ஆதியாகமம் 26
26
ஈசாக்கும் அபிமெலேக்கும்
1அக்காலத்தில் நாட்டில் இன்னுமொரு பஞ்சம் உண்டானது, இது ஆபிரகாமுடைய காலத்திலிருந்த பஞ்சமல்ல. எனவே பஞ்சத்தின் காரணமாக கேரார் என்ற பிரதேசத்திலுள்ள பெலிஸ்திய அரசனான அபிமெலேக்கிடம் ஈசாக்கு போனான். 2அப்போது கர்த்தர் அங்கே ஈசாக்குக்குத் தோன்றி, “நீ எகிப்துக்குப் போக வேண்டாம்; நான் உனக்குக் காட்டும் நாட்டில் நீ குடியிரு. 3சிறிது காலம் இந்நாட்டில் தங்கியிரு, நான் உன்னுடன் இருந்து உன்னை ஆசீர்வதிப்பேன். இந்த நாடுகள் எல்லாவற்றையும் உனக்கும் உன் சந்ததிக்கும் தந்து, உன் தந்தை ஆபிரகாமுக்கு நான் ஆணையிட்டுக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன். 4நான் உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப் போல் பெருகச் செய்து, இந்நாடுகள் எல்லாவற்றையும் அவர்களுக்குக் கொடுப்பேன். உன் சந்ததியினரின் ஊடாக பூமியில் உள்ள அனைத்து இனங்களும் ஆசீர்வதிக்கப்படும். 5ஏனெனில் ஆபிரகாம் என் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, எனது பிரமாணங்களையும், கட்டளைகளையும், விதிமுறைகளையும், சட்டங்களையும் நிறைவேற்றினான்” என்றார். 6எனவே ஈசாக்கு கேராரிலேயே தங்கியிருந்தான்.
7அங்கிருந்த ஆட்கள் ஈசாக்கிடம், அவனது மனைவி ரெபெக்காளைப் பற்றி விசாரித்தபோது, “இவள் என் மனைவி” என்று சொல்லப் பயந்து, “இவள் என் சகோதரி” என்று சொன்னான். ஏனெனில், ரெபேக்காள் மிகவும் அழகான தோற்றமுடையவளாய் இருந்தபடியால், அங்கிருந்த ஆட்கள் அவளின் பொருட்டு தன்னைக் கொன்றுவிடுவார்கள் என்று ஈசாக்கு நினைத்தான்.
8ஈசாக்கு நீண்ட நாட்களாய் அங்கே குடியிருந்த வேளையில், ஒருநாள் பெலிஸ்திய அரசன் அபிமெலேக்கு தனது யன்னல் வழியாகப் பார்த்தபோது, அதோ! அங்கே ஈசாக்கு தன் மனைவி ரெபேக்காளை அரவணைத்துக் கொண்டிருப்பதைக் கண்டான். 9அப்போது அபிமெலேக்கு ஈசாக்கை அழைத்து அவனிடம், “உண்மையிலேயே அவள் உன்னுடைய மனைவி அல்லவா! அவ்வாறிருக்க, அவளை உன் சகோதரியென்று நீ ஏன் சொன்னாய்?” என்று கேட்டான்.
அதற்கு ஈசாக்கு, “அவள் பொருட்டு நான் என் உயிரை இழந்து விடக்கூடாது என்பதற்காகவே அவ்வாறு சொன்னேன்” என்றான்.
10அதற்கு அபிமெலேக்கு ஈசாக்கிடம், “நீ ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? எங்கள் ஆட்களில் யாராவது ஒருவன் உன் மனைவியுடன் உறவுகொண்டிருந்தால், எங்கள்மீது நீ குற்றப்பழி ஏற்படும்படி செய்திருப்பாய் அல்லவா!” என்றான்.
11பின்பு அபிமெலேக்கு தனது ஆட்கள் எல்லோரையும் எச்சரித்து, “இந்த மனிதனையோ அல்லது இவன் மனைவியையோ தொடுகின்ற#26:11 தொடுகின்ற – தீங்கு செய்யும் என்று பொருள்படும் எவனும், நிச்சயமாகக் கொல்லப்படுவான்” எனக் கட்டளை பிறப்பித்தான்.
12ஈசாக்கு தான் தங்கியிருந்த பிரதேசத்தில் பயிரிட்டபொழுது கர்த்தர் அவனை ஆசீர்வதித்தபடியால், அதே வருடத்தில் அவனால் நூறு மடங்கு அறுவடை செய்ய முடிந்தது. 13அவன் செல்வந்தன் ஆனான், அவன் மிகப்பெரிய செல்வந்தனாகும் வரை அவனுடைய செல்வம் தொடர்ந்து பெருகியது. 14அவனுக்கு அநேக ஆட்டு மந்தைகளும், மாட்டு மந்தைகளும் இருந்தன; பணியாளர்களும் இருந்தார்கள். அதனால் பெலிஸ்தியர் அவன்மீது பொறாமை கொண்டார்கள். 15அவனுடைய தந்தையான ஆபிரகாமின் காலத்தில் அவனுடைய பணியாளர்கள் தோண்டிய கிணறுகள் அனைத்தையும், பெலிஸ்தியர் மண்ணைப் போட்டு மூடினார்கள்.
16எனவே அபிமெலேக்கு ஈசாக்கிடம், “நீ இந்த இடத்தைவிட்டுப் போய்விடு; நீ எங்களைவிட மிகவும் வலிமை உள்ளவனாய் மாறிவிட்டாய்” என்றான்.
17ஆகவே, ஈசாக்கு அந்த இடத்தைவிட்டு அகன்று, கேராரின் பள்ளத்தாக்குக்குச் சென்று, அங்கே முகாம் அமைத்துத் தங்கினான். 18தன் தந்தை ஆபிரகாமின் காலத்தில் தோண்டப்பட்டதும், ஆபிரகாம் மரணித்த பின் பெலிஸ்தியரினால் மூடப்பட்டதுமான கிணறுகளை ஈசாக்கு மீண்டும் தோண்டி, அவற்றுக்குத் தன் தந்தை கொடுத்திருந்த அதே பெயர்களைச் சூட்டினான்.
19ஈசாக்கின் பணியாளர்கள் அந்தப் பள்ளத்தாக்கிலே கிணற்றைத் தோண்டியபோது, அங்கே நிலத்தின் கீழ் இருந்த புதிய நன்னீர் ஊற்றைக் கண்டார்கள். 20ஆனால், கேரார் பிரதேசத்திலிருந்த மேய்ப்பர்கள், “அந்த நீரூற்று எங்களுடையது” என்று சொல்லி ஈசாக்கின் மேய்ப்பர்களுடன் வாக்குவாதம் செய்தார்கள். அவர்கள் தன்னோடு வாக்குவாதம் செய்தபடியால், ஈசாக்கு அக்கிணற்றுக்கு ஏசேக்கு#26:20 ஏசேக்கு – வாக்குவாதம் என்று அர்த்தம். எனப் பெயரிட்டான். 21அதற்குப் பின்னர் ஈசாக்கின் பணியாளர்கள்#26:21 ஈசாக்கின் பணியாளர்கள் – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது. வேறொரு கிணற்றைத் தோண்டினார்கள். அதைக் குறித்தும் அவர்கள் வாக்குவாதம் செய்தார்கள். அதனால் அவன் அதற்கு சித்னா#26:21 சித்னா – எதிர்ப்பு என்று அர்த்தம். எனப் பெயரிட்டான். 22பின்னர் அவன் அந்த இடத்தைவிட்டு வேறு இடத்துக்குப் போய், அங்கேயும் ஒரு கிணறு தோண்டினான். அதைக் குறித்து எவரும் வாக்குவாதம் செய்யவில்லை. அப்போது ஈசாக்கு, “கர்த்தர் எனக்கு இப்போது ஒரு இடத்தைக் கொடுத்திருக்கின்றார், இந்த நிலத்திலே நாம் செழித்து வாழ்வோம்” என்று சொல்லி, அந்த இடத்துக்கு ரெகொபோத்#26:22 ரெகொபோத் – விசாலமான இடம் என்று அர்த்தம் எனப் பெயரிட்டான்.
23அவன் அங்கிருந்து பெயெர்செபாவுக்குப் போனான். 24அன்று இரவு கர்த்தர் ஈசாக்குக்குத் தோன்றி, “நான் உன் தந்தையான ஆபிரகாமின் இறைவன்; நீ பயப்படாதே, நான் உன்னுடனேகூட இருக்கின்றேன். நான் என் அடியவன் ஆபிரகாமின் பொருட்டு உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருகச் செய்வேன்” என்றார்.
25அங்கே ஈசாக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தரின் பெயரைக் கூறி அவரை வழிபட்டு, தனக்கு ஒரு கூடாரத்தை அமைத்தான். அவனுடைய பணியாளர்கள் அங்கே ஒரு கிணற்றைத் தோண்டினார்கள்.
26அக்காலத்தில் அபிமெலேக்கு தன் ஆலோசகன் அகுசாத்துடனும், தன் படைத்தளபதி பிகோலுடனும் கேராரிலிருந்து ஈசாக்கிடம் வந்தான். 27ஈசாக்கு அவர்களிடம், “என்னுடன் பகைமை பாராட்டி, என்னை துரத்தி விட்டீர்களே, இப்போது ஏன் என்னிடம் வந்தீர்கள்?” என்று கேட்டான்.
28அதற்கு அவர்கள், “கர்த்தர் உம்மோடு இருக்கின்றார் என்பதை நாங்கள் தெளிவாகக் காண்கின்றோம்; எனவே, நமக்கிடையில் சத்தியப்பிரமாணம் செய்யப்பட்ட ஒரு அங்கீகாரம் இருக்கும்படி, நாங்கள் உம்மோடு ஒரு உடன்படிக்கை செய்துகொள்ளத்#26:28 செய்துகொள்ள – எபிரேய மொழியில் உடன்படிக்கையை வெட்டுவோம் தீர்மானித்திருக்கின்றோம். 29அதாவது நாங்கள் உம்மைத் தொடாமலும் எதுவும் செய்யாமலும் உம்மை நன்றாக நடத்தி சமாதானத்துடன் அனுப்பியது போல், நீர் எங்களுக்கு ஒரு தீமையும் செய்யக் கூடாது, இதுவே எமக்கிடையிலான உடன்பாடு. இப்போது நீர் கர்த்தரினால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கின்றீர்” என்றார்கள்.
30பின்பு ஈசாக்கு அவர்களுக்கு ஒரு விருந்து கொடுத்தான். அவ்விருந்தில் அவர்களெல்லோரும் உண்டு குடித்தார்கள். 31மறுநாள் அதிகாலை எழுந்து, ஒருவருக்கொருவர் ஆணையிட்டுக் கொண்டார்கள். அதன் பின்னர் ஈசாக்கு அவர்களை வழியனுப்பி வைத்தான். அவர்கள் அவனைவிட்டு சமாதானத்துடன் புறப்பட்டுச் சென்றார்கள்.
32அந்தநாளில் ஈசாக்கின் பணியாளர்கள் அவனிடம் வந்து, “நாங்கள் தண்ணீரைக் கண்டோம்!” என தாங்கள் தோண்டிய கிணற்றைப் பற்றி கூறினார்கள். 33அவன் அந்த கிணற்றுக்கு சிபா#26:33 சிபா – உறுதிமொழி அல்லது ஆணை என்று அர்த்தம் எனப் பெயரிட்டான். இன்றுவரை அந்தப் பட்டணம் பெயெர்செபா#26:33 பெயெர்செபா – சத்தியப் பிரமாணத்தின் கிணறு அல்லது ஏழு கிணறு. என்றே அழைக்கப்படுகின்றது.
ஏசாவின் ஆசீர்வாதத்தை யாக்கோபு எடுத்துக்கொள்ளல்
34ஏசாவுக்கு நாற்பது வயதானபோது, அவன் ஏத்தியனான பெயேரி என்பவனுடைய மகள் யூதீத்தையும், ஏத்தியனான ஏலோன் என்பவனின் மகள் பாசெமாத்தையும் திருமணம் செய்துகொண்டான். 35அந்த இரண்டு பேரும், ஈசாக்குக்கும் ரெபேக்காளுக்கும் மனவேதனை ஏற்படுத்துகின்றவர்களாய் இருந்தார்கள்.
Valið núna:
ஆதியாகமம் 26: TRV
Áherslumerki
Deildu
Afrita
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.