ஓசியா 2

2
1“உங்கள் சகோதரர்களைப்#2:1 சகோதரர்களை சக இஸ்ரயேலர்களை பார்த்து, ‘நீங்கள் என் மக்கள்’ என்றும், உங்கள் சகோதரிகளைப் பார்த்து, ‘என் அன்புக்குரியவள்’ என்றும் சொல்லுங்கள்.
இஸ்ரயேல் தண்டிக்கப்பட்டு புதுப்பிக்கப்படுதல்
2“உங்கள் தாயைக் கண்டியுங்கள், அவளைக் கண்டியுங்கள்,
அவள் என் மனைவி அல்ல,
நான் அவள் கணவனும் அல்ல.
அவள் தன் ஒழுக்கக்கேடான பார்வையை தன் முகத்தை விட்டு அகற்றட்டும்;
தன் துரோகத்தைத் தன் மார்பகங்களிடையிலிருந்தும் விலக்கட்டும்.
3இல்லாவிட்டால் நான் அவளை களைந்து ஆடையில்லாதவளாக்கி,
அவள் பிறந்த நாளில் இருந்தது போலவே அவளை வைப்பேன்;
அவளைப் பாலைவனத்தைப் போலாக்குவேன்,
அவளை வரண்ட நிலமாக்கித்
தாகத்தினால் மரணிக்கச் செய்வேன்.
4நான் அவளது பிள்ளைகளில் அன்பு காட்ட மாட்டேன்.
ஏனெனில் அவர்கள் தகாத உறவின் பிள்ளைகள்.
5அவர்களின் தாய் எனக்கு உண்மையற்றவளாயிருந்தாள்;
அவர்களை வெட்கக்கேடான முறையில் கருத்தரித்தாள்.
அவளோ, ‘நான் காதலர்களுக்குப் பின்னே போவேன்,
அவர்கள் எனக்கு உணவும், தண்ணீரும்,
கம்பளி உடையும், மென்பட்டு உடையும், எண்ணெயும், பானமும் தருபவர்கள்’ என்றாள்.
6எனவே நான், அவளது பாதையை முட்புதர்களினால் அடைப்பேன்;
அவள் தன் வழியைக் கண்டுபிடிக்க முடியாதபடி அவளைச்சுற்றி மதில் கட்டுவேன்.
7அவள் தன் காதலர்கள் பின்னால் ஓடுவாள்;
ஆயினும் அவள் அவர்களுடன் சேரப் போவதில்லை.
அவள் அவர்களைத் தேடுவாள்,
ஆனாலும் அவர்களைக் கண்டுபிடிக்க மாட்டாள்.
அப்போது அவள்,
‘நான் முன்பிருந்தது போல என் கணவனிடம் திரும்பிப் போவேன்;
ஏனெனில் அப்போது நான் இதைவிட நலமாயிருந்தேன்’ என்பாள்.
8நானே அவளுக்கு தானியம், புதுத் திராட்சைரசம், எண்ணெய்
ஆகியவற்றைக் கொடுத்தேன் என்பதையும்,
நானே அவளுக்கு வெள்ளியையும் தங்கத்தையும்
ஏராளமாய்க் கொடுத்தேன் என்பதையும் அவள் ஏற்றுக்கொள்ளவில்லை;
ஆயினும் அவர்களோ அவற்றைப் பாகால் தெய்வ வழிபாட்டுக்குப் பயன்படுத்தினார்கள்.
9“ஆகையால், நான் எனது தானியம் முதிரும்போது, அதை எடுத்துக்கொள்வேன்.
எனது புதுத் திராட்சைரசம் ஆயத்தமாகும்போது, அதையும் எடுத்துக்கொள்வேன்.
அவளது நிர்வாணத்தை மூடுவதற்கு நான் கொடுத்திருந்த எனது கம்பளி உடையையும்,
எனது மென்பட்டு உடையையும் எடுத்துக்கொள்வேன்.
10நான் அவளது காதலர்களின் கண்களுக்கு முன்பாக,
அவளது வெட்கக்கேட்டை வெளிப்படுத்துவேன்;
எனது கைகளிலிருந்து ஒருவராலும் அவளை விடுவிக்க முடியாது.
11நான் அவளது அனைத்து கொண்டாட்டங்களையும் நிறுத்துவேன்:
வருடாந்த விழாக்கள், மாதப்பிறப்புகள், ஓய்வுநாட்கள் ஆகிய
நியமிக்கப்பட்டதான அவளது அனைத்து மத திருவிழாக்களையும் நிறுத்திவிடுவேன்.
12தனது காதலர்களினால் தனக்குக் கொடுக்கப்பட்ட கூலி என்று
அவள் சொல்லிக்கொண்டிருக்கும்,
அவளுடைய திராட்சைக்கொடிகளையும் அத்திமரங்களையும் நான் பாழாக்குவேன்.
நான் அவற்றை புதர்க் காடாக்குவேன்,
காட்டுமிருகங்கள் அவற்றை அழித்துவிடும்.
13அவள் பாகால் சிலைகளுக்குத் தூபம் காட்டிய நாட்களுக்காக
நான் அவளைத் தண்டிப்பேன்;
அவள் தன் காதணிகளினாலும் நகைகளினாலும் தன்னை அலங்கரித்துக்கொண்டு,
தன் காதலர்களைப் பின்தொடர்ந்து போனாள்.
என்னையோ மறந்துவிட்டாள்”
என்று கர்த்தர் சொல்கின்றார்.
14“ஆகவே நான் அவளை வசப்படுத்தப் போகின்றேன்;
நான் அவளை பாலைவனத்துக்கு அழைத்துச் சென்று,
அங்கே அவளோடு அன்பாகப் பேசுவேன்.
15அங்கே அவளுடைய திராட்சைத் தோட்டங்களை
நான் அவளுக்கு மீண்டும் கொடுப்பேன்;
நான் ஆகோர் என்னும் கஷ்டத்தின் பள்ளத்தாக்கை,
எதிர்பார்ப்பின் கதவாக ஆக்குவேன்.
அவள் தன் வாலிப நாட்களில் தான் எகிப்திலிருந்து வந்தபோது,
பாடியதுபோல் அங்கே பாடுவாள்.
16“அந்தநாளிலே, நீ என்னை
‘என் பாகாலே’ என்று அழைக்காமல்,
‘என் கணவனே’ என்று அழைப்பாய்”
என்று கர்த்தர் அறிவிக்கின்றார்.
17“நான் அவளுடைய வாயிலிருந்து பாகால் சிலைகளின் பெயர்களை அகற்றி விடுவேன்;
அவற்றின் பெயர்கள் இனி ஒருபோதும் சொல்லப்பட மாட்டாது.
18அந்நாளிலே நான் என் மக்களுக்காக#2:18 என் மக்களுக்காக அல்லது அவர்களுக்காக காட்டுமிருகங்களோடும்,
ஆகாயத்துப் பறவைகளோடும், தரையில் ஊரும் பிராணிகளோடும்
ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்துவேன்.
நான் வில்லையும் வாளையும்
யுத்தத்தையும் நாட்டில் இல்லாதவாறு செய்வேன்;
அதனால் அவர்கள் எல்லோரும் படுக்கும்போது பாதுகாப்பாய் இருப்பார்கள்.
19நான் உன்னை என்றென்றும் எனக்கென்று நிச்சயதார்த்தம் செய்துகொள்வேன்;
நான் உன்னை நீதியுடனும், நியாயத்துடனும்,
நிலையான அன்புடனும், கருணையுடனும் நிச்சயதார்த்தம் செய்துகொள்வேன்.
20நான் உண்மையோடு உன்னை எனக்காக நிச்சயதார்த்தம் செய்துகொள்வேன்;
நீயும் கர்த்தரை ஏற்றுக்கொள்வாய்.
21“அந்த நாட்களிலே நான் பதில் கொடுப்பேன்”
என்கிறார் கர்த்தர்:
“நான் ஆகாயத்தின் கோரிக்கைக்குப் பதிலளிப்பேன்,
அவை பூமியின் கோரிக்கைக்குப் பதிலளிக்கும்.
22பூமியானது தானியம், புதுத் திராட்சைரசம், எண்ணெய்
ஆகியவற்றின் கோரிக்கைக்குப் பதிலளிக்கும்;
இவை யெஸ்ரயேலின் கோரிக்கைக்குப் பதிலளிக்கும்.
23நாட்டில் நான் அவளை எனக்கென்று நாட்டுவேன்;
‘என் அன்புக்குரியவள் அல்ல’ என்று நான் அழைத்தவளுக்கு
நான் எனது அன்பைக் காட்டுவேன்.
‘என்னுடைய மக்கள் அல்ல#2:23 எபிரேய மொழியில் இது லோ-அம்மீ என்று எழுதப்பட்டுள்ளது.’ என்று அழைக்கப்பட்டவர்களை,
‘நீங்கள் என்னுடைய மக்கள்’ என்று சொல்வேன்;
அவர்களும், ‘நீரே எங்கள் இறைவன்’ என்று சொல்வார்கள்.”

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

ஓசியா 2: TRV

சிறப்புக்கூறு

நகல்

ஒப்பீடு

பகிர்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்