யோவா 2

2
அத்தியாயம் 2
கானா ஊரில் நடந்த திருமணம்
1மூன்றாம்நாளில் கலிலேயாவில் உள்ள கானா ஊரில் ஒரு திருமணம் நடந்தது; இயேசுவின் தாயும் அங்கே இருந்தார்கள். 2இயேசுவும் அவருடைய சீடர்களும் அந்த திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். 3திராட்சைரசம் குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரைப் பார்த்து: அவர்களுக்குத் திராட்சைரசம் இல்லை என்றாள். 4அதற்கு இயேசு: பெண்ணே, எனக்கும் உனக்கும் என்ன, என் நேரம் இன்னும் வரவில்லை என்றார். 5அவருடைய தாய் வேலைக்காரர்களைப் பார்த்து: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் என்றாள். 6யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் வழக்கத்தின்படியே, ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர் பிடிக்கத்தக்க ஆறு கற்ஜாடிகள் அங்கே வைத்திருந்தது. 7இயேசு வேலைக்காரர்களைப் பார்த்து: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார்; அவர்கள் அவைகளை நிரப்பினார்கள். 8அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் இப்பொழுது எடுத்து, பந்தி மேற்பார்வைக்காரனிடத்தில் கொண்டுபோங்கள் என்றார்; அவர்கள் கொண்டுபோனார்கள். 9அந்த திராட்சைரசம் எங்கேயிருந்து வந்தது என்று தண்ணீரை நிரப்பின வேலைக்காரர்களுக்குமட்டும் தெரியும் பந்தி மேற்பார்வைகாரனுக்குத் தெரியாததினால், அவன் திராட்சைரசமாக மாறின தண்ணீரை ருசி பார்த்தபோது, மணமகனை அழைத்து: 10எந்த மனிதனும் முன்பு நல்ல திராட்சைரசத்தைக் கொடுத்து, மக்கள் திருப்தியடைந்தபின்பு, ருசி குறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே என்றான். 11இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரில் செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார்; அவருடைய சீடர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்.
இயேசு தேவாலயத்தை சுத்திகரித்தல்
12அதன்பின்பு, அவரும் அவருடைய தாயாரும் அவருடைய சகோதரர்களும் அவருடைய சீடர்களும் கப்பர்நகூமுக்குப்போய், அங்கே சிலநாட்கள் தங்கினார்கள். 13பின்பு யூதர்களுடைய பஸ்காபண்டிகை நெருங்கியிருந்தது; அப்பொழுது இயேசு எருசலேமுக்குப்போய், 14தேவாலயத்திலே ஆடுகள், மாடுகள் புறாக்களாகிய இவைகளை விற்கிறவர்களையும், பணம் மாற்றுகிறவர்கள் உட்கார்ந்திருக்கிறதையும் பார்த்து, 15கயிற்றினால் ஒரு சாட்டையை உண்டாக்கி, அவர்கள் அனைவரையும் ஆடுமாடுகளையும், தேவாலயத்திற்கு வெளியே துரத்திவிட்டு, பணம் மாற்றுக்காரர்களுடைய பணங்களைக் கொட்டி, மேசைகளைக் கவிழ்த்துப்போட்டு, 16புறா விற்கிறவர்களைப் பார்த்து: இவைகளை இந்த இடத்திலிருந்து எடுத்துக்கொண்டுபோங்கள்; என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார். 17அப்பொழுது: உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்தியின் வைராக்கியம் தீயைப்போல என்னை எரித்தது என்று எழுதியிருக்கிறதை அவருடைய சீடர்கள் நினைவுகூர்ந்தார்கள். 18அப்பொழுது யூதர்கள் அவரைப் பார்த்து: நீர் இவைகளைச் செய்கிறீரே, இதற்கு என்ன அடையாளத்தை எங்களுக்குக் காண்பிக்கிறீர் என்று கேட்டார்கள். 19இயேசு அவர்களுக்குப் மறுமொழியாக: இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள்; மூன்று நாட்களுக்குள்ளே இதை கட்டி எழுப்புவேன் என்றார். 20அப்பொழுது யூதர்கள்: இந்த ஆலயத்தைக் கட்ட நாற்பத்தாறு வருடங்கள் ஆனதே, நீர் இதை மூன்று நாட்களுக்குள்ளே கட்டி எழுப்புவீரோ என்றார்கள். 21அவரோ தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக்குறித்துச் சொன்னார். 22அவர் இப்படிச் சொன்னதை அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தபின்பு அவருடைய சீடர்கள் நினைவுகூர்ந்து, வேதவாக்கியத்தையும் இயேசு சொன்ன வசனத்தையும் விசுவாசித்தார்கள். 23பஸ்கா பண்டிகையிலே அவர் எருசலேமில் இருக்கும்போது, அவர் செய்த அற்புதங்களை அநேகர் பார்த்து, அவருடைய நாமத்தில் விசுவாசம் வைத்தார்கள். 24அப்படியிருந்தும், இயேசு எல்லோரையும் அறிந்திருந்தபடியால், அவர்களை நம்பவில்லை. 25மனிதர்கள் உள்ளத்தில் இருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனிதர்களைக்குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சிகொடுக்க அவசியமாக இருக்கவில்லை.

目前选定:

யோவா 2: IRVTam

高亮显示

分享

复制

None

想要在所有设备上保存你的高亮显示吗? 注册或登录