YouVersion logo
Dugme za pretraživanje

மத்தேயு 24

24
கடைசிக் கால அடையாளங்கள்
1இயேசு ஆலயத்தைவிட்டுப் புறப்பட்டுப் போய்க் கொண்டிருந்தார். அப்போது அவருடைய சீடர்கள் ஆலயக் கட்டடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடம் வந்தார்கள். 2ஆனால் இயேசு அவர்களிடம், “இவற்றையெல்லாம் பார்க்கின்றீர்கள் அல்லவா? நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், இங்குள்ள ஒரு கல்லின் மேல் இன்னொரு கல் இராதவாறு, ஒவ்வொரு கல்லும் இடிக்கப்படும்” என்றார்.
3இயேசு ஒலிவமலையின் மேல் இருக்கையில், சீடர்கள் தனிமையாக அவரிடம் வந்து, “எப்போது இவை நிகழும்? உமது வருகைக்கும், இந்த உலகத்தின் முடிவுக்குமான அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லும்” என்று கேட்டார்கள்.
4இயேசு அவர்களிடம், “உங்களை யாரும் வழிவிலகச் செய்யாதபடி எச்சரிக்கையாய் இருங்கள். 5ஏனெனில் ‘நானே மேசியா,’ என்று சொல்லிக்கொண்டு, அநேகர் எனது பெயரில் வந்து, பலரை ஏமாற்றுவார்கள். 6யுத்தங்களைப் பற்றியும், யுத்தங்களைப் பற்றிய செய்திகளையும் கேள்விப்படுவீர்கள். ஆனால் நீங்களோ கலங்காதபடி இருங்கள். இப்படிப்பட்ட காரியங்கள் நிகழ வேண்டியவையே. ஆனாலும் முடிவு வர, இன்னும் காலம் இருக்கின்றது. 7நாட்டிற்கு விரோதமாய் நாடும், அரசுக்கு எதிராய் அரசும் எழும். பல இடங்களில் பஞ்சங்களும், பூமியதிர்ச்சிகளும் ஏற்படும். 8இவை எல்லாம் பிரசவ வேதனையின் ஆரம்பம் மட்டுமே.
9“அப்போது நீங்கள் துன்புறுத்தப்பட்டு, கொல்லப்படுவதற்கென ஒப்புக்கொடுக்கப்படுவீர்கள். என் பெயரின் பொருட்டு அனைத்து இனத்தாராலும் வெறுக்கப்படுவீர்கள். 10அக்காலத்தில் அநேகர் விசுவாசத்திலிருந்து விலகிப் போவார்கள். அத்துடன் அவர்கள் ஒருவரையொருவர் காட்டிக் கொடுக்கின்றவர்களாகவும், வெறுக்கிறவர்களாகவும் இருப்பார்கள். 11அநேக போலி இறைவாக்கினர்களும் தோன்றி, அநேக மக்களை ஏமாற்றுவார்கள். 12அநியாயம் பெருகுவதால் அநேகருடைய அன்பு தணிந்து போகும். 13ஆனால் முடிவு வரை உறுதியாய் இருப்பவனே இரட்சிக்கப்படுவான். 14இறை அரசின் இந்த நற்செய்தி, முழு உலகமும் அறியும்படி அனைத்து இனத்தவருக்கும் சாட்சியாக பிரசங்கிக்கப்படும். அதன்பின்பே முடிவு வரும்.
15“எனவே இறைவாக்கினன் தானியேல் மூலமாக சொல்லப்பட்ட, ‘பேரழிவை ஏற்படுத்துகின்ற அருவருப்பு’ ஆலயப் பரிசுத்த இடத்தில் நிற்பதை நீங்கள் காணும்போது,#24:15 தானி. 9:27; 11:31; 12:11 வாசிக்கின்ற நீங்கள் அதை விளங்கிக்கொள்ளுங்கள். 16அப்போது யூதேயாவில் இருக்கின்றவர்கள் மலைகளுக்குத் தப்பியோடட்டும். 17வீட்டின் கூரையின் மேல் இருக்கின்ற எவனும், தனது வீட்டிலிருந்து எதையாவது எடுக்கும்படி உள்ளே போகக் கூடாது. 18வயலில் இருக்கும் எவனும், தனது மேலாடையை எடுக்கும்படி திரும்பிப் போகக் கூடாது. 19அந்நாட்களில் கர்ப்பவதிகளின் நிலைமையும், பால் கொடுக்கும் தாய்மாரின் நிலைமையும் எவ்வளவு பயங்கரமாயிருக்கும்! 20நீங்கள் ஓடிப் போவது குளிர் காலத்திலாவது அல்லது ஓய்வுநாளிலாவது நேரிடாதபடி மன்றாடுங்கள். 21ஏனென்றால், அக்காலத்தில் பெரும் துன்பம் ஏற்படும்; அப்படிப்பட்ட துன்பம் உலகத் தொடக்கத்திலிருந்து இன்றுவரை ஏற்பட்டதும் இல்லை, இனி ஒருபோதும் ஏற்படப் போவதும் இல்லை.
22“அந்த நாட்கள் குறைக்கப்படாவிட்டால், ஒருவராலும் தப்ப முடியாது. ஆயினும், தெரிவு செய்யப்பட்டவர்களின் பொருட்டு, அந்த நாட்கள் குறைக்கப்படும். 23அக்காலத்தில் எவனாவது உங்களிடம் வந்து, ‘இதோ, மேசியா இங்கே இருக்கின்றார்!’ அல்லது ‘அதோ அங்கே இருக்கின்றார்!’ என்று சொன்னால், அதை நம்ப வேண்டாம். 24ஏனெனில் போலி மேசியாக்களும், போலி இறைவாக்கினர்களும் தோன்றுவார்கள். இயலுமானால், இறைவனால் தெரிவு செய்யப்பட்டவர்களையும் ஏமாற்றும்படி அவர்கள் பெரிதான அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். 25பாருங்கள், அக்காலம் வருமுன்பே, நான் உங்களுக்குச் சொல்லி எச்சரிக்கிறேன்.
26“ஆகவே எவனாவது உங்களிடம், ‘அதோ அங்கே அவர், வெளியே பாலைநிலத்தில் இருக்கின்றார்’ என்று சொன்னால், அங்கே போகாதிருங்கள்; ‘இதோ இங்கே அவர், உள் அறையில் இருக்கின்றார்’ என்று சொன்னால், அதையும் நம்பாதிருங்கள். 27ஏனெனில் கிழக்கிலிருந்து வரும் மின்னல் மேற்கிலும் தெரிவது போலவே, மனுமகனின் வருகையும் இருக்கும். 28எங்கேயாவது பிணம் கிடந்தால், அங்கே கழுகுகள் ஒன்றுகூடும்.
29“அந்த நாட்களின் பெருந்துன்பம் முடிந்த உடனேயே,
“ ‘சூரியன் இருள் அடையும்,
சந்திரன் தனது வெளிச்சத்தை கொடாதிருக்கும்;
நட்சத்திரங்கள் ஆகாயத்தில் இருந்து விழும்.
வானத்தின் அதிகாரங்கள் அசைக்கப்படும்.’#24:29 ஏசா. 13:10; 34:4
30“அவ்வேளையில், மனுமகன் திரும்பி வருவதன் அறிகுறி ஆகாயத்தில் தோன்றும். பூமியிலுள்ள இனங்களெல்லாம் புலம்புவார்கள். மனுமகன் அதிகாரத்துடனும், மிகுந்த மகிமையுடனும், ஆகாயத்து மேகங்கள் மேல் வருவதை, அவர்கள் காண்பார்கள்.#24:30 தானி. 7:13-14. 31அவர் தமது தூதர்களை உரத்த சத்தமான எக்காள அழைப்புடன் அனுப்புவார். அவர்கள் வானத்தின் ஒரு முனையிலிருந்து, மறுமுனை வரைக்குமுள்ள நான்கு திசைகளிலுமிருந்தும் அவரால் தெரிவு செய்யப்பட்டவர்களை ஒன்றுகூட்டிச் சேர்ப்பார்கள்.
32“இப்பொழுதே அத்தி மரத்திலிருந்து இந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்ளுங்கள். அதன் இளங்கிளைகள் துளிர்த்து, இலைகள் வரும்போது, கோடை காலம் நெருங்குகிறது என்று அறிகிறீர்கள். 33அவ்வாறே இவற்றையெல்லாம் நீங்கள் காணும்போது, முடிவு நெருங்கி வாசலருகே வந்துவிட்டது#24:33 வாசலருகே வந்துவிட்டது – கிரேக்க மொழியில், அவர் வாசலருகே வந்துவிட்டார் என்றும் மொழிபெயர்க்கலாம். என்று அறிந்துகொள்ளுங்கள். 34நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், இவையெல்லாம் நடந்து முடியும் வரைக்கும், இந்தத் தலைமுறையினர் ஒழிந்து போக மாட்டார்கள். 35வானமும் பூமியும் ஒழிந்து போகும். ஆனால் என் வார்த்தைகளோ ஒருபோதும் ஒழிந்து போகாது.
முடிவு நாள்
36“அந்த நாளையோ, அந்த நேரத்தையோபற்றி எவருக்கும் தெரியாது. பரலோகத்திலிருக்கின்ற தூதர்களுக்கும், மனுமகனுக்கும்கூட#24:36 கிரேக்க மொழியில், மகனுக்கும்கூட என்றுள்ளது. அதேவேளை சில பிரதிகளில் இந்த சொல் காணப்படுவதில்லை. தெரியாது. ஆனால் பிதா மட்டுமே அதை அறிவார். 37நோவாவின் நாட்களில் இருந்தது போலவே, மனுமகனது வருகையின் நாட்களிலும் இருக்கும். 38ஏனெனில் பெருவெள்ளத்திற்கு முன்பு இருந்த நாட்களில், நோவா பேழைக்குள் போகும் வரைக்கும், மக்கள் உணவு உண்டும், குடித்துக் கொண்டும், திருமணம் செய்து கொண்டும், திருமணம் செய்து கொடுத்துக் கொண்டும் இருந்தார்கள். 39பெருவெள்ளம் வந்து அவர்கள் எல்லோரையும் அடித்துக் கொண்டுபோகும் வரைக்கும், என்ன நடக்கும் என்பதைப்பற்றி அவர்கள் ஒன்றுமே அறியாதிருந்தார்கள். இதைப் போலவே, மனுமகனின் வருகையின்போதும் இருக்கும். 40இரண்டு பேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் எடுத்துக்கொள்ளப்பட, மற்றவன் விடப்படுவான். 41இரண்டு பெண்கள் திரிகைக்கல்லில் அரைத்துக் கொண்டிருப்பார்கள்; ஒருத்தி எடுத்துக்கொள்ளப்பட, மற்றவள் கைவிடப்படுவாள்.
42“ஆகையால் விழிப்பாயிருங்கள், ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என்று உங்களுக்குத் தெரியாதே. 43நீங்கள் இதை விளங்கிக்கொள்ளுங்கள்: திருடன் இரவில் எந்த நேரம் வருவான் என்று வீட்டுச் சொந்தக்காரன் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டை திருடன் உடைத்து நுழையாதபடி பார்த்துக்கொள்வானே. 44எனவே நீங்களும் ஆயத்தமாயிருக்க வேண்டும். ஏனென்றால், நீங்கள் எதிர்பாராத நேரத்திலே மனுமகன் வருவார்.
45“அப்படியானால் நம்பகமும் ஞானமும் உள்ள பணியாளன் யார்? அவனே தனது வீட்டில் உள்ள வேலைக்காரருக்கு ஏற்ற வேளையில் உணவு கொடுக்கும்படி, எஜமான் பொறுப்பாக வைத்த பணியாளன். 46எஜமான் திரும்பி வரும்போது, அவ்வாறே செய்கின்றவனாகக் காணப்படுகிற பணியாளன் ஆசீர்வதிக்கப்பட்டவன். 47நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், எஜமான் தனது உடைமைகள் எல்லாவற்றிற்கும், அவனையே பொறுப்பாக வைப்பான். 48ஆனால் அந்த பணியாளன் மோசமானவனாய் இருந்து, ‘எனது எஜமான் வர தாமதிக்கிறார்’ என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு, 49தனது சக வேலையாட்களை அடிக்கவும், குடிகாரருடன் சேர்ந்து சாப்பிட்டு, குடித்து, வெறிகொள்ளவும் தொடங்கினால், 50அந்த பணியாளனின் எஜமான் அவன் எதிர்பாராத ஒரு நாளிலும், அவன் அறிந்திராத நேரத்திலும் வருவான். 51எஜமான் வந்து அவனைப் பயங்கரமான தண்டனைக்குள்ளாக்கி#24:51 தண்டனைக்குள்ளாக்கி – கிரேக்க மொழியில், துண்டு துண்டாய் வெட்டிப் போடு என்றுள்ளது. வெளிவேடக்காரருக்குரிய இடத்தில் தள்ளி விடுவான்; அங்கே அழுகையும் வேதனையான பற்கடிப்பும் இருக்கும்” என்றார்.

Istaknuto

Podeli

Kopiraj

None

Želiš li da tvoje istaknuto bude sačuvano na svim tvojim uređajima? Kreiraj nalog ili se prijavi

Video za மத்தேயு 24