YouVersion Logo
Search Icon

ஆதியாகமம் 8

8
1ஆனாலும் இறைவன் நோவாவையும் அவனுடன் பேழைக்குள் இருந்த காட்டுமிருகங்களையும், வளர்ப்பு மிருகங்களையும் மறவாமல் நினைவுகூர்ந்தார். அவர் பூமிக்கு மேலாக காற்றை வீசச் செய்தார், அப்போது வெள்ள நீர் வற்றியது. 2பூமியின் ஆழ்நீரின் ஊற்றுகளும், வானவெளியின் மதகுகளும் மூடப்பட்டன. வான் மழை நிறுத்தப்பட்டது. 3தண்ணீர் படிப்படியாக வற்றத் தொடங்கி, நூற்று ஐம்பது நாட்களுக்குப் பின்னர் தண்ணீர் மட்டம் குறைந்தது. 4ஏழாம் மாதம் பதினேழாம் நாள் பேழையானது அரராத் என்னும் மலைத் தொடரில் தங்கியது. 5பத்தாம் மாதம் வரை தொடர்ந்து வெள்ளம் வற்றிக் கொண்டிருந்தது. பத்தாம் மாதத்தின் முதலாம் நாள் மலை உச்சிகள் தென்பட்டன.
6நாற்பது நாட்கள் கடந்ததும், பேழையில் தான் அமைத்திருந்த யன்னலை நோவா திறந்து, 7ஒரு காகத்தை வெளியே அனுப்பினார். அது பூமியில் தண்ணீர் வற்றும்வரை போவதும் வருவதுமாய் இருந்தது. 8பின்பு அவர் பூமியின் மேற்பரப்பிலிருந்த தண்ணீர் வற்றி விட்டதோ என்று பார்க்கும்படி ஒரு புறாவை அனுப்பினார். 9பூமியின் மேற்பரப்பெங்கும் தண்ணீர் இருந்தபடியால், அதற்கு காலூன்றி நிற்க இடம் இருக்கவில்லை; எனவே அது பேழைக்குத் திரும்பி நோவாவிடம் வந்தது. அவர் தமது கையை நீட்டி புறாவைப் பிடித்து, பேழைக்குள் தன்னிடம் எடுத்துக்கொண்டார். 10அவர் மேலும் ஏழு நாட்கள் பொறுத்திருந்து, திரும்பவும் பேழையிலிருந்து புறாவை வெளியே அனுப்பினார். 11அன்று மாலை வேளையில் அந்தப் புறா அவரிடத்தில் திரும்பி வந்தபோது, இதோ! அதன் அலகில் புதிதாகக் கொத்தியெடுத்த ஒலிவ இலையொன்று இருந்தது. அதனால் பூமியில் தண்ணீர் வற்றிவிட்டது என்று நோவா அறிந்து கொண்டார். 12அவர் மேலும் ஏழு நாட்கள் பொறுத்திருந்து புறாவை மறுபடியும் வெளியே அனுப்பினார், ஆனால் இம்முறை அது அவரிடம் திரும்பி வரவில்லை.
13நோவாவுக்கு அறுநூற்றொரு வயதான அந்த வருடத்தின் முதலாம் மாதம் முதலாம் நாள் நிலத்தின் மேலிருந்து தண்ணீர் வற்றி விட்டிருந்தது. நோவா பேழையின் மேல்தட்டு மூடியைத் திறந்து பார்த்தார், நிலம் உலர்ந்திருந்தது. 14இரண்டாம் மாதம் இருபத்து ஏழாம் நாளில்#8:14 இரண்டாம் மாதம் இருபத்து ஏழாம் நாளில் – அதாவது வெள்ளம் ஏற்பட்டு 1 வருடம் 10 நாட்கள் கடந்து. பூமி முழுவதுமாக உலர்ந்திருந்தது.
15அப்போது இறைவன் நோவாவிடம், 16“நீ உன் மனைவியுடனும், உன் மகன்மாருடனும் அவர்களுடைய மனைவிமாருடனும் பேழையைவிட்டு வெளியே வா. 17உன்னுடன் இருக்கும் எல்லாவிதமான உயிரினங்களாகிய பறவைகள், விலங்குகள், தரையில் ஊரும் உயிரினங்கள் ஆகிய எல்லாவற்றையும் வெளியே கொண்டுவா. அவை இனவிருத்தி அடைந்து, எண்ணிக்கையில் பெருகி, பூமியெங்கும் பரவட்டும்.” என்றார்.
18அவ்வாறே நோவா தன்னுடைய மகன்மாரோடும், தன் மனைவியோடும், மருமகள்மாரோடும் வெளியே வந்தார். 19அனைத்து மிருகங்களும், தரையில் ஊரும் அனைத்து உயிரினங்களும், எல்லாப் பறவைகளும், பூமியில் நடமாடும் உயிரினங்கள் அனைத்தும் வகை வகையாகப் பேழையிலிருந்து வெளியே வந்தன.
20அப்போது நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதன்மீது எல்லாவிதமான சுத்தமான மிருகங்கள் மற்றும் சுத்தமான பறவைகள் அனைத்திலிருந்தும் சிலவற்றைத் தகனபலிகளாகப் பலியிட்டார். 21அந்த இதமான நறுமணத்தைக் கர்த்தர் முகர்ந்து, தன் உள்ளத்தில் கூறிக் கொண்டதாவது: “மனிதனது இருதயத்தின் நினைவுகள் வாலிபப் பருவம் தொடங்கி தீமையாயிருக்கின்றன. மனிதனின் பொருட்டு நான் இனி ஒருபோதும் நிலத்தைச் சபிக்க மாட்டேன். நான் இப்போது செய்தது போல், இனி ஒருபோதும் உயிரினங்கள் எல்லாவற்றையும் அழிப்பதில்லை.
22“பூமி நிலைத்திருக்கும் வரை
விதைப்பும் அறுப்பும்,
குளிரும் வெப்பமும்,
கோடைகாலமும் குளிர்காலமும்,
இரவும் பகலும்
இனி ஒருபோதும் ஒழிவதில்லை.”

Highlight

Share

ਕਾਪੀ।

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in