ஆதியாகமம் 7
7
1அதன் பின்னர் கர்த்தர் நோவாவிடம், “நீயும் உன் குடும்பத்தினர் அனைவரும் பேழைக்குள் செல்லுங்கள். ஏனெனில், இந்த சந்ததியைச் சேர்ந்தவர்களில் நீயே நீதிமான் என்பதைக் கண்டுகொண்டேன். 2சுத்தமான விலங்குகளின்#7:2 சுத்தமான விலங்குகளின் – உட்கொள்ள, பலி செலுத்த இறைவனால் அங்கீகரிக்கப்பட்டவை. ஒவ்வொரு வகையிலுமிருந்தும் ஆணும் அதன் துணையும் அடங்கிய ஏழு சோடிகளையும், சுத்தமில்லாத விலங்குகளின் ஒவ்வொரு வகையிலுமிருந்தும் ஆணும் அதன் துணையும் அடங்கிய ஒரு சோடியையும் எடுத்துச் செல்; 3பறவைகளில் ஒவ்வொரு வகையிலுமிருந்தும் ஆணும் பெண்ணுமாக ஏழு சோடிகளையும் உன்னுடன் எடுத்துச் செல். 4இன்னும் ஏழு நாட்களில், நாற்பது இரவுகளும் நாற்பது பகல்களும் தொடர்ந்து பூமியின்மேல் மழையை அனுப்பி, நான் உருவாக்கிய அனைத்து உயிரினங்களையும் அழித்து, பூமியின் மேற்பரப்பிலிருந்து முற்றாக அகற்றி விடுவேன்” என்றார்.
5கர்த்தர் தனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் நோவா செய்தார்.
6பூமியின்மீது, நீரானது பெருவெள்ளமாக வந்தபோது நோவாவுக்கு வயது அறுநூறு. 7பெருவெள்ள நீரிலிருந்து தப்பும்படியாக நோவாவும், அவரது மகன்மாரும், அவரது மனைவியும், அவரது மருமகள்மாரும் பேழைக்குள் சென்றார்கள். 8அனைத்து சுத்தமான மிருகங்களும், அசுத்தமான மிருகங்களும், பறவைகளும், நிலத்தில் ஊரும் உயிரினங்களும் சோடி சோடியாக, 9ஆணும் பெண்ணுமாக, இறைவன் நோவாவுக்குக் கட்டளையிட்டபடியே நோவாவிடம் வந்து பேழைக்குள் சென்றன. 10அதன் பின்னர் ஏழு நாட்கள் கடந்ததும் பூமியின்மீது பெருவெள்ள நீர் வந்தது.
11நோவாவுக்கு அறுநூறு வயதான அந்த வருடத்தின் இரண்டாம் மாதத்தின் பதினேழாம் நாளில், பூமியின் ஆழ்நீரின் ஊற்றுகள் யாவும் வெடித்துப் பீறிட்டன; வானவெளியின் மதகுகளும் திறக்கப்பட்டன. 12நாற்பது நாட்களாக, இரவும் பகலும் பூமியின்மீது அடைமழை பெய்தது.
13நோவாவும், சேம், காம், யாப்பேத் என்னும் அவருடைய மகன்மாரும், நோவாவின் மனைவியும், மருமகள்மாரும் மழை பெய்ய ஆரம்பித்த அன்றே பேழைக்குள் நுழைந்தனர். 14எல்லாவித காட்டுமிருகங்களும் அவை ஒவ்வொன்றினதும் வகைகளின்படியும், எல்லாவித வளர்ப்பு மிருகங்களும் அவை ஒவ்வொன்றினதும் வகைகளின்படியும், தரையில் ஊரும் எல்லாவித உயிரினங்களும் அவை ஒவ்வொன்றினதும் வகைகளின்படியும், எல்லாவித பறவைகளும் அவை ஒவ்வொன்றினதும் வகைகளின்படியும், அத்துடன் சிறகுகளைக் கொண்ட யாவும் அவர்களோடு இருந்தன. 15உயிர்மூச்சுள்ள அனைத்து உயிரினங்களில் இருந்தும் ஒவ்வொரு சோடி நோவாவிடம் வந்து, அவை சோடி சோடியாக பேழைக்குள் சென்றன. 16இறைவன் நோவாவுக்குக் கட்டளையிட்டபடியே, அனைத்து உயிரினத்தைச் சேர்ந்த விலங்குகளில் இருந்தும் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் உட்சென்றன. கர்த்தர் நோவாவை உள்ளேவிட்டுக் கதவை மூடினார்.
17வெள்ளம் பூமியின்மீது நாற்பது நாட்களாக நீடித்து பெருக்கெடுத்தது. இவ்வாறு வெள்ள நீரின் ஆழம் பெருகியபோது, அது பேழையை நிலத்திலிருந்து கிளப்பி, நிலத்திலிருந்து அதிக உயரத்துக்குக் கொண்டு சென்றது. 18இவ்வாறாக நீரானது பூமியை ஆட்கொண்டு, அதிகமாகப் பெருகியபோது பேழையானது நீரின் மேற்பரப்பில் மிதந்தது. 19நீரானது பூமியை மேலும் மேலும் ஆட்கொண்டு அதிகரித்ததால், அனைத்து இடங்களிலும்#7:19 அனைத்து இடங்களிலும் – எபிரேய மொழியில் வானத்தின் கீழுள்ள என்றுள்ளது. உள்ள உயரமான மலைகள் யாவும் நீரால் மூடப்பட்டன. 20வெள்ள நீரானது மலை உச்சிகளையும் ஆட்கொண்டு, அவற்றைவிட பதினைந்து முழத்துக்கும்#7:20 பதினைந்து முழத்துக்கும் – சுமார் 7 மீற்றருக்கும் அதிகமாக. அதிகமாக உயர்ந்து, அவற்றை மூடியது. 21அப்போது பூமியில் நடமாடித் திரிந்த அனைத்து உயிரினங்களும் இறந்தன; பறவைகளும், காட்டுமிருகங்களும், வளர்ப்பு மிருகங்களும், பூமியில் ஊர்ந்து திரிந்த அனைத்து பிராணிகளும் இறந்து போயின; அத்துடன் மனுக்குலமும் முற்றிலுமாக அழிந்தது. 22தங்கள் மூக்கில் உயிர்மூச்சின் ஆவியைக் கொண்டிருந்த, நிலத்தில் வாழ்ந்த யாவும் இறந்து போயின. 23பூமியின் மேற்பரப்பிலிருந்த அனைத்து உயிரினங்களும் அழிக்கப்பட்டு, முற்றாக அகற்றப்பட்டன; மனிதர்களுடன், மிருகங்கள், தரையில் ஊரும் உயிரினங்கள் மற்றும் ஆகாயத்துப் பறவைகள் என எல்லாமே அழிக்கப்பட்டு, பூமியிலிருந்து அவை முற்றாக அகற்றப்பட்டன. நோவாவும் அவனுடன் பேழைக்குள் இருந்தவர்களும் மாத்திரமே உயிர் தப்பினார்கள்.
24இவ்வாறு பெருவெள்ளத்தின் நீரானது நூற்று ஐம்பது நாட்களாக பூமியை ஆட்கொண்டிருந்தது.
دیاریکراوەکانی ئێستا:
ஆதியாகமம் 7: TRV
بەرچاوکردن
هاوبەشی بکە
لەبەرگرتنەوە
دەتەوێت هایلایتەکانت بپارێزرێت لەناو ئامێرەکانتدا> ? داخڵ ببە
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.