ஆதி 26

26
அத்தியாயம் 26
ஈசாக்கும் அபிமெலேக்கும்
1ஆபிரகாமின் நாட்களில் உண்டான பஞ்சத்தை அல்லாமல், மேலும் ஒரு பஞ்சம் தேசத்தில் உண்டானது; அப்பொழுது ஈசாக்கு பெலிஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கிடம் கேராருக்குப் போனான். 2யெகோவா அவனுக்குக் காட்சியளித்து: “நீ எகிப்திற்குப் போகாமல், நான் உனக்குச் சொல்லும் தேசத்தில் குடியிரு. 3இந்தத் தேசத்தில் குடியிரு; நான் உன்னோடுகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்; நான் உனக்கும் உன் சந்ததிக்கும் இந்தத் தேசங்கள் அனைத்தையும் தந்து, உன் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன். 4ஆபிரகாம் என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, என் விதிகளையும், என் கற்பனைகளையும், என் நியமங்களையும், என் பிரமாணங்களையும் கைக்கொண்டதால், 5நான் உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப்போலப் பெருகச்செய்து, உன் சந்ததிக்கு இந்தத் தேசங்கள் அனைத்தையும் தருவேன்; உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள அனைத்து தேசங்களும் ஆசீர்வதிக்கப்படும் என்றார். 6ஈசாக்கு கேராரிலே குடியிருந்தான். 7அந்த இடத்து மனிதர்கள் அவனுடைய மனைவியைக் குறித்து விசாரித்தபோது: “இவள் என் சகோதரி என்றான். ரெபெக்காள் பார்ப்பதற்கு அழகுள்ளவளானதால், அந்த இடத்து மனிதர்கள் அவள்நிமித்தம் தன்னைக் கொன்றுபோடுவார்கள் என்று எண்ணி, அவளைத் தன் மனைவி என்று சொல்லுவதற்குப் பயந்தான். 8அவன் அங்கே அநேகநாட்கள் குடியிருக்கும்போது, பெலிஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கு ஜன்னல் வழியாகப் பார்க்கும்போது, ஈசாக்கு தன் மனைவியாகிய ரெபெக்காளோடு விளையாடிக்கொண்டிருக்கிறதைப் பார்த்தான். 9அபிமெலேக்கு ஈசாக்கை அழைத்து: “அவள் உன் மனைவியாயிருக்கிறாளே! பின்பு ஏன் அவளை உனது சகோதரி என்று சொன்னாய்” என்றான். அதற்கு ஈசாக்கு: “அவள் நிமித்தம் நான் சாகாதபடி இப்படிச் சொன்னேன்” என்றான். 10அதற்கு அபிமெலேக்கு: “எங்களிடத்தில் ஏன் இப்படிச் செய்தாய்? மக்களில் யாராவது உன் மனைவியோடு உறவுகொள்ளவும், எங்கள்மேல் பழி சுமரவும் நீ இடமுண்டாக்கினாயே” என்றான். 11பின்பு, அபிமெலேக்கு: “இந்த மனிதனையாகிலும் இவன் மனைவியையாகிலும் தொடுகிறவன் நிச்சயமாகக் கொலைசெய்யப்படுவான்” என்று எல்லா மக்களுக்கும் அறிவித்தான். 12ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதைவிதைத்தான்; யெகோவா அவனை ஆசீர்வதித்ததால் அந்த வருடத்தில் 100 மடங்கு பலனை அடைந்தான்; 13அவன் செல்வந்தனாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான். 14அவனுக்கு ஆட்டு மந்தையும், மாட்டு மந்தையும், அநேக வேலைக்காரரும் இருந்ததால் பெலிஸ்தர் அவன்மேல் பொறாமைகொண்டு, 15அவனுடைய தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் அவனுடைய வேலைக்காரர்கள் வெட்டின கிணறுகளையெல்லாம் மண்ணினால் மூடிப்போட்டார்கள். 16அபிமெலேக்கு ஈசாக்கை நோக்கி: “நீ எங்களை விட்டுப் போய்விடு; எங்களைவிட மிகவும் பலத்தவனானாய்” என்றான். 17அப்பொழுது ஈசாக்கு அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டு, கேராரின் பள்ளத்தாக்கிலே கூடாரம் போட்டு, அங்கே குடியிருந்து, 18தன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் வெட்டப்பட்டவைகளும், ஆபிரகாம் இறந்தபின் பெலிஸ்தர் மூடிப்போட்டவைகளுமான கிணறுகளை மறுபடியும் தோண்டி, தன் தகப்பன் அவைகளுக்கு வைத்திருந்த பெயர்களின்படியே அவைகளுக்குப் பெயரிட்டான். 19ஈசாக்குடைய வேலைக்காரர்கள் பள்ளத்தாக்கிலே கிணறுவெட்டி, தண்ணீரைக் கண்டார்கள். 20கேராரூர் மேய்ப்பர்கள் “இந்தத் தண்ணீர் தங்களுடையது என்று சொல்லி”, ஈசாக்குடைய மேய்ப்பர்களுடனே வாக்குவாதம் செய்தார்கள்; அவர்கள் தன்னோடு வாக்குவாதம் செய்ததால், அந்தக் கிணற்றுக்கு ஏசேக்கு#26:20 வாக்குவாதம் என்று பெயரிட்டான். 21வேறொரு கிணற்றை வெட்டினார்கள்; அதைக்குறித்தும் வாக்குவாதம் செய்தார்கள்; ஆகையால் அதற்கு சித்னா என்று பெயரிட்டான். 22பின்பு அந்த இடத்தைவிட்டுப் போய், வேறொரு கிணற்றை வெட்டினான்; அதைக்குறித்து அவர்கள் வாக்குவாதம் செய்யவில்லை; அப்பொழுது அவன்: “நாம் தேசத்தில் பெருகுவதற்காக, இப்பொழுது யெகோவா நமக்கு இடமுண்டாக்கினார்” என்று சொல்லி, அதற்கு ரெகொபோத் என்று பெயரிட்டான். 23அங்கேயிருந்து பெயெர்செபாவுக்குப் போனான். 24அன்று இரவிலே யெகோவா அவனுக்குக் காட்சியளித்து: “நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமுடைய தேவன், பயப்படாதே, நான் உன்னோடுகூட இருந்து, என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமின் பொருட்டு உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருகச் செய்வேன்” என்றார். 25அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி, யெகோவாவுடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, அங்கே தன் கூடாரத்தைப் போட்டான். அந்த இடத்தில் ஈசாக்கின் வேலைக்காரர்கள் ஒரு கிணற்றை வெட்டினார்கள். 26அபிமெலேக்கும் அவனுடைய நண்பனாகிய அகுசாத்தும், படைத்தலைவனாகிய பிகோலும், கேராரிலிருந்து அவனிடத்திற்கு வந்தார்கள். 27அப்பொழுது ஈசாக்கு அவர்களை நோக்கி: “ஏன் என்னிடத்தில் வந்தீர்கள்? நீங்கள் என்னைப் பகைத்து, என்னை உங்களிடத்தில் இருக்கவிடாமல் துரத்திவிட்டீர்களே” என்றான். 28அதற்கு அவர்கள்: “நிச்சயமாக யெகோவா உம்மோடுகூட இருக்கிறார் என்று கண்டோம்; ஆகையால் எங்களுக்கும் உமக்கும் ஒரு ஒப்பந்தம் உண்டாகவேண்டும் என்று நாங்கள் தீர்மானம் செய்தோம். 29நாங்கள் உம்மைத் தொடாமல், நன்மையையே உமக்குச் செய்து, உம்மைச் சமாதானத்தோடு அனுப்பிவிட்டதுபோல, நீரும் எங்களுக்குத் தீங்குசெய்யாமலிருக்க உம்மோடு ஒப்பந்தம் செய்துகொள்ள வந்தோம்; நீர் யெகோவாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவராமே” என்றார்கள். 30அவன் அவர்களுக்கு விருந்துசெய்தான், அவர்கள் சாப்பிட்டுக் குடித்தார்கள். 31அதிகாலையில் எழுந்து ஒருவருக்கொருவர் ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். பின்பு ஈசாக்கு அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் அவனிடத்திலிருந்து சமாதானத்தோடு போய்விட்டார்கள். 32அந்நாளில்தானே ஈசாக்கின் வேலைக்காரர்கள் வந்து, தாங்கள் கிணறு வெட்டின செய்தியை அவனுக்குத் தெரிவித்து, “தண்ணீர் கண்டோம்” என்றார்கள். 33அதற்கு சேபா#26:33 சத்தியம் செய்தல் என்று பெயரிட்டான்; ஆகையால் அந்த ஊரின் பெயர் இந்த நாள்வரைக்கும் பெயெர்செபா எனப்படுகிறது.
ஏசாவின் மனைவிகள்
34ஏசா 40 வயதானபோது, ஏத்தியர்களான பெயேரியினுடைய மகளாகிய யூதீத்தையும், ஏலோனுடைய மகளாகிய பஸ்மாத்தையும் திருமணம்செய்தான். 35அவர்கள் ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் மனஉளைச்சலைக் கொடுத்தார்கள்.

Zur Zeit ausgewählt:

ஆதி 26: IRVTam

Markierung

Teilen

Kopieren

None

Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.