ஆதியாகமம் 4

4
காயீனும் ஆபேலும்
1ஆதாம் தன் மனைவி ஏவாளுடன் பாலுறவு கொண்டான்#4:1 ஏவாளுடன் பாலுறவு கொண்டான் – எபிரேய மொழியில் ஏவாளை அறிந்துகொண்டான்; அவள் கர்ப்பவதியாகி காயீனைப் பெற்றெடுத்தாள். அப்போது அவள், “நான் கர்த்தரின் உதவியால் ஒரு மனிதனை உருவாக்கினேன்” என்றாள். 2இதைத் தொடர்ந்து அவள் காயீனின் சகோதரனான ஆபேலைப் பெற்றெடுத்தாள்.
ஆபேல் மந்தையைப் பாதுகாத்து மேய்த்தான், காயீன் மண்ணைப் பண்படுத்தி விவசாயம் செய்தான். 3குறித்த காலத்தின் பின்னர் காயீன் தன் நிலத்தின் விளைச்சலை கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான். 4ஆபேலும் தன் மந்தையில் முதற்பேறுகளையும், அவற்றின் கொழுத்த பாகங்களையும் காணிக்கையாகக் கொண்டுவந்தான். கர்த்தர் ஆபேலையும் அவன் காணிக்கையையும் விரும்பி ஏற்றுக்கொண்டார்#4:4 ஏற்றுக்கொண்டார் – எபிரேய மொழியில் கவனித்தார். 5ஆனால் காயீனையும் அவன் காணிக்கையையும் விரும்பி ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் காயீன் கடும் கோபம் கொண்டான், கோபத்தால் அவன் முகம் வாடிப்போனது.
6அப்போது கர்த்தர் காயீனிடம், “நீ ஏன் கோபமாய் இருக்கின்றாய்? உன் முகம் வாடிப்போனது ஏனோ? 7நீ சரியானதைச் செய்தால், உயர்வு பெற மாட்டாயோ? சரியானதைச் செய்யாவிட்டால், பாவமானது உன் கதவடியில் பதுங்கியிருந்து, உன்னைப் பிடித்துக்கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தோடு இருக்கின்றது. நீ அதை மேற்கொள்ளவேண்டும்” என்றார்.
8பின்னர், காயீன் தன் சகோதரன் ஆபேலுடன் பேசி, “வா, நாம் வயல்வெளிக்குப் போவோம்” என்றான்.#4:8 இந்த வசனம் பல மூலப்பிரதிகளில் காணப்படவில்லை. அவர்கள் வயலில் இருக்கையில் காயீன் தன் சகோதரன் ஆபேலைத் தாக்கிக் கொன்றான்.
9இதன் பின்னர் கர்த்தர் காயீனிடம், “உன் சகோதரன் ஆபேல் எங்கே?” என்று கேட்டார்.
அதற்குக் காயீன், “எனக்குத் தெரியாது; நான் என்ன என் சகோதரனுக்குப் பாதுகாவலனோ?” என்று கேட்டான்.
10அதற்கு கர்த்தர், “நீ செய்தது என்ன? ஏன் இதைச் செய்தாய்? கேள், உன் சகோதரனின் இரத்தம் நிலத்தில் இருந்து என்னை நோக்கி கதறி அழைக்கின்றது! 11உன் சகோதரனுடைய இரத்தத்தை உன் கையிலிருந்து வாங்கும்படி, தன் வாயைத் திறந்த இந்த மண்ணிலிருந்து நீ சபிக்கப்பட்டவனாக#4:11 சபிக்கப்பட்டவனாக விலக்கப்பட்டவனாக என்றும் மொழிபெயர்க்கலாம். இருப்பாய். 12நீ மண்ணைப் பண்படுத்திப் பயிரிடும்போது இனி அது உனக்கு விளைச்சலைத் தராது. நீ பூமியெங்கும் நிலையற்று அலைந்து திரிகின்றவனாய் இருப்பாய்” என்றார்.
13அதற்கு காயீன் கர்த்தரிடம், “எனக்குரிய தண்டனை, என்னால் தாங்கமுடியாததாக இருக்கின்றது. 14இன்று நீர் என்னை இந்த நிலத்திலிருந்து துரத்திவிடுகின்றீர்; நான் உமது பிரசன்னத்திலிருந்து மறைந்து, பூமியில் நிலையற்று அலைந்து திரிகின்றவனாவேன்; என்னை அடையாளம் காண்கின்ற எவனும் என்னைக் கொன்றிடுவான்” என்றான்.
15அதற்கு கர்த்தர், “அவ்வாறு நடப்பதில்லை; எவனாவது காயீனைக் கொன்றால் அவனிடமும் ஏழு மடங்கு பழிவாங்கப்படும்” என்று அவனுக்குச் சொன்னார். பின்பு கர்த்தர், அவனை அடையாளம் காண்கின்றவர்கள் அவனைக் கொன்றுவிடாதபடி, அவன்மீது ஓர் அடையாளக் குறியீட்டை வைத்தார். 16அப்போது காயீன், கர்த்தரின் பிரசன்னத்தை விட்டுச்சென்று, ஏதேனுக்குக் கிழக்கேயுள்ள நோத்#4:16 நோத் அலைந்து திரிதல் என்று அர்த்தம். என்னும் நாட்டில் குடியிருந்தான்.
17பின்பு காயீன் தன் மனைவியுடன் பாலுறவு கொண்டான்; அவள் கர்ப்பவதியாகி, ஏனோக்கைப் பெற்றெடுத்தாள். அதன் பின்னர் காயீன் ஒரு பட்டணத்தைக் கட்டி, அதற்கு தன் மகன் ஏனோக்கின் பெயரைச் சூட்டினான். 18ஏனோக்குக்கு ஈராத் பிறந்தான், ஈராத், மெகுயயேலின் தந்தை; மெகுயயேல், மெத்தூசயேலின் தந்தை; மெத்தூசயேல், லாமேக்கின் தந்தை.
19லாமேக் இரு பெண்களைத் திருமணம் செய்தான். ஒருத்தியின் பெயர் ஆதாள், மற்றையவள் சில்லாள். 20ஆதாள் யாபாலைப் பெற்றெடுத்தாள்; இவனே கூடாரங்களில் வசித்து மந்தை மேய்க்கின்றவர்களின் தந்தை. 21இவனுடைய இளைய சகோதரனின் பெயர் யூபால்; இவன் யாழ் மற்றும் புல்லாங்குழல் ஆகிய இசைக்கருவிகளை இசைப்பவர்களின் தந்தை. 22சில்லாளும், தூபால்-காயீன் என்னும் ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்; இவன் வெண்கலம் மற்றும் இரும்பு ஆகியவற்றால் கருவிகளைச் செய்பவன். தூபால்காயீனுடைய சகோதரி நாமாள்.
23லாமேக் தன் மனைவியர் இருவரிடம்,
“ஆதாளே, சில்லாளே, எனக்குச் செவிசாயுங்கள்;
லாமேக்கின் மனைவியரே, என் வார்த்தைகளைக் கேளுங்கள்.
என்னைக் காயப்படுத்திய ஒரு மனிதனைக் கொன்றேன்,
என்னைத் தாக்கியதற்காக ஒரு வாலிபனைக் கொலை செய்தேன்.
24காயீனைக் கொல்பவனிடம் ஏழு மடங்கு பழிவாங்கப்படும் என்றால்,
லாமேக்கிற்காக எழுபத்தேழு மடங்கு பழிவாங்கப்படும்”
என்றான்.
25ஆதாம் மீண்டும் தன் மனைவியுடன் பாலுறவு கொண்டான்; அவள் ஒரு மகனைப் பெற்றெடுத்து, “காயீன் கொலை செய்த ஆபேலுக்குப் பதிலாக இறைவன் இன்னும் ஒரு பிள்ளையைக் கொடுத்தார்” என்று சொல்லி, அவனுக்கு சேத் எனப் பெயர் சூட்டினாள். 26பின்னர், சேத்துக்கும் ஒரு மகன் பிறந்தான்; இவனுக்கு அவன் ஏனோஸ் எனப் பெயர் சூட்டினான்.
அக்காலத்தில், மக்கள் கர்த்தரின் பெயரைக் கூறி ஆராதிக்க ஆரம்பித்தார்கள்.

הדגשה

שתפו

העתק

None

רוצים לשמור את ההדגשות שלכם בכל המכשירים שלכם? הירשמו או היכנסו