செப்பனியா 2

2
யூதாவும் எருசலேமும் மற்றைய நாடுகளுடன் நியாயம் தீர்க்கப்படல்
மனந்திரும்ப யூதாவுக்கான அழைப்பு
1வெட்கம்கெட்ட இனமே,
ஒன்றுசேருங்கள், ஒன்றுசேருங்கள்,
2நியமிக்கப்பட்ட காலம் வரும் முன்பும்,
அந்தநாள் பதரைப் போன்று பறந்துபோகும் முன்பும்,
கர்த்தரின் பயங்கர கோபம்
உங்கள்மேல் இறங்கும் முன்பும்,
கர்த்தரின் கடுங்கோபத்தின் நாள்
வரும் முன்பும் ஒன்றுசேருங்கள்.
3நாட்டில் தாழ்மையானவர்களே,
கர்த்தரின் கட்டளைகளைச் செய்கின்றவர்களே,
நீங்கள் எல்லோரும் கர்த்தரைத் தேடுங்கள்.
நியாயத்தைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள்;
அப்போது ஒருவேளை கர்த்தரின் கோபத்தின் நாளிலே நீங்கள் பாதுகாக்கப்படுவீர்கள்.
பெலிஸ்தியாவுக்கு எதிரான தீர்ப்பு
4காசா பட்டணம் கைவிடப்படும்,
அஸ்கலோன் பட்டணம் பாழாக விடப்படும்.
அஸ்தோத் பட்டண மக்கள் நண்பகலில் துரத்தப்படுவார்கள்;
எக்ரோன் பட்டணம் வேரோடு பிடுங்கப்படும்.
5கடற்கரை அருகே குடியிருப்பவர்களே, கிரேத்திய நாட்டவர்களே,
உங்களுக்கு ஐயோ பேரழிவு;
பெலிஸ்தியரின் நாடாகிய கானானே,
கர்த்தரின் இந்த வார்த்தை உனக்கு எதிராக இருக்கின்றது.
“நான் உன்னை அழிப்பேன்,
ஒருவரும் அங்கு தப்பியிருக்க மாட்டார்கள்.”
6உங்கள் கடலோரப் பிரதேசம்,
மேய்ப்பர்களுக்கான கிணறுகளையும்
மந்தைகளுக்குத் தொழுவங்களையும் கொண்ட மேய்ச்சல் நிலங்களாக மாறும்.
7அது யூதா குடும்பத்தில் எஞ்சியிருப்பவர்களுக்கு உரியதாகும்.
அங்கு அவர்கள் மேய்ச்சலைக் கண்டுகொள்வார்கள்.
அவர்கள் மாலை வேளைகளில்,
அஸ்கலோனிலுள்ள வீடுகளில் படுத்திருப்பார்கள்.
அவர்களின் இறைவனாகிய கர்த்தர்,
அவர்களில் கரிசனையாயிருப்பார்;
அவர்கள் இழந்த செல்வங்களை அவர்களுக்குத் திரும்பவும் கொடுப்பார்.
மோவாபியருக்கும் அம்மோனியருக்கும் எதிரான தீர்ப்பு
8மோவாபியரின் இழிவுகளையும்,
அம்மோனியரின் நிந்தனைகளையும் நான் கேட்டேன்.
அவர்கள் என் மக்களை இழிவாகப் பேசி,
அவர்களின் நாட்டுக்கெதிராக பயமுறுத்தல்களை ஏற்படுத்தினார்கள்.
9ஆகவே, இஸ்ரயேலின் இறைவனாகிய
சேனைகளின் கர்த்தர் சொல்கின்றதாவது,
என் உயிர்மீது ஆணையிட்டுக் கூறுகின்றேன்,#2:9 – மூலமொழியில் நான் வாழ்வது நிச்சயம் போலவே என்றுள்ளது. இது ஒரு விடயத்தை ஆணையிட்டுக் கூறும் சொற்றொடராகும்.
மோவாப் நாடு சோதோமைப் போலாவதும்,
அம்மோனியரின் நாடு கொமோராவைப் போலாவதும் நிச்சயம்.#2:9 சோதோமும், கொமோராவும் அங்கு வாழ்ந்த மக்களின் பாவத்தின் காரணமாக கர்த்தரால் அழிக்கப்பட்டன. ஆதி. 19:23-29
அவை என்றென்றும் களைகள் வளரும் இடமாகவும்,
உப்புப் பள்ளங்களாகவும், பாழிடமாகவும் காணப்படும்.
என் மக்களில் எஞ்சியிருப்போர் அவர்களைக் கொள்ளையடிப்பார்கள்.
என் இனத்தவர்களில் தப்பியவர்கள் அவர்களது நாட்டை,
தங்களது உரிமையாக்கிக் கொள்வார்கள்.
10சேனைகளின் கர்த்தரின் மக்களை இகழ்ந்து,
கேலி செய்த அவர்களின் அகந்தைக்குப் பதிலாக,
அவர்களுக்குக் கிடைப்பது இதுவே.
11கர்த்தர் நாட்டிலுள்ள தெய்வங்களையெல்லாம் அழிக்கும்போது,
அவர் அவர்களுக்கு ஒரு பெரும் பயங்கரமாக இருப்பார்.
அப்போது பூமியெங்குமுள்ள நாடுகளைச் சேர்ந்தோரும் கர்த்தரை ஆராதிப்பார்கள்.
ஒவ்வொருவரும் தன் தன் சொந்த நாட்டிலிருந்து அவரை வழிபடுவார்கள்.
கூஷ்ஷியருக்கு எதிரான தீர்ப்பு
12கூஷியரே#2:12 கூஷியரே – இது எத்தியோப்பிய மக்களைக் குறிப்பதாக இருக்கலாம்.,
நீங்களும் என் வாளுக்கு இரையாவீர்கள்.
அசீரியாவுக்கு எதிரான தீர்ப்பு
13கர்த்தர் தமது கையை வடக்குக்கு எதிராக நீட்டி,
அசீரியா நாட்டை அழிப்பார்.
நினிவேயை அவர் முற்றிலும் பாழாக்கி,
பாலைவனத்துக்கு ஒப்பான பாழ்நிலமாக்குவார்.
14அதன் மத்தியில் ஆட்டு மந்தையும் மாட்டு மந்தையும் படுத்திருக்கும்.
எல்லாவிதமான விலங்குகளும் அங்கே படுத்திருக்கும்.
பாலைவன ஆந்தையும் கீச்சிடும், ஆந்தையும்
அதன் தூண்களில் தங்கியிருக்கும்.
அவற்றின் சத்தம் யன்னல்களின் வழியாக எதிரொலிக்கும்.
வாசல்களில் இடிபாடுகள் குவிந்து கிடக்கும்.
கேதுரு மரத்தினாலான உத்திரங்கள் வெளியே தெரியும்.
15“நான்தான், என்னைத் தவிர வேறொருவரும் இல்லை”
என தனக்குள் சொல்லிக்கொண்டு,
பாதுகாப்புடன் கவலையின்றி வாழ்ந்த நினிவே நகரம் இதுவோ.
இது எவ்வளவாய்ப் பாழடைந்து,
காட்டுமிருகங்களுக்குப் தங்குமிடமாயிற்று!
அதைக் கடந்து செல்கிறவர்கள்,
கைகளைத் தட்டி,
கேலி செய்வார்கள்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

செப்பனியா 2: TRV

சிறப்புக்கூறு

நகல்

ஒப்பீடு

பகிர்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்