நற்செய்தி: தேவனுடைய இரட்சிப்பின் திட்டம்மாதிரி

சிருஷ்டிப்பு: தேவனுடைய பூரணமான படைப்பும் நோக்கமும்
தேவன் ஒருவரே சர்வத்தையும் சிருஷ்டித்த சிருஷ்டி கர்த்தர். பரிசுத்த வேதாகமம் ஆரம்பிக்கும் பொழுதே “ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.” (ஆதி 1:1) என்று கூறுகிறது. "சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை." (யோவா 1:3) அனைத்தும் அவரிடமிருந்தே தொடங்குகின்றன. அவர் ஒருவரே நித்தியமானவர், சுயம்புவானவர் (Self-Existent) மற்றும் சர்வவல்லமையுள்ளவர். "கர்த்தருடையவார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது." (சங் 33:6).
அனால் இன்றய உலகம் பல வித்தியாசமான கண்ணோட்டங்களை கொண்டுள்ளது. நவீன அறிவியல், அண்டத்தையும் உயிரினங்களையும் இயற்கைச் செயல்முறைகளின் வழியாக விளக்குவதோடு, காலப்போக்கில் இந்தப் பிரபஞ்சம் எவ்வாறு உருவானது என்பதையும் உயிரினங்கள் எவ்வாறு மாற்றமடைந்து பன்முகத்தன்மை கொண்டன என்பதையும் விவரிக்கிறது. சிலர் இந்த விளக்கங்களை வைத்துக்கொண்டு, அனைத்தும் தற்செயலானது என்றும் நோக்கம் அற்றது என்றும் கருதுகின்றனர். ஆனால் இத்தகைய முடிவுகள் அறிவியல் நிரூபிக்கக்கூடிய எல்லைக்கு அப்பாற்பட்டவை. அறிவியலுக்கு அப்பால், வேறு சில உலகக் கண்ணோட்டங்களும் உள்ளன. உதாரணமாக, யதார்த்தத்தை வெறும் பருப்பொருள் (Matter) சார்ந்ததாக மட்டும் பார்க்கும் தத்துவங்கள்(Philosophical naturalism), மனித அறிவு மற்றும் விழுமியங்களுக்குள் அர்த்தத்தைத் தேடும் மனிதநேயம் (Humanism), பிரபஞ்சம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது என்று நம்பும் பார்வைகள், மற்றும் ஒரு உயர்ந்த ஆற்றல் அல்லது படைப்பாளரை நம்பும் ஆன்மீகக் கண்ணோட்டங்கள். இந்த பல்வேறு பார்வைகளுக்கு மத்தியில், பரிசுத்த வேதாகமம் ஒரு தெளிவான மற்றும் தனித்துவமான உண்மையை முன்வைக்கின்றன, படைப்பு என்பது தற்செயலானதோ அல்லது அர்த்தமற்றதோ அல்ல, அது தேவனுடைய சித்தத்தினால் உருவான ஒரு செயல். வேதாகமம் கூறுகிறது “கர்த்தாவே,தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றார்கள்.” (வெளி 4:11). வேதத்தின் வெளிச்சத்தில் பார்க்கும்போது, இந்த பிரபஞ்சமும் நாம் அதில் காணும் அனைத்தும், ஞானமும் இறையாண்மையும் கொண்ட ஒரு படைப்பாளரின் திட்டமிட்ட வடிவமைப்பையே பிரதிபலிக்கின்றன.
தேவன் தமது தேவையினாலோ அல்லது தனிமையினாலோ எதையும் படைக்கவில்லை. அவர் தமக்குள் முழுமையானவர், அவர் எதிலும் தங்கியிருப்பவரும் அல்ல. "உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம்பண்ணுகிறதில்லை. எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையானதுபோல, மனுஷர் கைகளால் பணிவிடைகொள்ளுகிறதுமில்லை." (அப் 17:24–25). மாறாக, தேவன் தமது மகிமையை வெளிப்படுத்தவும், தமது வல்லமை, ஞானம் மற்றும் அன்பை வெளிப்படுத்தவும், தமது சித்தத்தினாலும் நன்மையினாலும் அனைத்தையும் படைத்தார். (நீதி 16:4), (ரோம 11:36), (ஏசா 43:7), (சங் 104:24).
தேவன் மனிதனைத் தமது சாயலில் படைத்துத் தனது படைப்பிற்கு முடிசூட்டினார். "பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்." (ஆதி 1:26). அவர் மனிதகுலத்திற்கு ஒரு சிறப்பு கௌரவத்தையும் பொறுப்பையும் அளித்தார்: "தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்." (ஆதி 1:27-28). மனிதகுலம் தேவனுடைய குணாதிசயங்களை பிரதிபலிக்கவும், அவருடைய அதிகாரத்தின் கீழ் இவ்வுலகத்தை ஆளவும் படைக்கப்பட்டது. இத்தகைய கண்ணியத்தைப் பெற நாம் தகுதியற்றவர்களாக இருந்தபோதிலும், தேவன் கிருபையாக நாம் அவரை அறிந்துகொள்ளவும் அவரை சேவிக்கவும் தக்க சிலாக்கியத்தை தந்தார் (சங் 8:4–6).
தேவன் மனிதகுலத்திற்கு 'சுயாதீன விருப்பம்' (Free will) அதாவது அவரை நேசிப்பதற்கும் அவருக்குக் கீழ்ப்படிவதற்கும் தேர்ந்தெடுக்கும் திறனையும் அளித்தார். "தேவனாகியகர்த்தர்மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்." (ஆதி 2:16–17). தேவன் கட்டாயப்படுத்தப்பட்ட கீழ்ப்படிதலை அல்ல, மாறாக விருப்பத்துடன்கூடிய கீழ்ப்படிதலையும் அன்பின் அடிப்படையிலான உறவையும் விரும்பினார். "நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்." (யோவா 14:15), "நீ உன் தேவனாகியகர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக." (உபா 6:5).
அனைத்தையும் படைத்த பிறகு, தேவன் தமது கிரியைகளை பூரணமானவை என்றும் நல்லவை என்றும் அறிவித்தார். "அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது." (ஆதி 1:31). அங்கே பாவமும் மரணமும் இருக்கவில்லை. அங்கே சமாதானமும், சந்தோஷமும் மட்டுமே இருந்தது. தேவன் படைத்த அனைத்தும் நன்றாக இருந்தது, பாவம் உலகில் நுழையும் வரை மனிதகுலம் அவருடன் பூரண ஐக்கியத்தில் வாழ்ந்தது.
சிந்தனை
பிரபஞ்சமும் நாம் அதில் காணும் அனைத்தும் உருவாவதற்கு முன்னரே தேவன் இருந்தார், அவர் நித்தியமானவர், தமக்குள்ளேயே நிறைவானவர் மற்றும் மகிமை பொருந்தியவர். அவர் ஏதோ ஒரு தேவையினால் எதையும் படைக்கவில்லை, மாறாகத் தமது சுபாவத்தின் அளவற்ற நன்மையினால் அனைத்தையும் படைத்தார். படைக்கப்பட்ட ஒவோன்றும் அவருடைய மகிமையை அறிவிக்கவே இருக்கின்றன (சங் 19:1).
அவருடைய சாயலில் படைக்கப்பட்டவர்களாகிய நாம், நமது வாழ்வின் மூலமும், இந்தப் படைப்புகளை ஆளுவதன் மூலமும் அவருடைய குணாதிசயங்களை பிரதிபலிக்கப் படைக்கப்பட்டோம். நமது நோக்கம் சுய திருப்தி அல்ல, மாறாக தேவனை மகிமைப்படுத்துவதே ஆகும். நாம் அவருடைய மகிமைக்காக வாழும்போதுதான், நமது ஆழமான மகிழ்ச்சியையும் நோக்கத்தையும் வாழ்க்கையின் அர்த்தத்தையும் கண்டடைய முடியும்.
ஒரு நிமிடம் சிந்தித்து பாப்போம், இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தவர் எம்மை ஒரு நோக்கத்தோடு, தமது சாயலில், தமக்காக உருவாக்கினார். இந்த உலகில் எங்களை ஒரு உரிமையாளராக அல்ல, மாறாக ஒரு பொறுப்பாளராக (Steward) அவர் வைத்திருக்கிறார். எங்கள் மதிப்பு நாங்கள் எதைச் சாதிக்கிறோம் என்பதில் அல்ல மாறாக, நாங்கள் தேவனால், அவருடைய சாயலில், அவருக்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறோம் என்ற உண்மையிலே உள்ளது (கொலோ 1:16).
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

வருகின்ற 10 நாள் திட்டத்தில், தேவன் இந்த உலகத்தை எவ்வளவு மகிமையாய்ப் படைத்தார் என்பதையும், பாவத்தின் பிரவேசத்தினால் மனுக்குலம் அடைந்த அந்தகார நிலையையும் நாம் ஆராய்ந்து பார்க்கலாம். நாம் பாவிகளாயிருக்கையில் தேவன் நம்மேல் வைத்த அளவற்ற அன்பினால், தமது தயையுள்ள சித்தத்தின்படி நமக்காக ஒரு மீட்பின் திட்டத்தை நியமித்தார். அந்தத் திட்டத்தை அவர் இயேசு கிறிஸ்துவில் நிறைவேற்றி, நம்மைப் பாவத்திலிருந்து மீட்டு, இன்றும் பரிசுத்த ஆவியானவர் மூலமாக நம்மைப் பரிசுத்தமாக்கித் தமது கிருபையினால் தொடர்ந்து நடத்தி வருகிறார். இந்தத் தியானத்தின் ஊடாக, கிறிஸ்துவுக்குள் நமக்குக் கிடைத்துள்ள புதிய அடையாளத்தையும், அவர் நமக்குக் கொடுத்துள்ள உன்னதமான பணியையும், நித்திய நம்பிக்கையையும் விரிவாகத் தியானிக்கப்போகிறோம்.
More
இந்த திட்டத்தை வழங்கிய Josiah Prathaban க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://kirubaisathiyam.org/




