ஆதி 32

32
அத்தியாயம் 32
யாக்கோபு ஏசாவைச் சந்திக்க ஆயத்தமாகுதல்
1யாக்கோபு பயணம் செய்யும்போது, தேவதூதர்கள் அவனை சந்தித்தார்கள். 2யாக்கோபு அவர்களைக் கண்டபோது: “இது தேவனுடைய படை” என்று சொல்லி, அந்த இடத்திற்கு மகனாயீம்#32:2 தேவனுடைய சேனை என்று பெயரிட்டான்.
3பின்பு, யாக்கோபு ஏதோமின் எல்லையாகிய சேயீர் தேசத்திலிருக்கிற தன் சகோதரனாகிய ஏசாவினிடம் போவதற்காக ஆட்களை வரவழைத்து: 4“நீங்கள் என் ஆண்டவனாகிய ஏசாவினிடம் போய், நான் இதுவரை லாபானிடத்தில் தங்கியிருந்தேன் என்றும், 5எனக்கு எருதுகளும், கழுதைகளும், ஆடுகளும், வேலைக்காரரும், வேலைக்காரிகளும் உண்டென்றும், உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைக்கத்தக்கதாக ஆண்டவனாகிய உமக்கு இதை அறிவிக்கும்படி ஆட்களை அனுப்பினேன் என்றும் உம்முடைய தாசனாகிய யாக்கோபு சொல்லச்சொன்னான்” என்று சொல்லுவதற்குக் கட்டளைகொடுத்துத் தனக்கு முன்பாக அவர்களை அனுப்பினான். 6அந்த ஆட்கள் யாக்கோபினிடத்திற்குத் திரும்பிவந்து: “நாங்கள் உம்முடைய சகோதரனாகிய ஏசாவினிடத்திற்குப் போய்வந்தோம்; அவரும் நானூறு பேரோடு உம்மை எதிர்கொள்ள வருகிறார் என்றார்கள். 7அப்பொழுது யாக்கோபு மிகவும் பயந்து, கலக்கமடைந்து, தன்னிடத்திலிருந்த மக்களையும் ஆடுமாடுகளையும் ஒட்டகங்களையும் இரண்டு பகுதியாகப் பிரித்து: 8ஏசா ஒரு பகுதியைத் தாக்கி அதை அழித்தாலும், மற்றப் பகுதி தப்பித்துக்கொள்ள முடியும் என்றான். 9பின்பு யாக்கோபு: “என் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும், என் தகப்பனாகிய ஈசாக்கின் தேவனுமாக இருக்கிறவரே: உன் தேசத்திற்கும் உன் இனத்தாரிடத்திற்கும் திரும்பிப்போ, உனக்கு நன்மை செய்வேன் என்று என்னுடன் சொல்லியிருக்கிற யெகோவாவே, 10அடியேனுக்கு தேவரீர் காண்பித்த எல்லா தயவுக்கும் எல்லா உண்மைக்கும் நான் எவ்வளவேனும் தகுதியுள்ளவன் அல்ல, நான் கோலும் கையுமாக இந்த யோர்தானைக் கடந்துபோனேன்; இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும் உடையவனானேன். 11என் சகோதரனாகிய ஏசாவின் கைக்கு என்னைத் தப்புவியும், அவன் வந்து என்னையும் பிள்ளைகளையும் தாய்மார்களையும் தாக்குவான் என்று அவனுக்கு நான் பயந்திருக்கிறேன். 12தேவரீரோ: நான் உனக்கு மெய்யாகவே நன்மைசெய்து, உன் சந்ததியை எண்ணிமுடியாத கடற்கரை மணலைப்போல மிகவும் பெருகச் செய்வேன் என்று சொன்னீரே” என்றான். 13அன்று இரவு அவன் அங்கே தங்கி, தன்னிடம் உள்ளவைகளில் தன் சகோதரனாகிய ஏசாவுக்கு வெகுமதியாக, 14இருநூறு வெள்ளாடுகளையும், இருபது வெள்ளாட்டுக் கடாக்களையும், இருநூறு செம்மறியாடுகளையும், இருபது ஆட்டுக்கடாக்களையும், 15பால் கொடுக்கிற முப்பது ஒட்டகங்களையும், அவைகளின் குட்டிகளையும், நாற்பது பசுக்களையும், பத்துக் காளைகளையும், இருபது பெண் கழுதைகளையும், பத்துக் கழுதைக்குட்டிகளையும் பிரித்தெடுத்து, 16வேலைக்காரர்களிடம் ஒவ்வொரு மந்தையைத் தனித்தனியாக ஒப்படைத்து, நீங்கள் ஒவ்வொரு மந்தைக்கும் முன்னும் பின்னுமாக இடம்விட்டு எனக்கு முன்னாக ஓட்டிக்கொண்டுசெல்லுங்கள்” என்று தன் வேலைக்காரர்களுக்குச் சொல்லி, 17முதலில் போகிறவனை நோக்கி: “என் சகோதரனாகிய ஏசா உனக்கு எதிர்ப்பட்டு: நீ யாருடையவன்? எங்கே போகிறாய்? உனக்குமுன் போகிற மந்தை யாருடையது? என்று உன்னைக் கேட்டால், 18நீ: இது உமது அடியானாகிய யாக்கோபுடையது; இது என் ஆண்டவனாகிய ஏசாவுக்கு அனுப்பப்படுகிற வெகுமதி; இதோ, அவனும் எங்களுக்குப் பின்னே வருகிறான் என்று சொல்” என்றான். 19இரண்டாம் மூன்றாம் வேலைக்காரனையும், மந்தைகளின் பின்னாலே போகிற அனைவரையும் நோக்கி: நீங்களும் ஏசாவைக் காணும்போது, இந்தவிதமாகவே அவனிடம் சொல்லி, 20“இதோ, உமது அடியானாகிய யாக்கோபு எங்களுக்குப் பின்னே வருகிறான் என்றும் சொல்லுங்கள் என்று கட்டளையிட்டான்; முன்னே வெகுமதியை அனுப்பி, அவனைச் சாந்தப்படுத்திவிட்டு, பின்பு அவனுடைய முகத்தைப் பார்ப்பேன், அப்பொழுது ஒருவேளை என்மீது தயவாயிருப்பான்” என்றான்.
யாக்கோபு தேவனோடு போராடுதல்
21அந்தப்படியே வெகுமதிகள் அவனுக்குமுன் போனது; அவனோ அன்று இரவில் முகாமிலே தங்கி, 22இரவில் எழுந்திருந்து, தன்னுடைய இரண்டு மனைவிகளையும், இரண்டு மறுமனையாட்டிகளையும், பதினொரு மகன்களையும் கூட்டிக்கொண்டு, யாப்போக்கு என்ற ஆற்றை அதன் ஆழமில்லாத பகுதியில் கடந்தான். 23அவர்களையும், தனக்கு உண்டான அனைத்தையும் ஆற்றைக்கடக்க செய்து, அக்கரைப்படுத்தினான். 24யாக்கோபு தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டான்; அப்பொழுது ஒரு மனிதன் பொழுது விடியும்வரை அவனுடன் போராடி, 25அவனை மேற்கொள்ள முடியாததைக்கண்டு, அவனுடைய தொடைச்சந்தைத் தொட்டார்; அதனால் அவருடன் போராடும்போது யாக்கோபின் தொடைச்சந்து சுளுக்கிற்று. 26அவர்: “என்னைப் போகவிடு, பொழுது விடிகிறது என்றார். அதற்கு அவன்: “நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடமாட்டேன்” என்றான். 27அவர்: “உன் பெயர் என்ன” என்று கேட்டார்; “யாக்கோபு” என்றான். 28அப்பொழுது அவர்: “உன் பெயர் இனி யாக்கோபு எனப்படாமல் இஸ்ரவேல்#32:28 தேவனோடு போராடினவன் எனப்படும்; தேவனோடும் மனிதர்களோடும் போராடி மேற்கொண்டாயே” என்றார். 29அப்பொழுது யாக்கோபு: “உம்முடைய நாமத்தை எனக்கு தெரிவிக்கவேண்டும் என்று கேட்டான்; அதற்கு அவர்: “நீ என் நாமத்தைக் கேட்பதென்ன” என்று சொல்லி, அங்கே அவனை ஆசீர்வதித்தார். 30அப்பொழுது யாக்கோபு: “நான் தேவனை முகமுகமாகக் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன்” என்று சொல்லி, அந்த இடத்திற்குப் பெனியேல்#32:30 தேவனுடைய முகம் என்று பெயரிட்டான். 31அவன் பெனியேலைக் கடந்துபோகும்போது, சூரியன் உதயமானது; அவனுடைய தொடை சுளுக்கியதாலே நொண்டி நொண்டி நடந்தான். 32அவர் யாக்கோபுடைய தொடைச்சந்து நரம்பைத் தொட்டதால், இஸ்ரவேல் வம்சத்தார் இந்த நாள்வரைக்கும் தொடைச்சந்து நரம்பைச் சாப்பிடுகிறதில்லை.

Zur Zeit ausgewählt:

ஆதி 32: IRVTam

Markierung

Teilen

Kopieren

None

Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.