ஆபகூக் 3

3
ஆபகூக்கின் மன்றாடல்
1இறைவாக்கினன் ஆபகூக், ஷிகியோநோத்#3:1 ஷிகியோநோத் – இது ஒரு எபிரேய சொல்லாகும். அநேகமாக ஒரு பாடலில் இணைக்கப்பட வேண்டிய இசை குறித்த ஓர் அறிவுறுத்தலாக இருக்கவேண்டும். இசையில் பாடிய மன்றாடல்.
2கர்த்தரே, உம்முடைய புகழைப்பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன்,
கர்த்தரே, நீர் நடப்பித்த உம்முடைய செயல்களின் பொருட்டு
நான் வியப்படைந்து நிற்கிறேன்.
எங்கள் வாழ்நாட்களில் அவற்றைப் புதுப்பிப்பீராக,
எங்கள் காலத்தில் அனைவரும் அவற்றை அறியும்படி செய்வீராக;
உமது கோபத்திலும் இரக்கத்தை நினைத்தருள்வீராக!
3இறைவன் தேமானிலிருந்தும்,
பரிசுத்தரான இறைவன் பாரான்#3:3 பாரான் – இது சீனாயின் பிரதேசத்தில் ஒரு தரிசு இடமாக இருந்தது மலையிலிருந்தும் வந்தார்.
அவரது மகிமை, வானங்களை மூடியது;
அவரது துதி, பூமியை நிரப்பியது.
4அவரின் மாட்சிமை சூரிய உதயத்தைப் போல் இருந்தது;
அவரது கையிலிருந்து ஒளிக்கதிர்கள் சுடர் வீசின,
அங்கே அவரது மகத்துவ வல்லமை மறைந்திருந்தது.
5கொள்ளைநோய் அவருக்கு முன்பாகச் சென்றது;
வாதைநோய் அவரது அடிச்சுவடுகளைப் பின்தொடர்ந்தது.
6அவர் நின்று பூமியை அதிரச் செய்தார்;
அவருடைய பார்வையைக் கண்டு நாடுகள் நடுங்கின.
பூர்வீக மலைகள் நொறுங்கின,
என்றுமுள்ள குன்றுகள் வீழ்ந்தன;
அவருடைய வழிகளோ நித்தியமானவை.
7கூசானின் கூடாரங்கள் துன்பத்துக்குள்ளானதையும்,
மீதியானியரின் குடியிருப்புகள் நடுநடுங்கியதையும் நான் கண்டேன்.
8கர்த்தரே ஆறுகளின்மீது கோபங்கொண்டீரோ?
நீரோடைகளுக்கெதிராகவும் உமது கடுங்கோபம் இருந்ததோ?
உமது குதிரைகள்மேலும்,
உமது வெற்றிகொண்ட தேரின்மேலும் நீர் சென்றபோது,
கடலுக்கு எதிராய் நீர் விரோதமாயிருந்தீரோ?
9நீர் உமது வில்லை உறையிலிருந்து எடுத்து,
அநேக அம்புகளை எய்வதற்காகத் தொடுத்தீர்.
நீர் ஆறுகளைக் கொண்டு பூமியைப் பிளந்தீர்;
10மலைகள் உம்மைக் கண்டு நடுநடுங்கின.
பெருவெள்ளம் அடித்துக் கொண்டோடியது;
ஆழம் குமுறியது,
அது தன் அலைகளை#3:10 அலைகளை அல்லது கரங்களை மேலே உயர்த்தியது.
11உமது அம்புகள் பறக்கும் மின்னொளியிலும்,
உமது ஈட்டிகள் வீசும் வெளிச்சத்திலும்,
சூரியனும் சந்திரனும் வானங்களில் அசைவற்று நின்றன.
12கடுங்கோபத்துடன் பூமியில் நீர் விரைந்து சென்றீர்.
கோபத்தில் பிறநாட்டு மக்களை மிதித்தீர்.
13உமது மக்களை விடுதலை செய்யவும்,
அபிஷேகம் செய்யப்பட்டவரை காப்பாற்றவுமே நீர் வந்தீர்.
நீர் கொடுமை நிறைந்த நாட்டின் தலைவனைத் தாக்கினீர்.
நீர் அவனைத் தலையிலிருந்து கால் வரைக்கும் தண்டித்தீர்.
14மறைவிடத்தில் பதுங்கியிருக்கும் நிர்கதியானவர்களை விழுங்க வருவது போல,
அவனுடைய இராணுவ வீரர் எங்களைச் சிதறடிக்கும்படி புயலைப் போல் வந்தார்கள்.
அப்போது நீர் அவனுடைய சொந்த ஈட்டியினாலேயே
அவனுடைய சேனைகளின் அதிபதிகளை ஊடுருவக் குத்தினீர்.
15கடலை உமது குதிரைகளினால் மிதித்து,
கடலின் பெருவெள்ளத்தை பொங்கியெழச் செய்தீர்.
16நான் அந்த சத்தங்களைக் கேட்டபோது என் இருதயம் படபடத்தது.
அந்தச் சத்தத்தில் என் உதடு துடித்தது;
என் எலும்புகளில் பலவீனம் உண்டானது;
என் கால்கள் நடுங்கின;
எனினும் எங்கள்மீது படையெடுத்த நாட்டின் மேல் வரப்போகும் பேரழிவின் நாளுக்காக,
நான் பொறுமையுடன் காத்திருப்பேன்.
17அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்,
திராட்சைக்கொடிகளில் பழங்கள் இல்லாமல் போனாலும்,
ஒலிவ மரம் பலன் அற்றுப்போனாலும்,
வயல்கள் தானியத்தை விளைவியாமல் போனாலும்,
ஆட்டுத் தொழுவத்திலே செம்மறியாடுகள் இல்லாமல் போனாலும்,
மாட்டுத் தொழுவத்திலே மாடுகள் இல்லாமல் போனாலும்,
18நானோ என் கர்த்தரிடம் மகிழ்ந்திருப்பேன்;
என் இரட்சகராகிய இறைவனில் களிகூருவேன்.
19ஆண்டவராகிய கர்த்தரே என் பலம்;
என் கால்களை அவர் மானின் கால்களைப் போலாக்குகிறார்,
என்னை மலைகளில் பாதுகாப்பாக நடக்கச் செய்கின்றார்.
பாடகர் குழுத் தலைவருக்காக நரம்பிசைக் கருவியில் இசைக்கப்பட்டது.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

ஆபகூக் 3: TRV

சிறப்புக்கூறு

நகல்

ஒப்பீடு

பகிர்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்