ஆதியாகமம் 5
5
ஆதாமிலிருந்து நோவா வரையுள்ள சந்ததிகளின் வரலாறு
1ஆதாமுடைய சந்ததியினரின் குடும்ப வரலாறு பின்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளது:
இறைவன் மனிதனை உருவாக்கியபோது, அவனை இறைவனின் சாயலில் படைத்தார். 2அவர்களை அவர் ஆணும் பெண்ணுமாகப் படைத்து, அவர்களை ஆசீர்வதித்தார். அவர்களை அவர் படைத்தபோது அவர்களை, “மனிதர்”#5:2 எபிரேய மொழியில் ஆதாம் என்று அழைத்தார்.
3ஆதாம் நூற்று முப்பது வருடங்கள் வாழ்ந்த பின்னர், தன்னுடைய சாயலிலும், தன்னுடைய உருவத்தின்படியும் ஒரு மகனைப் பெற்று, அவனுக்கு சேத் எனப் பெயர் சூட்டினான். 4சேத் பிறந்த பின்னர் ஆதாம் எண்ணூறு வருடங்கள் வாழ்ந்து, மகன்மாரையும் மகள்மாரையும் பெற்றெடுத்தான். 5இவ்வாறு மொத்தம் தொள்ளாயிரத்து முப்பது வருடங்கள் வாழ்ந்த பின்னர் ஆதாம் மரணித்தான்.
6சேத் தனது நூற்றைந்தாவது வயதில் ஏனோசைப் பெற்றெடுத்தான். 7சேத், ஏனோசைப் பெற்றெடுத்த பின்பு எண்ணூற்றேழு வருடங்கள் வாழ்ந்து மகன்மாரையும் மகள்மாரையும் பெற்றெடுத்தான். 8சேத் தொள்ளாயிரத்து பன்னிரண்டு வருடங்கள் வாழ்ந்த பின்னர் மரணித்தான்.
9ஏனோஸ் தனது தொண்ணூறாவது வயதில் கேனானைப் பெற்றெடுத்தான். 10கேனான் பிறந்த பிறகு ஏனோஸ் எண்ணூற்றுப் பதினைந்து வருடங்கள் வாழ்ந்து, மகன்மாரையும் மகள்மாரையும் பெற்றெடுத்தான். 11இவ்வாறு மொத்தம் தொள்ளாயிரத்து ஐந்து வருடங்கள் வாழ்ந்த பின்பு ஏனோஸ் மரணித்தான்.
12கேனான் தனது எழுபதாவது வயதில் மகலாலெயேலைப் பெற்றான். 13மகலாலெயேல் பிறந்த பிறகு, கேனான் எண்ணூற்று நாற்பது வருடங்கள் வாழ்ந்து, மகன்மாரையும் மகள்மாரையும் பெற்றெடுத்தான். 14இவ்வாறு மொத்தம் தொள்ளாயிரத்து பத்து வருடங்கள் வாழ்ந்த பின்னர் கேனான் மரணித்தான்.
15மகலாலெயேல் தனது அறுபத்தைந்தாவது வயதில் யாரேத்தைப் பெற்றெடுத்தான். 16யாரேத் பிறந்த பிறகு மகலாலெயேல் எண்ணூற்று முப்பது வருடங்கள் வாழ்ந்து, மகன்மாரையும் மகள்மாரையும் பெற்றெடுத்தான். 17இவ்வாறு மொத்தம் எண்ணூற்றுத் தொண்ணூற்றைந்து வருடங்கள் வாழ்ந்த பின்பு மகலாலெயேல் மரணித்தான்.
18யாரேத் தனது நூற்று அறுபத்திரண்டாவது வயதில் ஏனோக்கைப் பெற்றெடுத்தான். 19ஏனோக்கு பிறந்த பிறகு யாரேத் எண்ணூறு வருடங்கள் வாழ்ந்து, மகன்மாரையும் மகள்மாரையும் பெற்றெடுத்தான். 20இவ்வாறு மொத்தம் தொள்ளாயிரத்து அறுபத்திரண்டு வருடங்கள் வாழ்ந்த பின்னர் யாரேத் மரணித்தான்.
21ஏனோக்கு தனது அறுபத்தைந்தாவது வயதில் மெத்தூசலாவைப் பெற்றெடுத்தான். 22மெத்தூசலா பிறந்த பிறகு, ஏனோக்கு முந்நூறு வருடங்கள் இறைவனுடன் இணைந்து நடந்ததுடன், மகன்மாரையும் மகள்மாரையும் பெற்றெடுத்தான். 23இவ்வாறு மொத்தம் முந்நூற்று அறுபத்தைந்து வருடங்கள் ஏனோக்கு வாழ்ந்தான். 24ஏனோக்கு இறைவனுடன் இணைந்து நடந்தான். அதன் பின்னர் அவன் மறைந்தான்; ஏனெனில் இறைவன் அவனை எடுத்துக்கொண்டார்.
25மெத்தூசலா தனது நூற்றெண்பத்தேழாவது வயதில் லாமேக்கைப் பெற்றெடுத்தான். 26லாமேக்கு பிறந்த பின்னர் மெத்தூசலா எழுநூற்று எண்பத்திரண்டு வருடங்கள் வாழ்ந்து, மகன்மாரையும் மகள்மாரையும் பெற்றெடுத்தான். 27இவ்வாறு மொத்தம் தொள்ளாயிரத்து அறுபத்தொன்பது வருடங்கள் வாழ்ந்த பின்னர் மெத்தூசலா மரணித்தான்.
28லாமேக்கு தனது நூற்றெண்பத்திரண்டாவது வயதில் ஒரு மகனைப் பெற்றெடுத்தான். 29அப்போது அவன், “கர்த்தரால் நிலம் சபிக்கப்பட்டிருப்பதன் காரணமாக, நமது கைகளினால் நாம் வருந்தி உழைக்கும்போது, இவன் நமக்கு ஆறுதலாயிருப்பான்” என்று சொல்லி, அவனுக்கு நோவா#5:29 நோவா – எபிரேய மொழியில் ஆறுதல்படுத்துபவர் என்று அர்த்தம் எனப் பெயர் சூட்டினான். 30நோவா பிறந்த பின்னர், லாமேக்கு ஐந்நூற்றுத் தொண்ணூற்றைந்து வருடங்கள் வாழ்ந்து, மகன்மாரையும் மகள்மாரையும் பெற்றெடுத்தான். 31இவ்வாறு மொத்தம் எழுநூற்று எழுபத்தேழு வருடங்கள் வாழ்ந்த பின்னர் லாமேக்கு மரணித்தான்.
32நோவா ஐந்நூறு வயதைக் கடந்த பின்னர் சேம், காம், யாப்பேத் என்பவர்களைப் பெற்றெடுத்தான்.
Trenutno izbrano:
ஆதியாகமம் 5: TRV
Označeno
Deli
Kopiraj
Želiš, da so tvoji poudarki shranjeni v vseh tvojih napravah? Registriraj se ali se prijavi
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.