மத் 10

10
அத்தியாயம் 10
பன்னிரண்டு அப்போஸ்தலர்களை அனுப்புதல்
1அப்பொழுது, இயேசு தம்முடைய பன்னிரண்டு சீடர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்தஆவிகளைத் துரத்தவும், எல்லா வியாதிகளையும் எல்லா நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார். 2அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலர்களுடைய பெயர்களாவன: முந்தினவன் பேதுரு என்னப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா, செபெதேயுவின் குமாரன் யாக்கோபு, அவன் சகோதரன் யோவான், 3பிலிப்பு, பர்தொலொமேயு, தோமா, வரி வசூலிப்பவனாகிய மத்தேயு, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு என்னும் மறுபெயருள்ள லெபேயு, 4கானானியனாகிய சீமோன், அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவைகளே. 5இந்தப் பன்னிரண்டுபேரையும் இயேசு அனுப்பும்போது, அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் யூதரல்லாதவர்களுடைய நாடுகளுக்குப் போகாமலும், சமாரியருடைய பட்டணங்களில் பிரவேசிக்காமலும், 6காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் குடும்பத்தாரிடத்திற்குப் போங்கள். 7போகும்போது, பரலோகராஜ்யம் சமீபமாக இருக்கிறது என்று பிரசங்கியுங்கள். 8வியாதியுள்ளவர்களைச் சுகமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தப்படுத்துங்கள், மரித்தோரை உயிரோடு எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாகப் பெற்றீர்கள், இலவசமாகக் கொடுங்கள். 9உங்களுடைய பைகளில் பொன்னையாவது, வெள்ளியையாவது, செம்பையாவது, 10வழிக்காகப் பையையாவது, இரண்டு அங்கிகளையாவது, பாதணிகளையாவது, தடியையாவது எடுத்துவைக்கவேண்டாம்; வேலையாள் தன் ஆகாரத்திற்குத் தகுதியுள்ளவனாக இருக்கிறான். 11எந்தப் பட்டணத்திலாவது கிராமத்திலாவது நீங்கள் பிரவேசிக்கும்போது, அதிலே தகுதியானவன் யாரென்று விசாரித்து, நீங்கள் புறப்படும்வரைக்கும் அவனிடத்தில் தங்கியிருங்கள். 12ஒரு வீட்டிற்குள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள். 13அந்த வீடு தகுதியாக இருந்தால், நீங்கள் சொன்ன சமாதானம் அவர்கள்மேல் வரக்கடவது; தகுதியற்றவர்களாக இருந்தால், நீங்கள் சொன்ன சமாதானம் உங்களிடத்திற்குத் திரும்பக்கடவது. 14எவனாவது உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்களுடைய வார்த்தைகளைக் கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவதுவிட்டுப் புறப்படும்போது, உங்களுடைய கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள். 15நியாயத்தீர்ப்புநாளிலே அந்தப் பட்டணத்திற்கு சம்பவிப்பதைவிட சோதோம் கொமோரா பட்டணங்களுக்கு சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 16ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகவே, பாம்புகளைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போல வஞ்சகமற்றவர்களுமாக இருங்கள். 17மனிதர்களைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள்; அவர்கள் உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுத்து, தங்களுடைய ஜெப ஆலயங்களில் உங்களைச் சாட்டையினால் அடிப்பார்கள். 18அவர்களுக்கும் யூதரல்லாதவர்களுக்கும் சாட்சியாக என்னிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டுபோகப்படுவீர்கள். 19அவர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும்போது: எப்படிப் பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாமலிருங்கள்; நீங்கள் பேசவேண்டியது அந்தநேரத்தில் உங்களுக்குக் கொடுக்கப்படும். 20பேசுகிறவர்கள் நீங்கள் இல்லை, உங்களுடைய பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர். 21சகோதரன் தன் சகோதரனையும், தகப்பன் தன் பிள்ளையையும், மரணத்திற்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றோருக்கு விரோதமாகப் பிள்ளைகள் எழும்பி அவர்களைக் கொலைசெய்ய ஒப்புக்கொடுப்பார்கள். 22என் நாமத்தினாலே நீங்கள் எல்லோராலும் பகைக்கப்படுவீர்கள்; இறுதிவரைக்கும் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான். 23ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் வேறொரு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள்; மனிதகுமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேலருடைய பட்டணங்களையெல்லாம் சுற்றிவரமுடியாதென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 24சீடன் தன் போதகனைவிடவும், வேலைக்காரன் தன் எஜமானைவிடவும் மேலானவன் இல்லை. 25சீடன் தன் போதகனைப்போலவும், வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும் இருப்பதுபோதும். வீட்டு எஜமானையே பெயெல்செபூல் என்று சொன்னார்களென்றால், அவன் குடும்பத்தினரை இன்னும் அதிகமாகச் சொல்வது அதிக நிச்சயமல்லவா?
பயப்படாமலிருங்கள்
26 அவர்களுக்குப் பயப்படாமலிருங்கள்; வெளியாக்கப்படாத மறைபொருளும் இல்லை; அறியப்படாத இரகசியமும் இல்லை. 27நான் உங்களுக்கு இருளிலே சொல்லுகிறதை நீங்கள் வெளிச்சத்திலே சொல்லுங்கள்; காதிலே கேட்கிறதை நீங்கள் வீடுகளின்மேல் பிரசித்தம்பண்ணுங்கள். 28ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாக இல்லாமல், சரீரத்தைமட்டும் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள். 29ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆனாலும் உங்களுடைய பிதாவின் விருப்பமில்லாமல், அவைகளில் ஒன்றாவது தரையிலே விழாது. 30உங்களுடைய தலையிலுள்ள முடிகளெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது. 31ஆதலால், பயப்படாமலிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைவிட நீங்கள் விசேஷித்தவர்களாக இருக்கிறீர்கள். 32மனிதர்கள் முன்பாக என்னை அறிக்கைசெய்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைசெய்வேன். 33மனிதர்கள் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன். 34பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பிரிவினையையே அனுப்பவந்தேன். 35எப்படியென்றால், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமியாருக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன். 36ஒரு மனிதனுக்கு விரோதிகள் அவன் குடும்பத்தாரே. 37தகப்பனையாவது தாயையாவது என்னைவிட அதிகமாக நேசிக்கிறவன் எனக்கு தகுதியானவன் இல்லை; மகனையாவது மகளையாவது என்னைவிட அதிகமாக நேசிக்கிறவன் எனக்கு தகுதியானவன் இல்லை. 38தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்கு தகுதியானவன் இல்லை. 39தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான். 40உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான். 41தீர்க்கதரிசி என்னும் பெயரினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்குரிய பலனை அடைவான்; நீதிமான் என்னும் பெயரினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்குரிய பலனை அடைவான். 42சீடன் என்னும் பெயரினிமித்தம் இந்தச் சிறியவர்களில் ஒருவனுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர்மட்டும் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனைப் பெறாமல் போகமாட்டான் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

目前选定:

மத் 10: IRVTam

高亮显示

分享

复制

None

想要在所有设备上保存你的高亮显示吗? 注册或登录