செப்பனியா 3
3
எருசலேமின் எதிர்காலம்
1கலகம் செய்கின்றவர்களும், கறைப்பட்டவர்களும்,
அடக்கி ஒடுக்குகின்றவர்களும் வாழும் நகரமே! உனக்கு ஐயோ பேரழிவு.
2அவள் ஒருவருக்கும் கீழ்ப்படிய மாட்டாள்,
அவள் எந்த சீர்திருத்தத்தையும் ஏற்றுக்கொள்ள மாட்டாள்.
அவள் கர்த்தரை நம்புவதில்லை,
அவள் தனது இறைவனிடத்தில் நெருங்குவதுமில்லை.
3அவளுடைய அதிகாரிகள்
கர்ச்சிக்கும் சிங்கங்கள்.
அவளுடைய ஆளுநர்கள், காலைவரை ஒன்றையும் விட்டுவைக்காத
மாலைநேரத்து ஓநாய்கள்.
4அவளுடைய இறைவாக்கினர் அகந்தை மிக்கவர்கள்;
அவர்கள் துரோகிகள்.
அவளுடைய மதகுருக்கள் பரிசுத்த இடத்தைத் தூய்மைக்கேடாக்கி,
சட்டத்தை மீறுகிறார்கள்.
5அவள் மத்தியில் இருக்கும் கர்த்தர் நீதியுள்ளவர்;
அவர் அநியாயம் செய்வதில்லை;
அவர் காலைதோறும் தமது நீதியை வெளிப்படுத்துகிறார்.
அவர் ஒவ்வொரு புதிய நாளிலும் தவறாமல் அதை வெளிப்படுத்துகிறார்,
ஆயினும் நீதியற்றவர்கள் தங்கள் வெட்கத்தை அறிய மாட்டார்கள்.
எருசலேம் மனந்திரும்பாமல் உள்ளது
6நான் இனங்களை அழித்தேன்;
அவர்களின் கோட்டைகள் அழிக்கப்பட்டுவிட்டன.
நான் அவர்களின் வீதிகளில் எவரும் கடந்து போகாதபடி,
அவற்றை வெறிச்சோடச் செய்தேன்.
அவர்களுடைய பட்டணங்கள் அழிக்கப்பட்டன;
ஒருவரும் எஞ்சியிருக்கவில்லை.
7நான் பட்டணத்தைப் பார்த்து,
“நிச்சயமாக நீ என்னில் பயமுள்ளவளாயிரு,
என் சீர்திருத்துதலை ஏற்றுக்கொள்!” என்று சொன்னேன்.
அப்போது அவளுடைய குடியிருப்பு அகற்றப்படுவதில்லை.
நான் நியமித்திருந்த என் தண்டனைகள் எல்லாம் அவள்மீது வருவதில்லை.
ஆனால் அவர்களோ தங்கள் செயல்களை அதிக தீமையானதாக மாற்ற
இன்னும் வாஞ்சையாய் இருந்தார்கள்.
8ஆகவே, “நான் எழுந்து குற்றம் சுமத்தும்#3:8 குற்றம் சுமத்தும் – சில மொழிபெயர்ப்புகளில் இரையை அடிக்கும் என்றுள்ளது நாள் வரும்வரை
நீ எனக்காகக் காத்திரு” என்று கர்த்தர் அறிவிக்கின்றார்.
நான் அனைத்து இனங்களையும்
இராச்சியங்களையும் ஒன்றுகூட்டி,
என் கடுங்கோபத்தை
அவர்கள்மீது ஊற்றுவதற்குத் தீர்மானித்துள்ளேன்.
அப்போது என் வைராக்கியமான கோபத்தின் நெருப்பினால்
முழு உலகமும் சுட்டெரிக்கப்படும்.
இஸ்ரயேலின் மறுசீரமைப்பு
9நான் அவ்வேளையில் மக்கள் கூட்டங்களின் உதடுகளைத் தூய்மைப்படுத்துவேன்.
அவர்கள் யாவரும் கர்த்தரின் பெயரை வழிபட்டு,
தோளோடு தோள் சேர்ந்து#3:9 தோளோடு தோள் சேர்ந்து – ஒற்றுமையாய் அவருக்குப் பணி செய்வார்கள்.
10கூஷ் நதிகளுக்கு அப்பால் இருக்கின்ற என்னை ஆராதிக்கிறவர்களான,
சிதறுண்ட என் மக்களின் மகள்
எனக்குக் காணிக்கைகளைக் கொண்டுவருவாள்.
11அந்தநாளில் தங்கள் பெருமையில் களிகூருகின்ற அனைவரையும்
இந்த பட்டணத்திலிருந்து அகற்றி விடுவேன்.
ஆகையால் நீங்கள் எனக்குச் செய்த அனைத்து அநியாயங்களுக்காகவும்
நீங்கள் வெட்கித் தலைகுனிய மாட்டீர்கள்.
இனி ஒருபோதும் என் பரிசுத்த மலையில்#3:11 பரிசுத்த மலையில் – கர்த்தரின் ஆலயம் அமைந்திருக்கும் மலை நீங்கள்
அகந்தையுள்ளவர்களாக இருக்க மாட்டீர்கள்.
12எனினும் கர்த்தரின் பெயரில் நம்பிக்கை கொண்டிருக்கின்ற
சாந்த குணமுள்ளோரையும்,
தாழ்மையானவர்களையும்
உன் பட்டணத்தின் மத்தியில் மீதியாக விட்டுவைப்பேன்.
13இஸ்ரயேலில் எஞ்சியிருப்போர்
அநியாயம் செய்ய மாட்டார்கள்;
அவர்கள் பொய் பேச மாட்டார்கள்;
அவர்களின் வாயில் வஞ்சகம் காணப்பட மாட்டாது.
அவர்கள் சாப்பிட்டு படுத்திருப்பார்கள்,
ஒருவரும் அவர்களைப் பயமுறுத்த மாட்டார்கள்.
14சீயோன் மகளே#3:14 சீயோன் மகளே – இஸ்ரயேல் மக்களே, பாடு;
இஸ்ரயேலே, பலமாய்ச் சத்தமிடு;
எருசலேம் மகளே#3:14 எருசலேம் மகளே – எருசலேம் மக்களே,
உன் முழு உள்ளத்தோடும் மகிழ்ந்து களிகூருவாயாக!
15கர்த்தர் உன்மீதான தண்டனையை அகற்றிவிட்டார்,
அவர் உன் பகைவரைத் துரத்தி விட்டார்.
இஸ்ரயேலின் அரசனாகிய கர்த்தரே உன்னுடன் இருக்கின்றார்;
நீ இனி ஒருபோதும் எவ்வித தீங்கைக் குறித்தும் பயப்பட மாட்டாய்.
16அந்தநாளில்
அவர்கள் எருசலேமைப் பார்த்துச் சொல்வதாவது,
“சீயோனே, பயப்படாதே;
உன் கைகளைச் சோர்ந்துபோக விடாதே.
17உன் இறைவனாகிய கர்த்தர் உன்னுடன் இருக்கின்றார்.
அவர் உன்னை இரட்சிக்க வல்லவர்.
உன்னில் அவர் மகிழ்ந்து களிகூருவார்.
அவர் தம்முடைய அன்பின் பொருட்டு உன்னைக் கடிந்துகொள்ள மாட்டார்.
அவர் உன்னைக் குறித்துப் பாடி மகிழ்வார்.”
18“நியமிக்கப்பட்ட உங்கள் பண்டிகைகளை இழந்ததால் நீங்கள் அடைந்த துக்கத்தை
நான் உங்களைவிட்டு நீக்குவேன்.
அவை உங்களுக்குப் பாரமாகவும் நிந்தையாகவும் இருக்கின்றன.
19அக்காலத்தில் உன்னை ஒடுக்கிய
அனைவரையும் நான் தண்டிப்பேன்.
கால் ஊனமுற்றோரைக் காப்பாற்றி
சிதறடிக்கப்பட்டவர்களை ஒன்றுசேர்ப்பேன்.
அவர்கள் வெட்கித் தலைகுனிவுக்கு உள்ளான நாடுகளில் எல்லாம்
அவர்களுக்குப் புகழ்ச்சியையும் மேன்மையையும் கொடுப்பேன்.
20அக்காலத்தில் நான் உங்களை ஒன்றுசேர்ப்பேன்;
அக்காலத்தில் நான் உங்களை உங்கள் வீட்டுக்குக் கொண்டுவருவேன்.
அப்போது பூமியின் மக்கள் அனைவருக்குள்ளும் உங்களுக்குப் புகழ்ச்சியையும்,
மேன்மையையும்,
உங்கள் கண்களுக்கு முன்பாக நீங்கள் இழந்த செல்வங்களையும்
நான் உங்களுக்குத் திருப்பிக் கொடுப்பேன்”
என கர்த்தர் சொல்கின்றார்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
செப்பனியா 3: TRV
சிறப்புக்கூறு
நகல்
ஒப்பீடு
பகிர்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.