வாழ்க்கையின் அர்த்தம்மாதிரி

வாழ்க்கையின் அர்த்தம்

3 ல் 1 நாள்

உலக ஓட்டமும் மரணத்தின் யதார்த்தமும்

அண்மையில் எனது சிறுவயது நண்பன், என்னை விட ஒரு வயது இளையவன், புற்றுநோயால் இறந்துவிட்டான். அவன் தன் குடும்பத்தில் மூத்த மகன். எத்தனையோ எதிர்பார்ப்புகள் அவனுக்கு இருந்திருக்கும். படித்து முடித்துவிட்டு வாழ்க்கையைத் தொடங்கும் காலம் அது. எதிர்காலத்தைக் குறித்த எண்ணற்ற கனவுகளோடு இருந்திருப்பான். ஆனால், கடந்த இரண்டு வருடப் போராட்டத்தின் இறுதியில் மரணம் அவனைத் தழுவிக்கொண்டது.

அந்த மரண வீட்டின் சூழலையும், அங்கே கிடத்தப்பட்டிருந்த அவனது உடலைப் பார்க்க வந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களையும் கவனித்தபோது, எனக்குள்ளே ஒரு சிந்தனை மீண்டும் மீண்டும் எழுந்தது: "ஏன் இந்த வாழ்க்கை? இந்த வாழ்க்கையின் அர்த்தம்தான் என்ன?" 25 வருடங்கள் வளர்த்த மகன் மரணித்துப் போனபோது, அந்தப் பெற்றோர்கள் அதை எவ்வாறு ஏற்றுக் கொள்வார்கள்? அவர்களுக்கு எப்படி ஆறுதல் கிடைக்கும்? எனப் பல கேள்விகள் எழும்பின.

இந்த உலகத்தைப் பார்த்தால், மனிதர்கள் பிறக்கிறார்கள், வளர்கிறார்கள், கல்வி கற்கிறார்கள், அறிவு அடைகிறார்கள். சிலர் அத்தகைய வாய்ப்புகள் கிடைக்காமல் வேறு வழிகளில் செல்கிறார்கள். தங்களுடைய அறிவுக்கும் திறமைக்கும் ஏற்ப வேலைகளைச் செய்கிறார்கள். ஏதோ ஒரு வகையில் தாம் வாழும் சமூகத்தில் பங்காற்றுகிறார்கள். ஒருசிலர் நோக்கமின்றியும் வாழ்கிறார்கள். ஆனால், பலரோ தமது வாழ்க்கையில் அடுத்தகட்ட முன்னேற்றத்தை நோக்கி ஓடுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான இலக்குகள் உண்டு. சிலர் அதிக அறிவைப் பெறவும், சிலர் அதிக ஊதியம் பெறவும், சிலர் சொத்துகளைப் பெருக்கவும் ஓடுகிறார்கள். இன்னும் சிலர் இந்த உலகத்தில் எதையாவது சாதிக்க அல்லது புதிதாக எதையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற வேட்கையோடு முன்னேறுகிறார்கள். பலர் உலகிற்குப் பிரயோஜனமாக வாழ்கிறார்கள்; வெகு சிலர் எந்தப் பிரயோஜனமும் இன்றியும் வாழக்கூடும்.

"சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிற காரியங்களையெல்லாம் பார்த்தேன்; இதோ, அவையெல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது." (பிரசங்கி 1:14)

வாழ்க்கை இப்படியே தொடர்ந்து நீடிப்பதில்லை. இந்த ஓட்டம் ஒருநாள் முடிவுக்கு வரும். அனைவருக்கும் மரணம் என்பது நிச்சயம். சிலருக்கு அது சடுதியாக வரும்; சிலருக்கு எதிர்பார்ப்புடனேயே வரும். சிலர் வாழ்க்கையைத் தொடங்கும்போதே மரணிக்கிறார்கள்; சிலர் வாழ்ந்து அனுபவித்து முதிர் வயதில் மரணிக்கிறார்கள். எல்லா நிலைகளிலும் மரணம் என்பது தவிர்க்க முடியாதது. உதாரணமாக, ஒருவர் மிகவும் பயன்தரக்கூடிய ஒரு நவீன இயந்திரத்தை உருவாக்குகிறார் என்று வைப்போம். அவர் அதை உருவாக்கத் தொடங்கும் முன்னரோ, வேலை நடந்து கொண்டிருக்கும் போதோ, அல்லது முடியும் தருவாயிலோ மரணம் வரலாம். இல்லை எனில், அதை அறிமுகப்படுத்தி அதன் பெயரையும் புகழையும் அனுபவித்த பிறகு ஒருநாள் மரணம் வரலாம். அப்படியென்றால் இதன் அர்த்தம்தான் என்ன? நாம் இந்த உலகத்தில் செய்கிற ஒவ்வொரு காரியத்தின் பலன் என்ன?

"ஒருவன் தன் பிரயாசத்தினாலே பெறுகிற பலன் என்ன? அவன் நாட்களெல்லாம் துக்கமும், அவன் வேலை சஞ்சலமுமாயிருக்கிறது; இராத்திரியிலும் அவன் மனதிற்கு இளைப்பாறுதலில்லை; இதுவும் மாயையே." (பிரசங்கி 2:22-23)


சிந்தனை
நமது வாழ்க்கை நிலையற்றது என்றால், நாளை நாம் இறந்துபோனால் நம் வாழ்வின் நிலை என்ன? இந்தக் கேள்வியை உங்கள் வாழ்க்கையில் எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா? உங்கள் வாழ்க்கை உங்களுக்கு அர்த்தத்தைத் தருகிறதா? அதைச் சிந்தித்துப் பாருங்கள். எந்தவொரு வேலையைச் செய்யும்போதும், அதை 'ஏன் செய்கிறோம்?' என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். இந்தக் கேள்வி உங்களிடம் இல்லையென்றால், அதற்கான பதிலை நீங்கள் கண்டடையவில்லை என்றால், நீங்கள் இருளில் வாழ்கிறீர்கள்; உங்கள் கண்கள் குருடாகி இருக்கின்றன.

இந்த திட்டத்தைப் பற்றி

வாழ்க்கையின் அர்த்தம்

வாழ்க்கை என்பது வெறும் பிறப்பு, படிப்பு, உழைப்பு மற்றும் மரணம் சார்ந்த ஒரு சுழற்சிதானா? எதிர்பாராத இழப்புகளும், மரணத்தின் நிழலும் நம்மைச் சூழும் போது, "ஏன் இந்த வாழ்க்கை? இதன் உண்மையான அர்த்தம் என்ன?" என்ற கேள்விகள் எழுகின்றன. இந்த 3 நாள் தியானத் திட்டம், உலகப்பிரகாரமான ஓட்டத்தின் மாயையையும், மரணத்தின் யதார்த்தத்தையும் கடந்து, தேவன் நமது வாழ்க்கையில் வைத்திருக்கும் உன்னதமான நோக்கத்தை விளக்குகிறது. நம்முடைய மீட்பராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் கண்டடையும் இரட்சிப்பு எவ்வாறு ஒரு அர்த்தமற்ற வாழ்வை அழகாக்குகிறது என்பதையும், நித்தியத்தை நோக்கிய நம்பிக்கையையும் இதழ்வழியே நாம் தியானிக்கப்போகிறோம். வாழ்க்கையின் போராட்டங்களுக்கு மத்தியில் தேவன் தரும் ஆறுதலையும், அவர் நமக்காக வைத்திருக்கும் நித்திய நோக்கத்தையும் கண்டடைய இந்தத் தியானம் உங்களுக்கு உதவும்.

More

இந்த திட்டத்தை வழங்கிய Josiah Prathaban க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://kirubaisathiyam.org/