ஆதியாகமம் 6

6
உலகத்தில் பாவம்
1பூமியில் மனிதர்கள் பெருகத் தொடங்கி, அவர்களுக்குப் பெண்பிள்ளைகள் பிறந்தபோது, 2இறைமக்கள் இந்தப் பெண் பிள்ளைகளை அழகுள்ளவர்களாகக் கண்டு, அவர்களுக்குள் தாம் விரும்பியவர்களை அவர்கள் திருமணம் செய்துகொண்டார்கள். 3அப்போது கர்த்தர், “என்னுடைய ஆவி என்றைக்கும் மனிதரோடு போராடுவதில்லை#6:3 போராடுவதில்லை இருப்பதில்லை என்றும் மொழிபெயர்க்கலாம், அவன் அழிவுக்குரிய மாம்சமானவன்;#6:3 அழிவுக்குரிய மாம்சமானவன் – எபிரேய மொழியில் மாம்சமானவன் என்றுள்ளது. அவனது நாட்கள் நூற்று இருபது வருடங்கள்” என்றார்.
4அந்த நாட்களிலும், அதற்குப் பின்னரும் நெபிலிம் என அழைக்கப்பட்டவர்கள் பூமியில் இருந்தார்கள்; இறைமக்கள் மனுக்குலப் பெண்களுடன் உறவுகொண்டு பிள்ளைகளைப் பெற்றபோது, முற்காலத்தில் புகழ்பெற்ற மனிதர்களாக இருந்த பலசாலிகள் இவர்களே.
5பூமியில் மனிதனின் கொடுமைகள் அதிகமாய் பெருகின என்பதையும், அவனது இருதயத்தின் சிந்தனைகள் எப்பொழுதும் தீமையானவை என்றும் கர்த்தர் கண்டு, 6பூமியில் மனிதனை உருவாக்கியதற்காக கர்த்தர் வருத்தமடைந்தார், அது அவருடைய இருதயத்துக்கு வேதனையாய் இருந்தது#6:6 வேதனையாய் இருந்தது எரிச்சலை உண்டாக்கியது என்றும் மொழிபெயர்க்கலாம். 7அப்போது கர்த்தர், “நான் படைத்த இந்த மனுக்குலத்தை அழித்து, பூமியிலிருந்து முற்றாக அகற்றி விடுவேன்; மனிதரோடு விலங்குகளையும், நிலத்தில் ஊரும் உயிரினங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும் அழித்து, பூமியிலிருந்து முற்றாக அகற்றி விடுவேன். இவை அனைத்தையும் உண்டாக்கியது எனக்கு மனவேதனையாக இருக்கின்றது” என்றார். 8ஆனால் நோவாவுக்கு கர்த்தருடைய பார்வையில் கிருபை கிடைத்தது.
நோவாவும் பெருவெள்ளமும்
9நோவாவின் குடும்ப வரலாறு இதுவே:
நோவா நீதிமானாக நடந்த ஒரு மனிதராகவும், தன் காலத்தில் வாழ்ந்த மக்களில் குற்றமற்றவருமாய் இருந்தார்; அவர் இறைவனுடன் நெருங்கி நடந்தார். 10சேம், காம், யாப்பேத் என்னும் மூன்று மகன்மார் நோவாவுக்கு இருந்தார்கள்.
11இறைவனின் பார்வையில் பூமியானது சீர்கெட்டதாகவும் வன்முறை நிறைந்ததாகவும் இருந்தது. 12இறைவன் பூமியைப் பார்த்தபோது, அனைத்து மனிதர்களின் வழிகளும் சீர்கெட்டுப் போனதன் காரணமாக அது உண்மையாகவே கேடு நிறைந்ததாக இருப்பதனைக் கண்டார். 13எனவே இறைவன் நோவாவிடம், “நான் அனைத்து மனிதர்களையும் முடிவுக்குக் கொண்டுவரத் தீர்மானித்தேன், பூமி அவர்களின் கொடுமையால் நிறைந்துள்ளது, நான் நிச்சயமாக அவர்களை அழிக்கப் போகின்றேன், கூடவே பூமியையும் அழிக்கப் போகின்றேன். 14ஆகவே நீ கொப்பேர் மரத்தால் ஒரு பேழையைச் செய்து, அதில் அறைகளை அமைத்து அதன் உட்புறமும், வெளிப்புறமும் நிலக்கீல் பூசு. 15அந்தப் பேழையைச் செய்ய வேண்டியவிதம்: நீளம் முந்நூறு#6:15 சுமார் 137 மீற்றர். முழமாகவும், அகலம் ஐம்பது#6:15 சுமார் 23 மீற்றர். முழமாகவும், உயரம் முப்பது#6:15 சுமார் 14 மீற்றர். முழமாகவும் இருக்கவேண்டும். 16பேழையின் மேல்தட்டிலிருந்து ஒரு முழம்#6:16 சுமார் 1 மீற்றர். உயரத்தில் அதற்கு ஒரு கூரையைச் செய், பேழையின் ஒரு பக்கத்தில் கதவு ஒன்றை வை; பேழையில் கீழ்த்தளம், நடுத்தளம், மேல்தளம் ஆகியவற்றை அமைத்துக்கொள். 17வானத்தின் கீழுள்ள அனைத்து உயிர்களையும், அதாவது உயிர்மூச்சுள்ள உயிரினங்கள் எல்லாவற்றையும் அழிப்பதற்காக, நான் பூமியின்மீது நீரை பெருவெள்ளமாக அனுப்பப் போகின்றேன். 18ஆனால் நான் என் உடன்படிக்கையை உன்னுடன் ஏற்படுத்துவேன்;#6:18 உடன்படிக்கையை உன்னுடன் ஏற்படுத்துவேன் – எபிரேய மொழியில் உடன்படிக்கையை வெட்டி நீ பேழைக்குள் உன் மகன்மார், உன் மனைவி, உன் மருமகள்மார் ஆகியோரை உன்னுடன் அழைத்துச் செல்வாய். 19உன்னோடு உயிர் தப்பி வாழும்படியாக, அனைத்து வகை உயிரினங்களிலும் ஆணும் பெண்ணுமாக ஒவ்வொரு சோடியையும் உன்னுடன் பேழைக்குள் அழைத்துச் செல்வாயாக. 20பறவைகளின் ஒவ்வொரு வகையிலும், விலங்குகளின் ஒவ்வொரு வகையிலும், நிலத்தில் ஊர்வனவற்றின் ஒவ்வொரு வகையிலும் ஒரு சோடி உயிர் தப்பி வாழும்படியாக உன்னுடன் வரட்டும். 21உனக்கும் அவற்றுக்கும் உணவாகும்படியாக, உண்ணக்கூடிய அனைத்து வகையான உணவுப் பொருட்களையும் நீ எடுத்துச் சேர்த்து வை” என்றார்.
22நோவா இவை எல்லாவற்றையும் செய்தார். ஆம், இறைவன் தனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் அவர் அவ்வாறே செய்தார்.

Pati Souliye

Pataje

Kopye

None

Ou vle gen souliye ou yo sere sou tout aparèy ou yo? Enskri oswa konekte