2 கொரிந்தியர் 12:14-21

2 கொரிந்தியர் 12:14-21 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இப்பொழுதும் நான் மூன்றாவது முறையாக உங்களிடம் வர ஆயத்தமாய் இருக்கிறேன். ஆனால், உங்களுக்குச் சுமையாய் இருக்கமாட்டேன். ஏனெனில் நான் உங்களுடைய உடைமைகளையல்ல, உங்களையே விரும்புகிறேன். பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்காக சேமித்துவைக்க வேண்டியதில்லை. பெற்றோரே தங்கள் பிள்ளைகளுக்காக சேமித்துவைக்க வேண்டும். எனவே நான் உங்களுக்காக மிக்க மகிழ்ச்சியோடு, எனக்குள்ள எல்லாவற்றையும் செலவு செய்வேன். என்னையும் இழக்க ஆயத்தமாயிருக்கிறேன். நான் இவ்வாறு உங்களில் அதிகம் அன்பாயிருக்கும் போது, நீங்கள் என்னில் குறைவான அன்பு செலுத்தலாமா? அப்படியிருந்தாலும், நான் உங்களுக்குச் சுமையாயிருக்கவில்லை என்பதை நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா? ஆனால் நான் உங்களில் சிலரை, தந்திரமாய் உங்களை வளைத்துப் பிடித்தேன் என்றும் சொல்லப்படுகிறது. நான் உங்களிடம் அனுப்பியவர்களின் மூலமாக உங்களிடமிருந்து எதையாவது சுரண்டி எடுத்தேனா? உங்களிடம் போகும்படி நானே தீத்துவைக் கேட்டுக்கொண்டேன். அவனுடன் மற்றச் சகோதரனையும் அனுப்பினேன். தீத்து உங்களிடமிருந்து எதையாவது சுரண்டிப் பிழைத்தான் என்று உங்களால் சொல்லமுடியுமா? நாங்கள் உங்களுடனே ஒரே ஆவியுள்ளவர்களாய் நடந்துகொள்ளவில்லையா? ஒரே பாதையைப் பின்பற்றவில்லையா? உங்களுக்கு முன்பாக எங்களைக் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்க முயலுகிறோமென்றா நீங்கள் இதுவரை எண்ணியிருக்கிறீர்கள்? இறைவனுடைய பார்வையில், கிறிஸ்துவில் உள்ளவர்களாகவே நாங்கள் பேசியிருக்கிறோம்; அன்பான நண்பரே, உங்களைக் கட்டியெழுப்புவதற்காகவே நாங்கள் எல்லாவற்றையும் செய்கிறோம். ஒருவேளை நான் உங்களிடம் வரும்போது, நான் விரும்புகிறபடி நீங்கள் இருப்பீர்களோ என்னவோ, நானும் நீங்கள் விரும்புகிறபடி நடந்துகொள்ளாமல் இருப்பேனோ என்னவோ என்று நான் பயப்படுகிறேன். உங்களிடையே வாக்குவாதங்களும், பொறாமையும், கோபங்களும், சுயநலமும், அவதூறு பேசுதலும், புறங்கூறுதலும், அகங்காரமும், ஒழுங்கீனமும், இருக்குமோ என்றும் பயப்படுகிறேன். நான் மீண்டும் உங்களிடம் வரும்போது, என்னுடைய இறைவன் உங்களுக்கு முன்பாக என்னைச் சிறுமைப்படுத்துவாரோ என்று, நான் பயப்படுகிறேன். உங்களில் பலர் முன்பு செய்த பாவங்களாகிய அசுத்தத்தையும், பாலியல் சம்பந்தமான பாவத்தையும், காமவெறியையும் விட்டு, ஒருவேளை மனந்திரும்பாதிருக்கலாம். அப்படியானவர்களைக் குறித்து நான் துக்கப்பட வேண்டியிருக்குமோ என்றும் பயப்படுகிறேன்.

2 கொரிந்தியர் 12:14-21 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இதோ, உங்களிடம் மூன்றாவது முறையும் வருவதற்கு ஆயத்தமாக இருக்கிறேன்; நான் உங்களை வருத்தப்படுத்துவது இல்லை; நான் உங்களுடையவைகளை அல்ல, உங்களையே தேடுகிறேன்; பெற்றோருக்குக் குழந்தைகள் இல்லை, குழந்தைகளுக்குப் பெற்றோர்களே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டும். எனவே, நான் உங்களை எவ்வளவு அதிகமாக நேசிக்கிறேனோ அவ்வளவு குறைவாக உங்களால் நான் நேசிக்கப்பட்டிருந்தாலும், மிகவும் சந்தோஷமாக நான் உங்களுடைய ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணவும் செலவுபண்ணப்படவும் விரும்புகிறேன். அப்படியே ஆகட்டும், நான் உங்களுக்குச் சுமையாக இருக்கவில்லை; ஆனாலும், உதவி செய்கிறவனாக இருந்து, தந்திரத்தினாலே உங்களைப் பிடித்தேனாம். நான் உங்களிடம் அனுப்பினவர்களில் எவன் மூலமாவது உங்களிடம் நன்மையைத் தேடினது உண்டா? தீத்து உங்களிடம் வரும்படி நான் அவனைக் கேட்டுக்கொண்டு, அவனோடுகூட ஒரு சகோதரனை அனுப்பினேன்; தீத்து உங்களிடம் ஏதாவது நன்மையைத் தேடினானா? நாங்கள் ஒரே ஆவியை உடையவர்களாக, ஒரே அடிச்சுவடுகளில் நடந்தோம் அல்லவா? நாங்கள் யோக்கியமானவர்கள் என்று தெரியும்படி உங்களிடம் பேசுகிறோம் என்று நினைக்கிறீர்களோ? தேவனுக்கு முன்பாகக் கிறிஸ்துவிற்குள் பேசுகிறோம். பிரியமானவர்களே, எல்லாவற்றையும் உங்களுடைய பக்திவளர்ச்சிக்காகச் செய்கிறோம். ஆனாலும் நான் வந்து, உங்களை என் மனவிருப்பத்தின்படி இருக்கிறவர்களாகப் பார்க்காமலும், நானும் உங்களுடைய மனவிருப்பத்தின்படி இருக்கிறவனாகப் பார்க்கப்படாமல் இருப்பேனோ என்றும்; விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், வாக்குவாதங்கள், புறங்கூறுதல், கோள் சொல்லுதல், இறுமாப்பு, கலகங்கள் ஆகிய இவைகள் உங்களுக்குள்ளே உண்டாயிருக்குமோ என்றும்; மீண்டும் நான் வருகிறபோது, என் தேவன் உங்களிடம் என்னைத் தாழ்த்தும்படிக்கு முன்பு பாவம் செய்தவர்களாகிய அநேகர் தாங்கள் செய்த அசுத்தத்தையும் வேசித்தனத்தையும் காமவிகாரத்தையும்விட்டு மனம்திரும்பாமல் இருக்கிறதைக்குறித்து, நான் துக்கப்படவேண்டியதாக இருக்குமோ என்றும் பயந்திருக்கிறேன்.

2 கொரிந்தியர் 12:14-21 பரிசுத்த பைபிள் (TAERV)

மூன்றாவது முறையாக இப்பொழுது உங்களிடம் வர நான் தயாராக உள்ளேன். நான் உங்களுக்குப் பாரமாக இருக்கமாட்டேன். உங்களுக்கு உரிய எந்தப் பொருளையும் நான் சொந்தம் கொண்டாடமாட்டேன். நான் உங்களை மட்டுமே விரும்புகிறேன். பெற்றோருக்குப் பொருட்களைச் சேர்த்து வைக்க வேண்டியவர்கள் பிள்ளைகள் அல்ல. பெற்றோர்களே பிள்ளைகளுக்குப் பொருட்களைச் சேர்த்து வைக்கவேண்டும். எனவே, நான் எனக்குரியவற்றையெல்லாம் உங்களுக்காகச் செலவு செய்வதில் மகிழ்ச்சியாக உள்ளேன். நான் என்னையும் உங்களுக்காகத் தருவேன். நான் உங்களை மிகுதியாக நேசித்தால் நீங்கள் என்னைக் குறைவாக நேசிப்பீர்களா? நான் உங்களுக்குப் பாரமாக இல்லை என்பது தெளிவாயிற்று. ஆனால் என்னைத் தந்திரமானவன் என்றும், பொய் சொல்லி உங்களை வசப்படுத்திவிட்டேன் என்றும் எண்ணுகிறீர்கள். நான் யாரையாவது அனுப்பி உங்களை ஏமாற்றி இருக்கிறேனா? இல்லையே. நீங்களும் அதை அறிவீர்கள். உங்களிடம் செல்லுமாறு நான் தீத்துவை அனுப்பினேன். எங்கள் சகோதரனையும் அவனோடு சேர்த்து அனுப்பினேன். தீத்து உங்களை ஏமாற்றவில்லை. அல்லவா? தீத்துவும் நானும் ஒரே ஆவியால் வழி நடத்தப்பட்டு ஒரேவிதமான வாழ்வை நடத்தினோம். காலமெல்லாம் எங்களின் பாதுகாப்புக்காகப் பேசுகிறோம் என்று நினைக்கிறீர்களா? தேவனுக்கு முன்பாக கிறிஸ்துவுக்குள் பேசுகிறோம். நீங்கள் எமது பிரியமான நண்பர்கள். நாங்கள் செய்வது எல்லாம் உங்களைப் பலப்படுத்துவதற்காகத்தான். நான் இவற்றையெல்லாம் ஏன் செய்கிறேன்? உங்களிடம் நான் வரும்போது, நீங்கள் எதிர்பார்க்கிறபடி நானும், நான் எதிர்பார்க்கிறபடி நீங்களும் இல்லாமல் போகக்கூடாது என்று அஞ்சுகிறேன். விரோதம், பொறாமை, கோபம், சுயநலம், தீய பேச்சு, மோசமான பெருமிதம், குழப்பம் போன்றவற்றால் நீங்கள் அழியக்கூடாது என்று அஞ்சுகிறேன். மீண்டும் நான் உங்களிடம் வரும்போது தேவன் என்னை உங்கள் முன் தாழ்த்தி விடுவாரோ என்று அஞ்சுகிறேன். பலர் தாங்கள் செய்த அசுத்தம், வேசித்தனம், பாலியல் குற்றங்கள் போன்ற பாவங்களைத் தொடக்கத்தில் செய்து, பிறகு மாறாமலும் அதற்காக மனம் வருந்தாமலும் இருப்பதைப் பற்றியும் நான் துக்கப்பட வேண்டியிருக்குமோ என்று அஞ்சுகிறேன்.

2 கொரிந்தியர் 12:14-21 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இதோ, உங்களிடத்திற்கு மூன்றாந்தரம் வர ஆயத்தமாயிருக்கிறேன்; நான் உங்களை வருத்தப்படுத்துவதில்லை; நான் உங்களுடையதையல்ல, உங்களையே தேடுகிறேன்; பெற்றாருக்குப் பிள்ளகளல்ல, பிள்ளைகளுக்குப் பெற்றோர்களே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டும். ஆதலால், நான் உங்களில் எவ்வளவு அதிகமாய் அன்பு கூருகிறேனோ அவ்வளவு குறைவாய் உங்களால் அன்புகூரப்பட்டிருந்தாலும், மிகவும் சந்தோஷமாய் நான் உங்கள் ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணவும் செலவுபண்ணப்படவும் விரும்புகிறேன். அப்படியாகட்டும், நான் உங்களுக்குப் பாரமாயிருக்கவில்லை; ஆனாலும், உபாயமுள்ளவனாயிருந்து, தந்திரத்தினாலே உங்களைப் பிடித்தேனாம். நான் உங்களிடத்திற்கு அனுப்பினவர்களில் எவன் மூலமாயாவது உங்களிடத்தில் பொழிவைத் தேடினதுண்டா? தீத்து உங்களிடத்தில் வரும்படி நான் அவனைக் கேட்டுக்கொண்டு, அவனுடனேகூட ஒரு சகோதரனை அனுப்பினேன்; தீத்து உங்களிடத்தில் ஏதாவது பொழிவைத்தேடினானா? நாங்கள் ஒரே ஆவியையுடையவர்களாய், ஒரே அடிச்சுவடுகளில் நடந்தோமல்லவா? நாங்கள் யோக்கியர்களென்று விளங்கும்படி உங்களிடத்தில் பேசுகிறோமென்று எண்ணுகிறீர்களோ? தேவனுக்கு முன்பாகக் கிறிஸ்துவுக்குள் பேசுகிறோம். பிரியமானவர்களே, சகலத்தையும் உங்கள் பக்திவிருத்திக்காகச் செய்கிறோம். ஆகிலும் நான் வந்து, உங்களை என் மனதின்படியிருக்கிறவர்களாகக் காணாமலும், நானும் உங்கள் மனதின்படியிருக்கிறவனாகக் காணப்படாமலுமிருப்பேனோவென்றும்; விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், வாக்குவாதங்கள், புறங்கூறுதல், கோட்சொல்லுதல், இறுமாப்பு, கலகங்கள் ஆகிய இவைகள் உங்களுக்குள்ளே உண்டாயிருக்குமோவென்றும்; மறுபடியும் நான் வருகிறபோது, என் தேவன் உங்களிடத்தில் என்னைத் தாழ்த்தும்படிக்கு முன் பாவஞ்செய்தவர்களாகிய அநேகர் தாங்கள் நடப்பித்த அசுத்தத்தையும் வேசித்தனத்தையும் காமவிகாரத்தையும் விட்டு மனந்திரும்பாமலிருக்கிறதைக் குறித்து, நான் துக்கப்படவேண்டியதாயிருக்குமோ வென்றும் பயந்திருக்கிறேன்.