திட்ட விவரம்

இவைகளில் அன்பே பிரதானம்மாதிரி

இவைகளில் அன்பே பிரதானம்

26 ல் 17 நாள்

தேவனுடைய அன்பு இல்லாத பட்சத்தில், பாம்பின் விஷத்தை விட நம்முடைய வார்த்தைகள் அதிக விஷமுள்ளதாய் மாறிவிடமுடியும். ரோமர் 3:13ல் பவுல், “அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது” என்று கூறுகிறார். ஆவிக்குரிய ஜீவியத்தின் முதிர்ச்சியை “நாவைக் கட்டுப்படுத்துதல்” என்றும் அளவுகோலை வைத்து அளந்து விடலாம். அனுதினமும் புறங்கூறுதல், தேவையில்லாமல் குறைசொல்லுதல் போன்ற காரியங்கள் கிறிஸ்தவ சமுதாயத்துக்கு மட்டுமல்ல, நம்முடைய சொந்த ஆத்துமாவுக்கும் விஷம் போல இருக்கிறது. யாரைக் குறித்தாவது புறங்கூறவேண்டும், அவதூறு செய்ய வேண்டும் என்ற சோதனை உங்களுக்கு ஏற்படும்போது இந்த வசனத்தை நினைவுக்கு கொண்டு வாருங்கள். “ஒருவருக்கொருவர் தயவாயும் மனவுருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” (எபேசியர் 4:32).


இயற்கையான பாசத்துக்கும் அன்புக்கும் மதிப்பூட்டுவது நம்முடைய வாழ்க்கையில் காணப்படும் தேவனுடைய அன்பாகும். சமீபத்தில் ஒரு சிறு பெண்ணைக் குறித்து வாசித்தேன். தன்னுடைய பொம்மைகளோடு விளையாடிக் கொண்டிருந்த அவள் திடீரென்று எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டு, தாயின் மடியில் போய் அமர்ந்து கொண்டு, அவளை பாசத்தோடு கட்டியணைத்து முத்தமிட ஆரம்பித்தாள். ஆச்சரியத்தில் அந்தத் தாய், “பொம்மைகளை விட்டுவிட்டு அம்மாவிடம் ஏன் வந்தாய்” என்று கேட்டார்கள். அந்தப் பெண்ணுடைய குழந்தைத்தனமான பதில் என்ன தெரியுமா? அவள் சொன்னாள்: “அம்மா, நான் பொம்மைகளை நேசிக்கிறேன். ஆனால் அந்த பொம்மைகள் என்னை பதிலுக்கு நேசிப்பதேயில்லை”.


இன்றைய உலகத்தில் வருத்தமான ஒரு காரியம் என்னவென்றால், உண்மையான அன்பு கிடைக்காத மக்கள், அந்தக் குறையை உணராமல் இருப்பதற்காக பலவிதமான காரியங்களில் தங்களை அளவுக்கதிகமாக ஈடுபடுத்திக் கொள்ளுகிறார்கள். செய்யும் வேலையிலும், தொழிலிலும் ஜெயிக்க வேண்டும் என்ற வெறியோடு இருக்கும் பெற்றோர்; ஒவ்வொரு இரவும் பல மணி நேரம் தனியாக உட்கார்ந்து விளையாட்டு சேனல்களை பார்க்கும் கணவன்மார்கள்; தொலைக்காட்சியில் வரும் நெடுந்தொடர்களை போட்டிபோட்டு பார்த்து, அதில் வரும் பலவிதமான பாவ எண்ணங்களால் தங்கள் மனதையும், உள்ளத்தையும் நிரப்பக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; விபச்சாரம், பொய், பழிவாங்குதல், கொலை, காட்டிக்கொடுத்தல் போன்ற நிகழ்வுகளை இணையதளத்தில் காண்பவர்கள்; பெற்றோரின் கவனிப்பு இல்லாமல் வன்முறையைத் தூண்டும் கம்ப்யூட்டர் விளையாட்டுகள் மற்றும் அளவுக்கதிகமாக சாப்பிடும் பழக்கம் கொண்ட சிறுவர்கள் என உண்மையான அன்பைப் பெறாத மக்கள் செய்யும் செயல்களை இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

வேதவசனங்கள்

நாள் 16நாள் 18

இந்த திட்டத்தைப் பற்றி

இவைகளில் அன்பே பிரதானம்

கிறிஸ்தவத்தில் இருப்பது இயேசு அறிமுகப்படுத்திய புதுவகையான அன்பு – அகாபே அன்பு. வெறுமையான, பாவம் நிறைந்த உலகத்தில் இயேசு இந்த அன்பை அறிமுகப்படுத்தினார். 

இந்த திட்டத்தை உருவாக்கியதற்காக Christ Chapel Chennai க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய https://christchapel.in/ க்கு செல்லவும்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்