ஆதியாகமம் 11

11
பாபேல் கோபுரம்
1ஒரு காலத்தில் முழு உலகிலும் ஒரே மொழியும், ஒரே பேச்சுவழக்கும் இருந்தன. 2அக்காலத்தில் மக்கள் கிழக்கு நோக்கி இடம்பெயர்ந்து சென்றபோது, சிநெயார் நாட்டிலே ஒரு சமவெளியைக் கண்டு, அங்கே குடியேறினார்கள்.
3அங்கே அவர்கள், “வாருங்கள்! நாம் செங்கற்களை செய்து, அவற்றை நன்றாக சூளையில் சுடுவோம்” என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள். அவர்கள் கருங்கல்லுக்குப் பதிலாகச் செங்கல்லையும், சாந்துக்குப் பதிலாக நிலக்கீலையும் உபயோகித்தார்கள். 4அதன் பின்னர் அவர்கள், “வாருங்கள்! வானத்தையும் தொடுமளவு உயரமான ஒரு கோபுரத்தைக் கொண்ட ஓர் நகரத்தை நாம் கட்டியெழுப்புவோம். இல்லாவிட்டால் நாம் பூமியெங்கும் சிதறிப் போய் விடுவோம். அவ்வாறு செய்தால் நமக்கு புகழும் உண்டாகும்” என்று கூறிக்கொண்டார்கள்.
5மனுமக்கள் கட்டியெழுப்பிக் கொண்டிருந்த நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்க, கர்த்தர் கீழிறங்கி வந்தார். 6அப்போது கர்த்தர், “அவர்கள் ஒரே மொழி பேசும் ஒரே மக்களாய் இருப்பதால் இதைச் செய்யத் தொடங்கி இருக்கின்றார்கள்; ஆகவே அவர்கள் திட்டமிடும் எதையும் அவர்களால் செய்யமுடியாமல் போகாது. 7ஆதலால் வாருங்கள்! நாம் கீழிறங்கி அங்கே போய், ஒருவர் பேசுவது மற்றவருக்குப் புரியாதபடி, அவர்களுடைய மொழியில் குழப்பத்தை உருவாக்குவோம்” என்றார்.
8இவ்வாறாக கர்த்தர் அவர்களை அங்கிருந்து பூமியெங்கும் சிதறச் செய்ததால், அவர்கள் நகரத்தை நிர்மாணிக்கும் பணியை நிறுத்தினார்கள். 9இவ்விதமாய் முழு உலகினது மொழியிலும் கர்த்தர் அங்கே குழப்பத்தை உருவாக்கியதனால், அந்த இடம் பாபேல்#11:9 பாபேல் குழப்பம் என்று அழைக்கப்பட்டது. கர்த்தர் அங்கிருந்து அவர்களைப் பூமியெங்கும் சிதறிப்போகச் செய்தார்.
சேமிலிருந்து ஆபிராம் வரை
10சேமுடைய குடும்ப வரலாறு:
பெருவெள்ளம் ஏற்பட்டு இரண்டு வருடங்கள் சென்ற பின்னர், சேம் நூறு வயதாக இருக்கும்போது, அர்பக்சாத்தைப் பெற்றெடுத்தான். 11அர்பக்சாத் பிறந்த பிறகு, சேம் ஐந்நூறு வருடங்கள் வாழ்ந்து, வேறு மகன்மாரையும் மகள்மாரையும் பெற்றெடுத்தான்.
12அர்பக்சாத் முப்பத்தைந்து வயதாய் இருக்கும்போது, சேலாவைப் பெற்றெடுத்தான். 13சேலா பிறந்த பிறகு அர்பக்சாத் நானூற்று மூன்று வருடங்கள் வாழ்ந்து, வேறு மகன்மாரையும் மகள்மாரையும் பெற்றெடுத்தான்.
14சேலா முப்பது வயதாய் இருக்கும்போது, ஏபேரைப் பெற்றெடுத்தான். 15ஏபேர் பிறந்த பிறகு, சேலா நானூற்று மூன்று வருடங்கள் வாழ்ந்து, வேறு மகன்மாரையும் மகள்மாரையும் பெற்றெடுத்தான்.
16ஏபேர் முப்பத்துநான்கு வயதாய் இருக்கும்போது, பேலேகைப் பெற்றெடுத்தான். 17பேலேகு பிறந்த பிறகு, ஏபேர் நானூற்று முப்பது வருடங்கள் வாழ்ந்து, வேறு மகன்மாரையும் மகள்மாரையும் பெற்றெடுத்தான்.
18பேலேகு முப்பது வயதாய் இருக்கும்போது ரெகூவைப் பெற்றெடுத்தான். 19ரெகூ பிறந்த பிறகு, பேலேகு இருநூற்றொன்பது வருடங்கள் வாழ்ந்து, வேறு மகன்மாரையும் மகள்மாரையும் பெற்றெடுத்தான்.
20ரெகூ முப்பத்திரண்டு வயதாய் இருக்கும்போது செரூகுவைப் பெற்றெடுத்தான். 21செரூகு பிறந்த பிறகு ரெகூ இருநூற்றேழு வருடங்கள் வாழ்ந்து, வேறு மகன்மாரையும் மகள்மாரையும் பெற்றெடுத்தான்.
22செரூகு முப்பது வயதாய் இருக்கும்போது நாகோரைப் பெற்றெடுத்தான். 23நாகோர் பிறந்த பிறகு செரூகு இருநூறு வருடங்கள் வாழ்ந்து, வேறு மகன்மாரையும் மகள்மாரையும் பெற்றெடுத்தான்.
24நாகோர் இருபத்தொன்பது வயதாய் இருக்கும்போது தேராகுவைப் பெற்றெடுத்தான். 25தேராகு பிறந்த பிறகு நாகோர் நூற்றுப்பத்தொன்பது வருடங்கள் வாழ்ந்து, வேறு மகன்மாரையும் மகள்மாரையும் பெற்றெடுத்தான்.
26தேராகு எழுபது வயதாய் இருக்கும்போது ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றெடுத்தான்.
ஆபிராமின் முன்னோர்கள்
27தேராகின் குடும்ப வரலாறு:
தேராகு பெற்றெடுத்த பிள்ளைகள் ஆபிராம், நாகோர், ஆரான் ஆகியோர் ஆவர். ஆரான் லோத்தைப் பெற்றெடுத்தான். 28ஆரான் தனது பிறப்பிடமான கல்தேயர் நாட்டிலுள்ள#11:28 கல்தேயர் நாட்டிலுள்ள – பாபிலோன் நாடு ஊர் என்ற பட்டணத்தில், தன் தந்தை தேராகு உயிரோடிருக்கும்போதே மரணித்தான். 29ஆபிராகாமுக்கு திருமணம் நடந்தது, அதேபோன்று நாகோரும் திருமணம் செய்துகொண்டான். ஆபிராமின் மனைவி சாராய். நாகோரின் மனைவி மில்காள்; மில்காள் ஆரானின் மகள். மில்காள், இஸ்காள் ஆகிய இருவரினதும் தந்தை ஆரான் ஆவான். 30சாராய் குழந்தைப்பேறற்றவளாய் இருந்ததால், அவளுக்குப் பிள்ளைகள் இருக்கவில்லை.
31தேராகு, தன் மகன் ஆபிராமையும், ஆரானின் மகனான தன் பேரன் லோத்தையும், ஆபிராமின் மனைவியான தன் மருமகள் சாராயையும், அழைத்துக்கொண்டு கல்தேயரின் நாட்டிலுள்ள ஊர் என்னும் பட்டணத்தைவிட்டு, கானான் நாட்டுக்குப் போகப் புறப்பட்டான். ஆனால் அவர்கள் ஆரான் என்ற பட்டணத்துக்கு வந்தபோது, அங்கேயே குடியமர்ந்து விட்டார்கள்.
32தேராகு இருநூற்றைந்து வருடங்கள் வாழ்ந்த பின்னர் ஆரான் என்ற பட்டணத்தில் மரணித்தான்.

Pati Souliye

Pataje

Kopye

None

Ou vle gen souliye ou yo sere sou tout aparèy ou yo? Enskri oswa konekte