளிந்து எழுந்து, தன் இளைய மகனாகிய கானான் தனக்குச் செய்ததை அறிந்தபோது, 25அவர்,
“கானான் சபிக்கப்படட்டும்!
அவன் தன் சகோதரர்களுக்கு
அடிமைகளிலும் கீழ்ப்பட்ட அடிமையாக இருக்கட்டும்”
என்றார்.
26மேலும் நோவா,
“சேமின் இறைவனாகிய கர்த்தருக்குத் துதி உண்டாவதாக!
கானான் சேமுக்கு அடிமையாக இருப்பானாக.
27இறைவன் யாப்பேத்தின்#9:27 யாப்பேத்தின் – எபிரேய மொழியில் விரிவுபடுத்து என்று அர்த்தம் எல்லையை விரிவுபடுத்துவாராக;
யாப்பேத் சேமின் கூடாரங்களில் குடியிருப்பானாக,
கானான் யாப்பேத்துக்கு அடிமையாய் இருப்பானாக”
என்று சொன்னார்.
28பெருவெள்ளத்துக்கு பின்னர், நோவா முந்நூற்று ஐம்பது வருடங்கள் வாழ்ந்தார். 29இவ்வாறு மொத்தம் தொள்ளாயிரத்து ஐம்பது வருடங்கள் வாழ்ந்த பின்பு நோவா மரணித்தார்.

Zvýraznění

Sdílet

Kopírovat

None

Chceš mít své zvýrazněné verše uložené na všech zařízeních? Zaregistruj se nebo se přihlas