சகரி 9

9
அத்தியாயம் 9
இஸ்ரவேல் தனது எதிரிகளிடமிருந்து பாதுகாக்கப்படுதல்
1ஆதிராக் தேசத்திற்கு விரோதமானதும், தமஸ்குவின்மேல் வந்து தங்குவதுமான யெகோவாவுடைய வார்த்தையாகிய செய்தி; மனிதர்களின் கண்களும் இஸ்ரவேலுடைய சகல கோத்திரங்களின் கண்களும் யெகோவாவை பார்த்துக்கொண்டிருக்கும். 2ஆமாத்தும், மிகவும் ஞானமுள்ள தீருவும், சீதோனும் அதின் எல்லைக்குள்ளாக இருக்கும். 3தீரு தனக்கு மதிலைக் கட்டி, தூளைப்போல் வெள்ளியையும், வீதிகளின் சேற்றைப்போல் பசும்பொன்னையும் சேர்த்துவைத்தது. 4இதோ, ஆண்டவர் அதைத் தள்ளிவிட்டு, சமுத்திரத்தில் அதின் பலத்தை முறித்துப்போடுவார்; அது நெருப்பிற்கு இரையாகும். 5அஸ்கலோன் அதைக் கண்டு பயப்படும், காசாவும் அதைக் கண்டு மிகவும் துக்கிக்கும், எக்ரோனும் தன் நம்பிக்கை அற்றுப்போனபடியால் மிகவும் புலம்பும்; காத்சாவில் ராஜா அழிந்துபோவான்; அஸ்கலோன் குடியற்று இருக்கும். 6அஸ்தோத்தில் வேசிப்பிள்ளைகள் தங்கியிருப்பார்கள்; நான் பெலிஸ்தரின் கர்வத்தை அழிப்பேன். 7அவனுடைய இரத்தத்தை அவன் வாயிலிருந்தும், அவனுடைய அருவருப்புகளை அவன் பற்களின் நடுவிலிருந்தும் நீக்கிப்போடுவேன்; அவனோ நம்முடைய தேவனுக்கென்று மீதியாக வைக்கப்பட்டு, யூதாவிலே பிரபுவைப்போல இருப்பான்; எக்ரோன் எபூசியனைப்போல இருப்பான். 8சேனையானது புறப்படும்போதும், திரும்பி வரும்போதும், என் ஆலயம் காக்கப்படுவதற்காக அதைச் சுற்றிலும் முகாமிடுவேன்; இனி ஒடுக்குகிறவன் அவர்களிடத்தில் கடந்துவருவதில்லை; அதை என் கண்களினாலே பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
வரப்போகும் இராஜா
9மகளாகிய சீயோனே, மிகவும் மகிழ்ச்சியாயிரு; மகளாகிய எருசலேமே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் பெண் கழுதைக்குட்டியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார். 10எப்பிராயீமிலிருந்து இரதங்களையும், எருசலேமிலிருந்து குதிரைகளையும் அற்றுப்போகச்செய்வேன், யுத்தவில்லும் இல்லாமற்போகும்; அவர் மக்களுக்குச் சமாதானம் கூறுவார்; அவருடைய ஆளுகை ஒரு சமுத்திரம் துவங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதிதுவங்கி பூமியின் எல்லைகள்வரைக்கும் செல்லும். 11உனக்கு நான் செய்வது என்னவென்றால், தண்ணீரில்லாத குழியிலே அடைபட்டிருக்கிற உன்னுடையவர்களை நான் உன் உடன்படிக்கையின் இரத்தத்தினாலே விடுதலைசெய்வேன். 12நம்பிக்கையுடைய சிறைகளே, பாதுகாப்பிற்குள் திரும்புங்கள்; இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன். 13நான் எனக்கென்று யூதாவை நாணேற்றி, எப்பிராயீமிலே வில்லை நிரப்பி, சீயோனே, உன் மக்களைக் கிரேக்க தேசமக்களுக்கு விரோதமாக எழுப்பி, உன்னைப் பராக்கிரமசாலியின் பட்டயத்திற்கு ஒப்பாக்குவேன். 14அவர்கள் பக்கம் யெகோவா காணப்படுவார்; அவருடைய அம்பு மின்னலைப்போலப் புறப்படும்; யெகோவாகிய ஆண்டவர் எக்காளம் ஊதி, தென்திசைச் சுழல்காற்றுகளோடே நடந்துவருவார். 15சேனைகளின் யெகோவா அவர்களைக் காப்பாற்றுவார்; அவர்கள் அழித்து, கவண்கற்களால் கீழ்ப்படுத்திக்கொள்வார்கள்; அவர்கள் மதுமயக்கத்தினால் ஆரவாரம் செய்வார்கள்; பானபாத்திரங்கள்போலவும், பலிபீடத்தின் கோடிகளைப்போலவும் நிறைந்திருப்பார்கள். 16அந்நாளில் அவர்களுடைய தேவனாகிய யெகோவா தம்முடைய ஜனமான மந்தையாகிய அவர்களை இரட்சிப்பார்; அவர்கள் அவருடைய தேசத்தில் ஏற்றப்பட்ட கொடிகளின் கிரீடத்தில் பதிந்திருப்பார்கள். 17அவருடைய காருண்யம் எத்தனை பெரியது? அவருடைய சௌந்தரியம் எத்தனை பெரியது? தானியம் வாலிபர்களையும், புது திராட்சைரசம் இளம்பெண்களையும் வளர்க்கும்.

目前选定:

சகரி 9: IRVTam

高亮显示

分享

复制

None

想要在所有设备上保存你的高亮显示吗? 注册或登录