YouVersion 標識
搜索圖示

அப் 14

14
அத்தியாயம் 14
இக்கோணியாவில் பவுலும் பர்னபாவும்
1இக்கோனியா பட்டணத்திலே அவர்கள் இருவரும் யூதர்களுடைய ஜெப ஆலயத்தின் உள்ளே பிரவேசித்து யூதர்களிலும் கிரேக்கர்களிலும் திரளான மக்கள் நம்பத்தக்கதாகப் பிரசங்கித்தார்கள். 2விசுவாசிக்காத யூதர்கள் சகோதரர்களுக்கு விரோதமாக யூதரல்லாதவர்களுடைய மனதைத் தூண்டிவிட்டு, பகையுண்டாக்கினார்கள். 3அவர்கள் அங்கே அநேகநாட்கள் வாழ்ந்து கர்த்த்தரை முன்னிட்டுத் தைரியம் உள்ளவர்களாகப் போதகம்பண்ணினார்கள்; அவர் தமது கிருபையுள்ள வசனத்திற்கு சாட்சியாக அடையாளங்களும் அற்புதங்களும் அவர்கள் கைகளால் செய்யப்படும்படி தயவுபண்ணினார். 4பட்டணத்து மக்கள் பிரிந்து, சிலர் யூதர்களையும் சிலர் அப்போஸ்தலர்களையும் சேர்ந்துகொண்டார்கள். 5இவர்களை அவமானப்படுத்தவும் கல்லெறியவும் வேண்டும் என்று, யூதரல்லாதவர்களும், யூதர்களும் அவர்களுடைய அதிகாரிகளும் திட்டமிட்டபோது, 6இவர்கள் அதை அறிந்து, லிக்கவோனியா நாட்டிலுள்ள பட்டணங்களாகிய லீஸ்திராவிற்கும் தெர்பைக்கும் அவைகளின் சுற்றுப் புறங்களுக்கும் ஓடிப்போய்; 7அங்கே நற்செய்தியைப் பிரசங்கம்பண்ணினார்கள்.
லீஸ்திராவிலும் தெர்பையிலும்
8லீஸ்திராவிலே ஒருவன் தன் தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் முடவனாக இருந்து, ஒருபோதும் நடக்காமல், கால்கள் செயலற்றவனாக உட்கார்ந்து, 9பவுல் பேசுகிறதைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனைப் பவுல் உற்றுப்பார்த்து, இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் அவனுக்கு உண்டென்று கண்டு, 10நீ எழுந்து காலூன்றி நிமிர்ந்து நில் என்று உரத்த சத்தமாகச் சொன்னான். உடனே அவன் குதித்தெழுந்து நடந்தான். 11பவுல் செய்ததை மக்கள் கண்டு, தேவர்கள் மனித உருவமெடுத்து நம்மிடத்தில் இறங்கி வந்திருக்கிறார்கள் என்று லிக்கவோனியா மொழியிலே சத்தமிட்டுச் சொல்லி, 12பர்னபாவை யூப்பித்தர் என்றும், பவுல் பிரசங்கத்தை நடத்தினவனானபடியினால் அவனை மெர்க்குரி என்றும் சொன்னார்கள். 13அல்லாமலும் பட்டணத்திற்கு முன்னே இருந்த யூப்பித்தருடைய முக்கியமான கோவிலின் மதகுரு எருதுகளையும் பூமாலைகளையும் வாசலண்டையிலே கொண்டுவந்து, மக்களோடுகூட அவர்களுக்குப் பலியிட மனதாயிருந்தான். 14அப்போஸ்தலர்களாகிய பர்னபாவும் பவுலும் அதைக் கேட்டபொழுது, தங்களுடைய துணிகளைக் கிழித்துக்கொண்டு, கூட்டத்திற்குள்ளே ஓடி, உரத்த சத்தமாக: 15மனிதர்களே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப்போலப் பாடுள்ள மனிதர்கள் தானே; நீங்கள் இந்த வீணான தேவர்களைவிட்டு, வானத்தையும் பூமியையும் கடலையும் அவைகளிலுள்ள அனைத்தையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவனிடத்திற்கு திரும்பவேண்டும் என்று உங்களுக்குப் பிரசங்கிக்கிறோம். 16கடந்த காலங்களில் அவர் எல்லா மக்களையும் தங்கள் தங்கள் வழிகளிலே நடக்கவிட்டிருந்தும், 17அவர் நன்மை செய்துவந்து, வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்பி, இவ்விதமாக அவர் தம்மைக்குறித்துச் சாட்சி விளங்கப்பண்ணியிருக்கிறார் என்றார்கள். 18இப்படி அவர்கள் சொல்லியும் தங்களுக்கு மக்கள் பலியிடாதபடிக்கு அவர்களை தடுத்து நிறுத்துவது கடினமாக இருந்தது. 19பின்பு அந்தியோகியாவிலும் இக்கோனியாவிலுமிருந்து சில யூதர்கள் வந்து மக்களைத் தூண்டிவிட்டு, பவுலைக் கல்லெறிந்து, அவன் மரித்துப்போனான் என்று எண்ணி, அவனைப் பட்டணத்திற்கு வெளியிலே இழுத்துக்கொண்டுபோனார்கள். 20சீடர்கள் அவனைச் சூழ்ந்துநிற்கும்போது, அவன் எழுந்து, பட்டணத்திற்குள்ளே போனான். மறுநாளில் பர்னபாவுடனேகூடத் தெர்பைக்குப் புறப்பட்டுப்போனான்.
அந்தியோகியாவிற்குத் திரும்பிவருதல்
21தெர்பை பட்டணத்தில் அவர்கள் நற்செய்தியைப் பிரசங்கித்து, அநேகரைச் சீடர்களாக்கினபின்பு, லீஸ்திராவிற்கும் இக்கோனியாவிற்கும் அந்தியோகியாவிற்கும் திரும்பிவந்து, 22சீடர்களுடைய மனதைத் தைரியப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின்வழியாக தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டும் என்று சொன்னார்கள். 23அல்லாமலும் அந்தந்த சபைகளில் அவர்களுக்கு மூப்பர்களை ஏற்படுத்தி வைத்து, உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள் விசுவாசித்துப் பற்றிக்கொண்ட கர்த்தருக்கு அவர்களை ஒப்புவித்தார்கள். 24பின்பு பிசீதியா நாட்டைக் கடந்து, பம்பிலியா நாட்டிற்கு வந்து, 25பெர்கே ஊரில் வசனத்தைப் பிரசங்கித்து, அத்தலியா பட்டணத்திற்குப் போனார்கள். 26அங்கே கப்பல் ஏறி, தாங்கள் நிறைவேற்றின செயல்களுக்காக தேவனுடைய கிருபைக்கு ஒப்புவிக்கப்பட்டு, புறப்பட்டு அந்தியோகியாவிற்கு வந்தார்கள். 27அவர்கள் அங்கே சேர்ந்தபொழுது சபையைக் கூடிவரச்செய்து, தேவன் தங்களைக்கொண்டு செய்தவைகளையும், அவர் யூதரல்லாதவர்க்கும் விசுவாசத்தின் கதவைத் திறந்ததையும் அறிவித்து, 28அங்கே சீடர்களோடுகூட அநேகநாட்கள் தங்கியிருந்தார்கள்.

目前選定:

அப் 14: IRVTam

醒目顯示

分享

複製

None

想要在所有設備上保存你的醒目顯示嗎? 註冊或登入