சத்தியம் மறுரூபப்படுத்தும்மாதிரி

சத்தியம் மறுரூபப்படுத்தும்

8 ல் 1 நாள்

சத்தியமும் பகுத்தறிவும்

“இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய்.”
– யோசுவா 1:8

கி.பி. 823ல், சீன சந்நியாச ஆசிரமங்களில் (மடங்களில்) மிக அதிகமான புத்தகங்கள் இருந்ததால், அவர்கள் சுழலும் புத்தக அலமாரிகளை கண்டுபிடித்தார்கள். இவ்வளவு புத்தகங்கள் இருந்தும் ‘அச்சிடுதல்’ (Printing) சீனாவை சீர்திருத்தவில்லை. ஏன்?

12ஆம் நூற்றாண்டில், யே மெங்டே (Ye Mengde) எனும் ஒரு புத்த மதச் சந்நியாசி, சீனாவின் பல கோவில்களையும் மடங்களையும் பார்வையிட்டார். (ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் போன்ற கிறிஸ்தவ மடங்கள் பல்கலைக்கழகங்களாக மாறிக்கொண்டிருந்த சமயம் அது). அவர் அங்கு கவனித்ததில் முக்கியமானது என்னவென்றால்: “பத்து கோவில்களில், ஆறு அல்லது ஏழு இடங்களில், இரவும் பகலும் சுழலும் அலமாரிகளின் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது.”

ஆனால் அந்த சந்நியாசிகள் அந்த அலமாரிகளை சுழற்றியது, உண்மையிலேயே புத்தகங்களைத் தேடி வாசிப்பதற்காகவா?

வரலாற்றாசிரியர் லின் வைட் ஜூனியர் (Lynn White Jr.) விளக்குகிறார்: சுழலும் புத்தக அலமாரிகளின் சத்தம் “பண்டிதப் பணி” காரணமாக ஏற்பட்டதல்ல. அவர்கள் அந்த புத்தகங்களை வாசிக்கவில்லை (1. Lynn White Jr., Medieval Religion and Technology - Berkeley: University of California Press, 1978, பக். 47). சந்நியாசிகள் அந்த அலமாரிகளின் சுழலும் சத்தத்தை ஒரு மந்திரமாகப் பயன்படுத்தி பிரார்த்தனை செய்தனர். அவர்கள் ஞானத்தை நாடவில்லை; மாறாக, பரிசுத்த நூல்களை சுழற்றுவதன் மூலம் மோட்சத்தை நாடினர். அர்த்தமில்லாத அந்த ஓசையுடன் தியானிப்பது, அனைத்து சிந்தனைகளையும் மனத்திலிருந்து வெளியேற்ற உதவியது.

ஏன் இந்தியா, சீனா, ஆப்பிரிக்கா போன்ற பண்டைய நாகரிகங்கள் தொழில்நுட்பத்தையும் பொருளாதாரத்தையும் வளர்க்கவில்லை? அதற்குக் காரணம், நம் முனிவர்கள், “‘பாவத்திலிருந்து விடுதலை பெறுவதால்’ அல்ல, மாறாக, ‘ஞானம், அல்லது அறிகிற அறிவிலிருந்து விடுதலை பெறுவதால்’ மோட்சம் அடையலாம் என்றார்கள்

இந்து/புத்த மதங்களில் தியானம் பற்றி உள்ள கருத்து, கிறிஸ்துவ தியானக் கருத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. இந்து/புத்த மதங்களில், தியானம் என்பது மனதை, எந்த ஒரு சிந்தனையுமின்றி, முழுமையாக காலியாக செய்யும் செயலாகும். ஆனால் பைபிளின் படி, தியானம் என்றால் மனதை நிரப்புவது; அதாவது தேவ சத்தியத்தால் மனதை நிரப்புவதாகும். இதனால் கிறிஸ்தவர்கள் இரவும் பகலும் பைபிள் வசனங்களில் தியானித்து, மனதை தேவ வார்த்தையால் நிரப்ப வேண்டும்.

ஐரோப்பாவில் தொழில்நுட்பத்தை மேம்படுத்தியது யார் தெரியுமா? தொழில்நுட்ப வல்லுநர்கள் அல்ல; மத்திய கால துறவிகள் (Medieval monks). ஏனென்றால் கிறிஸ்துவ மடங்களில், புதிதாக சேர்பவர்கள், பல ஆண்டுகள் கல்வி கற்க வேண்டும். பைபிளைப் புரிந்து கொண்டு அதை வாழ்வில் நடைமுறையில் பயன்படுத்த, அவர்கள் மொழி, இலக்கணம், இலக்கியம், கணிதம், இசை, தத்துவம், மேலும் விவசாயம், கால்நடை பராமரிப்பு, மருத்துவம், உலோகவியல், தொழில்நுட்பம் போன்ற நடைமுறை கலைகளையும் படிக்க வேண்டியிருந்தது.

அதனால், ‘ஆன்மீக வாழ்க்கையை வளர்க்கும்’ ஒரு இடமாக இருந்த கிறிஸ்தவ மடம், சிறப்பான பகுத்தறிவுள்ள மனிதர்களை (rational person) உருவாக்கத் தொடங்கியது.

அவர்கள் மனித மனம் என்பது மிருக மூளையிலிருந்து வேறுபட்டது என்று புரிந்து கொண்டனர். மனித மூளை, தேவனுடைய உருவத்தில் படைக்கப்பட்டதால், தேவனையும், சத்தியத்தையும், அவரது படைப்புகளின் அழகையும் ரசித்து, அவற்றை நேசிக்கும் திறன் கொண்டது. இதன்மூலம் தேவனுடைய பிள்ளைகள் பூமியின் மேல் ஆட்சியை நிலைநிறுத்த படைக்கப்பட்டவர்கள் என்று நம்பினர்.

அதனால்தான் கிறிஸ்தவ துறவிகள் புத்தகங்களை நகலெடுத்து, ஓவியங்களுடன் விளக்கி, விளக்கவுரை செய்து, நூலகங்களில் சேகரித்தனர். அவர்கள் கணக்குப் பதிவு மற்றும் மேலாண்மை முறைகளையும் உருவாக்கினர். தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து பயன்படுத்தியதன் மூலம் அவர்கள் படைப்பாற்றலிலும் உற்பத்தியிலும் முன்னேறினர்.

தங்களுக்கு கொடுக்கப்பட்ட திறமைகளைப் பலப்படுத்துவதற்காக, துறவிகள் மூலதனவாதத்தின் கோட்பாடுகள் (Capitalism), சட்ட மற்றும் அரசியல் அமைப்புகளை (Legal and Political systems) வடிவமைத்தனர்.

இதனாலேயே, மேற்கு நாடுகள், கல்வி, தொழில்நுட்பம், பொருளாதாரம், அரசியல், சட்டம் மற்றும் அறிவியல் சிறப்பின் உச்சியை அடைய, பைபிளே ஒரு ஏணி ஆனது.

சிந்திக்கத் தூண்டும் கேள்விகள்:

நீங்கள் பைபிளைப் படிப்பதற்கான நோக்கம் என்ன?

ஒரு தினசரி கிறிஸ்துவ கடமையை முடிக்கவா? அல்லது, தேவனுடைய சித்தத்தை அறியவா? சத்தியத்தைத் தேடவும், உங்கள் சிந்தனையை வளர்க்கவும், அதை பிரச்சனைகளைத் தீர்க்கப் பயன்படுத்தவும்— இதனால் மற்றவர்களுக்கும் உதவி செய்து, பிறரும் நிறைவான வாழ்வை அடையும்படி செய்யவா?

தொடர்புடைய வேத வசனங்கள்:

● “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ்செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.” – 2 தீமோத்தேயு 3:16,17

● “கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.” – சங்கீதம் 1:2,3

● “சுயாதீனப்பிரமாணமாகிய பூரணப்பிரமாணத்தை உற்றுப்பார்த்து, அதிலே நிலைத்திருக்கிறவனே கேட்கிறதை மறக்கிறவனாயிராமல், அதற்கேற்ற கிரியை செய்கிறவனாயிருந்து, தன் செய்கையில் பாக்கியவானாயிருப்பான்.” – யாக்கோபு 1:25

வேதவசனங்கள்

இந்த திட்டத்தைப் பற்றி

சத்தியம் மறுரூபப்படுத்தும்

சத்தியம் விடுவிக்கும்! சத்தியம் சீர்திருத்தும்! சத்தியம் மறுரூபப்படுத்தும்! ஆனால் 'சத்தியம்' என்றால் என்ன? இயேசு ஒரு வியக்கத்தக்க கூற்றைச் சொன்னார்: “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்” (யோவான் 14:6) என்றும், அவருடைய வார்த்தையே சத்தியத்தின் ஊற்றாகும் (யோவான் 17:17) என்றும் கூறினார். மேலும், சத்தியத்தின் ஆவியினால் தம்முடைய சீடர்களை ஞானஸ்நானம் செய்வதாகவும் வாக்குறுதி அளித்தார். ஆனால் இது வெறும் மத அல்லது ஆவிக்குரிய உணர்ச்சி மட்டும்தானா? அல்லது 'சத்தியம்', உண்மையிலேயே தனிப்பட்ட வாழ்க்கையிலும், சமூகங்களிலும், நாடுகளிலும் நடைமுறை மாற்றங்களைக் கொண்டுவர முடியுமா?

More

இந்த திட்டத்தை வழங்கிய Vishal Mangalwadi க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: revelationmovement.com