மத் 15

15
அத்தியாயம் 15
யூதர்களும் பாரம்பரியமும்
1அப்பொழுது, எருசலேமிலிருந்து வந்த வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் இயேசுவினிடத்தில் வந்து: 2உம்முடைய சீடர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை ஏன் மீறி நடக்கிறார்கள்? கைகழுவாமல் சாப்பிடுகிறார்களே! என்றார்கள். 3அவர்களுக்கு அவர் மறுமொழியாக: நீங்கள் உங்களுடைய பாரம்பரியத்தினாலே தேவனுடைய கட்டளையை ஏன் மீறி நடக்கிறீர்கள்? 4உன் தகப்பனையும் உன் தாயையும் மதித்து நடப்பாயாக என்றும்; தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், தேவன் கட்டளை கொடுத்திருக்கிறாரே. 5நீங்களோ, எவனாவது தகப்பனையாவது தாயையாவது பார்த்து உனக்கு நான் செய்யவேண்டிய உதவி எதுவோ, அதை தேவனுக்குக் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லி, தன் தகப்பனையாவது தன் தாயையாவது மதிக்காமற்போனாலும், அவனுடைய கடமை முடிந்ததென்று போதித்து, 6உங்களுடைய பாரம்பரியத்தினாலே தேவனுடைய கட்டளையை அவமாக்கிவருகிறீர்கள். 7மாயக்காரர்களே, உங்களைக்குறித்து:
8 இந்த மக்கள் தங்களுடைய உதட்டளவில் என்னிடத்தில் சேர்ந்து,
தங்களுடைய உதடுகளினால் என்னை மதிக்கிறார்கள்;
அவர்கள் இருதயமோ என்னைவிட்டு தூரமாக விலகியிருக்கிறது;
9 மனிதர்களுடைய கட்டளைகளை உபதேசங்களாகப் போதித்து,
வீணாக எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி நன்றாகச் சொல்லியிருக்கிறான் என்றார்.”
10பின்பு அவர் மக்களை வரவழைத்து, அவர்களைப் பார்த்து: நீங்கள் கேட்டு உணருங்கள். 11வாய்க்குள்ளே போகிறது மனிதனைத் தீட்டுப்படுத்தாது, வாயிலிருந்து புறப்படுகிறதே மனிதனைத் தீட்டுப்படுத்தும்என்றார். 12அப்பொழுது, அவருடைய சீடர்கள் அவரிடத்தில் வந்து: பரிசேயர்கள் இந்த வசனத்தைக்கேட்டு இடறலடைந்தார்கள் என்று அறிவீரா என்றார்கள். 13அவர் மறுமொழியாக: என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடு பிடுங்கப்படும். 14அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடர்களுக்கு வழிகாட்டுகிற குருடர்களாக இருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார். 15அப்பொழுது, பேதுரு அவரைப் பார்த்து: இந்த உவமையை எங்களுக்கு விளக்கிச்சொல்லவேண்டும் என்றான். 16அதற்கு இயேசு: நீங்களும் இன்னும் உணர்வில்லாதவர்களாக இருக்கிறீர்களா? 17வாய்க்குள்ளே போகிறதெல்லாம் வயிற்றுக்குள் சென்று ஆசனவழியாகக் கழிந்துபோகும் என்பதை நீங்கள் இன்னும் அறியவில்லையா? 18வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனிதனைத் தீட்டுப்படுத்தும். 19எப்படியென்றால், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், அவதூறுகளும் புறப்பட்டுவரும். 20இவைகளே மனிதனைத் தீட்டுப்படுத்தும்; கைகளைக் கழுவாமல் சாப்பிடுகிறது மனிதனைத் தீட்டுப்படுத்தாது என்றார்.
கானானியப் பெண்ணின் விசுவாசம்
21பின்பு, இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, தீரு சீதோன் பட்டணங்களின் திசைகளுக்குப் போனார். 22அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானியப் பெண் ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள். 23அவளுக்கு மறுமொழியாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீடர்கள் வந்து: இவள் நம்மைப் பின்தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள். 24அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் குடும்பத்தாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேதவிர, மற்றவர்களுக்கல்ல என்றார். 25அவள் வந்து: ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப் பணிந்துகொண்டாள். 26அவர் அவளைப் பார்த்து: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார். 27அதற்கு அவள்: உண்மைதான் ஆண்டவரே, ஆனாலும் நாய்க்குட்டிகள் தங்களுடைய எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் அப்பத்துணிக்கைகளைச் சாப்பிடுமே என்றாள். 28இயேசு அவளுக்கு மறுமொழியாக: பெண்ணே, உன் விசுவாசம் பெரியது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்த நேரமே அவளுடைய மகள் ஆரோக்கியமானாள்.
இயேசு நான்காயிரம்பேரைப் போஷித்தல்
29இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, கலிலேயாக் கடலருகே வந்து, ஒரு மலையின்மேல் ஏறி, அங்கே உட்கார்ந்தார். 30அப்பொழுது, முடவர்கள், குருடர்கள், ஊமையர்கள், ஊனர்கள் முதலிய அநேகரை திரளான மக்கள் இயேசுவினிடத்தில் அழைத்துவந்து, அவர்களை அவர் பாதத்திலே வைத்தார்கள்; அவர்களை அவர் குணப்படுத்தினார். 31ஊமையர் பேசுகிறதையும், ஊனர்கள் குணமடைகிறதையும், கைகால்கள் முடங்கியவர்கள் நடக்கிறதையும், குருடர்கள் பார்க்கிறதையும் மக்கள் கண்டு, ஆச்சரியப்பட்டு, இஸ்ரவேலின் தேவனை மகிமைப்படுத்தினார்கள். 32பின்பு, இயேசு தம்முடைய சீடர்களை அழைத்து: மக்களுக்காக மனதுருகுகிறேன், இவர்கள் என்னிடத்தில் மூன்று நாட்கள் தங்கியிருந்து சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்; இவர்களைப் பட்டினியாக அனுப்பிவிட எனக்கு மனதில்லை, வழியிலே சோர்ந்துபோவார்களே என்றார். 33அதற்கு அவருடைய சீடர்கள்: இவ்வளவு திரளான மக்களுக்குத் திருப்தியுண்டாகும்படி தேவையான அப்பங்கள் இந்த வனாந்திரத்திலே நமக்கு எப்படி கிடைக்கும் என்றார்கள். 34அதற்கு இயேசு: உங்களிடம் எத்தனை அப்பங்கள் உண்டு என்று கேட்டார். அவர்கள்: ஏழு அப்பங்களும் சில சிறு மீன்களும் உண்டு என்றார்கள். 35அப்பொழுது அவர் மக்களைத் தரையில் பந்தியிருக்கக் கட்டளையிட்டு, 36அந்த ஏழு அப்பங்களையும் அந்த மீன்களையும் எடுத்து, நன்றிசெலுத்தி, பிட்டுத் தம்முடைய சீடர்களிடத்தில் கொடுத்தார்; சீடர்கள் மக்களுக்குப் பரிமாறினார்கள். 37எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான அப்பத்துணிக்கைகளை ஏழு கூடைகள்நிறைய எடுத்தார்கள். 38பெண்களும் பிள்ளைகளும்தவிர, சாப்பிட்ட ஆண்கள் நான்காயிரம்பேராக இருந்தார்கள். 39அவர் மக்களை அனுப்பிவிட்டு படகில் ஏறி, மக்தலாவின் எல்லைகளுக்கு வந்தார்.

目前选定:

மத் 15: IRVTam

高亮显示

分享

复制

None

想要在所有设备上保存你的高亮显示吗? 注册或登录