அப்போது திடீரென, பலத்த காற்று வீசுவது போன்ற ஒரு சத்தம் வானத்திலிருந்து வந்து, அவர்கள் இருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. மேலும், நெருப்புப் போன்று பிரிந்திருக்கும் நாவுகள், அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்வதை அவர்கள் கண்டார்கள். அவர்கள் எல்லோரும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, ஆவியானவர் கொடுத்த ஆற்றலின்படி, ஒவ்வொருவரும் வெவ்வேறு மொழிகளில் பேசத் தொடங்கினார்கள்.