YouVersion Logo
Search Icon

ஆதியாகமம் 15

15
ஆபிராமுடன் கர்த்தருடைய உடன்படிக்கை
1அதன் பின்னர், கர்த்தருடைய வார்த்தையானது ஆபிராமுக்குத் தோன்றிய ஒரு காட்சியின் வழியாக அவருக்கு வந்தது.
“ஆபிராமே, பயப்படாதே.
நான் உனது கேடயமும்,
உனக்கு மாபெரும் வெகுமதியை வழங்குகின்றவருமாக இருக்கின்றேன்”
என்றார் கர்த்தர்.
2அதற்கு ஆபிராம், “ஆண்டவராகிய கர்த்தரே,#15:2 ஆண்டவராகிய கர்த்தரே – இந்த இரு சொற்களும், இறைவனை அழைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட வை நான் பிள்ளையில்லாதவனாய் தொடர்ந்து வாழ்ந்திருக்க, நீர் எனக்குத் தரப் போகின்றதென்ன? தமஸ்கு பட்டணத்தவனான எலியேசர்#15:2 எலியேசர் – ஆபிரகாமின் வீட்டிலிருந்த அடிமைகளின் தலைவன் என்று கருதப்படுகின்றது. எனக்குப் பின்னர் என் சொத்துக்களுக்கு வாரிசாகப் போகின்றானே” என்றான். 3அதைத் தொடர்ந்து ஆபிராம், “நீர் எனக்குப் பிள்ளை பாக்கியம் கொடுக்கவில்லை! ஆதலால், இதோ, என் வீட்டில் பிறந்த பணியாளன் ஒருவன் என் வாரிசாகப் போகின்றான்” என்றார்.
4அப்போது கர்த்தருடைய வார்த்தை ஆபிராமுக்கு வந்தது: “இவன் உனது வாரிசு அல்ல; மாறாக, இதோ! உன் சரீரப் பிறப்பாய் இருக்கின்றவனே உன் வாரிசாக இருப்பான்” என்றார் கர்த்தர். 5பின்பு கர்த்தர் ஆபிராமை வெளியே அழைத்துச் சென்று, “வானத்தை அண்ணாந்து பார், நட்சத்திரங்களை உன்னால் எண்ணிக் கணக்கிட முடியுமானால் எண்ணுவாயாக; அவற்றைப் போலவே உன் சந்ததியும் கணக்கிட முடியாததாக இருக்கும்” என்றார்.
6ஆபிராம் கர்த்தரை விசுவாசித்தார், அதை கர்த்தர்#15:6 கர்த்தர் – எபிரேய மொழியில் அவர் அவருக்கு நீதியாகக் கணக்கிட்டார்.
7மேலும் கர்த்தர் ஆபிராமிடம், “கல்தேயரின் பட்டணமாகிய ஊர் என்ற இடத்திலிருந்து உன்னை வெளியே அழைத்து வந்த கர்த்தர் நானே; இந்த நாட்டை நீ உரிமைச் சொத்தாக பெற்றுக்கொள்ளும்படியாக இதை உனக்கு அளிப்பதற்கென்றே உன்னை அழைத்து வந்தேன்” என்றார்.
8அதற்கு ஆபிராம், “ஆண்டவராகிய கர்த்தரே, நான் இதை உரிமைச் சொத்தாக பெற்றுக்கொள்வேன் என்பதை எவ்வாறு உறுதி செய்வேன்?” என்று கேட்டார்.
9கர்த்தர் அவரிடம், “ஒரு இளம் பசுவையும், ஒரு பெண்வெள்ளாட்டையும், ஒரு செம்மறியாட்டுக்கடாவையும் என்னிடம் கொண்டுவா, அவை ஒவ்வொன்றும் மூன்று வயதுடையதாய் இருக்கவேண்டும்; அத்துடன் ஒரு காட்டுப் புறாவையும் ஒரு புறாக்குஞ்சையும் கொண்டுவா” என்றார்.
10அப்போது ஆபிராம் அவை எல்லாவற்றையும் அவரிடம் கொண்டுவந்து, மிருகங்களை இரண்டாகப் பிளந்து, அந்தப் பாதித் துண்டுகளை ஒன்றுக்கொன்று எதிராக ஒழுங்கு வரிசைப்படுத்தி வைத்தார்; பறவைகளையோ அவர் பாதித் துண்டுகளாக வெட்டவில்லை. 11அப்போது ஊன் உண்ணிப் பறவைகள், வெட்டி வைத்த உடல்களை உண்பதற்கு இறங்கின, ஆபிராம் அவற்றைத் துரத்தி விட்டார்.
12சூரியன் மறையும் நேரத்தில் ஓர் ஆழ்ந்த நித்திரை ஆபிராமை பற்றிக்கொண்டது. அப்போது இதோ! பயங்கரப் பீதியும் காரிருளும் அவரை மூடிக்கொண்டன. 13அவ்வேளையில் கர்த்தர் ஆபிராமிடம், “உன் தலைமுறையினர் தங்களுக்குச் சொந்தமில்லாத ஒரு நாட்டிலே அந்நியர்களாக இருப்பார்கள்; அவர்கள் நானூறு வருடங்கள் அடிமைப்படுத்தப்பட்டு துன்புறுத்தப்படுவார்கள் என்பதை நீ நன்கு அறிந்துகொள். 14ஆனால் அவர்கள் பணி செய்கின்ற அந்த இனத்தை நான் நியாயம் தீர்ப்பேன்; அதன் பின்னர் அவர்கள் அதிக உடைமைகளுடன் அங்கிருந்து வெளியேறுவார்கள். 15நீயோ சமாதானத்துடன் உன் முன்னோர்களுடன் சேருவாய், நல்ல முதிர்வயதில் மரணித்து அடக்கம் செய்யப்படுவாய். 16உன் தலைமுறையினர் நான்காம் தலைமுறையில் மறுபடியும் இங்கே திரும்பி வருவார்கள்; ஏனெனில், எமோரியருடைய பாவம் இன்னும் முழுமை அடையவில்லை”#15:16 தண்டனை பெறும் அளவுக்கு அவர்களது தீமை முழுமை பெற்றிருக்கவில்லை. என்றார்.
17சூரியன் மறைந்து இருள் உண்டானபோது, எரிகின்ற தீப்பந்தமும், புகையும் நெருப்புச் சாடி ஒன்றும் தோன்றி, வெட்டி வைத்த பாதித்துண்டுகளின் மத்தியில் இருந்த இடைவெளியின் ஊடாகச் சென்றன. 18இப்படியாக அந்நாளிலே கர்த்தர் ஆபிராமுடன் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்தி, “எகிப்தின் நீரோடைக்கும் யூப்ரட்டீஸ் நதிக்கும் இடையிலுள்ள 19கேனியர், கெனிசியர், கத்மோனியர் 20ஏத்தியர், பெரிசியர், ரெப்பாயீமியர், 21எமோரியர், கானானியர், கிர்காசியர், எபூசியர் என்பவர்களின் நாட்டை உன் தலைமுறையினருக்குக் கொடுக்கின்றேன்” என்றார்.

Highlight

Share

ਕਾਪੀ।

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in