YouVersion 標識
搜索圖示

யோவா 21

21
அத்தியாயம் 21
இயேசு மறுபடியும் சீடர்களுக்குக் காட்சியளித்தல்
1இவைகளுக்குப் பின்பு இயேசு திபேரியா கடற்கரையிலே மீண்டும் சீடர்களுக்குத் தம்மை வெளிப்படுத்தினார்; வெளிப்படுத்தின விபரமாவது: 2சீமோன்பேதுருவும், திதிமு என்னப்பட்ட தோமாவும், கலிலேயா நாட்டில் உள்ள கானா ஊரைச்சேர்ந்த நாத்தான்வேலும், செபெதேயுவின் மகன்களும், அவருடைய சீடர்களில் வேறு இரண்டுபேரும் கூடியிருக்கும்போது, 3சீமோன்பேதுரு மற்றவர்களைப் பார்த்து: மீன்பிடிக்கப் போகிறேன் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களும் உம்மோடு வருகிறோம் என்றார்கள். அவர்கள் புறப்பட்டுப்போய், உடனே படகில் ஏறினார்கள். அந்த இரவிலே அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை. 4விடியற்காலமானபோது, இயேசு கரையிலே நின்றார்; அவரை இயேசு என்று சீடர்கள் அறியாமல் இருந்தார்கள். 5இயேசு அவர்களைப் பார்த்து: பிள்ளைகளே, சாப்பிடுவதற்கு ஏதாவது உங்களிடம் இருக்கிறதா என்றார். அதற்கு அவர்கள்: ஒன்றும் இல்லை என்றார்கள். 6அப்பொழுது அவர்: நீங்கள் படகுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு மீன்கள் கிடைக்கும் என்றார். அப்படியே அவர்கள் வலைகளைப் போட்டு, அதிகமான மீன்கள் கிடைத்ததினால், வலையை இழுக்க முடியாமல் இருந்தார்கள். 7ஆகவே, இயேசுவின்மேல் அன்பாக இருந்த சீடன் பேதுருவைப் பார்த்து: அவர் கர்த்தர் என்றான். அவர் கர்த்தர் என்று சீமோன்பேதுரு கேட்டவுடனே, தான் மேற்சட்டை அணியாதவனாக இருந்ததினால், தன் மேற்சட்டையை அணிந்துகொண்டு கடலிலே குதித்தான். 8மற்றச் சீடர்கள் கரைக்கு ஏறக்குறைய இருநூறுமுழத் தூரத்தில் இருந்ததினால் படகில் இருந்துகொண்டே மீன்களுள்ள வலையை இழுத்துக்கொண்டு வந்தார்கள். 9அவர்கள் கரையிலே வந்திறங்கினபோது, கரிநெருப்புப் போட்டிருக்கிறதையும், அதின்மேல் மீன் வைத்திருக்கிறதையும், அப்பத்தையும் பார்த்தார்கள். 10இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் இப்பொழுது பிடித்த மீன்களில் சிலவற்றைக் கொண்டுவாருங்கள் என்றார். 11சீமோன்பேதுரு படகில் ஏறி, நூற்று ஐம்பத்துமூன்று பெரிய மீன்களால் நிறைந்த வலையைக் கரையில் இழுத்தான்; இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை. 12இயேசு அவர்களைப் பார்த்து: வாருங்கள், சாப்பிடுங்கள் என்றார். அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்தபடியால் அவர்களில் ஒருவனும்: நீர் யார் என்று கேட்கத் துணியவில்லை. 13அப்பொழுது இயேசு வந்து, அப்பத்தையும் மீனையும் எடுத்து, அவர்களுக்குக் கொடுத்தார். 14இயேசு மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தபின்பு மூன்றாவது முறையாக தம்முடைய சீடர்களுக்கு இவ்வாறு வெளிப்படுத்தினார்.
பேதுருவிடம் தமது பொறுப்பை ஒப்படைத்தல்
15அவர்கள் சாப்பிட்டபின்பு, இயேசு சீமோன்பேதுருவைப் பார்த்து: யோனாவின் மகனாகிய சீமோனே, இவர்களைவிட நீ அதிகமாக என்மேல் அன்பாக இருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார். 16இரண்டாவதுமுறை அவர் அவனைப் பார்த்து: யோனாவின் மகனாகிய சீமோனே, நீ என்மேல் அன்பாக இருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார். 17மூன்றாவதுமுறை அவர் அவனைப் பார்த்து: யோனாவின் மகனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்றார். என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாவதுமுறை தன்னைக் கேட்டதினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார். 18நீ சிறுவயதுள்ளவனாக இருந்தபோது நீயே ஆடை அணிந்துகொண்டு, உனக்கு இஷ்டமான இடங்களிலே நடந்து திரிந்தாய்; நீ முதிர்வயதுள்ளவனாக ஆகும்போது உன் கரங்களை நீட்டுவாய்; வேறொருவன் உனக்கு ஆடையை அணிவித்து, உனக்கு இஷ்டமில்லாத இடத்திற்கு உன்னைக் கொண்டுபோவான் என்று உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். 19இந்தவிதமான மரணத்தினாலே அவன் தேவனை மகிமைப்படுத்தப்போகிறான் என்பதைக் குறிக்கும்படியாக இப்படிச் சொன்னார். அவர் இதைச் சொல்லியபின்பு, அவனைப் பார்த்து: என்னைப் பின்பற்றிவா என்றார். 20பேதுரு திரும்பிப்பார்த்து, இயேசுவிற்கு அன்பாக இருந்தவனும், இரவு உணவு சாப்பிடும்போது அவர் மார்பிலே சாய்ந்து: ஆண்டவரே, உம்மைக் காட்டிக்கொடுக்கிறவன் யார் என்று கேட்ட சீடன் பின்னால் வருகிறதைப் பார்த்தான். 21அவனைப் பார்த்து, பேதுரு இயேசுவிடம்: ஆண்டவரே, இவன் காரியம் என்ன என்றான். 22அதற்கு இயேசு: நான் வரும்வரைக்கும் இவன் இருக்க எனக்கு விருப்பமானால், உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா என்றார். 23ஆகவே, அந்தச் சீடன் மரிப்பதில்லை என்கிற பேச்சு சகோதரர்களுக்குள்ளே பரவியது. ஆனாலும், அவன் மரிப்பதில்லை என்று இயேசு சொல்லாமல், நான் வரும்வரைக்கும் இவன் இருக்க எனக்கு விருப்பமானால் உனக்கென்ன என்று சொன்னார். 24அந்தச் சீடனே இவைகளைக்குறித்து சாட்சிகொடுத்து இவைகளை எழுதினவன்; அவனுடைய சாட்சி உண்மை என்று அறிந்திருக்கிறோம்.
முடிவுரை
25இயேசு செய்த வேறு அநேக காரியங்களும் உண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புத்தகங்கள் உலகம் கொள்ளாது என்று நினைக்கிறேன். ஆமென்.

醒目顯示

分享

複製

None

想要在所有設備上保存你的醒目顯示嗎? 註冊或登入