ஆதியாகமம் 12

12
ஆபிராமின் அழைப்பு
1கர்த்தர் ஆபிராமிடம், “நீ உனது நாட்டையும், உனது உறவினரையும், உன் தந்தை குடும்பத்தாரையும் விட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் இடத்துக்குப் போ.
2“நான் உன்னை ஒரு பெரிய இனமாக்கி,
உன்னை ஆசீர்வதித்து,
உன் பெயரை மேன்மைப்படுத்துவேன்;
நீ ஆசீர்வாதமாயிருப்பாய்.
3உன்னை ஆசீர்வதிப்பவர்களை நான் ஆசீர்வதிப்பேன்,
உன்னை சபிக்கும் எவரையும் நான் சபிப்பேன்.
உன் மூலம் பூமியின் மக்களினங்கள் எல்லாம்
ஆசீர்வதிக்கப்படும்”
என்றார்.
4கர்த்தர் ஆபிராமுக்குச் சொன்னபடியே, ஆபிராம் புறப்பட்டுப் போனார்; லோத்தும் அவருடன் போனான். ஆபிராம், ஆரான் என்ற இடத்திலிருந்து புறப்படும்போது, அவருக்கு எழுபத்தைந்து வயதாயிருந்தது. 5ஆபிராம் தன் மனைவி சாராயையும், தன் சகோதரனின் மகன் லோத்துவையும் அழைத்துக்கொண்டு, தாங்கள் சம்பாதித்த சொத்துக்களுடனும், ஆரான் என்ற இடத்திலே அவர்கள் சேர்த்துக்கொண்ட மக்களுடனும் புறப்பட்டுச் சென்று கானான் நாட்டை அடைந்தார்கள்.
6ஆபிராம் அந்நாட்டின் வழியாகப் பயணம் செய்து, சீகேமில் உள்ள மோரேயின் கருவாலி மரத்தடிக்கு வந்து சேர்ந்தார். அப்போது கானானியர் அங்கே வசித்து வந்தார்கள். 7கர்த்தர் ஆபிராமுக்குக் காட்சியளித்து, “உன்னுடைய சந்ததிக்கு நான் இந்த தேசத்தைக் கொடுப்பேன்” என்று சொன்னார். அதனால் ஆபிராம் அங்கே தனக்குக் காட்சியளித்த கர்த்தருக்கு, அந்த இடத்தில் ஒரு பலிபீடத்தைக் கட்டினார்.
8அவர் அங்கிருந்து பெத்தேல் பட்டணத்துக்குக் கிழக்கேயுள்ள மலைப் பக்கமாகச் சென்று, பெத்தேல் மேற்கிலும், ஆயி பட்டணம் கிழக்கிலும் இருக்கத்தக்கதாக தன் கூடாரத்தை அமைத்தார். அங்கே அவர் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தரின் பெயரைக் கூறி வழிபட்டார்.
9பின்னர் ஆபிராம் அங்கிருந்து தனது கூடாரங்களை அகற்றிக் கொண்டு, நெகேப் என்னும் தென்தேசத்தை நோக்கி இடம்பெயர்ந்து சென்றார்.
எகிப்தில் ஆபிராம்
10அந்நாட்களில், அந்த நாட்டிலே#12:10 அந்த நாட்டிலே கானான் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது; பஞ்சம் மிகவும் கொடியதாய் இருந்தபடியால், ஆபிராம் சிறிது காலம் எகிப்தில் தற்காலிகமாக குடியிருப்பதற்காகச் சென்றார். 11அவர் எகிப்தின் அருகே வந்தபோது, தன் மனைவி சாராயிடம், “இதோ பார், நீ அழகிய தோற்றமுள்ள பெண் என்பது எனக்குத் தெரியும். 12எகிப்தியர் உன்னைக் காணும்போது, ‘இவள் அவனுடைய மனைவி’ என்று சொல்லி, உன்னை அடைவதற்காக என்னைக் கொன்று, உன்னையோ உயிரோடு விட்டுவிடுவார்கள். 13அதனால் அவர்களிடம், நீ என்னுடைய சகோதரி என்று சொல், அப்போது உன் பொருட்டு அவர்கள் என்னை நன்றாக நடத்துவார்கள்; உன்னால் நானும் உயிர்தப்புவேன்” என்றார்.
14ஆபிராம் எகிப்துக்கு வந்தபோது, சாராய் மிகவும் அழகானவள் என்பதை எகிப்தியர் கண்டார்கள். 15பார்வோனின்#12:15 பார்வோனின் எகிப்தின் அரசன் என்பதைக் குறிக்கும் பொதுவான பெயராகும். அதிகாரிகள் அவளைக் கண்டதும், அவளுடைய அழகைப்பற்றிப் பார்வோனிடம் புகழ்ந்தார்கள்; அதனால் சாராய், பார்வோனின் அரண்மனைக்குக் கொண்டுசெல்லப்பட்டாள். 16சாராயின் பொருட்டு பார்வோன் ஆபிராமை நன்றாக நடத்தினான்; ஆபிராம் செம்மறியாடுகளையும், மாடுகளையும், ஆண் பெண் கழுதைகளையும், ஒட்டகங்களையும், பணியாளர்களையும், பணிப்பெண்களையும் பெற்றுக்கொண்டார்.
17ஆனால் கர்த்தர், ஆபிராமின் மனைவி சாராயின் பொருட்டு பார்வோனையும் அவனுடைய வீட்டாரையும் கொள்ளைநோயால் வாதித்தார். 18அப்போது பார்வோன் ஆபிராமை அழைத்து, “எதற்காக நீ எனக்கு இவ்விதமாய் செய்தாய்? இவள் உன் மனைவி என்று ஏன் எனக்குக் கூறவில்லை? 19‘இவள் என் சகோதரி’ என்று சொன்னது ஏன்? அதனால் அல்லவா நான் அவளை என் மனைவியாக்கும்படி கூட்டிச் சென்றேன்? இதோ, உன் மனைவி; அவளை அழைத்துக்கொண்டு இங்கிருந்து போய்விடு!” என்றான். 20பார்வோன் ஆபிராமைக் குறித்துத் தன்னுடைய ஆட்களுக்குக் கட்டளையிட்டான். அவர்கள் அவரை அவரது மனைவியுடனும் அவருக்குச் சொந்தமான எல்லாவற்றுடனும் நாட்டுக்கு வெளியே அழைத்துக்கொண்டு போய், அவர்களை அனுப்பி வைத்தார்கள்.

Pati Souliye

Pataje

Kopye

None

Ou vle gen souliye ou yo sere sou tout aparèy ou yo? Enskri oswa konekte